யோவான் ஸ்நானன்கள் எழும்பட்டும்!

சகோதரி.சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2013)

விண்ணைத் துறந்து, மண்ணில் வந்துதித்து, நம்மை இரட்சித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள நாமத்தில், சத்தியவசனம் ஸ்தாபனத்தாரின் சார்பில், அன்பின் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்களும், புதுவருட நல்வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” (ஏசாயா 40:3-5).

கடவுள் மனிதனாய் இவ்வுலகில் வந்து பிறந்தது, திடீரென சம்பவித்த ஒரு நிகழ்வு அல்ல. “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதி.3:15) என்று முதன்முதலாக ஏதேனிலே கர்த்தரால் சாத்தானுக்குச் சொல்லப்பட்டு, காலாகாலமாக திருஷ்டாந்தங்களால் விளக்கப்பட்டு, தீர்க்கர்களால் திட்டவட்டமாக முன்னுரைக்கப்பட்ட செய்தியே அது. அதிலும் ஏசாயா, கர்த்தருக்குக் கீழ்ப்படியாத ஜனத்துக்கு வரப்போகும் துயரத்தைக் குறித்து முதல் 39 அதிகாரங்களில் கூறிவிட்டு, (கி.மு.700ஆம் ஆண்டளவில் உரைக்கப்பட்டது) பின்னர், தன் ஊழியத்தின் கடைசிப் பகுதியில் (கி.மு.681 ஆம் ஆண்டளவில்) கர்த்தர் தமது ஜனத்தை ஆற்றித் தேற்றி, அவர்களுக்குத் தாம் வைத்திருக்கும் மீட்பு, இளைப்பாறுதல் மாத்திரமல்ல, இறுதி நிகழ்வுகளைப்பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்திருப்பதையும் நாம் வாசிக்கிறோம். அப்படியே கிறிஸ்து வந்து பிறந்தார்.

ஆறுதல், நம்பிக்கை, விடுதலை அளிக்கும் வார்த்தைகள் இஸ்ரவேலுக்கு உரைக்கப்பட்டபோது, எருசலேம் பாபிலோனின் கையில் விழுவதற்கும், எருசலேம் அழிக்கப்படுவதற்கும் இன்னமும் ஏறத்தாழ 100 ஆண்டுகள் இருந்தன. அதாவது, யூதா இன்னமும் நூறு ஆண்டுகள் பிரச்சனைக்குள் வாழவேண்டியதிருந்தது. மாத்திரமல்ல, 70 ஆண்டுகள் பாபிலோனின் சிறையிருப்பில் யூதா இருக்கவேண்டியும் இருந்தது. சிறையிருப்பின் பின்னர் எருசலேமுக்குத் திரும்பி ஆலயமும் அலங்கமும் கட்டப்பட்டாலும், மேசியாவின் வருகைக்கு மேலும் பல நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேசியாவின் வருகையின் காலம் கனிந்துவிட்டது என்பது உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அது நிகழப்போகும் காலப்பகுதி குறிப்பாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ‘மேசியா வருகிறார்’ என்ற நம்பிக்கையைக் கர்த்தர் தமது ஜனத்துக்கு முன்கூட்டியே கொடுத்திருந்தார். அப்படியே ஏற்ற காலத்தில் இயேசு வந்து பிறந்தார்.

யோவான்ஸ்நானன் பிறந்தான்
மேசியாவின் வருகையும், மீட்பின் செய்தியும் முன்அறிவிக்கப்பட்டபோது, அவரது வருகைக்கு முன்னர் பாதையைச் செவ்வை பண்ண ஒருவன் வருவான் என்றும் முன்சொல்லப்பட்டது. அதுவும்கூட எந்தக் காலப் பகுதியில் நிறைவேறும் என்று சொல்லப்படவில்லை. மேசியா வருவார், அதன் முன் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் கேட்கும் என்ற செய்தி யூதாவுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்ட செய்தி மாத்திரமல்ல, அது சரித்திரத்தில் நிகழவிருந்த நிகழ்வு. அதன்படியே, மல்கியா தீர்க்கனுக்குப் பின்பு ஏறத்தாழ 400 ஆண்டுகள் மவுனத்தின் பின்னரே, யோவான் பிறந்தான். இயேசு மரியாளின் கர்ப்பத்தில் உருவாகுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, சொல்லப்பட்டபடியே, சகரியாவின் வாரிசாக எலிசபெத்தின் கர்ப்பத்தில் யோவான் உருவாகிவிட்டான் என்பதையும் சுவிசேஷங்களில் வாசிக்கிறோம். மேசியாவின் வருகைக்கு முன் அடையாளமாகவும், அவருடைய வருகையை முன் அறிவிக்கிறவனாகவுமே யோவான்ஸ்நானன் பிறந்தான். அவனுடைய பிறப்பு, இயேசுவின் பிறப்புக்கு முன் அடையாளமாயிருந்தது.

