கோதுமை மணி – 20
(ஜனவரி-பிப்ரவரி 2013)

சார்லஸ் H.ஸ்பர்ஜன்

லண்டனுக்குச் சென்று அங்குள்ள ஒரு சபையில் போதகராக பணியாற்ற அழைப்பைப் பெற்ற ஸ்பர்ஜன் திகைப்படைந்தார். லண்டன் மாநகரத்தில், மாபெரும் சபையில், திரள் கூட்டம் மக்கள் மத்தியில் இளைஞனான தான் எப்படி போதகராய் போக முடியும்? என்று திகைப்படைந்தார். உடனே, “இது நான் அல்ல. ஏதோ தவறு நடந்துள்ளது. தவறுதலாக இந்தக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்துவிட்டது” என்று பதில் எழுதினார். மறுதபாலில் பதில் வந்தது. “தவறு ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் உங்களைத்தான் அழைக்கிறோம், விரும்புகிறோம். உடனே புறப்பட்டு வந்து எங்கள் சபையில் போதகராய்ப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்று கடிதம் வந்தது.

ஸ்பர்ஜன் லண்டனுக்குப் புறப்பட்டார். அந்தப் பெரிய சபையில் பேசுவதற்காக ஒரு பிரசங்கம் ஆயத்தம் செய்தார். 1853 டிசம்பர் 18-ம் நாள் அந்த ஆலயத்தில் அவர் பேச வேண்டும். இங்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு சரியில்லை. எனவே கடைசி நேரத்தில் வேலையை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிடலாம் என்று நினைத்தார். எனினும் அந்த ஆலயத்திற்கு முதல் நாள் சென்று மேடையில் நின்று சபையாரைப் பார்த்தார். சபையார் சுமார் 80 பேர் இருந்தனர். அந்த 80 பேரும், அழகாக இளைஞராகக் கம்பீரமாக நின்ற ஸ்பர்ஜனையே பார்த்தனர். அவருக்கு தைரியம் வந்துவிட்டது. முதல் நாளிலேயே சபையாரைக் கவர்ந்து விட்டார்.

வந்திருந்த 80 பேரும் சென்ற இடமெல்லாம் இந்தப் புதிய போதகரைப் பற்றியே புகழ்ந்து பேசினர். கிராமத்திலிருந்து வந்த போதகர் மணியாகப் பேசுகிறார் என்று பாராட்டினார்கள். பிற்பகலில் வெளியே சென்று ஆலய உறுப்பினர்களையும், நண்பர்களையும் சந்தித்தார், ஜெபித்தார். ஆலயத்துக்கு வரும்படி அழைத்தார். ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், சிறுவர்கள் என்று ஆலயத்தில் மக்கள் வந்து கூடினர். அந்தக் கூட்டத்தினரிடையே பின்னாளில் இவருக்கு மனைவியாகும் இளம் பெண்ணும் இருந்தார்.

ஆராதனை முடிந்தபின் சபையார் எழுந்து போகமாட்டார்கள். பிரதானிகளும் மூப்பர்களும் வந்து, இந்தப் போதகர் மீண்டும் நம் சபைக்கு வருவார். எப்படியும் அவரைச் சம்மதிக்க வைத்து அழைத்து வந்துவிடுவோம் என்று உறுதியளித்து, அனுப்பி வைப்பார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்பர்ஜனிடம் “ஐயா, அடுத்த வாரமும் கட்டாயம் வரவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.

மூன்று மாதகாலம் காலியாக இருந்த சமயத்தில் ஆராதனை நடத்த அழைக்கப்பட்ட போதகர்களில் ஒருவர்கூட மீண்டும் அழைக்கப்பட்டதில்லை. மக்கள் விரும்பிக் கேட்கவும் இல்லை. ஆனால் ஸ்பர்ஜன் விஷயத்தில் எல்லோரும் அவரே திரும்பவும் வரவேண்டும் என்று கேட்டது ஆச்சரியமாயிருந்தது. 1854 ஜனவரி மாதம் 1, 3 மற்றும் 5வது வார ஞாயிறுகளில் ஸ்பர்ஜன் வந்து பிரசங்கம் செய்தார். அவரது ஊழியம் வெற்றிகரமாயிருந்தது. எனவே சபைக் கமிட்டியினர் கூடி ஆலோசித்து ஸ்பர்ஜனை அந்தச் சபையில் 6 மாதங்கள் போதகராயிருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களுடைய நோக்கம் 6 மாதங்கள் முடிந்ததும் அவரை நிரந்தரமாக்கிவிடலாம் என்பது. ஆனால் ஒருசில மாதங்களுக்குள்ளேயே அவர்கள் சபையில் ஒரு பொதுக்குழு கூட்டி, ஆலோசித்து, ஸ்பர்ஜனை “நியூ பார்க் ஸ்டிரீட்” சபை என்னும் அந்தச் சபையில் நிரந்தரப் போதகராக நியமித்துவிட்டார்கள்.

