சிதைக்கப்படும் மொட்டுக்கள்

சகோதரி.சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2013)

“டாடி, என்னைத் திருப்பிக் கொண்டுபோய் மம்மி வீட்டில் விட்டிடாதேங்கோ. மம்மியும் அந்த ஆளும் என்னை…” மழலை மாறாத மொழியிலே, தமிழும் ஆங்கிலமும் கலந்து விம்மி வெடித்தது அந்தப் பிஞ்சு உள்ளம். அலைகளின் பேரிரைச்சலுக்கும் மேலாக இரைந்து எழும்பிய டாடியின் இதய ஓலம், சற்று நேரத்தில் அடங்கிவிட்டது. இது கற்பனையும் அல்ல; மேற்குலக நவநாகரீக கதையுமல்ல. நம்மவர்களின் குடும்பம் ஒன்றில் மெளனமாக ஓலமிடும் ஒரு பிஞ்சு மொட்டு சிந்தும் கண்ணீர் துளிகள்தான் இது.

“…அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக்கொண்ட சாலொமோனின் ஞானத்திற்கு வந்த முதல் சவால் ஒரு பிள்ளையைக் குறித்த வழக்குதான். வந்தவர்களோ புருஷன் யார் என்றே தெரியாத நிலையில் பிள்ளையைப் பெற்ற இரண்டு ஸ்திரீகள். ஒருத்தியின் பிள்ளை செத்துப்போக, உயிரோடிருக்கும் பிள்ளைக்காக இருவரும் வாதாடினார்கள். சாலொமோன் எடுத்தான் ஒரு பட்டயம். பிள்ளையைப் பிளந்து இருவருக்கும் கொடுக்கும்படி கட்டளைக் கொடுத்தான். உடனே வெடித்தது உண்மை. பிள்ளையின் உண்மையான தாயின் குடல் துடித்தது. ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கும் பிள்ளையைக் கொல்லவேண்டாம். அதை அவளிடமே கொடுத்துவிடும் என்றாள் அவள். மற்றவளோ, அது எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம்; பிளந்துபோடுங்கள் என்றாள் (1இராஜா.3:16-27). திருமண உறவுக்கு அப்பாலே தவறான வழியில்தான் அந்தப் பிள்ளையை அத்தாய் பெற்றெடுத்திருந்தாள். அப்படியிருந்தும், அக்குழந்தையின் பெறு மதிப்பை அவள் உணர்ந்திருந்தாள். இல்லாவிடில், அவளது குடல் துடிதுடித்திராது. தன் குழந்தைக்கு எந்தக் கேடும் வரக்கூடாது என்பதற்காக அவள் தன் சந்தோஷத்தையும் இழக்கத் தயாராயிருந்தாள்.

இப்படியிருக்க திருமண பந்தத்தின் அன்புப் பிணைப்பிற்கு அடையாளமாகப் பெற்றெடுக்கின்ற பிள்ளைகளுக்கு இன்று ஏன் இந்தக் கதி? இதற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம்? தேவசமுகத்தில் கைப்பிடித்து, தேவ ஆசீர்வாதத்தோடு வாழ்க்கையை ஆரம்பிக்கின்ற கிறிஸ்தவ தம்பதியினர் பொறுப்பற்ற விதத்தில் நடக்க முடியுமா? கிறிஸ்தவ தம்பதியினரே, உங்களுடைய சொந்த சந்தோஷ நியாயங்களுக்காக பரிசுத்த விவாகத்தைக் குலைச்சலாக்கிப்போடுவது எந்தவிதத்தில் நியாயம்? பெற்றெடுத்த பிள்ளைக்காக உங்களை அர்ப்பணிக்க முடியாத உங்களிடம், பிள்ளையைக் குறித்து கர்த்தர் கணக்குக் கேட்கும்போது என்ன பதில் சொல்வீர்கள்?

பிள்ளைகள் என்பவர்கள் யார்?

