மிகச் சிறந்த கொண்டாட்டம்!

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2013)

ஆதியிலே தேவனோடிருந்த வார்த்தையாகிய இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் என்பது நாம் நேசிப்பவர்களுடன் ஐக்கியம் கொள்ளும் காலமாகும். இன்று அந்த ஐக்கியத்தைப்பற்றியும் மனிதருக்கு தேவன் காட்டிய பிரியத்தை மற்ற மனிதர்களுடன் பகிர்ந்துகொள்வதைப்பற்றியும் நாம் காண்போம்.

இந்த நாட்களில் நீங்கள் தனிமையை உணரக்கூடாது. அநேகருக்கு இது கடினமல்ல. ஆனால் உங்களில் சிலர் இவ்வாறு தனிமையில் வாடிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை உங்களது கணவரை அல்லது மனைவியை நீங்கள் இழந்திருக்கலாம். உங்கள் குடும்பத்தினர் வெளி நாட்டிலோ அல்லது வேறு ஊர்களிலோ இருக்கலாம். எனவே இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியாக செலவழிக்க வேண்டுமே என்ற கவலையில் நீங்கள் இருக்கலாம்.

கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய குறிப்புகளை பரி.லூக்கா தனது நற்செய்தி நூலில், இரண்டாம் அதிகாரத்தில் எழுதியுள்ளார். “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்” (லூக்கா 2:1-5).

வசனம் 5இல் குடிமதிப்பு எழுதப்படும்படி யோசேப்பு தன் மனைவி மரியாளுடன் செல்வதாக நாம் வாசிக்கிறோம். ஆம், மரியாளும் யோசேப்பும் அங்கே ஒன்றாகச் சென்றனர். கர்ப்பவதியாயிருந்த மரியாளுக்கு இது மிக மிகக் கடினமான ஒரு பிரயாணமாகும். அது இரண்டு அல்லது மூன்று மைல் தூரப் பிரயாணம் அல்ல. கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து எருசலேம் சுமார் 90 அல்லது நூறு மைல் தூரத்தில் இருந்தது. எருசலேம் கடல்மட்டத்துக்கு மேலே 2,700 அடி உயரத்திலிருந்தது. ஒரு கழுதையின்மேல் ஏறிச்செல்வது கடினமான ஒரு பிரயாணமே. மேலும் பெத்லகேமுக்கு இன்னும் அதிக உயரத்திற்குச் செல்ல வேண்டும். பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த மரியாளுக்கு யோசேப்பின் கனிவான கவனிப்பு அதிகம் தேவைப்பட்டது.

எனவே இந்தப் பிரயாணம் அவளுக்கு அதிக சிரமத்தையும் பாடுகளையும் உண்டாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் யோசேப்பும் மரியாளும் ஐக்கியப்பட்டிருந்ததால் அப்பிரயாணம் அதிக துன்பத்தை அளித்திருக்காது என நான் நம்புகிறேன். “அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக்கா 2:6,7).

அந்த ஊரில் வேறு பல மனிதர்களும் இருந்தனர். எனவே சத்திரம் நிரம்பியிருந்ததினால் அவர்களுக்கு அங்கு தங்க இடம் கிடைக்கவில்லை. அடுத்த வசனத்தில் மேய்ப்பர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்” (வச.8). இங்கே மேய்ப்பர்கள் என்று பன்மையில் எழுதப்பட்டுள்ளது. மந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து பேர் வரை மிகச் சொற்பமானவர்களே இருந்திருப்பர். அவர்கள் ஊருக்கு வெளியில் மந்தையைக் காத்துக்கொண்டிருந்ததால் மற்ற மனிதர்களுடன் அவர்களால் தொடர்புகொள்ள இயலாது. மேலும் மேய்ப்பனுடைய தொழில் சிறப்பானதாகக் கருதப்படவில்லை. அது ஒரு சாதாரணமான தொழில். சமுதாய அந்தஸ்தில் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள். எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மாத்திரம் ஐக்கியம்கொள்ள முடியும். அவர்களுக்கு திடீரென்று கர்த்தருடைய தூதன் தோன்றினார். மீட்புக்காக இப் பாவ உலகம் ஏங்கியிருந்த நற்செய்தியை அறிவித்தார். தனிமையானவர்களுக்கு தேவதூதரின் தரிசனம்! இது ஓர் அபூர்வமான அற்புத காட்சியல்லவா! அத்தூதன் கூறியதைக் கேட்ட மேய்ப்பர்கள் ஊருக்குள்ளே வந்து, மரியாள், யோசேப்புடன் சேர்ந்துகொண்டனர்.

