இம்மானுவேல்

பேராசிரியர் எடிசன்
(நவம்பர்-டிசம்பர் 2013)

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்தியவசனம் நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் காலங்களிலே இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அதிகமாக தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

மத்தேயு சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில் இயேசுவின் பிறப்பைக் குறித்து இவ்விதமாக வாசிக்கிறோம். “தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்.1:22,23).

“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” (மத்.1:21) என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் ஏசாயா 7ஆம் அதிகாரத்திலே “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னான். ‘இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்’. புதிய ஏற்பாட்டிலே இயேசு பிறக்கும்பொழுது அவருக்கு ‘இயேசு’ என்று பேரிடுவாயாக என்றும், தீர்க்கதரிசி ‘இம்மானுவேல்’ என்று பேரிடுவார்கள் என்றும் சொன்னதாக நாம் பார்க்கிறோம். ஏன் இந்த வித்தியாசம்? இம்மானுவேல் என்பதன் அர்த்தம் என்ன? “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே. உண்மைதான், பரலோகத்திலே தூதர்கள் மத்தியில் பிதாவோடு ஐக்கியமாயிருந்த தேவ குமாரன் பாலகனாக மரியாளிடத்தில் பிறந்த பொழுது, பூமியிலுள்ள ஜனங்களில் அவரும் ஒருவராக எண்ணப்பட்டார். ஆகவேதான், தேவன் நம் மத்தியிலே இருக்கிறார், நம்மோடு இருக்கிறார் என்பதைக் குறிக்க இம்மானுவேல் என்று சொன்னார்கள். ஆனால், அவர் ஏன் பூமிக்கு வந்தார் என்கிற நோக்கத்தை விளக்க அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றார். இயேசு பூமிக்கு வந்ததின் நோக்கம், பாவத்திலிருக்கிற மனிதனுக்கு பாவ மன்னிப்பை சம்பாதித்து அவனை இரட்சித்து பரலோகத்திற்கு பாக்கியமுள்ளவனாக மாற்றுவதற்குத்தான் அவர் வந்தார். ஆகவே ‘இயேசு’ என்னும் பெயர் அவர் வந்ததின் நோக்கத்தையும், ‘இம்மானுவேல்’ என்பது அவர் நம்மோடு இருக்கிறார்; நம்மோடு பூமியிலே மனிதனாகப் பிறந்து வாழப்போகிறார் என்பதையும் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது.

இம்மானுவேல் என்கிற பதத்தை நாம் தியானிக்கலாம். ஆண்டவர் அநேக இடங்களில் சொல்லியிருக்கிறார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று. அப்படியென்றால் தேவன் நம்மோடு இருக்கிறார். ஆகையால் அவர் இம்மானுவேலர். அவர் நம்மோடு இருந்தாலும், நாம் அவரோடு இருந்தாலும் அவர் நமக்கு இம்மானுவேலரே! இந்த இம்மானுவேலர் எப்பொழுதெல்லாம் நம்முடனே இருக்கிறார்? உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து மத்.28:20இல் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

முதலாவதாக, இம்மானுவேலர் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தி உள்ளவன் ஆனான். இம்மானுவேலராய் நம்மோடு இருந்தால், அவர் நம்மை காரியசித்தி உள்ளவனாக மாற்றுவார். கர்த்தர் தானியேலோடே இருந்தார், அவன் காரியம் ஜெயமாயிற்று. காரியசித்தி என்றாலும் ஜெயம் என்றாலும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் தான். ஆகவே, இம்மானுவேலராய் அவர் இருந்தால் நம்முடைய காரியங்கள் ஜெயமாகும். கர்த்தர் தாவீதோடே இருந்தார், அவன் நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். ஆக, இம்மானுவேலராய் மனிதனோடேகூட இருக்கும்பொழுது அவர் செய்கிற காரியம் என்னவென்றால், அவர் நம்மை காரியசித்தி உள்ளவனாக்குகிறார், நம்மை ஜெயம் கொள்ளுகிறவனாக வைக்கிறார், அவர் நம்மை விருத்தியடையச் செய்கிறார்.