“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்.127:4). திருமண பந்தத்திலே இணைந்த ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வாரிசாகப் பிறக்கின்ற ஜீவன்தான் பிள்ளை. இந்தப் பிள்ளை தேவனால் பெற்றோருக்கு அருளப்படுகிற பெறுமதிப்புமிக்க திருமணப் பரிசு, ஈவு; தேவன் அருளும் ஆசீர்வாதத்தின் ஊற்று. மாறாக, இந்தப் பிள்ளைகள் பெற்றோருக்குச் சுமைகள் அல்ல; பழைய ஏற்பாட்டுக் காலத்தைப்போன்றே இன்றும் பல சமுதாய அமைப்புகளில் பிள்ளை இல்லாத தம்பதிகள் அற்பமாகவே எண்ணப்படுகிறார்கள்.

ஆதாமுக்கு ஏவாளைக் கொடுத்த தேவன், “பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்” என்றுதான் ஆசீர்வதித்தார். ஆபிராமை அழைத்த தேவன், உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன், உன் சந்ததிக்கூடாக பூமியிலுள்ள சகல சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றுதான் ஆசீர்வதித்தார். எத்தனையோ தடவைகள் சாராளின் கற்புக்கு கடும் சோதனை வந்தது. அந்த நேரத்தில் ஆபிரகாம் சுயநலத்தோடு தன்னைத் தப்புவிக்க வழிபார்த்தாரே தவிர, தன் மனைவியைக் காப்பாற்ற முயற்சி செய்யவே இல்லை. ஆனால், சாராளின் கற்பு மாசுபட தேவன் அனுமதித்தாரா? இல்லை. அந்நிய ராஜாக்களென்றும் பாராமல் அவர்களை வாதித்து அவர்களோடு இடைபட்டார் நமது தேவன், ஏன்? சாராளின் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளையைக் குறித்த வைராக்கியம் தேவனுக்கு.

“என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்”
“என் கருவை உம்முடைய கண்கள் கண்டது”

என்று தாவீது பாடிவைத்திருப்பதைச் சிந்திக்க வேண்டும்.

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாகு முன்னே அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்”

என கர்த்தர் எரேமியாவுக்குக் கூறிய இந்த வார்த்தைகளை நாம் உதாசீனம் செய்யலாமா! தாயின் வயிற்றில் உருவாகும்முன் ஒவ்வொரு மனுஷனையும் தேவன் அறிந்திருக்கிறார் என்றால், அவனுடைய வாழ்வு தேவனுக்கு எத்தனை முக்கியம் என்பது தெளிவு. பிறக்கும் முன்பே, ஈசாக்குக்கும் யோவான்ஸ்நானனுக்கும் பெயரிட்ட தேவன், சிம்சோனின் பிறப்பைக்குறித்து அவன் பிறக்கும்முன்பே மனோவாவிற்கும் அவனது மனைவிக்கும் அறிவிக்கத் தவறவில்லை. ஆக, ஒவ்வொரு பிள்ளையைக் குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு, திட்டம் உண்டு என்பது தெளிவு. அதனைக் குலைத்துப்போட எந்தவொரு மனிதனுக்கும் அதிகாரமில்லை. அது தேவனுக்கு விரோதமான பாவம்.

தேவனுடைய அநாதி திட்டம்

ஆதாமும் ஏவாளும் குழந்தைகளாகப் படைக்கப்படவில்லை. தேவசாயலில் படைக்கப்பட்ட அவர்கள், தங்களைப்போலவே பிள்ளைகளைப் பெற்று, ஒரு சந்ததியை உருவாக்கும் கிருபையையும் பெற்று காணப்பட்டனர். இவர்களின் சந்ததியினூடாக மனுக்குலத்தை மீட்கும்படியாக, பாவத்திற்குள் தள்ளப்பட்ட மனிதர்களை இரட்சிக்கும்படியாக வந்த ஆண்டவராகிய இயேசு, ஒரு முதிர்ந்த மனிதனாகவோ, அபூர்வ பிறவியாகவோ, விநோதமான அவதாரமாகவோ வரவில்லை. அவர் ஒரு சிறுகுழந்தையாகவே வந்து பிறந்தார். குழந்தைப்பருவம், சிறுபிராயம், வாலிபப்பிராயம் என்று கடந்து, ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையை இயேசுவானவர் தாமும் வாழ்ந்துகாட்டினார்.

“ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்” (சங்.22:30,31). இன்னும் பிறக்காத சந்ததியினர், இன்று வாழும் பெரியவர்களாகிய நமது உண்மைத்துவத்தில்தான் தங்கியிருக்கின்றன என்பதையே இந்த வார்த்தை தெளிவுபடுத்துகிறது. இன்று வாழுகின்ற நமக்கு இது பெரியதொரு பொறுப்பு!

மனித சந்ததி, சந்ததிப் பெருக்கம் என்பவை தேவனுடைய அநாதி திட்டம். தனித்தனி மனிதராக மட்டுமல்ல; ஒரு பரிசுத்த சந்ததியாகத் தம்மைச் சேவிக்கவேண்டும், நித்தியமாய் தம்மோடு வாழவேண்டும் என்பதுவும், சந்ததிகளையும் சந்தானங்களையும் ஆசீர்வதிப்பதுவும் தேவனின் அநாதி தீர்மானமாகும்.

குடும்பமே தேவனுடைய அநாதி திட்டம். பெற்றோருக்கு பிள்ளைகளை ஈவாகக் கொடுப்பது தேவனுடைய சித்தம். தேவனுக்கேற்ற வழியில் பெற்றோர் அவர்களை வளர்க்க வேண்டும் என்பது தேவகட்டளை. பிள்ளைகள் காப்பாற்றப்படுவதும், தேவபயத்தில் வளர்க்கப்படுவதும், தேவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதும், நமது அடுத்த சந்ததிக்கு மாத்திரமல்ல, இன்னும் பிறக்காத நமது சந்ததிகளுக்கும் நாம் செய்யும் பெரிய சேவை. தமது பிள்ளைகளுக்கு தேவனைக் குறித்த அறிவைப் புகட்டாத எந்தவொரு பெற்றோரும் அந்தச் சங்கிலித் தொடரை வேரோடு அறுத்துப் போடுகின்ற பாவத்தைத்தான் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயேசுவும் பிள்ளைகளும்

அன்று யூத சமுதாயத்தில் சிறுபிள்ளைகளும் பெண்களும் கணக்கெடுக்கப்படுவதில்லை. அந்தச் சூழ்நிலையிலும் ஆண்டவர் சிறுபிள்ளைகளில் கொண்டிருந்த தமது அன்பை மரியாதையை வெளிப்படையாகவே வெளிப் படுத்தியதை மாற்கு 9:36-37 இல் நாம் வாசிக்கிறோம். ஒரு சிறுபிள்ளையை தமது நாமத்தினாலே ஏற்றுக்கொள்கிறவன் தம்மை ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்லுமளவுக்கு இயேசு சிறுவர்களை நேசித்தார். மாத்திரமல்ல, ஒரு பிள்ளையைத் தம்முன் நிறுத்தி, “நீங்கள் மனந் திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று திட்டவட்டமாகச் சொன்னார் (மத்.18:1-6). சிறுபிள்ளைகள் கள்ளங்கபடற்றவர்கள் என்ற தினாலா அப்படிச் சொன்னார். இல்லை, என்ன நேர்ந்தாலும், எந்தச் சூழலிலும் சிறுபிள்ளைகள் தங்கள் பெற்றோரை நம்புவார்கள்; அவர்களையே முற்றிலும் சார்ந்துகொள்வார்கள். அப்படியே, ஒருவன் தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இயேசு இவ்வாறு கூறினார். இயேசுவே நேசிக்கின்ற சிறுபிள்ளைகளை நாம் உதாசீனம் செய்யலாமா?

