பரிசுத்த வேதாகமம் பொக்கிஷப் பேழை!

Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2013)

தேவன் தம்முடைய சத்திய வார்த்தைகளை நமது தாய்மொழியில் தந்திருப்பது எத்தனை பாக்கியம்! இந்த பரிசுத்த வேதாகமத்தை நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம்? நமது புத்தக அலமாரியில் ஓர் இடத்தை அதற்கு ஒதுக்கி வைத்துள்ளோமா அல்லது நமது இருதயத்தில் வைத்திருக்கிறோமா? தேவன் நமது அன்புள்ள பரலோகத் தந்தை; அவருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம், அவர் நமக்குத் தந்துள்ள அன்பு மடல்கள்.

வேதப்புத்தகத்தை ஒரு பொக்கிஷப் பேழை எனவும் நாம் அழைக்கலாம். ஆனால் அதனைத் திறக்கும் சாவி நம்மிடம் இல்லையெனில் அந்த ஆபரணங்களையும், விலை உயர்ந்தவைகளையும் நாம் அனுபவிக்க முடியாது. வேதாகமம் மக்களுடைய வாழ்வை மாற்றும் தன்மை உடையது. ‘Mutiny on the Bounty’ என்ற ஓர் அருமையான புத்தகம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வேதாகமம் மக்களுடைய வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்க அது ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

1888 ஆம் ஆண்டு ஓர் ஆங்கிலேய மாலுமி குழு தெற்கு கடற்கரைத் தீவில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்தது. அவர்களுக்கு அவ்விடம் மிகவும் பிடித்துப் போனதால் வேறிடத்துக்குச் செல்ல விருப்பமற்று இருந்தனர். எனவே அவர்கள் கிளர்ச்சி செய்து தங்களது தலைவனை ஒரு சிறிய படகில் ஏற்றி அனுப்பிவிட்டு அத்தீவிலேயே தங்கி விட்டனர். ஆங்கிலேய கப்பற்படை இதனை அனுமதிக்கவில்லை. எனவே அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க ஒரு குழுவை அனுப்பியது. இக்குழு வந்து அவர்களில் 14 பேரைப் பிடித்தது. அதில் 9 பேரை மற்றொரு தீவில் இறக்கிவிட்டு மற்றவர்களைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டது.

இந்த தீவில் விடப்பட்ட 9 நபர்களின் வாழ்வும் சீர்குலைந்தது. அவர்கள் அத்தீவுப் பெண்களை மணந்தனர். தங்களுடைய குடும்பத்தை வியாபிக்கச் செய்தனர். அத்தீவில் கிடைத்த தாவரங்களிலிருந்து ஒருவித போதை தரும் பானம் தயாரிக்கக் கற்றுக்கொண்டனர். எனவே அத்தீவில் அநேகர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக மாறிவிட்டனர். அனைத்தையும் மிதமிஞ்சி அனுபவித்தனர். எனவே அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இள வயதிலேயே மரித்துவிட்டனர்.

