மரணம் ஒரு பாலம்

சகோ.வஷ்னி ஏர்னஸ்ட்
(மே-ஜுன் 2013)

மானிட உலக வாழ்வினை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வே மரணமாகும். அதாவது சரீர வாழ்க்கை முடிவடைதலை நாம் மரணம் என்கிறோம். மனிதனின் புலன்கள், மூளை, இருதயம் போன்றவை செயலிழந்த நிலையில் சரீரப்பிரகாரமான மரணம் ஏற்படுகின்றது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்” (பிரசங்கி 7:2). இந்த “மரணம் என்ற இறுதியான முடிவுக்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா?” என்பதைக் குறித்த ஒரு எச்சரிப்பையே நாம் இச்செய்தியில் காணப்போகின்றோம்.

மரணம் என்பது – பாவத்தின் விளைவு (ரோ. 5:12) – மனிதர் அனைவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றது (எபி.9:27). அதாவது ஒவ்வொரு நபரும் மரிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேகத்தைவிட்டுப் பிரிவது (பிலி. 1:23).

மரணத்திற்கு ஆயத்தமாகுதல்

இயேசுவானவர் இவ்வாறு மரணத்திற்கு முகங்கொடுத்தார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…” (லூக். 23:46). இதுவே மரிப்பதற்கான சிறந்ததும் அழகானதுமான வழிமுறையாகும். இங்கே பிதாவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தவாறு இயேசு தாமே மரிப்பதற்கு ஆயத்தமானார். நாமும் இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தவர்களாக மரிப்பதற்கு ஒருநாள் ஆயத்தமாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். நித்திய ஜீவனைத் தரத்தக்க தேவ வார்த்தைகளை இருதயத்திற்குள் வைத்து வைத்திருப்போமாயின், நாம் மரணத்தைக் குறித்து அஞ்சவேண்டிய அவசியமேற்படாது.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துசெல்லும் ஒரு வாசலாக, ஒரு பாலமாகவே மரணம் காணப்படுகின்றது. இது இறுதியானதும் முடிவானதுமான நிலையல்ல. அதற்கு அப்பால் ஒரு நித்தியமான வாழ்க்கை ஒன்று உண்டு. தேவசாயலைப் பெற்றவர்களாக நாம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளமையினால், பாவத்தின் தண்டனையாகிய சரீர மரணத்திலிருந்தும் நரக தண்டனையிலிருந்தும் தப்பி, பிழைத்து நித்திய ஜீவனை அடைவோம் என்றே வேதாகமம் தேவனுடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

மறுபிறவி வேதாகம ரீதியானதல்ல

மனிதராகிய நாம், ஒரேதரம் பிறப்பது எப்படியோ அப்படியே நாம் ஒரேதரம் மரிப்பதும் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒன்று (எபி.9:27). ஆகவே மறுபிறவி எடுத்தல் என்பது வேதாகம ரீதியானது அல்ல. ஒருவன் மறுபடியும் மறு பிறவி எடுக்க இயலாது. ஒருவரின் ஆத்துமா இன்னொரு நபரின் சரீரத்திற்குள் செல்லவும் முடியாது. காரணம் சிருஷ்டிகரான தேவன் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் வாழத்தக்க ஒரேயொரு சரீரத்தையே கொடுத்துள்ளார். மரணத்தின் பின்னர் அந்த ஆத்துமா நித்தியமாக வாழும். அது உயிர்த்தெழுந்த மகிமையான சரீரமாகக் காணப்படும். இவ்வாறு நித்திய நித்தியமாக வாழும் ஆத்துமாவானது, ஒன்றில் தேவ சமுகத்திற்குள் செல்லும், அல்லது சாத்தானுடன் வேதனையான நரகத்திற்குள் கடந்துசெல்லும். நமது உடலோவென்றால் ஒருநாள் மண்ணோடு மண்ணாகும். அதாவது சாம்பலோடு சாம்பலாகும்.

கர்த்தருடைய பார்வையில் மரணம்

கர்த்தருடைய பிள்ளைகளின் மரணம் மகிமையுள்ளதாக காணப்படும். உண்மையில், கிறிஸ்தவர்கள் மரிக்கும்போது தேவ பிரசன்னத்திற்குள்ளேயே செல்கின்றார்கள். “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2கொரி.5:8). இந்தச் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்துசென்ற அந்த நிமிடம் முதல் ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இருக்கிறார். அவர்கள் அழிவில்லாமையைப் பெற்றிருப்பார்கள் (1கொரி.15:42-44). மரணம் ஒரு தற்காலிக நித்திரைக்கு ஒப்பானது. உயிர் பிரிந்துசென்ற உடனே, ஒரு சரீரத்தை நாம் பார்க்கும்போது, அந்த சரீரத்தில் வாழ்ந்துவந்த அந்த நபர், இப்போது கிறிஸ்து இயேசுவுடன்கூட இருப்பதினாலே மகிழ்ச்சியுடையவராகக் காணப்படுவார். “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்” (1தெசலோ.4:13-14). ஆம், இதன் காரணமாகத்தான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15). அது விலையேறப்பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.

மரண இருளின் பள்ளத்தாக்கிலே கூடவரும் கர்த்தர்

நான் ஒரு விசுவாசியாக இருப்பதினால், ஒருநாள் நானும் மரிக்கவேண்டும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உண்மையில், மரணமடைகின்ற ஒரு விசுவாசிக்கு நித்திய மரணமாகிய நரகம் கிடையாது. “.. சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21) என பவுல் உறுதிப்பட கூறியதுபோல நாமும் கூறுவோம். காரணம் சாவு நம்மை ஒன்றும் பண்ணமுடியாது. கிறிஸ்துவோடு நித்தியமாக வாழத்தக்க ஆதாயத்தையே சாவு ஒரு விசுவாசிக்கு கொடுக்கமுடியும். ஆம், கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு, “…மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது…” (1கொரி. 15:54)

நாம் மரிக்கும் நிலையில் இருக்கும்போது கூட கர்த்தர் அங்கே நம்கூடவே இருக்கின்றார். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்” (ஏசா.25:8). “…அது அதிக நன்மையாயிருக்கும்” (பிலி.1:23). மரணத்தைக் கடந்த நிலையில் நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் காணப்படுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமானது உயிர்த்தெழுந்த பின்பு மகிமைக்குரியதாக மாறியதுபோலவே நம்முடைய சரீரத்தையும் மாற்றுவார்.

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் …நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப். 3:20,21).

நாம் மரித்தபின்பு தேவனுடைய சமுகத்தில் அவரை சேவிக்கின்றவர்களாகக் காணப்படுவோம். “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).

மரணம் என்ற காரிருளானது உங்களை மேற்கொள்ளவரும்போது, கர்த்தர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார் என்ற நிச்சயமுள்ளவராக இருங்கள். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23: 4,6) என தாவீதைப்போல கூறுங்கள்.

மரணவேளையிலே, கர்த்தருடைய வார்த்தையிலே உறுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்றே, தேவனுடைய கரத்தை இறுகப் பற்றிப் பிடித்தவர்களாக நடக்க ஆரம்பிப்போமாக. கர்த்தர் தாமே நித்திய ஜீவனைத் தந்து, நம்மை தம்மோடுகூட மறுமையிலே சேர்த்துக் கொள்வாராக!

சத்தியவசனம்