நிர்க்கதியாகும் சிறுவர்கள்

பிறக்கின்ற பிள்ளைகள் முற்றுமாகத் தங்கள் பெற்றோரிலேயே தங்கியிருக்கிறார்கள். பின்னர் வளர வளர, தங்கள் காரியங்களைத் தமது விருப்பப்படி செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கென்று விருப்பங்கள் தெரிவுகள் என்று ஏற்பட்டாலும் அவற்றைப் பூர்த்திசெய்ய அவர்களால் முடியாது; பெற்றோர் வேண்டும். குடும்பம் என்பது என்ன? பிறக்கின்ற பிள்ளைகள் முதல் முதல் வாழ்வை அறிந்து கொள்வது இந்தக் குடும்ப கட்டமைப்பில்தான். பிள்ளைகள் வளரும்போது, அவர்களுடைய உணர்வும் வளர்ச்சியடைகிறது, அறிவும் வளருகிறது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அவர்களுக்கும் மனம் இருக்கிறது. தவறுகளை வெளியே சொல்லத் தெரியாவிட்டாலும், அவர்களுக்கும் ஏதோவொன்று புரிகிறது. பிள்ளைகளும் உடல் ரீதியாக மாத்திரமல்ல, உளரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை பெரியவர்களான நாம் உணர வேண்டும். பிள்ளைகளை சக மனிதராகக் கணிக்க நாம் பழகவேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது இன்று சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிற விஷயமாகிவிட்டது என்பது எத்தனை வேதனைக்குரிய காரியம்! இந்தப் பதத்தை உள்ளபடியே பார்த்தால், மனிதர், சிறுவர்களை தங்கள் துஷ்டத் தனத்திற்குத் தவறாகப் பிரயோகிக்கிறார்கள் எனலாம். ஒரு விஷயத்தை நாம் உணர வேண்டும். அறியாப் பருவத்திலேயே பெற்றோரினால் கைவிடப்படுதல், வீட்டிலேயே தமது பெற்றோரின் வீம்பினாலே பாதிக்கப்படுதல், வேலைக்கு அமர்த்தப்படுதல், அவ்விடங்களில் துன்புறுத்தப்படுதல், உணவின்மையால் கஷ்டப்படுதல், களவு காரணமாக அகப்பட்டு அடிபடுதல், கல்வி மறுக்கப்படுதல், யுத்தத்தில் நிறுத்தப்படுதல் போன்ற பல காரியங்கள் இந்தச் சிறுவர்களின் வாழ்விலே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பது நமக்குத் தெரியாதா!

இந்த வகையில், உடலில் ஏற்படுகின்ற வலி காலத்தில் மாறக்கூடும்; காயங்கள் ஆறக் கூடும்; பசி பறந்துபோகக்கூடும்; ஆதரவுக்கு ஒரு கூரைகூடக் கிடைக்கக்கூடும். ஆனால், ஒரு சிறுபிள்ளை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும்போது, அது ஆண் பிள்ளையாக இருந்தாலும்சரி, பெண்பிள்ளையாக இருந்தாலும் சரி, அதின் தாக்கம், எதிர்காலம் மிகவும் பயங்கரமான விளைவை உடையதாயிருக்கும். அதிலும், பெண்பிள்ளைகள் வாழ்வோ சிதைந்தே போகிறது. காமவெறி கொண்ட ஒருசில அரக்கர்களின் கொடூரச் செயலினால் பிள்ளைகள் மொட்டிலேயே சிதைக்கப்பட்டுப் போகிறதை ஏன் மனிதன் தெரிந்துகொண்டும் உணராதிருக்கிறான்? இந்தப் பிள்ளைகளில் சிலர் கொல்லப்படுகின்றனர்; ஆனால் பலர் வடுக்களோடு வாழுகின்றனர். அது இன்பமான வாழ்வாக இருக்குமோ?

