நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 21
(மே-ஜுன் 2013)

ஏமி கார்மைக்கேல்

ஏமியின் வாழ்க்கை இரட்சகருக்காக தன்னலமற்ற, அர்ப்பணிக்கப்பட்ட ஒர் வாழ்வாகும். இருட்டில் அகப்பட்டுள்ளவர்கள் கர்த்தரின் அன்பை அறியவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வாழ்ந்தார். இவள் வட அயர்லாந்தில் 1867ஆம் ஆண்டு பிறந்தாள். இவளுடைய தகப்பன் இவள் 18 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு இவள் மூத்தவளாக இருந்தாள். இவளது தகப்பனாரின் இறப்பு, எதிர்காலத்தைப் பற்றியும், இவளது வாழ்க்கையில் கர்த்தரின் நோக்கத்தையும் குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.

ஏமி மிஷனரியாக வருவதற்கு முன்பாகவே, கர்த்தர் அவள் செய்யப்போகும் வேளைக்கு அவளை ஆயத்தப்படுத்தினார். இவளுக்கு முதலாவது அறிகுறி, பனி நிறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தது. அன்றையதினம் அவள் ஞாயிறு ஆராதனையின் பின் குடும்பத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு வயதான பெண் சுமக்க முடியாத அளவு பெரிய பாரத்தை சுமந்துகொண்டு செல்வதை ஏமியும், அவளது சகோதரர்களும் கண்டார்கள்.

இவள் இவ்வாறு எழுதுகிறாள்: இவள் உள்ளான ரீதியில் உதவிசெய்யவேண்டும் என உணர்த்தப்பட்டாலும் அவள் தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள். அதுயா தெனில், அவளைப்போல மரியாதைக்குரிய விசுவாசிகள் ஆலயம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருப்பதாகும். அவர்கள் இரண்டு ஆண்களும் ஏழு பெண்களுமாக இருந்தனர். மேலும், அவர்கள் உயர்வான கிறிஸ்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதை வெறுத்தார்கள். இவர்கள் இந்த காரியத்தை செய்ய மறுத்தாலும் இவர்களது உள்ளான சிந்தனைகளோடும் வெளிச்சூழலோடும் போராடிக்கொண்டிருந்தார்கள்

ஏமி தொடர்ந்து நடந்து போகையில் 1கொரி.3:12-14 வரையிலான வசனங்கள் அவளது செவியில் பேசுவது போல உணர்ந்தாள். “ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்”.

அவள் திரும்பி யாரும் அங்கிருக்கிறார்களா? என பார்த்தபோது, ஒருவரையும் காணவில்லை. ஓடையின் நீர் சத்தமும், தன்னைக் கடந்து போகும் சக மக்களின் சத்தமுமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்திற்கு முன்பாக ஏமி சமூக சேவையிலே ஈடுபாடு உடையவளாகக் காணப்பட்டாலும், கர்த்தர் மீண்டுமாக அவளை தன்னோடு ஒப்புரவாக அழைப்பது போன்று உணர்ந்தாள்.

கர்த்தரின் கரம்

1886ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கார்மைக்கேலின் குடும்பம் கிலெஸ்கோ என்ற இடத்திற்கு ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள சென்றது. இந்த இடம், இங்கிலாந்தின் லேக் மாவட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த மாநாட்டிலே ஏமி கர்த்தரின் வழிநடத்துதலை தனது வாழ்க்கையில் கண்டு கொண்டாள்.

இந்த மாநாட்டின் நோக்கம் பரிசுத்தம் அல்லது உயர்ந்த கிறிஸ்தவ ஜீவியம் என்பதைப் பற்றியதாகும். ஏமி இந்த மாநாட்டைப் பற்றிச் சொல்லும்போது இந்த மண்டபம் சோர்வான மந்தகதியான நபர்களினால் நிறைந்து இருந்ததாகக் குறிப்பிடுகிறாள். நான் இந்த மாநாட்டுக்கு வரும்போது அரை நம்பிக்கையுடனும், அரை பயத்துடனும் வந்தேன். இங்கே எனக்கு ஏதேனும் கிடைக்குமோ என்ற கேள்வியோடு வந்தேன். ஆனால், இந்த மாநாட்டின் தலைவர் இறுதி ஜெபத்திற்காக எழுந்து நின்றார். “ஓ, ஆண்டவரே, உம்முடைய இருதயம் நாங்கள் வீழ்ந்துபோவதில் இருந்து மீட்கவல்லது என்று நாங்கள் அறிவோம்” என ஜெபம் செய்தார். அந்த வசனங்கள் ஏமியின் வாழ்க்கையைத் தொட்டன. இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தன்னுடைய வாழ்க்கையை இயேசுகிறிஸ்துவுக்காக வாழ்வதைத் தவிர வேறு முக்கியத்துவம் இல்லை என புரிந்துகொண்டாள். தன்னிடம் உள்ள சகலத்தையும் தேவன் ஒப்படைக்கும்படியாக கேட்கிறார் என புரிந்து கொண்டாள். உலக காரியங்கள் மாத்திரம் அல்லாமல், சகல பழக்கங்களையும், சகல அலங்காரங்களையும் ஒப்படைத்தாள்.

