பலன் கொடுத்த நல்ல நிலம்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2014)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விதைக்கிறவன் பற்றிக் கூறின இந்த உவமையை மத்தேயு 13:3-9 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். “அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் … சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்”. சீஷர்கள் ஆண்டவரிடம் ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு இந்த உவமையைப் பற்றிய விளக்கங்களை சீஷர்களுக்குக் கூறுவதாக நாம் பார்க்கிறோம். இந்த உவமையிலுள்ள பல்வேறு அம்சங்களை பல்வேறு கோணங்களில் நாம் ஆராயமுடியும். கடந்த முறை இவ்வுவமையைக் குறித்துத் தியானிக்கும்போது விதைக்கிறவனைக் குறித்துத் தியானித்தோம். ஆண்டவர் தமது வசனத்தை விதைக்கும்போது, முதலாவது எதிர்பார்ப்புகளோடு விதைக்கிறார், சம வாய்ப்பு கொடுக்கிறார். பின்பு பலனை எதிர்பார்க்கிறார் என்று பார்த்தோம். இச்செய்தியில் விதையைக் குறித்தும் நான்கு விதமான நிலத்தைக் குறித்தும் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

இவ்வுவமையில் கூறப்படும் விதையை ஆண்டவர் வசனத்துக்கு ஒப்பிட்டு கூறுகிறார். விதை என்பது கர்த்தருடைய வசனத்தைக் குறிக்கிறது. விதையின் மகத்துவத்தைக் குறித்துப் பார்ப்போம்.

முதலாவது கர்த்தருடைய வசனம் அறிவிக்கப்படும் வார்த்தையாகும். அது தூய்மையானது, வல்லமையுள்ளது, கர்த்தருடைய வசனம் எத்தனைத் தடைகள் வந்தாலும் தடுப்பு சுவர்களையும் கடந்து செல்லக்கூடிய வல்லமை படைத்தது. ஒருநாளும் கர்த்தருடைய வசனம் வெறுமையாய் திரும்புவதில்லை. அது எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்பிவரும். எவ்வாறு விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டதுபோல சுவிசேஷத்தை ஆண்டவர் தம்முடைய ஜனத்தின் மூலமாகவும் அருட்பணியாளர்கள் மூலமாகவும் அறிவிக்கிறார். கர்த்தருடைய வசனம் அறிவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்றைக்கு அநேகர் கர்த்தருடைய வசனத்தை அறிவிப்பதில்லை. தங்களையும் தங்கள் பிரஸ்தாபத்தையும் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பலன் ஏற்படுவதில்லை. கர்த்தருடைய வசனம் விதைக்கப்பட்டாலும் பல காரணங்களினால் அது பலன் தராமல் தடுக்கப்படுவதை இவ்வுவமையிலே காண்கிறோம். இக் காரணங்களைக் குறித்து பின்பு பார்க்கப் போகிறோம்.

எனவே நாம் வளர்ந்து பலன்கொடுக்க வேண்டுமானால் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல கர்த்தருடைய வசனத்தின்மேல் நாம் வாஞ்சையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

அடுத்ததாக, கர்த்தருடைய வார்த்தை அறுவடையைக் கொடுக்கிற வார்த்தையாக இருக்கிறது. ஆண்டவருடைய நற்செய்தியையும் இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தையும் அறிவிக்க அறிவிக்க அது நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் கொடுக்கிறது. ஆண்டவர் தமது இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க 12 சீஷர்களைத் தெரிந்துகொண்டார். ஒருவன் மடிந்துபோனாலும் பின்பு ஒரு சீஷனைத் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டனர். இவர்களினால் தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட்டது. ஐந்தாயிரம் பேர்களும் பின்பு நாலாயிரம் பேர்களும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டனர். ஒரு சின்ன பகுதியிலே ஆரம்பிக்கப்பட்ட தேவ இராஜ்ஜியத்தின் மீட்பின் திட்டம் இன்று உலகத்தின் அனைத்து நாடுகளிலும் பெரிய அறுவடையின் பலனைக் கொடுத்துகொண்டு இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்படுவதோடு அது அறுவடையைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது.