தாவீது அவரோடு நெருங்கி இருந்தான். எப்பொழுதும் தேவனிடத்தில் விசாரித்துக் கேட்பான். 23ஆம் சங்கீதம் 4ஆம் வசனத்திலே இப்படிச் சொன்னான்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்”. தாவீதுக்கு இருந்த நிச்சயம் மரண இருளின் பள்ளத்தாக்கிலும் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், ஆகையால் நான் மரணத்திற்கு பயப்படமாட்டேன். எபிரெயர் 2ஆம் அதிகாரம் 15ஆம் வசனத்தைப் பாருங்கள், “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்”. எப்படியென்றால் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவராய் பூமியிலே பிறந்தார். தாவீது அதை அறிந்திருந்தபடியால்தான் அவன் சொல்லுகிறான், மரண இருளின் பள்ளத் தாக்கிலே நான் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆறு வயது பெண் பிள்ளை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஒவ்வொரு உறுப்புகளாக செத்துக்கொண்டே வந்தது. அவளுக்கு இருதயம் மட்டும்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இரண்டு நாளில் அவள் மரித்துவிடுவாள் என்று அங்கிருந்த நர்ஸ்கள் சொன்னார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அந்த பிள்ளை கேட்டுகொண்டிருந்தாள். உடனே அவளுக்கு மரணபயம் வந்து விட்டது. எங்க அப்பா என்கூட இருந்தா நான் தைரியமாக இருப்பேன் என்று அப்பாவைக் கூப்பிட்டு, “அப்பா, எனக்கு தனியாக சாக பயமா இருக்கு. என்கூட வருவீங்களா?” என்று கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும். “உனக்கு ஒன்றும் நேரிடாது, நீ பயப்படாதே! நான் உனக்குச் சாக்லேட் வாங்கிட்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியே போய் விட்டார். அந்த பிள்ளை, “அம்மா என்னை அதிகமாக நேசிக்கிறாங்க! கண்டிப்பாக என் கூடவே வருவார்கள்” என்று சொல்லி, “அம்மா எனக்குத் தனியாக சாக பயமா இருக்கு. என்கூட வருவீங்களா?” என்று கேட்டது.

அந்த அம்மா ஓ! என்று அழுது அந்த மருத்துவமனையில் இருந்த ஆலய வாசலில் போய், இயேசு யார் என்று தெரியாவிட்டாலும் ஆண்டவரே! என்று அங்கே போய் கதறி அழுதார்கள். அவர்கள் திரும்பி வரும்போது இந்தப் பிள்ளை ரொம்ப உற்சாகமாக இருந்தது. இந்தப் பிள்ளை அம்மாவைப் பார்த்து, “அம்மா, கவலைப்படாதீங்க. நீங்க வரவேண்டாம், அப்பாவும் வரவேண்டாம். எனக்கு பயம் போய் விட்டது. என்கூட இயேசு வருவார் என்றாள்”. மேலும் அவள் சொன்னது: “நீங்க எல்லாரும் போயிட்டீங்க. அப்போது ஒரு வெள்ளை உடுப்பு அணிந்திருந்தவர் நான் தான் இயேசு. நான் இந்த மரணத்தின் வழியாக கடந்து போயிருக்கிறேன். மரண பயத்தில் இருப்பவர்களை விடுவிக்கும்படி நான் வந்திருக்கிறேன். பயப்படாதே, நீ சாகும்பொழுது நான் உன்கூட இருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொன்னார்” என்றாள்.