எஞ்சியிருந்தவர் அலெக்ஸாண்டர் ஸ்மித் என்பவராவார். இறந்து போனவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும் இவரும் மாத்திரமே தனித்துவிடப்பட்டனர். ஒருநாள் அவர் ஓரிடத்தில் ஒரு பேழையைக் கண்டெடுத்தார். பேழையின் பூட்டை உடைத்து அதனைத் திறந்தபொழுது அதனுள்ளே ஒரு வேதப்புத்தகத்தைக் கண்டார். அவர் அதற்கு முன் வேதாகமத்தை வாசித்தது இல்லை. நம்மில் அநேகரைப்போல் அது என்ன என்பதை மாத்திரம் அவர் அறிந்திருந்தார். எனவே அவர் அதனை வாசிக்க ஆரம்பித்தார். வாசிக்கும் பொழுது அதனை விசுவாசிக்கவும் செய்தார். அவருடைய வாழ்க்கை மாறினது. அலெக்ஸாண்டர் ஸ்மித், கொள்ளையில் கிடைத்த அருட்கொடையாக மாறினார்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அமெரிக்கக் கப்பல் அத்தீவுக்கு வந்தது. அவர்கள் அலெக்ஸாண்டர் ஸ்மித்தைக் கண்டனர். அவர் வைத்திருந்த வேதாகமத்தையும் கண்டனர். அத்தீவின் குடிகளுக்கு ஸ்மித் வேதாகமத்தைக் கற்றுக்கொடுத்திருந்தார். எனவே அவ்விடத்தில் எந்த ஒரு குற்றமும் காணப்படவில்லை. கல்வியறிவில்லாதவர்களும் இல்லை. குணத்தில் குறைகள் உடைய தீயமனிதர் ஒருவரும் இல்லை. வேதாகமத்தை விசுவாசித்த ஒரு மனிதனால் அத்தீவு முழுவதும் மாற்றமடைந்திருந்ததைக் கண்டனர். ஆம், சத்திய வேதம் மக்களிடம் தாக்கத்தை அளிக்க வல்லமையுடையதாயிருந்தது. வேதத்தை வைத்திருப்பது வேறு; அதிலிருந்து பயனடைவது வேறு என்பதை இந்த நிகழ்ச்சி நன்கு விளக்குகிறது. இவ்வுலகத்திலும் அநேக வேதாகமப் புத்தகங்கள் உள்ளன. நாம் அதனுடைய ஆசிரியருடன் தொடர்புகொள்ளப் பழகவேண்டும். தேவன் நமக்குத் தந்தருளின புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நாம் அவரை அறியாதிருப்பதன் காரணத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

வேதபுத்தகம் மிகப்பெரிய புத்தகம்; மேலும் அது மிகப் பழமையான ஒரு புத்தகமும்கூட; எனவேதான் அநேகர் அதனுடைய பலனை அனுபவிக்க விரும்புவதில்லை. அது மிகப் பழமையான மொழியில் எழுதப்பட்டது. அநேக மொழி பெயர்ப்பாளர்கள் அதின் மொழி நடையை மாற்றவேண்டும் என்று கூறுகின்றனர். நவீன ஆங்கில மொழியில் சுமார் 500க்கும் அதிகமான வேதாகமம் வெளிவந்துவிட்ட இக்காலத்திலும் அநேகர் அதனை வாசிப்பதில்லை.

எனவே, திருமறையை வாசிப்பதற்கு மொழி ஒரு தடையல்ல; பிரச்சனை நம்மிடம்தான் உள்ளது. அத்தீவு மக்களின் பிரச்சனை, வேதாகமம் அந்த பேழைக்குள் இருந்தமையால் அல்ல. அது அம்மக்களின் இருதயத்தில் இல்லாதிருந்ததே. வேதாகமத்திலிருந்து அதிகமான பயனைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்னதாக, நீங்கள் விசுவாசிக்க வேண்டிய சில காரியங்களை உங்களுக்கு நான் விளக்கவேண்டும்.

ஒன்று: வேதாகமத்திலுள்ள அனைத்தும் தேவனுடைய வாயிலிருந்து நேரடியாக மக்களின் எண்ணத்தில் வந்தது என்பதை நமது கருத்தில் கொள்ள வேண்டும்.

வேதாகமத்தின் ஒரு சில காரியங்கள் உண்மை; சில காரியங்கள் உண்மையல்ல என்று நாம் கூறும் பொழுது நமது பகுத்தறிவைச் சார்ந்துள்ளோம்.

அது நமது ஞானத்தை உபயோகிப்பதாகாது; அது தகவல்களைப் பயன்படுத்துவதாகும். தகவல்கள் எப்பொழுதும் ஞானத்தை விளங்கச் செய்யாது. வேதாகமத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஞானத்தின் பாதையைவிட்டு விலகச் செய்யும் சில காரியங்களை வேதத்தின் அடிப்படையில் உங்களுக்கு விளக்குகிறேன். “புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக் குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்” (தீத்து 3:9).