வசனம் 8இல் தேவதூதர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. வசனம் 9இல் “அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்”. இங்கே தூதன் என்று ஒருமையில் தரப்பட்டுள்ளது. ஒரு தூதன் அந் நற்செய்தியை அறிவித்தவுடன், திரளான தூதர் கூட்டம் அவருடன் சேர்ந்து தேவனைத் துதித்தனர். “அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:” (வச.13). எனவே, இந்த கிறிஸ்துமஸ் காலம் தனிமையாக செலவிடும் காலமல்ல. அது மற்றவர்களுடன் சேர்ந்து தேவனைத் துதிக்கும் நாள். கிறிஸ்தவ ஐக்கியத்தில் தேவன் அதிகமாக விருப்பப்படுகிறார் என்பதை நாம் அறிந்து, மற்றவர்களுக்கும் அறிவிக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள். தனிமை என்பது மிகக் கொடியது. தனிமை யைப் பற்றி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தனிமை என்பது
கட்டைகள் இல்லாத பியானோ,
நரம்புகள் இல்லாத வயலின்
பக்தர்கள் இல்லாத ஆலயம்
பாடாத இசைக்குழு.

தனிமை என்பது கற்பாறையின்
நடுவில் வளரும் புல்லைப் போன்றது.
தனிமை என்பது கூடாரமில்லாத
முகாமைப் போன்றது.

தனிமை என்பது ஊமைக்குயில் போன்றது.
தனிமை என்பது ஓர் உணர்வு,
அது ஒருவருக்கும் சொந்தமானதல்ல.
சோளக்கொல்லையில் மறைந்திருக்கும்
சூரியகாந்திச் செடியைப் போன்றது.
அதனை ஒருவரும் காணமுடியாது.

தனிமையைப் பற்றி நான் அறியவேண்டிய
அனைத்தையும் அறிந்துள்ளேன்.
ஏனெனில் அது எனக்குள்ளாகவே வாழ்கிறது”.

ஆம், தனிமை உணர்வு மிக சோகமானது. அன்புக்காக ஏங்குவோரும், பிறரால் அசட்டை பண்ணப்பட்டவர்களும், தாழ்மை உணர்வு கொண்டுள்ளனர். கிறிஸ்துமஸ் காலத்தில் இத்தனிமை உணர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கிறிஸ்துவின் பிறப்பை தியானிக்கும் நாம் இக்காலங்களில் மற்றவர்களுடன் ஐக்கியம் கொண்டு, இக் கொண்டாட்டத்தை மிகச் சிறந்ததாக்குவோம்.

எனவே இந்த ஐக்கியத்துக்காகவே நாம் நமது வீட்டுக்கு மக்களை அழைக்கிறோம். கிறிஸ்துமஸ் மாதங்களில் நாம் கீத ஆராதனைகளில் பங்குகொள்வதும், மற்ற ஆராதனைகளில் பங்கெடுப்பதும் சிறந்தவைதான். ஆனால் அவைகளைவிட பிறருடன் ஐக்கியம் கொள்ளுவதற்கு கிறிஸ்துமஸ் மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

என்னுடைய மகனுடைய குடும்பம் புளோரிடா மாகாணத்திலும், ஒரு மகளுடைய குடும்பம் வடக்கு கரோலினா மாகாணத்திலும் மற்ற இரு மகள்களின் குடும்பங்கள் நப்ராஸ்காவிலும் வாழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வர இயலாவிட்டாலும், அவர்கள் எங்களுடன் வரும் கிறிஸ்துமஸ் மிக மகிழ்ச்சியாக அமையும் ஒரு காலமாக உள்ளது. குடும்பங்களிடையே ஐக்கியம்கொள்ள கிறிஸ்துமஸ் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. உங்கள் குடும்பத்தினர் ஆண்டவரை அறிந்திருந்தார்களானால் அது இன்னும் சிறப்பானதாகவும் அமையும்.

நமது சபையிலும் குடும்பங்கள் கூடிவரும் காலம் இது. அநேக சபைகளிலே தனிமையாய் வாழ்கின்றவர்களுக்காக சில நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நம்மில் அநேகர் கிறிஸ்துமஸ் காலத்தில் மிகவும் மும்முரமாக இருப்பதால் வேறொரு நிகழ்ச்சியை விரும்புவதில்லை.

