அந்தக் கடைசி துண்டுபிரதி!

(நவம்பர்-டிசம்பர் 2013)

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஆலய ஆராதனையை முடித்த பின்னர் போதகரும் அவருடைய பதினொரு வயது நிரம்பிய மகனும் ஊருக்குள் சென்று வீடு வீடாக சுவிசேஷ துண்டுபிரதிகளை ஆர்வத்துடன் விநியோகிப்பது வழக்கம். குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை மழை பலமாக பெய்துகொண்டிருந்தது. வானம் இருளடைந்திருந்தது, ஆராதனை முடிந்ததும் போதகரின் மகன் உடைகளை மாற்றிக்கொண்டு “அப்பா, நான் ஆயத்தமாகிவிட்டேன்” என்று கூறினான். அதற்கு போதகர் “எதற்கு மகனே?” எனக் கேட்க, “அப்பா, ஆராதனை முடிந்ததும் நாம் துண்டுபிரதிகளை விநியோகிக்கச் செல்வது வழக்கம் அல்லவா?” என்றான். அதற்கு போதகர் “மகனே, இன்று வெளியே காற்றும் மழையுமாய் இருக்கிறதே” என்று கூற, மகன் தகப்பனாரைப் பார்த்து, “அப்பா, கொட்டும் மழையானாலும், மக்கள் நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் அல்லவா?” என நெற்றியை சுருக்கியபடி கேட்டான். அதற்கு தகப்பனார் “மகனே இந்த அடைமழையில் என்னால் வர முடியாது” என்று கூறினார். “அப்படியானால், நான் போய்வரட்டுமா அப்பா?” என பணிவுடன், அனுமதி வேண்டி நின்றான். தகப்பனார் சற்று யோசித்துவிட்டு தயக்கத்துடன், “சரி மகனே, கவனமாக சென்று வா” என அனுமதியளித்தார். அவனும் நன்றி கூறி புறப்பட்டான்.

கொட்டும் மழையில் ஒரு குடையைப் பிடித்தபடி வீட்டைவிட்டு கிளம்பிச்சென்ற பதினொரு வயது நிரம்பிய சிறுவன், வழக்கமாக தன் தகப்பனுடன் செல்லும் அந்த கிராமத்தைச் சென்றடைந்ததும், அங்கு வீடு வீடாக சுவிசேஷ பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தான். அத்துடன் தான் வழியில் காண்கிறவர்களுக்கும் அப்பிரதிகளைக் கொடுத்தான். சுமார் இரண்டு மணிநேரம் இவ்விதம் கொட்டும் மழையிலும் துண்டுபிரதிகளை ஆவலோடு விநியோகித்துக் கொண்டிருந்தான். சிறிது சிறிதாக பாதையில் ஜன நடமாட்டம் குறைய ஆரம்பித்து வீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இப்போது அவன் கையில் இறுதியாக ஒரே ஒரு துண்டுபிரதி மாத்திரமே எஞ்சியிருந்தது. அதையும் யாருக்காவது கொடுத்துவிட்டுச் செல்லலாம் என நினைத்தவனாக பாதையில் யாராவது வருகிறார்களா? என எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் யாருமே அவன் கண்களுக்கு எதிர்ப்படவில்லை.

நேரம் கடந்து செல்லவே கையிலிருந்த கடைசி துண்டுபிரதியுடன் தன் வீட்டை நோக்கி திரும்பியவன், கிராமத்தின் எல்லையில் அமைந்திருந்த ஒரு வீட்டைக் கண்டு, உடனே அவ்வீட்டை நோக்கிக் சென்று, கதவை தட்டினான். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. மறுபடியும் தட்டினான், உள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. திரும்பத்திரும்ப தட்டியவன் கதவு திறக்கப்படாததாலும், உள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கப்படாததாலும், உள்ளே யாரும் இல்லை என நினைத்தவனாக, வீடு திரும்ப நினைத்தான். ஆனாலும் ஏதோ ஒன்று அவனை தடுத்து நிறுத்த மறுபடியும் கதவினை ஓங்கித் தட்டினான். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கடைசியாக ஒருமுறை கதவை ஓங்கித் தட்டும்படி கைகளை உயர்த்தியபோது, கதவு மெதுவாகத் திறப்பதை உணர்ந்தான். உடனே தனது கடைசி துண்டுபிரதியைக் கையில் எடுத்து அதை கொடுக்கத் தயாரானான்.

வீட்டுக்குள்ளிருந்து கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்த வயது முதிர்ந்த ஒரு பெண், மெல்லிய குரலில் “மகனே உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டாள். அதற்கு அச்சிறுவன் தன் கூர்மையான பார்வையுடனும் புன்சிரிப்புடனும் கணீர் என்ற குரலில் “உங்களைத் தொந்தரவு செய்தமைக்கு தயவு செய்து மன்னியுங்கள். இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார். ஆகவேதான் என்னிடமிருக்கின்ற இந்த கடைசி துண்டுப்பிரதியை உங்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்ல வந்தேன். இந்த துண்டுப்பிரதியில் இயேசுவைக் குறித்தும் அவரது அளவற்ற அன்பைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது” எனக் கூறியபடி அத்துண்டுபிரதியை, அவளது நடுங்கும் கரங்களுக்குள் திணித்துவிட்டு திரும்பினான். அவன் புறப்படும்முன் அவள், “நன்றி மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!” என வாழ்த்தி அனுப்பினாள்.