ஏற்ற வேளையிலே வனாந்தரத்திலே தேவ வார்த்தை உண்டாக, மனந்திரும்புதலுக்கேற்ற காரியங்களைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினான் யோவான். இயேசு தன்னிடத்தில் வரக் கண்ட அவன், “நானும் இவரை அறியாதிருந்தேன்; …இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்” (யோவான் 1:31-36). இவ்விதமாக, மீட்பராக வந்த இயேசுவின் பிறப்பும், அவருக்குப் பாதையைச் செவ்வைபண்ணுகிறவனைப் பற்றிய செய்தியும் முன் கூட்டியே ஆறுதலின் செய்தியாக, நம்பிக்கையூட்டும் செய்தியாக அறிவிக்கப்பட்டிருந்தும், அவைகள் எப்போ எந்த வருடத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேறும் என்று அன்று யூதாவுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், தமக்கு ஒரு ஆறுதல் வருகிறது என்ற நிச்சயம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது, அவ்வளவுதான்.

யோவான்ஸ்நானனின் பணி
உலக ஆசாபாசங்களை ஒறுத்தவனாக, “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது…” (மத்.3:2) என்று யூதேயாவின் வனாந்தரத்தில் நின்று பிரசங்கம் பண்ணினான் யோவான். வரப்போகும் மேசியாவுக்குப் பாதையைச் செவ்வைபண்ணும்படிக்கு யோவான் ஸ்நானன் செய்த முதற் பிரசங்கம் இதுதான். ஜனங்கள், ஆயக்காரர், போர்ச் சேவகர் என்று தன்னிடத்தில் வந்த யாவருக்கும் மனந்திரும்புதலுக்கேற்ற செய்தியைக் கொடுத்து, ஞானஸ்நானமும் கொடுத்து, அவர்களை ஆயத்தம் செய்தான் இவன். இயேசுவைக் கண்டு, இவர்தான் மேசியா என்று உணர்ந்து அறிந்து கொண்டவன், தாமதமின்றி, “இவரே தேவனுடைய குமாரன்” என்று சாட்சி கூறி அறிவித்தான். அந்த இயேசு உலகில் மனிதனாய் வந்து பிறந்ததையே நாம் இன்று நினைவுகூருகிறோம். காலநேரம் அறிவிக்கப்படாவிட்டாலும், இயேசுவின் பிறப்பிற்கு வழியை ஆயத்தம் செய்ய ஒருவன் வருவான் என்று முன்னுரைக்கப்பட்ட யோவான், தான் அனுப்பப்பட்ட பொறுப்பை உணர்ந்தவனாய், அதைச் செவ்வனே நிறைவேற்றினான்.

நமக்கு அளிக்கப்பட்டுள்ள பெரிய பொறுப்பு
ராஜாதி ராஜாவாக, நீதியுள்ள நியாயாதிபதியாக வரப்போகிற கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை, ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இவ்வுலகம் எதிர்நோக்கியிருக்கிறது என்பதுவே உண்மை. நமது கண்கள் காணுகின்ற யாவும் அழிந்துபோக, புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும் என்பதைக் கர்த்தர் ஏசாயா மூலம், கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்னரே அறிவித்தும்விட்டார் (ஏசா.65:17; 66:22,23). பின்னர் இயேசுவின் சீஷனாகிய யோவானும் அதைத் தரிசனமாகக் கண்டு எழுதிவைத்துவிட்டார் (வெளி.21:1).

ஆனால், எப்படி முதல் வருகைக்குரிய காலப்பகுதி அறிவிக்கப்படவில்லையோ, இரண்டாவதும் இறுதியுமான வருகையின் காலப்பகுதியும் அறிவிக்கப்படவில்லை. திருடன் வருகிறவிதமாய் வருவேன் என்றும் அந்த நாளைப் பிதாவைத் தவிர குமாரனும் அறியார் என்றும் கிறிஸ்துவே சொல்லியிருக்க, எந்தவொரு மனுஷ சக்தியாலும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்தோ, உலகத்தின் முடிவைக் குறித்தோ நாள் குறிக்க முடியாது. ஆனால், முன்னுரைக்கப்பட்டபடியே முதலாவது வருகையும், அதற்கு முன்னர் வனாந்தரத்திலிருந்து சத்தம் கேட்கும் என்ற செய்தியும் நடந்தேறியது என்றால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் எவ்வித ஐயமுமில்லை. முதல் வருகையில் யூத மக்களே அவரை நிராகரித்தனர்; ஆனால், இரண்டாம் வருகையில், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்க, யாராலும் அவரை நிராகரிக்க முடியாது.

