ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2013)

மகா பரிசுத்த ஸ்தலம்

கிருபாசனத்தின் பொருள்.

தம்முடைய வாழ்க்கையின்மூலம் இயேசு கிறிஸ்து கற்பனைகளைக் கனப்படுத்தினார். இதில் இவர் ஏசாயா.42:21 இன் நிறை வேறுதலானார். “கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார். அவர் வேதத்தை முக்கியப்படுத்தி, அதை மகிமையுள்ளதாக்குவார்”.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய மரணத்தின்மூலம் எல்லா தெய்வீக பரிபூரணங்களும் நிலைநாட்டப்பட்டன. தேவனுடைய அன்பு, கிருபை, இரக்கம் இவையனைத்தும் கல்வாரியில் வெளிப்படுத்தப்பட்டன. கல்வாரியில் இயேசு கிறிஸ்து சம்பாதித்த அனைத்தையும் குறித்து பவுல் இவ்வாறு கூறினார்: “ஆதலால், மனுஷன் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்… அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப் பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப் பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே!” (ரோ.3: 28,31).

நாம் நம்முடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு, நாம் ஆக்கினைத்தீர்ப்புக்குப் பாத்திரமானவர்கள் என்று ஒப்புக்கொள்ளுகிறதினாலும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக, நமக்குப் பதிலாகச் சிலுவையில் இரத்தஞ்சிந்தி, மரணமடைந்து நம்மை மீட்டார் என்று விசுவாசிப்பதன் மூலம் தேவனுடைய நீதியையும், நியாயப்பிரமாணத்தையும் நிலைநிறுத்துகிறோம்.

நியாயப்பிரமாணத்தை நிலைநாட்டுவது குறித்து கிறிஸ்து கூறுவதைக் கேளுங்கள். “நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.5:17,18).

கிறிஸ்துவின் பரிசுத்தம், நீதி, நியாயம் இவையனைத்தும் அவர் சிலுவையில் உலகத்தின் பாவங்களுக்காகத் தம்மைத் தியாக பலியாகக் கொடுத்தபோதே நிலைநிறுத்தப்பட்டன. பழைய ஏற்பாட்டு கிருபாசனத்தின் நிறைவேறுதல் அவரே. ஏனெனில் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் மாத்திரமே பாவி இரக்கத்தைப் பெறமுடியும். கிருபாசனத்தின் மீது பாவ நிவாரணபலியின் இரத்தம் தெளிக்கப்படுவது போல இங்கு கல்வாரியில் இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது.

கிருபாசனத்தின் ஆசீர்வாதங்கள்

கிருபாசனத்தின் சில சிறப்பான ஆசீர்வாதங்களைப் பார்ப்போம்.

கிருபாசனம்தான் தேவன் மனிதனோடு உரையாடும் இடமாகும். தேவன் மனிதனோடு தொடர்புகொள்ளக் கையாண்ட பலவழிகளைக் குறித்து சிந்திப்பது சுவையானதாகும்.

  • ஏதேன் தோட்டத்தில் தேவன் மனிதனோடு நேரடியாகப் பேசும் வாய்ப்பு இருந்தது. ஆனால் மனிதன் செய்த பாவம், தேவன் அவனை அந்தத் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தக் காரணமாயிற்று.
  • தேவன் பண்டைக்காலத் தீர்க்கதரிசிகளிடம் சொப்பனங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டார்.
  • இயேசுகிறிஸ்து தேவனை மனிதனுக்கு வெளிப்படுத்த உலகிற்கு வந்தார்.
  • பழைய ஏற்பாட்டுக் காலங்களில் தேவன் மனிதனுடன் ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமும், குறிப்பாக இரண்டு கேருபீன்களின் மத்தியில், கிருபாசனத்தில் இருந்து மனிதனுடன் தொடர்பு கொண்டார்.

1. கிருபாசனத்தின் ஒரு சிறப்பான ஆசீர்வாதம், அது உடன்படிக்கைப் பெட்டியை மூடியது.
உள்ளே இருக்கும் நியாயப்பிரமாணத்தை மூடிக் காப்பது போல் காணப்படுகிறது. தேவன் தமது தன்மையை வெளிப்படுத்தும் ஒருமுறை இதுவாகும். நியாயப் பிரமாணம், தேவனுடைய நீதியை வெளிப்படுத்தியது. அதன்படி, அதை மீறுபவர்களுக்கு மரணம் தண்டனை என்று காட்டியது. நியாயப்பிரமாணத்தை மீறுபவர்களுக்குரிய தேவனுடைய நியாயத்தீர்ப்பு அங்கு வெளிப்படுத்தப்படுகிறது. “நியாயப் பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” (கலா.3:10). இது இன்றளவும் உண்மையாயிருக்கிறது. ஒருவன் நியாயப்பிரமாணத்தைச் சரியாக ஆசரிப்பதன் மூலம் தேவனுக்குப் பிரியமாய் நடக்க விரும்பினால், அவன் நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாகப் பின்பற்ற வேண்டும். ஆனால் இயேசுகிறிஸ்து ஒரு வரைத் தவிர வேறு எந்த மனிதனாலும் நியாயப் பிரமாணத்தைப் பரிபூரணமாகப் பின்பற்ற முடியவில்லை.