1895ஆம் ஆண்டு, இங்கிலாந்து திருச்சபையின் சொனா மிஷனரி ஸ்தாபனம் என்ற அமைப்பினால் இந்தியாவின் டோனாவூர் என்ற பிரதேசத்திற்கு செல்லும்படியாக அனுப்பப்பட்டாள். இங்கு இவள் ஏறக்குறைய 56 வருடங்கள் கர்த்தருக்கு அர்ப்பணிப்புள்ள பணிவிடைக்காரியாக செயற்பட்டாள். அவளது ஊழியத்தின் பெரும்பகுதி விபசாரிகளாக இருக்க ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை விடுவிக்கும் பணியாக இருந்தது.

இவளுடைய சிந்தனையில் அந்த வயதான பெண் பொதியினை தூக்கிச்செல்லும் காட்சி படமாக வந்துகொண்டிருந்தது. இந்த உலகிலே அன்புக்காக ஏங்குபவர்களுக்கு அன்பு காட்ட கர்த்தர் தன்னிடத்தில் அன்பு கூர்ந்தார் என உணர்ந்தாள். இங்கு அன்பின் வெளிப்பாடாக டோனாவூர் ஐக்கியம் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்தாள். இவ்விடத்தில் உள்ள ஆலயம் விபசார பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், உறைவிடமாகவும் மாறியது.

கிட்டத்தட்ட 1000 பெண்பிள்ளைகளுக்கு மேலாக இந்த ஊழியத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஏமி அம்மாவாக காணப்பட்டாள். உலகம் பயங்கரமானதாகவும், அழுத்தம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. ஆனாலும், ஏமி கர்த்தரின் பொருத்தனையை எல்லா விஷயங்களிலும் நடைமுறைப்படுத்த மறக்கவில்லை. அநேக நேரங்களில் இயேசு கிறிஸ்து அன்று ஒலிவமரத்திற்கு அடியிற் முழங்காற்படியிட்டிருக்கிறதைப் போன்று தனியாக முழங்காற்படியிட்டு இருப்பதை எனது சிந்தனைக் கண்களால் கண்டிருக்கிறேன். அவரைக் குறித்த கரிசனையுடைய ஒருவர் இருப்பாரேயானால், அவர் சிறுபிள்ளைகள் மீது காட்டிய மனதுருக்கத்தில் நாமும் பங்கடையும் பொருட்டு இயேசுவிடம் சென்று முழங்காற் படியிடுவதே அவர் செய்ய வேண்டியதாகும்.

ஏமி கிட்டத்தட்ட 35 புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் சிறுமியாக இருக்கும்போதே எழுத்துத்திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், 1931 ஆம் ஆண்டு, நடந்த விபத்தின் காரணமாக இவர் டோனாவூர் ஐக்கிய ஸ்தாபனத்தின் வளாகத்திற்குள் அடைபட்டு கிடக்க வேண்டியதாயிற்று.

கீழ்ப்படிதல், முழுமையான அர்ப்பணிப்பு, தன்னலமற்ற வாழ்க்கை போன்ற முன்னுதாரணங்களை ஏமி தனது வாழ்க்கையின் மூலம் விட்டுவிட்டுச் சென்றாள். இயேசுகிறிஸ்துவுக்காக வாழுதல் என்ற காரியம் மறைந்து போகும் இக்காலகட்டத்தில் ஏமியின் வாழ்க்கை ஜொலித்துக்கொண்டிருக்கும் ஒரு வாழ்வாகும்.

கர்த்தர் ஏமியை பயன்படுத்தியதுபோல உங்களையும் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமல் விடலாம். ஆனால், அவர் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு திட்டத்தை வைத்துள்ளார்.

உங்களது வாழ்க்கையில் அவரது பரிபூரண திட்டத்தை வெளிப்படுத்த கேளுங்கள். கர்த்தரின் பிரதிபலன் மனிதர்களின் மதிப்பீடுகளையும், பணரீதியான மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக, அவை கர்த்தரோடு ஒப்புரவாகும் நபர்களுக்கும், இயேசுவுக்காக தங்களை அர்ப்பணிக்கும் நபர்களுக்கும் வெளிப்படுத்தப்படும் காரியங்களாகும்.

(தொகுத்து வழங்கியவர்: சகோ.பிரேம்குமார், இலங்கை)
சத்தியவசனம்