அன்பானவர்களே, நம்முடைய மரணத்திலும் நம்மோடு இம்மானுவேலராய் இருக்கிறார். எத்தனையோ பரிசுத்தவான்கள் அவர்கள் மரணத்தின்போது, அவர்கள் சந்தோஷமாய் மரிக்கக் காரணம் இயேசு அவர்களோடு இருப்பதை உணர்ந்ததினால்தான். நமக்கு மரண பயத்தை நீக்கிப்போடவே, அவர் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார்.

இரண்டாவதாக, சோதனைகளில் அவர் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார். பிசாசின் சோதனைகள் பயங்கரமாய் வரும். அநேகநேரத்தில் பாலியல் சோதனைகள் எதிர் பாராத விதமாய் நம்மை அப்படியே அழிக்கிற மாதிரி வரும். நம்மால் எதுவுமே செய்யமுடியாத சூழ்நிலைகள்கூட நேரிடலாம். அந்த நேரங்களில் தேவன் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார். அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நம் வாயினால் அறிக்கை செய்தால் தேவனுடைய பிரசன்னம் நம்மோடு இருக்கும். நான் பாவத்தில் விழமாட்டேன் என்கிற ஒரு விசுவாசம் நமக்குள் பெலப்படும் பொழுது நாம் அந்த சோதனையில் தப்பித்துக் கொள்வோம். ஒருவேளை பொருளாசை என்ற சோதனையாகக்கூட இருக்கலாம் அல்லது லஞ்சம் வாங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் நேரிடலாம். யாரிடத்திலாவது அதிகமாக ஒன்றைப் பெற்றுக் கொள்ள நமக்கு திடீரென்று ஒரு வாய்ப்பு வரலாம். இந்தமாதிரி நேரங்களில் இயேசு இம்மானுவேலாய் நம்மோடு இருப்பதை நாம் உணர்ந்துகொண்டால், நாம் எளிதில் பாவம் செய்யமாட்டோம். ஆகவே, அவர் இம்மானுவேலாய் நம்மோடு இருப்பது பாவசோதனைகளில் நாம் ஜெயம் எடுப்பதற்காக இருக்கிறார். கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவன் சொன்னான், இத்தனை பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய் நான் பாவம் செய்வது எப்படி? அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருமுறை நான் பணிபுரிந்த கல்லூரியிலே மாணவிகள் அனைவரையும் கொடைக்கானலுக்கு சுற்றுலா கூட்டிக்கொண்டு போவோம் என்று சொல்லியிருந்தோம். அப்பொழுது 52 சீட் உள்ள ஒரு பேருந்தை ஒழுங்கு செய்திருந்தோம். 40 பேர்தான் பணம் கொடுக்க ஆயத்தமாய் இருந்தார்கள். இன்னமும் 12 சீட் இருக்கிறது. உங்கள் அம்மாவை கூட்டிக் கொண்டு வருகிறீர்களா என்று கேட்டோம். எல்லா மாணவிகளும் என்ன சொல்லியிருப்பார்கள்? சுற்றுலாவே வேண்டாம் என்றனர். ஏன்? அவங்க அம்மா பார்த்துக்கிட்டு இருந்தா இந்தப் பிள்ளைங்களாலே ஆட்டம்போட முடியாது. அப்படி ஒரு தாய் பார்க்கிறார்கள் என்றாலே தவறான காரியத்தைச் செய்ய முடியாத நிலையில், சகலத்தையும் அறிந்த தேவன் பார்க்கிறார் என்கிற உணர்வு நமக்குள் இருக்குமானால் அவரை இம்மானுவேலராய் அறிந்திருந்தால் துணிகரமாய் பாவம் செய்வோமா? செய்யவே மாட்டோம். அது நமக்கு ஒரு கேடகம். சாத்தானின் சோதனைகளுக்கு இம்மானுவேல் என்னும் நாமம் ஒரு கேடகம். அது நம்மைப் பாதுகாக்கும்.