இயேசுகிறிஸ்துவினால் நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாகப் பின்பற்ற முடிந்ததானால், அதைப் பின்பற்ற முடியாத நம்மீது அவர் நியாயத்தீர்ப்புச் செய்யலாம். அவர் நியாயப் பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுவிக்க வந்தார். அவர் அதை நிறைவேற்றி, தம்மை நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் சிலுவையில் தொங்கி, நமது தண்டனையைத் தம்மீது ஏற்று, நமக்காகத் தியாகபலியானார். இதன்மூலம் நம்மீது இருந்த தேவனுடைய கோபம் இயேசுவின் மேல் சுமத்தப்பட்டது. விசுவாசத்தினால் அடைக்கலமாகத் தேவனண்டை வந்து சேரும் எவரையும் அவர் புறக்கணித்துத் தள்ளமாட்டார்.

இதைப்போலவே இந்தக் கிருபாசனமும் நியாயப்பிரமாணத்தை உடன்படிக்கைப் பெட்டியினுள் வைத்து மூடிற்று. நம் காரணமாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை மூடி மறைத்ததை இது ஒத்திருக்கிறது. இதிலிருந்து கிருபாசனம் கிறிஸ்துவை ஒத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுகிறோம்.

கிருபாசனம் நியாயப்பிரமாணத்தை மூடி மறைத்தது. கிருபாசனத்தின்மேல் இரத்தம் தெளிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து பரிபூரணமாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். பின்னர் சிலுவையில் மரித்தார். நம்மை தண்டனையிலிருந்து மீட்டார். இயேசுகிறிஸ்து முதலில் தம்முடைய வாழ்க்கையிலும், பின்பு தமது மரணத்திலும் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றினார். ஒருவரும் அவர்மேல் தம் கையை நீட்டிச் சுட்டிக்காட்டி, “நீ நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்ளவில்லை” என்று கூறமுடியாது. தமது மரணத்திலும் அவர் அதை நிறைவேற்றினார். எல்லா மனிதருக்காகவும் தண்டனையாகிய மரணத்தை ஏற்றுக்கொண்டார். மனிதர்களால் நியாயப் பிரமாணத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

கலா.3:13 இல் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்”

நியாயப்பிரமாணத்தின் பலவீனம் இன்னொரு இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. “அதெப்படியெனில் மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” (ரோமர் 8:3).

நியாயப்பிரமாணத்தில் தவறொன்றுமில்லை. மாம்ச சரீரமுள்ள மனிதனின் பலவீனத்தினாலே நியாயப்பிரமாணத்தைச் சரிவரப் பின்பற்ற முடிவதில்லை.

ஆனால் நியாயப்பிரமாணம் காக்கப்பட வேண்டும். அதைப் புறக்கணித்து எவரும் எதையும் செய்யமுடியாது. அதனால்தான் கிருபாசனத்தின்மீது இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதிருந்தது. அது மனிதன் தேவன் வகுத்த பாதை வழியே கடந்து வந்தான் என்பதைக் காட்டியது. நாம் நியாயப் பிரமாணத்தைப் பரிபூரணமாகப் பின்பற்றவும் நிறைவேற்றவும் முடியாது. ஆனால் கிறிஸ்து அதைப் பரிபூரணமாகச் செய்தார். நாம் இயேசுகிறிஸ்துவால் சிந்தப்பட்ட இரத்தம் வழியாக மீட்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு தேவபிள்ளைகளாக ஆகியிருக்கிறோம். இது தேவனுடைய அன்பு, கிருபை, இரக்கம் இவற்றின் ஈவாகும்.

உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து கிருபா சனம் நீக்கப்பட்டு, நியாயப்பிரமாணம் மூடப்படாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் வேதாகமத்தில் உண்டு.

இஸ்ரவேலர் யுத்தங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஒருமுறை உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தர்களால் தூக்கிக் கொண்டு போகப்பட்டது. உடன்படிக்கைப் பெட்டி அவர் களுடைய நாட்டில் இருந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுக்கவொண்ணாமல், அவர்கள் ஒரு வண்டியில் உடன்படிக்கைப் பெட்டியை ஏற்றி, அதில் இரண்டு பசுக்களைப் பூட்டி ஓட்டிவிட்டார்கள். அது இஸ்ரவேல் தேசத்துக்குப் போகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாடுகள் அந்த வண்டியை இழுத்துக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குச் சென்று கோதுமை அறுவடையாகிக் கொண்டிருந்த ஒரு வயலில் போய் நின்றது. இந்தச் சம்பவத்தை 1சாமு. 6ஆம் அதிகாரத்தில் காணலாம்.