வழக்கம்போல அடுத்த ஞாயிற்றுக் கிழமை ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது போதகர், சபையாரை நோக்கி, “உங்களில் யாருக்காவது சபையில் பகிர்ந்து கொள்ள சாட்சி ஏதும் உண்டா?” எனக் கேட்டார். அங்கு சபையில் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த வயது முதிர்ந்த ஒரு பெண் மெதுவாக எழும்பி நின்றாள். அவளது முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பிரகாசம் தெரிந்தது. “என்னை இங்கு யாருக்குமே தெரியாது. நானும் இதற்கு முன் இங்கு வந்ததில்லை. நான் கிறிஸ்தவள் அல்ல. எனது கணவர் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அன்றிலிருந்து நான் தனிமையுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வருகிறேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் மழை பெய்துகொண்டிருந்தது. நானோ, எனது உள்ளத்தில் சொல்லமுடியாத சோர்வுடன், மனமுடைந்தவளாக, எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்றவளாக, தொடர்ந்து வாழப் பிடிக்காதவளாக, என்னுடைய வாழ்க்கையை நானே அழித்துவிட எண்ணி, சுருக்கிட்டு, தற்கொலை செய்துகொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். ஒரு நாற்காலியில் ஏறி, கழுத்தில் கயிற்றை சுற்றத் தொடங்கியபோது திடீரென எனது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை தட்டுகிறவர்கள் தட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவார்கள் என எண்ணியவளாக சில விநாடிகள் அமைதியாக பொறுத்திருந்தேன். ஆனால் கதவு தொடர்ந்து விடாமல் தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. உடனே நான், அது யாராக இருக்கக்கூடும்? எவருமே என் வீட்டுக்கதவைத் தட்டியதும் இல்லை, என்னைப் பார்க்க வந்ததும் இல்லையே என யோசித்தவளாக, கழுத்திலுள்ள கயிற்றினைக் கழற்றிவிட்டு, கதவை நோக்கிச் சென்றேன். கதவு தொடர்ந்து தட்டப்பட்டுக் கொண்டேயிருந்தது. மெதுவாக கதவைத் திறந்து பார்த்தபோது என் கண்களால் என்னை நம்பவே முடியவில்லை. சிரித்த முகத்துடன் தேவதூதனைப் போன்று காட்சியளித்த ஒரு சிறுவன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவனது முகத்தில் இருந்த தெய்வீக புன் சிரிப்பை என்னால் விபரிக்கமுடியாது. அவனது வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என் உள்ளத்தில் ஊடுருவி, எனக்குள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. “இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்” என்று கூறி இந்த சுவிசேஷ துண்டுபிரதியைத் தந்துவிட்டுச் சென்றான். அவன் சென்றதும் கதவை சாத்திவிட்டு அந்த சுவிசேஷ துண்டுபிரதியை வாசிக்கத் தொடங்கினேன். பின்பு அறைக்குள் சென்று கயிற்றையும் நாற்காலியையும் அவை இருந்த இடத்தில் வைத்துவிட்டேன். அவை எனக்கு இனிமேல் தேவையில்லை என்று தீர்மானித்துவிட்டேன். நான் இப்பொழுது என் ஆண்டவருடைய பிள்ளை! எனவே எனது ஆத்துமாவை நித்திய நரகத்திலிருந்து காக்கும் படி, ஏற்ற சமயத்தில் அந்த கொட்டும் மழையிலும் கடவுளால் அனுப்பப்பட்ட அந்த சிறு தேவபிள்ளைக்கு எனது நன்றியை தெரிவிக்கும்படி வந்தேன். அந்த துண்டுபிரதியின் பின்னால் இந்த சபையின் விலாசம் காணப்பட்டது எனக் கூறினாள்.

அந்த வயது முதிர்ந்த பெண்மணி இதைக் கூறிமுடித்தபோது, ஆலயத்தில் இருந்த அனைவரது கண்களும் கலங்கியிருந்தன. அனைவரும் ஆண்டவருக்கு துதிகன மகிமையை ஏறெடுத்தார்கள். போதகர் தமது பிரசங்கப் பீடத்திலிருந்து இறங்கிவந்து, ஆலயத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த தன்னுடைய மகனை தூக்கியெடுத்து அவனது கன்னங்களில் அன்புடன் முத்தம் கொடுத்தார். அவருக்கு தன் அன்பு மகனைக் குறித்து மிகவும் பெருமிதமாக இருந்தது.

இந்த தகப்பனைபோலவே நமது பரம தகப்பனாகிய ஆண்டவர் நம்மை பாவத்திலிருந்து மீட்கும்படி தமது ஒரே மகனாகிய இயேசுகிறிஸ்துவை, இருள் நிறைந்த இக் கொடிய உலகிற்கு அனுப்பினார். அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்துபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததினாலே அவர் நமக்கு ஒரு புதுவாழ்வை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் இரட்சகராக விசுவாசித்து, அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் அவர் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், உள்ளத்திலே சமாதானத்தையும் கொடுக்கிறார்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் அந்த புது வாழ்வை அனுபவித்த ஒருவரா? இல்லையென்றால் உங்கள் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்து அவர் தரும் புதுவாழ்வையும் பாவமன்னிப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

சத்தியவசனம்