காமமும் மோகமும் இன்று உலகத்தில் எங்கும் தலைவிரித்தாடுவதற்குக் காரணம் யார்? நாமேதான். உணர்ச்சிகளைத் தூண்டி விடும் சினிமா, அவற்றை வெளிச்சம்போட்டுக் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குடும்பமாய் அமர்ந்திருந்து பார்க்கின்ற பெரியவர்கள், சுயசந்தோஷத்தையே முக்கியப்படுத்தும் பெற்றோர்கள், அதிலும் முக்கியமாக தாய்மாரும், பணம் சம்பாதிப்பது ஒன்றையே கருத்தில்கொண்டு பிள்ளைகளை வேறு நபர்களின் பராமரிப்பில் விட்டுப்போகும் பெற்றோரும், தமது பிள்ளைகள் கணனிக்கு முன்னாக என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றுகூட கவனிக்க நேரமற்ற பெற்றோரின் “பிஸி”யான வாழ்க்கையும், தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் என்றுகூட நினைக்கமுடியாத அளவுக்கு வெறிகொண்டிருக்கும் வயதுமுதிர்ந்தோரும் …. இவர்களில் யாரைக் குற்றஞ்சொல்ல?

சிறுவர்கள் சிறுவர்கள்தான்

பிள்ளைகள் இயல்பாகவே எதையும் நம்புகிற சுபாவத்தை உடையவர்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை பெரியவர்களை நம்புகிறார்கள். இல்லையானால், அப்பாவுடன் அண்ணாவுடன் மாமாவுடன் வெளியே செல்ல மறுப்பார்களா? பிள்ளைகளின் வளர்ச்சி, நடத்தை, பழக்கவழக்கம் எல்லாவற்றுக்கும் பொறுப்பானவர்கள் அவர்களின் பெற்றோரும் பெரியவர்களுமே. பிள்ளைகளைக் குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டிய வர்களும் அவர்களே.

தனது பாதுகாப்பைக்குறித்து நிச்சயப்படுத்த ஒரு சிறுபிள்ளைக்குத் தேவையானது, தன்னைப் பராமரிப்பவர் கொடுக்கும் ஒரு அன்பின் பார்வை, ஒரு அன்பின் அரவணைப்பு அவ்வளவுதான். அறிவுப்பூர்வமான விளக்கம் அவர்களுக்கு அவசியமில்லை. அவர்கள் நம்மை நம்பிவிட்டால்போதும், அண்டிக் கொள்வார்கள். தமது அறியா பருவத்தில் அதிலும் இரண்டு மாதமளவிலேயே தன் தாயை அடையாளங்கண்டு புன்சிரிப்பு உதிர்க்கும் சிறு குழந்தை, அந்தத் தாய் தகப்பன் எவ்வளவுதான் அடித்தாலும் திட்டினாலும், தன் பெற்றோரின் கால்களையே கட்டிப்பிடிக்கும் என்பது சொல்லியா தெரியவேண்டும். ஒரு சிறிய சாக்லேட்டுக்கும் இனிப்புக்கும் கண்சிமிட்டும் களங்கமற்ற குழந்தைகளைச் சிதைக்க எப்படித்தான் மனம் வருகிறதோ? “ஐயோ அம்மா” என்று அலறும் சத்தமாவது அந்த கொடிய அரக்கர்களின் செவிகளை ஏன் துளைக்கிறதில்லை?

பாவத்தின் கோரம்

கிறிஸ்தவ விசுவாசியே, உனக்குத் தெரிந்த ஒன்றை உனக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பாவம் எவ்வளவு கோரமாக தாண்டவமாடுகிறது பார்த்தாயா? இது கடைசிக்காலம், இப்படித்தான் நடக்கும் என்று நாம் அசட்டையாக இருக்கலாமா? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகிறவர்களுக்காக நீ மனஸ்தாபப்படுகின்றாயா? அல்லது, சீறி எழுவாயா? உன் வீட்டுப் பிள்ளை இந்தக் கொடுமைக்கு இலக்கானால் நீ என்ன செய்வாய்? தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், காமம் கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் சமுதாயத்திலும் திருச்சபைக்குள்ளும் சிலர் திண்டாடுவது உண்மைதான். என்றாலும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி உண்டு. இந்தக் கொடுந்தீமைக்கெல்லாம் காரணமான சாத்தான் உண்மையில் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டவன் என்ற சத்தியம் இன்று மறைக்கப்பட்டு வருகிறது. அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற யதார்த்தம் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும், எல்லா சாபங்களுக்காகவும், மனுக்குலத்தையே தேவனைவிட்டுப் பிரித்துப்போடுகிற சகலத்துக்காகவும் இயேசு சிலுவையில்தாமே கிரயத்தைச் செலுத்தி வெற்றி சிறந்தார் என்ற நீதி இன்று கிறிஸ்தவர்களாலேயே தூக்கி வீசி எறியப்படுவது சிந்திக்க வேண்டிய ஒன்று.