வேதாகமத்தில் சில சிக்கலான பகுதிகளும் உண்டு. அதனை நாம் விரிவாக விவாதிக்கத் தேவையில்லை. வம்ச வரலாற்றின் வித்தியாசங்கள், இடைவெளிகள், யூத நாட்காட்டிகள் இவற்றில் ஆழமான ஆராய்ச்சிகள் தேவையற்றது. காயீனுக்கு மனைவி யார்? இதுபோன்ற தேவையற்ற காரியங்களை ஆராய்வதை விட்டு விலகவேண்டும். திருமறை அதற்காக எழுதப்படவில்லை. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நாம் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டு: வேதம் சொல்லுவதை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது அது கூறியதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.

“நான் அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்; ஆனால் நான் மாறப் போவதில்லை; நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன், ஆனால் நான் அதற்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்று நாம் கூறுவோமானால் நாம் சத்தியவேதத்தை அறிந்துகொள்ளவோ அதிலிருந்து சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது என்பது நிச்சயம். “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்” (யோவா.7:17). சத்திய வேதாகமம் தேவனிடமிருந்து வந்தது என்பதை ஏற்றுக் கொண்டு அதனை நமது வாழ்வில் நாம் செயற்படுத்துவோமானால் நமக்கு அதிக பிரயோஜனமுண்டு.

பொதுவாக நாம் ஒரு சொல்லின் பொருளையோ அதனுடைய எழுத்துக்களையோ அறிந்துகொள்ளுவதற்கு நாம் அகராதியை நாடுகிறோம். அது கூறியவற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறோம். அதைத் தொகுத்த ஆசிரியரை நாம் நம்புகிறோம். அதுபோலவே வேத புத்தகத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தேவனிடமிருந்து வந்த வார்த்தை என்று ஒப்புக்கொள்ளாமல், அதற்குக் கீழ்ப்படிய எண்ணமற்று இருப்போமானால் அதை நாம் வாசித்தாலும் நமக்கு அதனால் எந்த உபயோகமும் இல்லை.

மூன்று: வேதத்தை வாசிக்கும் பொழுது, அதை நமக்கு விளக்குவதற்கு ஒரு சரியான உதவியாளர் தேவை.

வேதத்தின் சில பகுதிகள் புரிந்து கொள்ள நமக்குக் கடினமாக இருக்கலாம். எனக்கு சில பகுதிகள் புரியாத பொழுது அதனைத் திரும்ப திரும்ப வாசிப்பேன். அப்பொழுதும் புரியாத வேளைகளில் சிலருடைய உதவியை நாடவேண்டும். அந்த உதவி உங்களுக்கு இணையதளத்திலோ கிறிஸ்தவ நூல்நிலையத்திலோ கிடைக்காது. அது தேவனுடைய பரிசுத்த ஆவியானவராலே மாத்திரமே முடியும். அவர் நமக்கு உதவி செய்வதாக வாக்குப் பண்ணியுள்ளார். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13) என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார். தேவனுடைய ஆவியானவர் என்னுடைய வாழ்விலே இருக்கும் பொழுது, அவர் உண்மை எது, உண்மையல்லாதது எது என்பதை அவர் எனக்குப் புரியவைப்பார். எனவேதான் அவர் சத்திய ஆவியானவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் மாத்திரமல்ல, ஒரு சில தேவமனிதர்களும் நமக்கு வேதாகமத்தை விளங்க வைப்பார்கள். மார்மியன் லோ, பால் கிரிஃபத், ஜான் பென்சன் ஆகியோர் எனது வாலிப பிராயத்தில் வேதத்தை விளக்கிக்காட்டினர். தேவஆவியானவர் மாத்திரமல்ல, இது போன்ற சில வரம் பெற்ற மனிதர்களும் எனக்கு வேதாகமத்தைப் புரிந்துகொள்ள இன்றும் உதவி செய்கிறார்கள்.

அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்தில் எத்தியோப்பிய மந்திரி ஏசாயா 53ஆம் அதிகாரத்தை வாசித்துக்கொண்டிருந்த பொழுது பிலிப்பு அவருக்கு அதை விளக்கிக் காட்டினார். ஏன்? ஏனெனில் அந்த அதிகாரத்தைப் புரிந்து கொள்ள தேவன் பிலிப்புக்கு வரம் அருளினார். தான் அறிந்துகொண்டதை பிலிப்பு அந்த எத்தி யோப்பிய மந்திரியுடன் பகிர்ந்துகொண்டார். கிறிஸ்தவராக மாறிய அப்பொல்லோ என்பவர் மிகச்சிறந்த பேச்சாளர். அவன் வரம்பெற்ற நற்செய்தியாளன். பட்டணங்கள்தோறும் சென்று பிரசங்கிக்கும்போது, திரளான மக்கள் கூட்டம் அவனது செய்தியைக் கேட்கக் கூடுவார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் அப்பொல்லாவைச் சந்தித்தபோது, அவன் மனந்திரும்புதலையும் யோவான் கொடுத்த ஸ்நானத்தையும் மாத்திரம் அறிந்தவனாயிருந்தையும் கண்டனர். இந்த தம்பதியினர், தேவனுடைய மார்க்கத்தைத் திட்டமாய் அப்பொல்லோவுக்கு விளக்கிக்காட்ட வல்லவர்களாயிருந்தனர் என்பதை அப்.18ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம்.

எனவே நீங்களும் ஒரு சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த உதவியாளர் தேவனுடைய ஆவியானவர் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் தேவனுடைய வார்த்தையை நன்கு கற்றுத் தேர்ந்த சில மனிதர்களும் உண்டு. இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தை விட்டுச் செல்லும்பொழுது, “நான் உங்களுக்கு சில வரங்களைத் தருகிறேன். அந்த வரங்களில் மேய்ப்பனாக இருத்தலும், போதகராக இருத்தலும் சில. நீங்கள் தேவவார்த்தையை விளங்கிக் கொள்ளுவதற்கு சில மனிதர்களை நான் உங்களுக்குத் தருவேன்” என்ற பொருளில் பேசினார். நாம் தேவனுடைய ஆவியானவரின் ஒத்தாசையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். நம்மைவிட வேத வசனங்களில் வல்லவர்களின் உதவியையும் நாடவேண்டும். நீங்கள் விளங்கிக்கொண்டவற்றை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களது கருத்துக்களையும் பெறவேண்டும். சில மனிதர்கள் மற்றவர்களுடைய உதவியில்லாமல் சுயமாகக் கற்றுக்கொண்டு தவறான வழியில் சென்று கொண்டிருப்பார்கள்.

நாசா விண்வெளிக் கூடத்திலிருந்து ஒரு விண்வெளிக்கலனை அனுப்பும்பொழுது, மிகச்சிறிய நொடியிலேயே தளத்திலிருந்து விடுபட்டுவிடும். நிலவை எட்டும்பொழுது அது பூமியிலிருந்து அதிக தூரம் சென்றிருக்கும். அதுபோலவே நாமும் சரியான பாதையை ஒரு சிறிய தவறான கருத்தினால் விலகுவோமானால் வெகுதொலைவுக்கு சத்தியத்தை விட்டுச் சென்றுவிடுவோம். எனவேதான் தேவ ஆவியானவரை நமக்கு ஆசிரியராகக் கொண்டு, அவரது உதவியை நாடவேண்டும். உங்களுக்கு நம்பிக்கையான சில மனிதர்களிடம் நீங்கள் படித்த வேத பகுதியிலிருந்து கற்றுக்கொண்டது சரியா என்று பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களும் ஒத்துக் கொள்ளும்பொழுது நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தேவன் தமது வார்த்தையில் சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் முதலாவது நல்லதோர் உதவியாளரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நான்கு: சரியான வழியில் வேத பகுதியின் விளக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