நமது ஜெபக்குழுக்கள் கூடிவரும் காலம் இது. தேவனுடன் ஐக்கியமாயுள்ள நண்பர்கள் ஒரே சிந்தையாய் கூடிவருவது மகிழ்ச்சியை தருவதாகும். இப்பண்டிகை காலத்தில் தனிமையை உணரும் ஒருவரை நம்முடைய வீட்டுக்கு அழைத்து அவருக்கு கிறிஸ்துமஸ் என்பது ஓர் ஐக்கிய விழா என்பதைக் காட்டலாம். மற்ற கிறிஸ்தவர்களுடன், தேவனை நேசிக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் காலத்தைச் செலவிடுவதே மிகச் சிறந்த ஒரு கொண்டாட்டமாகும். வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத மூத்த குடிமக்களைச் சந்தித்து, அவர்களுக்கு பழங்கள் போன்றவற்றைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.

தனிமையானவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலம் இது. லூக்கா 2:14இல் கூறியுள்ள மனிதரில் பிரியத்தை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம்? நற்செய்தியை கேட்க விரும்பாத பலர் இந்த நல்லெண்ணத்தை நிச்சயம் விரும்புவார்கள். ஆண்டின் மற்ற நாட்களில் நாம் அறிவிக்க முடியாத நற்செய்தியை இந்த நாட்களில் நாம் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நல்லெண்ணத்தை வெளிப்படுத்த கிறிஸ்துமஸ் காலம் சிறந்ததாகும்.

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” என்று நாம் வாசிக்கிறோம். மனுஷர்மேல் பிரியம் என்றால் என்ன? நான் உங்களுடன் இரு காரியங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கிறிஸ்துமஸ் காலம் நற்செய்தியை அறிவிக்கும் ஒரு காலம். நற்செய்தி ஒன்று உண்டு என்று நமது அயலாருக்கு நாம் அறிவிக்க வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய கைப்பிரதிகளை கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலுடன் நாம் அனுப்பலாம்.

உங்கள் வீட்டின் முன்னால் ஒரு சாட்சிப் பலகையை வைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு சிறு பகுதியில் வசித்து வந்தேன். என்னுடைய தெரு மக்கள் பார்க்கும்படியாக ஒரு பலகையை கிறிஸ்துமஸ் காலங்களில் வைப்பேன். அதில் “———தெரு மக்களே, உங்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று எழுதியிருப்பேன்.

ஒருவேளை நீங்கள் அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பீர்கள் என்றால், உங்களுடைய தளத்தில் உள்ள மற்றவர்கள் வீட்டின் கதவு கைப்பிடியில் வசனங்கள் உள்ள சிறு அட்டைகளைத் தொங்கவிடலாம். நற்செய்தியை அறிவிப்பது நல்லெண்ணத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் ஒரு நல்ல அயலாராக இருப்பதும் நல்லெண்ணமே. கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் நல்ல அயலார் என்பதை வெளிப்படுத்த ஏற்ற தருணம். நாம் நம்முடைய அயலாரை நினைத்து காரியங்களைச் செய்யும்பொழுது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அவசரமான இவ்வுலகத்தில் நமது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் பார்ப்பதும், கைய சைப்பதுமாக இருக்கிறோம். அவர்களுடைய பெயர்களை மட்டும் நாம் அறிவோம். ஆனால் அவர்களுடைய வீட்டுக்கு ஒருமுறைகூட சென்றிருக்க மாட்டோம். இந்த பண்டிகையின் பொழுது அவர்களுக்கு சில கிறிஸ்துமஸ் பல காரங்களை எடுத்துக்கொண்டு சென்று உங்களுடைய அன்பினைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்ததன் நோக்கம் இந்த அன்பே என்று நாம் பிறரிடம் காட்டவேண்டும் என்று விண் தூதர்கள் உரைத்தனர்.

உங்களுடைய அயலாருக்கு ஒரு சிறு கைப்பிரதியை கொடுப்பதும் அன்பினைப் பகிர்ந்துகொள்ளும் செயலாகும். ஒருவேளை அவர் அதிக வேலையுடையவராய் இருக்கலாம். அவருக்கு சிறு குழந்தைகள் இருக்கலாம். அநேக கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பங்கெடுக்க வேண்டியவராய் இருக்கலாம். அவ் வேளையில் நீங்கள் அவருடைய குழந்தைகளை கவனித்துக்கொள்ள முன்வரலாம். இது அவருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவதோடு, உங்களுடைய அன்பை அவர்களுக்கு செயல்மூலம் வெளிப்படுத்தும்.

