ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றும் காரணராயிருக்கிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இம்மட்டும் நம்மை பாதுகாத்து வழிநடத்தின தேவனைத் துதிக்கிறோம். புதிய கல்வி ஆண்டிற்குள்ளாக பிரவேசித்திருக்கும் நம் பிள்ளைகளுக்காகவும், மேற்படிப்பிலே சேர்வதற்காக முயற்சித்துவரும் பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்கிறோம். தேவன் தாமே அற்புதமாய் உங்கள் பணத் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். “…தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19).

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் காணிக்கையாலும் தாங்கி வருகிற பங்காளர்களுக்காகவும், நிகழ்ச்சி ஆதரவாளர்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். தேவனுடைய இராஜ்ஜியம் விரிவாக்கும் இப்பணிக்கு தொடர்ந்து இணைகரம் தர அன்புடன் கேட்கிறோம். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அஞ்சல்வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து ஆசீர்வாதம் பெற உங்களை அழைக்கிறோம். தற்போது முதல் பாடம் முடித்தோருக்கு இரண்டாவது பாடம் அனுப்பி வைத்துள்ளோம்.

உங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இவ்வூழியத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் முகவரிகளை எங்களுக்கு தெரியப்படுத்தினால் மாதிரி பிரதிகளை அனுப்பி வைப்போம்.

இவ்விதழில் பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை நாம் அறிந்துகொள்ளும் வண்ணம் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “பரிசுத்த வேதாகமம் ஒரு பொக்கிஷப் பேழை” என்ற செய்தியும், வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய “ஆண்டவருடைய வார்த்தை அழியாதது” என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் பரிசுத்த வேதாகமத்தை இன்னுமதிகமாய் நேசிக்கவும், வாசிக்கவும், அப்பியாசிக்கவும் நம்மை உற்சாகப்படுத்தும். சகோதரி.சாந்திபொன்னு அவர்கள் எழுதிய “சிதைக்கப்படும் மொட்டுக்கள்” என்ற செய்தியில் சிறுபிள்ளைகளின் இன்றைய அவல நிலையையும், அவர்களை எவ்வளவு கவனத்தோடு பராமரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதையும் விளக்கியுள்ளார்கள். மரணத்திற்குப் பின் நாம் அடையவிருக்கும் பரலோக பாக்கியத்தைக் குறித்து சகோ.எர்னஸ்ட் அவர்கள் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார்கள். சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிய “கடுகு விதையும் தேவனுடைய இராஜ்யமும்” என்ற செய்தி கர்த்தருடைய இராஜ்யத்திலே உழைக்கிற தேவ பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறதாய் அமைந்துள்ளது. இச்செய்திகள் யாவும் உங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய ஜெபிக்கும்…..

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்