ஸ்பர்ஜன் லண்டன் சபையில் வேலைக்குச் சேர்ந்த முதல் வாரம் முதலே ஆலயத்தில் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து 6 ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் ஆலயம் நிரம்பி, சுற்றிலும் உள்ள தெருக்கள் நிரம்பி, இடம் இல்லாமல் மக்கள் அடுத்த தெருக்களிலும் சென்று கூடி நின்றார்கள். இது ஸ்பர்ஜனுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. அவர் கிராமத்தில் ஒரு சபையில், சிறு கூட்டத்தில் பேசிப் பழகியவர். இவ்வளவு பெரிய கூட்டத்துக்குக் கேட்கத் தக்கதாக உரத்த குரலில் பேசிப் பழகவில்லை. அந்த வருட முடிவுக்குள் தனது குரல் மாபெரும் கூட்டத்துக்கும் கேட்கும் வகையில் பேசும் உத்தியைக் கண்டு பிடித்துக் கொண்டார். ஆலயம் பல தடவைகள் விரிவுபடுத்தப்பட்டது. எனினும் ஆலயத்தில் இடம் இல்லை என்ற நிலைமையே நீடித்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த ஆராதனையில் ஆலயம் முழுவதும் நிரம்பியிருந்தது. பத்தாயிரம் பேர் வெளியே நின்றனர். திடீரென்று, “நெருப்பு, நெருப்பு” என்று குரல் வந்தது. மக்கள் கூட்டத்தைத் திகில் பிடித்துக் கொண்டது. ஏழுபேர் இறந்து போனார்கள். 28 பேர் காயமடைந்தனர். இந்த அனுபவம் ஸ்பர்ஜனை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. அவர் பல நாட்கள் இரவும் பகலும் தூக்கமின்றி இந்த சோக நிகழ்ச்சியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். இருந்த போதிலும் ஸ்பர்ஜனின் பெயரும், புகழும் இங்கிலாந்து முழுவதும் பரவிவிட்டது. லண்டன் நகர மக்கள் அனைவரும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க விரும்பினர். அடுத்த மூன்று வருடங்கள் ஒவ்வொரு ஞாயிறும் 10,000 பேருக்குப் பிரசங்கம் செய்துவந்தார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் என்னும் நாடுகளில் இருந்த மிகப் பெரிய கட்டிடங்களில் ஸ்பர்ஜனின் கூட்டங்கள் நடந்தன. வெளிக்கூட்டங்களும் நடத்தினார். ஸ்பர்ஜனின் 22-ஆவது வயதில் அவருடைய காலத்தில் உலகிலேயே மிகப் புகழ்பெற்ற பிரசங்கியார் ஆனார்.

1854இல் முதன்முதல் கேம்பிரிட்ஜில் இருந்து லண்டனில் உள்ள நியூ பார்க் ஸ்டிரீட் ஆலயத்துக்கு போதகராக வந்தபோது ஆலயத் தில் 232 உறுப்பினர் மட்டுமே இருந்தனர். 1891இல் அந்த ஆலயத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14460 ஆகியிருந்தது.

1861இல் மெட்ரோ போலிட்டன் ஆசரிப்புக் கூடாரம் ஒரு பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டது. ஸ்பர்ஜன் இந்த ஆலயத்தில் 31 வருடங்கள் போதகராகப் பணியாற்றினார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலையில் 5000 பேர், மாலையில் 5000 பேர் ஸ்பர்ஜனின் பிரசங்கத்தை வந்து கேட்டுச் சென்றனர். அந்த ஆலயத்தில் கூட்டம் அதிகமாகவே, வழக்கமாக வரும் சபை உறுப்பினர்களை வராமலிருக்கச் சொன்னார். அவர்கள் வரவில்லை, எனினும் ஆலயம் இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆட்கள் வந்து நிறைந்தனர்.