இயேசு வெற்றி சிறந்தவர். ஆகவே, எவன் தன் மாம்ச பெலவீனங்களை உணர்ந்து, அவரண்டையில் விழுந்து, ஆண்டவரே! என்னைத் தொட்டுக் குணமாக்கும் என்று கேட்கிறானோ, கேட்கின்ற எவனையும் அவர் புறம்பேத் தள்ளவே மாட்டார். இந்த சத்தியத்தை நாம் ஏன் மறைக்கவேண்டும்? செய்த பாவத்தை மறைக்க, சாட்சிகளை மறைக்க, சாட்சி இல்லாமலே காரியங்களை நடத்தி முடிக்க, பொய் சாட்சிகளை ஏற்படுத்த எல்லாமே மனிதனுக்கு கற்றுத்தர வேண்டியதில்லை. சாட்சிகளைத் தேடும் உலக நீதிமன்றங்களும் உண்மை தெரிந்தும் எதுவும் செய்யமுடியாத நிலையில் திண்டாடுகிறது. ஆனால், தேவனுடைய நீதிமன்றத்தில் யாராலும் எதனையும் மறைக்கமுடியுமா?

வினையாகும் விளைவுகள்

பிள்ளைகளின் வாழ்வைச் சிதைக்கிறவர்கள், பிள்ளைகளை மாத்திரமா சிதைக்கிறார்கள்? ஒரு சந்ததியையே சிதைக்கிறார்கள். தாங்கள் மாத்திரம்தான் இந்த உலகில் வாழ முடியும் என எண்ணுகிறார்களா இந்தப் பெரிய கனவான்கள்? தங்கள் அற்ப ஆசைக்காக, ஒரு சில நிமிட அசிங்கமான உணர்வுக்காக ஒரு பிள்ளையைப் பலியாக்கும் இவர்கள், தேவனுடைய திட்டத்திலேயே தங்கள் அசுத்தமான கைகளைப் பதிக்க முற்படுகிறார்கள் என்பதையோ, அதன் பயங்கர விளைவுகளையோ ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை?

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளைக் குறித்த உங்கள் பொறுப்பில் நீங்கள் தவறுவீர்களாகில், நீங்கள் தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்கிறீர்கள்.

ஒரு அழகான ஓக்கிட் செடியிலிருந்து பல மொட்டுக்கள் தோன்றின. ஒரு அணில் வந்து அதில் சில மொட்டுக்களைக் கடித்துச் சிதைத்துவிட்டது. குறித்தக் காலத்தில், அந்த மொட்டுக்கள் யாவும் மலர்ந்தன. சிதைக்கப்பட்ட மொட்டுக்களும் மலர்ந்தன. ஆனால் அவை தங்கள் அழகை இழந்து காட்சியளித்த போது, சிதைக்கப்பட்ட வாழ்வுகளும் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றியது. அழகு அழகான மொட்டுக்கள் அன்றாடம், இரவு பகல் என்றில்லாமல் சிதைக்கப்படுகின்றனவே!

ஓ! …கிறிஸ்தவனே, உன் பொறுப்பு என்ன?

இன்றைய காலத்திலே நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?

உன்னுடைய திருச்சபை என்ன செய்து கொண்டிருக்கின்றது?

சத்தியவசனம்