நான்குவிதமான நிலங்கள்

இயேசுகிறிஸ்து இவ்வுவமையில் கூறிய நான்கு விதமான நிலங்களைக் குறித்து இச்செய்தியில் கற்றுக்கொள்ளப் போகிறோம். இவ்வுவமையை இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு விளக்கும்போது மனிதனுடைய இருதயத்தை அல்லது உள்ளத்தை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். விதைக்கிறவர் ஆண்டவர், விதைக்கப்படுகிற வார்த்தை ஆண்டவருடைய வசனம், நான்குவிதமான நிலங்களை இயேசு காட்டு கிறார். இந்த நான்கு நிலங்களிலும் விதை விதைக்கப்பட்டது. ஒரு நிலம் மாத்திரமே பலன் கொடுத்தது.

1. வழியருகான நிலம்:
இது ஒரு பாதுகாப்பற்ற நிலமாகும். இது வேலி அடைக்கப்படாத நிலத்தைப்போல காணப்படுகிறது. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும். கரை கட்டப்படாத கிணறு எவ்வாறு பாதுகாப்பற்றதோ அதேபோல வழியருகான நிலமும் பாதுகாப்பற்றது. எனவே இயேசு இவ்வுவமையில் குறிப்பிடும்போது வழியருகான நிலத்தில் விதைக்கப்பட்ட விதையை பறவைகள் வந்து பட்சித்துப் போட்டது என்று கூறுகிறார். இதே போன்றுதான் அநேகருடைய உள்ளங்களும் பாதுகாப்பற்றதாக காணப்படுகிறது. எப்படியெனில், ஆண்டவருக்கும் இடம் உண்டு, அதேவேளையில் தீமைக்கும், ஆசாபாசங்களுக்கும், இச்சைகளுக்கும், துணிகரத்திற்கும், மறைவான அந்தரங்க பாவத்திற்கும், ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கும் இடமுண்டு. எல்லாரையும் பிரியப்படுத்தி எல்லாரையும் கனப்படுத்தி எல்லாருக்கும் இடம்கொடுக்கிற ஒரு நிலை பாதுகாப்பற்றதாகும்.

2. கற்பாறையான நிலம்:
இந்நிலத்தின் மேலே மணல் காணப் பட்டது. இதில் விதைக்கப்பட்டபோது விதை முளைத்தது. ஆனால் கீழே வேர்விட முடியவில்லை. ஏனென்றால் பாறை அவ்வளவு கடினமாக அதன் கீழே இருந்தபடியால், வேர் ஆழமாக செல்லமுடியாமல் அந்த செடி கருகிப்போனது. இவ்வாறான உள்ளத்தைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “…வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக் கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக் காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத் தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்” (மத்.13: 20,21). ஆண்டவருக்காக வாழும்போது ஏராளமான துன்பமும் துயரமும் வரத்தான் செய்யும். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2தீமோ.3:12) என்று பவுல் கூறுகிறார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவா. 16:33). வசனத்தினிமித்தமாக உபத்திரவம் வந்தாலும் ஆண்டவருக்காக நிற்கவேண்டும். அவ்வாறு நிலைநிற்க முடியவில்லையென்றால் அதன் பொருள் என்ன? அப்படிப்பட்டவர்களுடைய இருதயமானது கற்பாறையான நிலத்தைப்போல இருக்கிறது. இன்று ஆண்டவருக்குள் ஆழமாய் நிற்க அநேகருக்கு விருப்பம் இருப்பதில்லை. உபத்திரவத்திலே கிறிஸ்துவுக்காக தாக்குப் பிடித்து நிற்க விருப்பமில்லை. அப்படிப்பட்டவர்கள் விழுந்து போகிறார்கள்.