ஸ்பர்ஜனின் வயது 23. 1857 இல் அங்கு இருந்த மிகப்பெரிய கட்டிடத்தில் ஆராதனை நடந்தது. ஸ்பர்ஜன் பேசினார். கேட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 23,654 பேர்! அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்பர்ஜன் மிகவும் களைத்துப் போனார். கூட்டம் முடிந்த பின் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தூங்கினார்.

ஸ்பர்ஜன் செய்தியைக் கேட்க வந்துகூடிய மக்கள் சாதாரண மக்களே. அறிஞர்களும், பெரியவர்களும், பிரபுக்களும் வந்து கலந்து கொள்வதும் உண்டு. விக்டோரியா மகாராணி ஸ்பர்ஜனின் கூட்டத்துக்கு வருகிறார் என்று சொன்னால் என்ன நடக்கும்? எனவே மகாராணி ஒருவருக்கும் தெரியாமல் மாறுவேடம் போட்டு சாதாரண மக்களைப் போல வந்து பிரசங்கம் கேட்டுவிட்டுச் சென்றாராம்! எல்லாத் துறைகளிலும் உள்ள மக்கள் வந்து ஸ்பர் ஜனின் உரையைக் கேட்டுச் செல்வதுண்டு.

1856 ஜனவரி 8ஆம் நாள் சார்ல்ஸ் ஹாடன் ஸ்பர்ஜனுக்கும், நியூபார்க் ஸ்டிரீட் ஆலயத்தை சேர்ந்த சூசன்னா அம்மையாருக்கும் திருமணம் நடந்தது. தேவன் அவர்களுடைய திருமணத்தை ஆசீர்வதித்தார். சூசன்னாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தன. இரண்டு ஆண் குழந்தைகள் சார்ல்ஸ் மற்றும் தாமஸ்.

ஸ்பர்ஜனின் குடும்ப வாழ்க்கை மிகவும் ஒழுக்கமாக நடந்தது. அவருடைய மனைவிக்கு மட்டும் அடிக்கடி பாடுகள் வந்தன. மகன்கள் இருவருக்கும் ஞானஸ்நானம் நடந்தது. இருவரும் வெளி உலகில் வேலை தேடிக்கொண்டனர். படித்தார்கள், வளர்ந்தார்கள். வான்ட்ஸ்வொர்த் என்னுமிடத்தில் ஒரு வீட்டில் பிரசங்கம் பண்ணினார்கள் என்று கேள்விப்பட்டது ஸ்பர்ஜனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்!!!. ஒருவன் அந்த நகரத்தில் உள்ள ஒரு பெரிய வியாபாரியின் அலுவலகத்திலும், அடுத்தவன் மரத்தில் சிற்ப வேலை செய்யும் தொழிலிலும் சேர்ந்தார்கள். ஆனால் அவர்களுடைய பிரசங்கம் செய்யும் ஆற்றல் வளர்ந்தது. ஸ்பர்ஜனின் மூத்த மகனான சார்ல்ஸ், கிரீன்விச், நாட்டிங்ஹாம், செல்டென்ஹாம், ஹோவ் என்னும் சபைகளில் போதகராக ஊழியம் செய்துவிட்டு கடைசியில் அவருடைய அப்பா செய்து வந்த வேலையைத் தொடர்ந்து செய்ய ஏற்றுக்கொண்டார். அது ஸ்பர்ஜனின் அனாதை விடுதி. அது “ஸ்டாக்வெல் அனாதை விடுதி” என்று அழைக்கப்பட்டது. அது 12 வீடுகளில் நடத்தப்பட்டது. 500 அனாதைப் பிள்ளைகள் வரை அதில் தங்கியிருந்தனர்.

ஸ்பர்ஜனுக்கு 56 வயதாகும்போதே மிகவும் பலவீனமடைந்துவிட்டார். அவருடைய கடைசிப் பிரசங்கம் 1891 ஜூன் 7ஆம் நாள் ஞாயிறு, மெட்ரோ போலிட்டன் ஆசரிப்புக் கூடார ஆலயத்தில் செய்யப்பட்டது. அவரது தோற்றம் மிகவும் வயது சென்றவர் போல ஆயிற்று. தலைமுடி நரைத்து வெள்ளையாகவும், முகத்தில் வரிவரியாகச் சுருக்கம் விழுந்தும் 80 வயதுக்குமேல் ஆகிவிட்டது போலக் காணப்பட்டார்.