நல்ல ஒரு பணியாளராக இருப்பதும் ஒரு அன்பின் செயலே. நீங்கள் வேலைசெய்யும் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் காலத்தில் நீங்கள் தேவனுக்கு சாட்சியாக இருக்கமுடியும். கிறிஸ்துமஸ் விழாவில் உங்களது நடத்தையே உங்களைப்பற்றி சாட்சி பகரும். நீங்கள் ஒரு அதிகாரியாக இருந்தால், உங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறுவெகுமதிகள் கொடுப்பதன் மூலம் தேவஅன்பையும் அவர்களுக்கு அறிவித்து சாட்சியாக இருக்கமுடியும்.

பல ஆண்டுகளுக்கு முன் இனிப்பு மிட்டாய் தயாரிக்கும் ஒருவர் இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ விரும்பினார். எனவே இயேசுவைக் குறிக்கும் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தான “J” வடிவில் ஒரு மிட்டாயை உருவாக்கினார். அதன் கடினத்தன்மை இயேசு கன்மலை என்பதையும், அதன் வெண்மை நிறம் தேவனுடைய பரிசுத்தத்தையும், இயேசு பாவமில்லாத பாலகனாய் மாட்டுத் தொழுவில் அவதரித்ததையும் விளக்கியது. அதில் இயேசு சிந்தின இரத்தத்தைக் குறிக்கும்விதமாய் சிவப்பு நிறத்தை அவ்வெழுத்தில் மேலிருந்து கீழ்வரைக்கும் சுற்றினார். ஆனால் காலப் போக்கில் நாம் இதன் அர்த்தத்தை மாற்றி விட்டு, அதை கல்கண்டு மிட்டாய் என்ற அழைக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த மிட்டாயின் பொருள் இயேசுகிறிஸ்துவின் அன்பும் தியாகமுமே. இதன்மூலம் அந்த மிட்டாய்களைச் செய்தவர் நற்செய்தியை அறிவித்தார்.

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நீங்களும் ஏன் சில நற்காரியங்களைச் செய்வதன் மூலம் நற்செய்தியை அறிவிக்கக் கூடாது? கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதுமே இவ்வாறு நீங்கள் செய்யலாமே!

எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலர் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொழுது 12-15 அயலகத் தாரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளைக் கொடுப்பார்கள். அவர்கள் இரட்சிக்கப்படாத மக்கள் எனில், அவர்களை கிறிஸ்துமஸ் ஆராதனைகளில் பங்குகொள்ள அழைப்பு கொடுப்பார்கள். அவர்கள் ஆலயத்துக்கு வராவிட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை அழைக்கிறார்கள். மீண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு இதே போல செய்யும்பொழுது கிறிஸ்தவரல்லாத அநேகர் நன்றி தெரிவித்து நற்செய்தியை ஆவலுடன் கேட்டார்கள்.

திருச்சபையும் தன் பங்குக்கு அநேக நிகழ்ச்சிகள் மூலம் கிறிஸ்தவர்கள் அல்லாதவரைச் சந்திக்க முயற்சிகள் எடுக்கிறது. ஆயினும் நாம் நமது சுயஆர்வத்தினால் தனி மனிதர்களையும், தனி குடும்பங்களையும் சந்தித்து நற்செய்தியை அறிவிக்கவேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அநேகநாட்கள் ஆயத்தமாகிறோம். ஆனால் புதுவருடம் வந்தவுடன் நம்முடைய எண்ணங்களும் கிரியைகளும் மாறிவிடுகின்றன. நாம் சந்தித்த அயலாரையும் அம்போ என்று விட்டுவிடுகிறோம்.

கிறிஸ்துமஸ் காலத்தில் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்த நாம் அதைப் புதுவருடத்திலும் தொடருவோமா? நாம் சந்தித்த மக்களை வாரத்துக்கு ஒருமுறை மீண்டும் சந்தித்து, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளுவோம். பரிசுகள், கீத ஆராதனைகள், விடுமுறைகள், கிறிஸ்துமஸ் தாத்தா போன்றவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆகாது. கிறிஸ்துமஸ் நற்செய்தியை அறியாதோருக்கு அறிவித்து தேவனுக்கு மகிமையை நாம் கொண்டுவர வேண்டும். அதுவே மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாகும்.

எனக்கு அன்பான சத்தியவசன வாசகர்களே, இந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரமல்ல, நாம் ஆரம்பிக்க இருக்கும் 2014 ஆம் ஆண்டு முழுவதுமே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அன்பின் ஆண்டாக அமைய தேவன் தாமே நமக்கு கிருபை புரிவாராக. அவருக்கே கனமும் மகிமையும் சதாகாலமும் உண்டாவதாக!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்