அந்த ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியினுள் எட்டிப் பார்த்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அந்தப் பெட்டிக்கு மூடி இல்லை. கிருபாசன மூடி இல்லாததால்தான் மக்கள் உள்ளே எட்டிப் பார்க்க முடிந்தது. தேவனுடைய கிருபை இல்லாமல் (கிருபாசனம்) நியாயப்பிரமாணம் வெளிப்படுத்தப்பட்டபோது மிகுந்த தண்டனையும், நியாயத்தீர்ப்பும் உண்டாயிற்று. வசனங்கள் 19,20,21 இல் இதை வாசிக்கிறோம். “பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்திற்குப் போகும்? என்று பெத்ஷிமேஸின் மனுஷர் சொல்லி, கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி, பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக் கொண்டு போங்கள் என்ற சொல்லச் சொன்னார்கள்”.

தேவனுடைய கிருபை இல்லாமல் நாமும் நியாயப்பிரமாணத்துக்கு முன்நிற்க முடியாது. நாம் செய்யக் கூடிய ஒரே காரியம் நம்முடைய பாவநிலையை ஒப்புக்கொண்டு, இயேசு கிறிஸ்துவை நம்மை மீட்டு இரட்சித்தவர் என்று விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடப்பதாகும்.

2. கிருபாசனத்தின் இன்னொரு ஆசீர்வாதம், அது ஒரு பிரதிநிதியின் மூலம் தேவன் பாவியைச் சந்திக்கும் இடமாகும்.
இங்கு பாவியின் பிரதிநிதி மகா பிரதான ஆசாரியன். அவன் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிப்பான். ஈடேற்றத்தின் நாளில் மகா பிரதான ஆசாரியன் பாவநிவாரண பலி (காளை, வெள்ளாட்டுக் கடா) இவற்றின் இரத்தத்தைக் கொண்டு மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசித்து பலியின் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேல் தெளிப்பான். இது மக்கள் அனைவருடைய பாவத்துக்காகவும் செலுத்தப்படுவதாகும் (லேவி.16:14-16)

இன்று கிறிஸ்து நமது மகா பிரதான ஆசாரியராயிருக்கிறார். தம்முடைய சிந்தப்பட்ட இரத்தத்துடன் அவர் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்து ஒரே பலியைச் செலுத்தி, நித்திய மீட்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்…” (எபி.10:19,20).

மகா பிரதான ஆசாரியன் பலியின் இரத்தத்துடன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதையும், இரத்தத்துடன் கிருபாசனத்தண்டையில் சேருவதையும் எவரும் பார்க்கமுடியாது. ஆனால் மக்களனைவரும் விசுவாசத்துடன் வெளியே காத்திருந்து, ஆசாரியர் போவதையும், உள்ளே செய்யும் வழிபாடுகளையும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

நாமும் கிருபாசனத்தையும், மகிமையான தேவனுடைய சிங்காசனத்தையும் நம்முடைய மாம்சக் கண்களால் பார்க்க முடியாது. ஆனால் நமது விசுவாசக் கண்களால், நமது பாவங்களுக்காகக் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் புண்ணியத்துடன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கலாம்.

3.கிருபாசனத்தின் இன்னொரு ஆசீர்வாதம், அது ஆவிக்குரிய ஐக்கியம் உண்டான இடமாகும்.
தேவன் மோசேயிடம், “கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின் மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப்போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” (யாத்.25:21,22).

கிருபாசனத்திலிருந்து தேவன் மனிதனோடு எவ்வாறு தொடர்பு கொண்டார் என்பதற்கு ஒரு உதாரணம் எண்ணாகமம் 7:89 இல் உள்ளது “மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்”.

மோசே மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டான். ஆனால் அவன் மற்ற ஆசாரியர்களைப் போல தேவனுடன் தொடர்புகொள்ள முடியும். பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள தொங்கு திரையின் பக்கத்தில் நின்று தேவனோடு பேசமுடியும்.

இயேசுகிறிஸ்துவின் மூலமாக, விசுவாசியும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவரப்படுகிறான். தேவனுடைய சமுகத்தில் ஆசீர்வாதம் நிறைந்த இடம் இது. ஆண்டவராகிய இயேசு உண்மையான மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருந்து தேவனோடு தொடர்பு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிறார். “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவகுமாரனாகிய இயேசு என்றும் மகாபிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக் கடவோம். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத் தண்டையிலே சேரக் கடவோம்” (எபி.4:14-16).

இயேசுகிறிஸ்து இப்பொழுது பரலோகத்தில் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் “மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்”( எபி.7:25).

இயேசுகிறிஸ்து தேவனுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கிறபடியால், நாம் தைரியமாக தேவனுடைய சமுகத்தில் செல்லமுடியும். அவரோடு ஐக்கியம் கொள்ளலாம். நாம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசிப்போமானால், நாம் தேவனோடு ஒப்புரவாகி இருப்போம்.

எனவே நாம் தேவனுடைய சிங்காசனத்தைக் கிட்டிச்சேருவோம்! முழுவிசுவாசத்துடனும், உறுதியுடனும் கிருபாசனத்தண்டையில் சேருவோம்!!

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்