மூன்றாவதாக, நம்முடைய குறைகளில் அவர் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார். வியாதியாய் இருக்கும்பொழுது அவர் சுகம் அளிக்கிறவராய் நம்மோடு இருக்கிறார். கானாவூர் கல்யாண வீட்டிலே திராட்சரசம் குறைவுபட்டது. திராட்சரசம் குறைந்து விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கு இல்லையென்றால், அது அந்த கல்யாண விருந்தை நடத்துகிறவர்களுக்கு ஒரு பெரிய கேவலம். ஆகவேதான், அங்கே திராட்சரசம் குறைவுபட்டு விட்டது என்று தெரிந்தவுடன் மரியாள் கலங்கி, இயேசுவைப் பார்த்து “அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்”. அவரோ, என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லி, அதன் பின்னதாக வேலைக்காரரைப் பார்த்து ஆறு கற்ஜாடிகளையும் தண்ணீரால் நிரப்புங்கள் என்று சொல்லி அந்தத் தண்ணீரை திராட்சரசமாக மாற்றிக் கொடுத்தார். திராட்ச ரசத்தை ருசிபார்த்த பந்தி விசாரிப்புக்காரன் இவ்வளவு நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே! என்றான். காரணம் அவர் இம்மானுவேலராய் அந்த திருமண வீட்டில் இருந்தார். இன்றைக்கும் தேவன் ஒவ்வொரு திருமண வீட்டிலும் இம்மானுவேலராய் இருக்க விரும்புகிறார். நாம் அவருடைய பிரசன்னத்தை உணர்வோம் என்றால் நம்முடைய குறைவுகளையெல்லாம் அவர் நிறைவாக்குவார்.

கடைசியாக, யோவான் 14ஆம் அதிகாரம் 2, 3ஆம் வசனத்திலே இயேசு சொன்னார்: “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்”. ஆம்! நித்தியத்தில் அவர் நமக்கு இம்மானுவேலராய் இருக்கிறார். அங்கே பிரிவே இல்லை. அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்போம். இன்றைக்கு இதை உணர்வதற்கு நமக்கு கஷ்டமாக இருக்கிறது. சில வேளைகளில் பலவித நெருக்கங்கள் நமக்கு வரும்பொழுது, அவர் இம்மானுவேலராய் நம்மோடிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால், நித்தியத்திற்கு நாம் போவோம் என்றால் அங்கே அவர் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பார். நம்மை மகிழப்பண்ணுவார். நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேல் இருக்கும். ஆனால், அந்த நித்திய மகிழ்ச்சிக்குப் போக வேண்டும் என்றால், பூமியிலே அவர் இம்மானுவேலராய் என்னுடைய வாழ்நாளில் என்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் வாழ வேண்டும். அவர் என்னோடு இருந்தால் நான் பயப்பட மாட்டேன். அவர் என்னோடு இருந்தால் நான் பாவ சோதனைகளுக்கு இடங் கொடுக்க மாட்டேன். அவர் என்னோடு இருந்தால் அவரிடத்திலே ஆலோசனை கேட்டு, அவருடைய ஆலோசனையின்படி நடந்து என் காரியத்தை ஜெயம் ஆக்குவேன். அவர் என்னோடு இருந்தால் நித்தியத்தைப் பற்றிய நிச்சயம் எனக்கு இருப்பதால், என் உள்ளத்தில் எந்தவொரு கவலையும் இருக்காது.

சகோதரனே, சகோதரியே அவரை நீங்கள் இம்மானுவேலராய் இன்றைக்குத் தெரிந்துகொள்வீர்களா? அறிந்துகொண்டீர்களா? அவரை ஏற்றுக்கொள்வீர்களா? அவரை ஏற்று இம்மானுவேலராய் உங்கள் உள்ளத்திற்குள் தங்கி இருக்கும்படி அழைத்துக் கொள்ளுங்கள். நித்தியத்தின் சந்தோஷம் உங்களுக்குள் என்றென்றைக்கும் இருக்கும்.

சத்தியவசனம்