சரியான உதவியாளர் தனது அறிவுரைகளினால் உங்களுக்கு உதவுவார். இது ஒரு ஆசிரியரின் பணி. ஆனால் சரியான முறையில் விளங்கிக் கொள்வது தேவனுடைய வார்த்தையை அறிந்து கொள்வதன் மையப்பகுதியாகும். தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்வதில் மூன்று பகுதிகள் உண்டு. வேதம் கூறுவது அறிவுரையாகும். அதன் பொருளை அறிந்து கொள்வது விளக்கமாகும். அதனை நமது வாழ்வில் உபயோகிப்பது பயன்பாடு ஆகும்.

ஆனால் இன்று அநேகர் நேரடியாக பயன்பாட்டு நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். முதல் நிலையையும் இரண்டாம் நிலையையும் தவிர்த்துவிடுகின்றனர். “எனக்கு ஒரு பதிலைக் கொடுங்கள்; அதுதான் எனது தேவை. நீங்கள் எப்படி அந்த பதிலைப் பெற்றுக்கொண்டீர்களோ அல்லது எங்கிருந்து பெற்றீர்களோ என்பவை எனக்குத் தேவையல்ல. எனது பிரச்சனையைத் தீர்த்து வையுங்கள்” என்று சொல்லுகிறார்கள். இது இயலாத காரியம். மூன்றாவது நிலையை அடைய வேண்டுமானால் இரண்டாவது நிலைக்குச் செல்லவேண்டும். இரண்டாவது நிலையை அடைய வேண்டுமானால் முதல் நிலைக்குச் செல்லவேண்டும். இன்றைய சபையின் மிகப்பெரிய இக்கட்டு என்னவெனில், மக்கள் முதலாவது நிலையைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் திருமறையை வாசிக்காதமையால், அது கூறுபனவையும் அவர்களுக்குத் தெரியவில்லை.

சத்தியவேதம் கூறுவதை அறிந்து கொள்வதற்கு சரியான உதவியாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது முதல் நிலையாகும். அந்த சிறந்த உதவியாளர் தேவனுடைய ஆவியானவர் என்றும், நம்மைவிட வேத வசனங்களில் வல்லவர்களின் உதவியையும் நாம் நாடவேண்டும் என்றும் முன்பே விளக்கமாய் பார்த்தோம். இனி அதன் பொருளைப் புரிந்துகொள்ள சரியான வழியையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

தேவன் கூறுவனவற்றை நீங்கள் அப்படியே விசுவாசிக்க வேண்டும். இது இரண்டாவது நிலையாகும். அவர் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொள்வது நேரடி பொருள்கொள்ளுதல் ஆகும். தேவன் கூறியவற்றை சொல்லுக்குச் சொல் சரியான பொருள் கொள்வதாகும். அதாவது, தேவனுடைய வார்த்தையை “இதன் பொருள் என்னவாக இருக்கும்?” என்று ஆராயக்கூடாது. இதற்கு நல்ல உதாரணம்: ஏசாயா 11ஆம் அதிகாரம். இங்கு ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கத்தைப் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாகத் தங்கும் என்று எழுதப்படவில்லை. திருமறையில் சிங்கமும் ஆட்டுக்குட்டியும் சேர்ந்து காணப்படவில்லை.