அருமையான தேவபிள்ளையே, ஆண்டவரை ஏற்றுக்கொண்டதினால் எனக்கு ஆசீர்வாதமே. என் கண்ணீர், கவலை, துன்பம் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணம் கொண்டிருக்கலாம். உண்மையாக ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கிறவர்தான், உன் பழைய நிலையெல்லாம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில், ஆண்டவரை ஏற்றுக் கொண்டதினிமித்தம், விசுவாசத்தினிமித்தம் வசனத்தினிமித்தம் துன்பமும் துயரமும் பாடுகளும் வரும்வேளையில் நீ என்ன செய்கிறாய்? கர்த்தரிடம் நன்மையைப் பெற்ற நான் தீமையைப் பெறவேண்டாமா என்று கர்த்தருக்காக விசுவாசத்திலே உறுதியாய் நிற்பாயானால் அவர் உன் விசுவாசத்தைக் கனம்பண்ணுவார். சோதனையின் மத்தியில் இன்னும் உறுதியாய் நீ நிற்கும்படியாக அவர் உன்னைப் பலப்படுத்துவார்.

3.முள்ளுள்ள நிலம்:
முட்கள் நிறைந்த நிலத்திலே விழுந்த விதை முளைத்து வளர்ந்தது. முட்கள் அச்செடியை நெருக்கினபடியால் அதினால் பலன் கொடுக்க இயலவில்லை. இங்கு உலகக் கவலையையும் ஐசுவரிய மயக்கத்தையும் இயேசு முள்ளுக்கு ஒப்பிடுகிறார். இவ்விரண்டிற்கும் நாம் இடங்கொடுக்கும்போது நம் இருதயத்தில் விதைக்கப்படும் வசனம் பலன் கொடாமல் போகும்படி அவைகள் நெருக்கிப் போடுகிறது. நம்மால் பலன் கொடுக்க இயலாமற்போகிறது. உலக கவலையையும் ஐசுவரியத்தின் மயக்கத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஆண்டவரையே நீ நம்பி வாழ்வாயானால் ஆண்டவர் உன்னைப் பலன் கொடுக்கச் செய்வார். ஆசீர்வதிக்கிற ஆண்டவரை விட்டு விட்டு ஆசீர்வாதத்தைத் தேடும்போதுதான் உலக கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் நமக்குள் வந்துவிடுகிறது.

4. நல்ல நிலம்:
நல்ல நிலத்தில் விழுந்த விதை அது முளைத்தது. நூறும், அறுபதும், முப்பதுமாக பலன் கொடுத்தது. நமது உள்ளமும் நல்ல நிலமாக இருக்கவேண்டும். அங்கு பறவைகளுக்கு இடமில்லை, பாறைகளுக்கு இடமில்லை, முள்ளுகளுக்கும் இடமில்லை. அது பண்படுத்தப்பட்ட விளைச்சலுள்ள நிலம்.

அருமையான தேவபிள்ளையே, நீ விளைச்சலுள்ள மனிதனாக இருக்கிறாயா? நீ கனி கொடுக்கிறாயா? நீ பலன் கொடுக்கிறாயா? மூன்றுவிதமான நிலத்திலே பலன் கிடையாது. கடைசியாய் இயேசு குறிப்பிட்ட அந்த நல்ல நிலத்தில் மட்டுமே பலன் காணப்பட்டது. இன்றைக்கு விளைச்சல் உள்ள ஒரு நிலமாக நீ மாறவேண்டுமானால், சாத்தானுக்கும் வீண் உலகக்கவலைக்கும் ஐசுவரிய மயக்கத்திற்கும் இடம் கொடாதபடிக்கு உன்னை அவருக்கு ஒப்புக்கொடுத்து விடு. அப்பொழுது நூறாக அறுபதாக முப்பதாக பலன் கொடுப்பாய்.

நல்ல நிலத்தில் விழுந்த விதையோ நூறும் அறுபதும் முப்பதுமாக பலன் கொடுத்தது!

சத்தியவசனம்