ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

இம்மானுவேலராய் இவ்வுலகில் அவதரித்த அன்பர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2013ஆம் ஆண்டில் இறுதி வரைக்கும் நம்மை நடத்திவந்த தேவனுக்கு துதிகன மகிமை உண்டாவதாக. சத்தியவசன ஊழியத்தை உதாரத்துவமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் இதுவரை தாங்கி வந்த பங்காளர்களுக்காகவும் ஆதரவாளர்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறோம். கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்நாட்களில் சந்தோஷமும் சமாதானமும் ஐக்கியமும் உங்கள் குடும்பங்களில் நிறைவாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.

வருகிற நவம்பர் 30ஆம் தேதி கிறிஸ்துமஸ் கீத ஆராதனை மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான விளம்பரம் 15ஆம் பக்கம் இடம்பெற்றுள்ளது. மதுரையிலும் அதின் அருகாமையிலுமுள்ள பங்காளர்கள் கலந்துகொள்ள அன்பாய் அழைக்கிறோம். இவ்வருடத்தில் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூலில் உள்ள அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்தோர் 2014 ஜனவரி 31ஆம் தேதிக்குள் எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். பிறக்கப்போகும் புதிய ஆண்டில் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் இக் கிறிஸ்துமஸ் நாட்களில் நம் குடும்பங்களில் நிலவ வேண்டிய ஐக்கியத்தைக் குறித்தும், நமது அன்பளிப்புகள் நற்கிரியைகள் மூலம் மற்றவர்களுக்கு இயேசுவின் அன்பையும் நற்செய்தியையும் அறிவிக்கவேண்டிய விதத்தையும் Dr.உட்ரோ குரோல் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். தேவன் இம்மானுவேலராய் நம்மோடிருந்து நம்மை வழிநடத்துவதைக் குறித்து பேராசிரியர் எடிசன் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்த யோவான் ஸ்நானனைக் குறித்து சகோதரி.சாந்திப் பொன்னு அவர்களும், சகரியா-எலிசபெத் தம்பதிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியத்தைக் குறித்து கலாநிதி.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், இயேசுகிறிஸ்துவின் பிறப்பில் மேய்ப்பர்களின் பங்கைப் பற்றியும் அவர்களது நற்பண்புகளைப் பற்றியும் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும் செய்திகளை வழங்கியுள்ளனர். இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுகிறோம்.

பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும், ஊழியர்களின் சார்பாகவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்