இந்த வருகைக்காக இன்னொரு யோவான் ஸ்நானன் முன்னோடியாகப் பிறக்கப் போவதில்லை என்பது திண்ணம். முந்திய செய்தி ஆறுதலின் செய்தி என்றால், பிந்திய செய்தி எச்சரிப்பின் செய்தி. அந்த எச்சரிப்பைக் கூறி அறிவிக்கும் பொறுப்பு தேவபிள்ளைகளாகிய நம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நடக்கப் போகிற நியாயத்தீர்ப்புக் குறித்தும், கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் வாசஸ்தலத்தைக் குறித்தும் மக்களுக்கு அறிவித்து, மனந்திரும்புதலுக்கு ஏற்ற அறிவுறுத்தலைக் கொடுத்து ஆயத்தம் பண்ணவேண்டிய பொறுப்பு இன்று நமது கைகளிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்று யோவான்ஸ்நானன் பயமின்றி தயக்க மின்றி, சொல்லவேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லத்தயங்காமல் தன் பணியை முடித்தார். அதற்கு உலகம் அவருக்குக் கொடுத்த பரிசு, சிரச்சேதம். அதிலும் ஒரு பெண்ணின் தந்திரத்தினால் யோவான்ஸ்நானன் கொல்லப்பட்டார்.

கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் நமக்கும் இந்த உலகம் மாலை மரியாதையை தரப்போவதில்லை. ஆனால், நாம் அதைச் செய்தாக வேண்டும். அது நமக்குக் கொடுக்கப் பட்ட பெரிய கட்டளை. நம்மை நரக அக்கினியிலிருந்து கர்த்தர் மீட்டெடுத்ததை நாம் விசுவாசிப்பது மெய்யானால், இந்த நாட்களில், கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, தினமும் அழிந்துகொண்டிருக்கிற ஆத்துமாக்களைக் குறித்த பாரத்துடன் இரண்டாம் வருகையின் செய்தியை அறிவிப்பதே நமது முக்கிய பொறுப்பு. உலகத்திலே ஒவ்வொரு விநாடியும் சராசரியாக குறைந்தது மூன்று மரணங்கள் நிகழுவதாக ஒரு கணக்கீடு சொல்லுகிறது. மரணம் மக்களை வெகு வேகமாக விழுங்கும்போது, அவர்களுடைய ஆத்துமாவிற்கு மருந்து கொடுக்கவேண்டிய நாம் தூங்கிக் கொண்டிருப்பது எப்படி?

இடிந்துபோன பாதைகளும், அவாந்தர வெளிகளும், பள்ளங்களும்:
நாம் வசிக்கின்ற பிரதேசத்தில் நீண்ட காலமாக இடிந்து குழிகளாகிக் கவனிப்பாரற்றுக் கிடந்த பாதைகள் திடீரென சுத்தப்படுத்தப்பட்டு திருத்தப்பட்டு அழகான தோற்றத்தைப் பெற்றதைக் கண்டபோது, இதுதானா பாதைகளைச் செவ்வைப்படுத்துவது என்றிருந்தது.

வெயில் மழை பாராது மிகவும் கஷ்டப்பட்டு தற்காலிக இடங்களை அமைத்து வியாபாரம் செய்து ஜீவனம் செய்கிறவர்கள் இங்கே அநேகர். அவர்கள் அந்தந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டபோது மிகவும் துக்கமாக இருந்தது. ஆனால், அவர்களுக்காக புதிய ஒழுங்குகள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டபோது, இதுதானா அவாந்தர வெளிகளில் வழிகள் கிடைக்கிறது என்றிருந்தது.

பல வருடங்களாகக் கவனிப்பாரற்றிருந்த மாடிவீடுகள் சில சுத்திகரிக்கப்பட்டு, நிறம் பூசப்பட்டு அழகாக்கப்பட்டது. முன்னர் இருந்த தோற்றத்தை நினைவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, அந்த இடம் புதிய தோற்றம் பெற்றது. பழையவைகள் அகற்றப் பட்டு எல்லாம் காற்றுவேகத்தில் புதிதாகின.

இதெல்லாம் என்ன என்று விசாரித்தபோதுதான், இந்தப் பிரதேசத்திற்கு நாட்டின் பெரியதொரு பிரமுகர் வருகை தரவிருப்பது தெரிய வந்தது. அவரை வரவேற்பதற்காகவே இத்தனை ஆயத்தங்களும் செய்யப்பட்டன. எத்தனை ஆச்சரியம்! கனம்பொருந்திய ஒருவர் வருகிறார் என்றதும், இதுவரை கணக்கெடுக்கப்படாத இந்தச் சூழல் விரைவு விரைவாக அழகு படுத்தப்பட்டு, பாதைகள் செவ்வை பண்ணப்பட்டதை நினைக்கும்போது, ராஜாதிராஜாவாகிய கிறிஸ்துவின் வருகைக்கு நாம் என்ன ஆயத்தம் செய்கிறோம் என்ற எண்ணம் நம்மைக் குற்றவாளிக் கூண்டிலேயே நிறுத்திவிட்டது.