நாம் வேதத்தைத் திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். அவ்வாறு படித்தோமானால், அநேக பைத்தியமான காரியங்களை நம்பமாட்டோம். வேதம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாகத் தங்கும் என்று கூறியிருந்தால், “இங்கிலாந்து நாடு ஓநாய் என்றும், ஐக்கிய நாடுகள் ஆட்டுக்குட்டி” என்றெல்லாம் கூறமாட்டீர்கள். இவ்வாறு கூறுவீர்கள் எனில், நீங்கள் உங்களைப் பைத்தியமாக்கிக் கொள்ளுகிறீர்கள்; மற்றவர்களும் வழிவிலகிச் செல்ல காரணமாகிறீர்கள். ஏசாயா 11ஆம் அதிகாரத்தைப் புரிந்துகொள்ள எளிதான வழி, ஓநாயும் ஆட்டுக்குட்டியுமே. அதைத்தான் அங்கே அவர் கூறுகிறார், அதன் பொருளும் அதுவே.

வேதாகமத்தின் ஒரு பகுதியை நேரடியாகப் பொருள்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பின் வேறு அர்த்தங்களை நாம் அதற்குக் கற்பிக்க வேண்டாம். அதனை அப்படியே விசுவாசிக்க வேண்டும். சில பகுதிகளை நாம் வாசிக்கும்பொழுது அது சரியான பொருளுடையதாகத் தோன்றாது. வெளிப்படுத்தல் விசேஷத்தின் அநேக பகுதிகள் அவ்வாறு நமக்குக் காணப்படலாம். ஆனால் அவை தீர்க்கதரிசன வெளிப்பாடுகளாகும். அவை மறைபொருளை வெளிப்படுத்தும் புத்தகமாகும். அதில் அநேக குறியீடுகளும் அடையாள மொழிகளும் காணப்படுகின்றன. எனவே நேரடியாகப் பொருளைத் தரும் பகுதிகளை நேரடியான அர்த்தத்தையும், அவ்வாறு அல்லாததை நாம் விளக்கத்தை அறிந்தும் படிக்கவேண்டும். எனவே வேதபகுதிகளின் சரியான விளக்கத்தை நாம் தேட வேண்டும்.

இரண்டு மலையுச்சிகளுக்கு இடையில் பள்ளத்தாக்கு உண்டு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக இயேசு கிறிஸ்து இவ்வுலகில் ஒரு மகவாக பிறந்ததை ஒரு மலையுச்சியாக எடுத்துக்கொள்வோமானால் அவர் மீண்டும் இராஜாதி இராஜாவாக கர்த்தாதி கர்த்தாவாக வருவதை அடுத்த மலையுச்சியாகக் கொள்ளவேண்டும். அநேக மக்கள் இவ்விரண்டையும் இணைத்து, அவை சரியல்ல, அவருடைய வருகை தோல்வியானது என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இவ்விரண்டு மலையுச்சிகளுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கைக் காணத் தவறி விடுகின்றனர். திருச்சபையின் காலம் இந்த இரண்டு மலையுச்சிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கைக் காணாவிட்டால், மலையுச்சியின் பொருளையும் அறிந்துகொள்ள மாட்டீர்கள்.

எனவே, வேதப்பகுதிகளுக்கு விளக்கம் தரும்பொழுது, நேரடியான பொருளை அப்படியே கொள்ளவேண்டும். அங்கே சில அடையாளங்களோ, குறியீட்டு சொற்களோ இருந்தால் அதை அறிந்துகொள்ள தேவன் உங்களுக்கு உதவி செய்வார்.

