ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2014

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்கள், இலக்கிய பணி ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாதங்களை இவ்வாண்டிலும் எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம்.

டாக்டர்.உட்ரோ குரோல் எழுதிய “ஆம், இயேசு உங்களை விசாரிக்கிறார்” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். அதை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். SMS வாயிலாக அனுதின வேத வாக்கியம் பெறுவதற்கு பதிவு செய்தவர்களுக்கு தற்போது தவறாமல் தினமும் அனுப்பி வைக்கிறோம். DND-இல் தங்கள் தொலைபேசி எண்ணை Register செய்தவர்களுக்கு தற்சமயம் அனுப்ப இயலாது என்பதை தெரிவிக்கிறோம். 2013-ஆம் ஆண்டில் வேத வாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்ததை எங்களுக்கு எழுதித் தெரிவித்தவர்களின் பெயர்கள் மார்ச்-ஏப்ரல் 2014 “அனுதினமும் கிறிஸ்துவுடன்” இதழில் பிரசுரிப்போம். இவ்வாண்டில் இன்னும் அநேகர் புதிதாக வேதாகமத்தை வாசித்து முடிக்க உற்சாகப்படுத்துகிறோம்.

இப்புதிய ஆண்டில் சத்தியவசன ஊழியத்தைத் தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் தாங்கவும், சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஆதரவாளர்கள் திட்டத்திலும் இணைந்து ஆதரவளிக்கவும் அழைக்கிறோம். இவ்வூழியப் பணிகள் வாயிலாக இன்னும் அநேகர் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறியவும் இரட்சிக்கப்படவும் வேண்டுதல் செய்வதோடு எங்களுக்கு ஆதரவு கரம் தரவும் அன்பாய் கேட்கிறோம். உங்கள் ஜெபக்குறிப்புகளையும் மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இவ்விதழில் புதிய ஆண்டிற்கான சிறப்புச் செய்தியை சகோதரி.சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஐனிக்கேயாளின் விசேஷித்த நற்பண்புகளைப்பற்றி டாக்டர்.உட்ரோ குரோல் அவர்களும், இக்கடைசி காலத்தில் தேவ எச்சரிப்பைக் குறித்து இதுவரை இரட்சிக்கப்படாதவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் டாக்டர்.புஷ்பராஜ் அவர்களும் விசேஷித்த செய்திகளை எழுதியுள்ளார்கள், மேலும் வழக்கம்போல் வெளிவரும் தொடர் செய்திகளும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் இவ்விதழை வாசிக்கிற அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்