ஆனால், ஒரு வித்தியாசம். அந்தப் பிரமுகர் வருகைதரும் நேரம் குறிப்பிடவில்லையென்றாலும், வரப்போகும் தேதி அறிவிக்கப்பட்டது. அதனால், அந்தத் தேதியைக் குறிவைத்து, துரிதமாக வேலைகள் நடந்தன. அந்த அவசர வேலையில் சில போலித்தனங்கள், நிறைவு பெறாத மறைவிடங்கள், பின்பக்க வேலைகள் தாமதப்பட்டாலும், பூர்த்தியாகிய முன்பக்க அலங்காரங்கள் என்றும், வருகிறவர் நடந்து போகக்கூடிய பாதைகள் என்று அடையாளங் கண்ட பகுதிகள் மட்டும் திருத்தப்பட்டதையும் கண்டோம்.

இதனால்தான் கர்த்தர் தமது வருகையைக் குறித்த காலத்தை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லையோ என்று எண்ணத் தோன்றியது. கிறிஸ்து வருவது நிச்சயம்; அவர் வரும் காலம் சமீபித்துவிட்டதற்கான அடையாளங்கள் நிறைவேறிவந்தாலும், அவர் வரும் நாளை எவரும் அறியார். அவர் வரும்போது, எந்தவொரு போலித்தனமும் அவர் முன்னே நிற்க முடியாது. மனிதக் கண்கள் காணாத அந்தரங்கத்தையும் அறிந்த கர்த்தருக்கு முன்னே யாரால் எதனை மறைக்கமுடியும்?

இன்று எத்தனை வாழ்வுகள் அவாந்தர வெளிகளாகக் காட்சியளிக்கின்றன! வாழ்க்கைப் பாதைகள் சிதைவுண்டு கிடக்கின்றன! மேடு பள்ளம் நிறைந்த வாழ்க்கைப் போராட்டங்களால் தடுமாறி நிற்கும் மக்கள் எத்தனை பேர்! இவர்களைக் குறித்த பொறுப்பை விசேஷமாக இந்தக் கொண்டாட்ட காலங்களில் நாம் உணரவேண்டும். மேற்பூச்சான போலித்தன மான ஆயத்தங்கள் எதுவும் கர்த்தருடைய நாளில் சாம்பலாகிவிடும்.

யோவான்ஸ்நானன்கள் எழும்பவேண்டும்
ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப் பகுதியில் இந்த உணர்வுகள் நமக்குள் எழுவதுண்டு. பின்னர் அது தணிந்துவிடுகிறது ஏன்? அறுவடைக்கு ஆட்கள் அதிகமதிகமாகத் தேவைப்படுவது நமக்குத் தெரியட்டும். கர்த்தருடைய பெயரில் தம்மை வளர்த்துக் கொள்கிறவர்கள் அல்ல; உண்மையுள்ள, கிறிஸ்துவையே ஜீவனாகக்கொண்டு, கிறிஸ்துவுக்காய் தமது வாழ்வையே துச்சமாக எண்ணுகின்ற யோவான்ஸ்நானன்கள் கர்த்தருக்குத் தேவை. வாழ்வையே பணயம் வைக்க நேரிடும் அந்த உன்னத பணிக்கு நம்மை அர்ப்பணிக்க நாம் ஆயத்தமா?

பிரியமானவர்களே, கிறிஸ்து வந்து பிறந்தார் என்று நடந்து முடிந்ததை நாம் நினைவு கூரும்போது, அவர் திரும்ப வருகிறார் என்ற செய்தியும் அறிவிக்கப்பட்டாக வேண்டும். இதற்காக இன்னுமொரு யோவான்ஸ்நானன் பிறந்துவரமாட்டான். நாமேதான் அதனை அறிவிக்க வேண்டும். இரட்சிப்பின் ஆறுதலின் செய்தியையும், நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பின் செய்தியையும் நாம் மக்கள் மத்தியில் விதைத்துத்தான் ஆகவேண்டும். எதிர்ப்புகளும் சோர்புகளும் வரத்தான் செய்யும். ஆனால், நமது எஜமானனின் பணியை நாம் செய்துதான் ஆகவேண்டும்.

ஆகவே, இந்த நாட்களில் மாத்திரமல்ல, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவோமாக (2தீமோ.4:2). மக்களை அழிவினின்று காப்பாற்ற விரைவோமாக. கிறிஸ்துவுக்காக என்ன பணி செய்கிறோம் என்பதிலும், நமக்குள் இருக்கும் கிறிஸ்துவை நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இந்த நாட்களைக் கர்த்தருக்காகப் பயன்படுத்துவோமாக. ஆமென்.

சத்தியவசனம்