அதனை வாழ்க்கையில் சரியாக பயனீடு செய்யத் தெரியவேண்டும். இது மூன்றாவது நிலையாகும். இது மிகவும் கடினமானதொன்று. ஏனெனில் திருமறையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான அடிப்படை விளக்கத்தைக் கொண்டிருக்கும். ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை எழுதினவர் தமது எண்ணத்தில் சில விளக்கத்தை வைத்திருப்பார். அப்.பவுல் பிலிப்பு சபைக்கு எழுதும் பொழுது அவர் ஒரு முக்கியமான கருத்துடன் எழுதியிருப்பார். அவருடைய சிந்தனையில் உள்ளதை தோற்சுருளில் எழுதி தமது எண்ணங்களைத் தெரிவித்தார். எனவே ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான பொருள் விளக்கம் இருக்கும். யாத்திராகமம் 3ஆம் அதிகாரத்தில் எரிந்துகொண்டிருக்கும் முட்செடியினைப் பற்றி நாம் காண்கிறோம். அதன் அடிப்படை விளக்கமானது, அங்கே ஒரு முட்செடி எரிந்துகொண்டிருந்தது, தேவன் அங்கே மோசேயை சந்தித்து, எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்டு வழிநடத்திச் செல்ல அழைத்தார். ஆனால் நானோ, அக்கினியின் வரலாற்றையும், தேவன் அக்கினியாக இருக்கிறார் என்றும், அவரை கர்மேல் மலையுச்சியில் எலியாவுடன் தொடர்பு படுத்தினால் வேதபகுதியின் அடிப்படையான விளக்கத்தை நான் தவற விட்டுவிடுகிறேன்.

வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் ஓர் அடிப்படையான பொருளைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த அடிப்படையான பொருளிலிருந்து பலவிதமான செய்முறைப் பயனீடு அநேகம் உண்டாகும். எனவே நீங்கள் விளக்கத்தைப் புரிந்துகொள்ளும்பொழுது, பொருளுள்ளதாகவும், வேதபகுதியின் அடிப்படையான அப்பொருளை உண்மையுடனும் “இந்த பொருளுக்கு உங்களுடைய வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் செயல்படுத்த இவ்வித வழிகள் உண்டு” என்றும் கூறவேண்டும்.

அநேகர் யாத்திராகமம் புத்தகத்தில் காணப்படும் எரிகின்ற முட்செடியை மட்டுமே அறிந்துள்ளனர். அதுபோலவே பலர் பிலிப்பியர் நிருபத்தை வாசித்தும் தங்களுடைய வாழ்க்கை பயனீடு எதையும் அறியாதவர்களாகவே உள்ளனர். எனவே வேதாகமம் அவர்களுக்கு உபயோகமற்ற கதைகள் நிறைந்த ஒரு புதிர் புத்தகம் போலவே உள்ளது.

வேதத்தை வாசிப்பதுதான் அடிப்படையானது. ஆனால் அத்துடன் நில்லாது அந்த பகுதிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொண்டவற்றை நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும். இம்மூன்றும் இல்லையேல் தேவனுடைய வார்த்தையில் உள்ளவற்றை நாம் நிறைவாகப் பெற்றுக்கொண்டோம் என்று கூற இயலாது.

இதனைத் தொகுத்து, வேதம் கூறுவது அறிவுரை என்றும், அதன் பொருளை உணர்ந்து கொள்ளுதல் விளக்கமளித்தல் என்றும், அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை வாழ்க்கைப் பயனீடு என்றும் நாம் கூறலாம். கடலில் மூழ்குபவர்கள் அதற்கான அநேக பயிற்சிகளைப் பெறவேண்டும். வெறும் கருவிகளை மாத்திரம் வைத்துக்கொண்டு கடலில் குதிப்பது மதியீனச் செயலாகும். அதுபோலவே வேதத்தின் பொருளையும் விளக்கத்தையும் அறியாது வாழ்வின் பயனீடைத் தேடுவது அறிவுடைய செயலாகாது.

பயனீடை மாத்திரம் தேடுவதெனில் நாம் அநேக காரியங்களைக் காணத் தவறிவிடுவோம். மிகக் குறைவானவற்றில் நாம் திருப்தியடைகிறோம் என்று கூறலாம். ஆனால் தேவனுடைய மக்கள் மேலானவற்றைத் தேட வேண்டும்.

தேவன் தந்த பொக்கிஷப் பேழையான வேதத்தை நாம் வாசித்து, தியானித்து, ஆராய்ந்து அதனை நமது வாழ்வில் செயல்படுத்துவோமானால் தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாவோம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்