தன்னுடைய அந்தி காலம் நெருங்குவதை உணர்ந்த ஸ்பர்ஜன் தன் மனைவியிடம், “என் அருமை மனைவியே, 40 ஆண்டுகளாக ஆண்டவருடைய சேவையில் என் ஆண்டவருடன் எவ்வளவு ஆசீர்வாதமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன்” என்று கூறினார்.

கடைசியில் தன் உடல் ஆரோக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். மென்டோன் என்னுமிடத்தில் 1892 ஜனவரி 31ஆம் நாள் தன் எஜமானரோடு நித்திய வாழ்வைக் கழிக்கச் சென்றுவிட்டார். பிப்ரவரி 4ஆம் நாள் மென்டோன் என்னுமிடத்தில் ஒரு நினைவு ஆராதனை நடந்தது. அதன்பின் அவரது சரீரம் லண்டனுக்குக் கொண்டுவரப் பட்டது. லண்டனில் விக்டோரியா ஸ்டேஷனில் ஸ்பர்ஜன் ஆரம்பித்து நடத்திய போதகர் கல்லூரியில் அவரது உடல் வைக்கப்பட்டது. அன்று இரவு அவரது சரீரம் மெட்ரோ போலிட்டன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் மக்கள் அஞ்சலி செலுத்துமாறு வைக்கப்பட்டது. சார்ல்ஸ் ஹாடன் ஸ்பர்ஜனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த 60 ஆயிரம் பேர் வரிசையாகக் கண்ணீருடன் கடந்து சென்றனர். அடக்க ஆராதனைக்குப் பின் ஸ்பர்ஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்பர்ஜனின் மனைவி அதிக உடல் நலம் குன்றி பலவீனமாய் இருந்தார். இவர் 1903 அக்டோபர் 22ஆம் நாள் இறந்து போனார்.

ஸ்பர்ஜன் நீண்டநாள் போதகராயிருந்து ஊழியம் செய்த பெரிய சபையில் அவருடைய இளைய மகன் தாமஸ் போதகராகப் பொறுப் பேற்று ஊழியம் செய்தார். தாமஸ் இங்கே பொறுப்பேற்கும் முன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இடங்களில் ஊழியம் செய்திருந்தார். தாமஸ் 14 வருடங்கள் ஆசரிப்புக் கூடார ஆலயத்தில் ஊழியம் செய்தார். 1917 அக்டோபர் 20ஆம் நாள் அவரும் இறைவனடி சேர்ந்தார்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜன் 3500 வித்தியாசமான பிரசங்கங்கள் செய்திருந்தார். இவருடைய பிரசங்கங்கள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக அச்சிடப்பட்டு எடையளவில் பல டன்கள் விற்கப்பட்டன. 1855 முதல் வாரம் ஒரு பிரசங்கம் பத்திரிக்கையாக வெளியிட்டு வந்தார். ஸ்பர்ஜன் ஒரு போதகர் பயிற்சிக் கல்லூரி தொடங்கி நடத்தி வந்தார். எண்ணற்ற ஓய்வுநாள் பள்ளிகளும், ஆலயங்களும் ஆங்காங்கே கட்டினார். வேதாகமங்களும், துண்டுத்தாள் பிரதிகளும் விநியோகிக்கும் ஒரு ஸ்தாபனத்தின் தலைவராகவும் இருந்தார். ஒரு மாபெரும் அனாதை விடுதியும் தன் பெயரில் தொடங்கி நடத்தி வந்தார். அதைத்தான் அவருடைய மூத்தமகன் சார்ல்ஸ் அவருக்குப் பின் நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

லண்டனில் இன்றும் அந்த ஆசரிப்புக் கூடார ஆலயம் நடைபெற்று வருகிறது. போதகர்கள் கல்லூரி இன்றும் பயிற்சியளித்து புதிய போதகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அவர் ஆரம்பித்த அனாதை விடுதி இன்று புதிய இடத்தில் அவர் பெயரால், ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது. சார்ல்ஸ் ஹாடன் ஸ்பர்ஜனின் ஊழியங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மொழியாக்கம்: சகோ.G.வில்சன்