ஐனிக்கேயாள்

மறக்க முடியாத முக்கிய சாதனை
Dr.
உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2014)

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன் (தீத்து. 1 : 5).

ஐனிக்கேயாள் ஒரு கிரேக்க அவிசுவாசியின் மனைவி. ஒரு உண்மையுள்ள யூதப் பெண்மணி. கடவுளை நேசித்தவர். இவர் தம் மகனையும் கடவுளை நேசிக்கும் மகனாக வளர்த்தார். இவருடைய மகன்தான் தீமோத்தேயு. இவரும், இவருடைய தாயான லோவிசாளும் தீமோத்தேயுவுக்கு இளமையிலிருந்தே வேத சத்தியங்களையும், கதைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இவருடைய கணவன் ஒரு கிறிஸ்தவ தகப்பனின் கடமையைச் செய்ய முடியவில்லை. எனவே ஐனிக்கேயாள் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். இவர் செய்த பணி ஒரு சிறந்த, மகத்தான பணியாக இருந்தது. ஏனெனில் அப்போஸ்தலனாகிய பவுல் ஊழியத்தில் தனக்கு உடன் இருந்து உதவி செய்ய ஒரு உதவியாளனைத் தேடி லீஸ்திராவுக்கு வந்தபோது, தீமோத்தேயுவைச் சந்தித்தார்.

அவன் தகுதியும், திறமையும், வேத அறிவும் அர்ப்பணிப்பும் உள்ளவனாய் இருப்பதைக் கண்டு, தான் செய்யப்போகும் இரண்டாவது மிஷனெரிப் பயணத்தில் தன்னுடன் வரத் தீமோத்தேயுவைத் தெரிந்து கொண்டார். இதைக் கேள்விப்பட்டபோது ஐனிக்கேயாள் மெளனமாயிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. தன் மகன் ஊழியத்துக்குச் செல்வதானால் அவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டியது வரும். மகனைப் பிரிவது அவருக்கு வேதனைதான். எனினும் தீமோத்தேயுவை ஆண்டவருக்கென்றே வளர்த்திருந்தார். எனவே இப்போது அவன் பவுலுடன் ஊழியத்துக்குச் செல்வது சந்தோஷத்தையும், மனநிறைவையும் தந்தது. தேவனுடைய சித்தம் நிறைவேறுகிறது. உலகில் ஒவ்வொரு மனைவிக்கும், தாய்க்கும் ஐனிக்கேயாள் ஒரு நல்ல முன்மாதிரி.

கடந்தகால வாழ்வைத் திருப்பிப் பார்த்தல்

நம்முடைய வாழ்க்கையில் இன்பம் தரும் நேரங்களில் ஒன்று புயல்மழை. ஒருநாள் பிற்பகல் வேளையில் மழை வந்தால் வீட்டில் தாய் தன் பிள்ளைகள் வெளியே போய் மழையில் நனைந்துவிடாதபடி, அவர்கள் வீட்டில் இன்பமாகப் பொழுதைக் கழிக்க என்ன செய்யலாம் என்று கவலைப்படுவதுண்டு. இன்றைய நாளில் தொலைக்காட்சியும், V.C.R.களும், வீடியோ விளையாட்டுகளும் உண்டு. இவை கண்டுபிடிக்கப்படாத பழைய காலத்தில் தாய்மார் தங்கள் குடும்ப போட்டோ ஆல்பத்தைப் பிள்ளைகளிடம் கொடுத்து பார்க்கச் சொல்வார்கள். அந்த ஆல்பத்தை நடுவில் வைத்து, பிள்ளைகள் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி அதில் இருக்கும் படங்களைப் பார்த்து ரசிப்பார்கள்.

உங்களுடைய பிள்ளைப் பருவ போட்டோக்களைப் பார்க்கும்போது உங்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வரும். அம்மாவையும் அப்பாவையும் வாலிபப் பருவத்தில் பார்ப்பதும் ஆச்சரியமாயிருக்கும். அன்பான முற்கால நினைவுகளை அசைபோடக் குடும்ப போட்டோ ஆல்பம் உதவியாயிருக்கும். வாலிபர்கள் மறக்க முயற்சிக்கும் முற்கால மாயஜால அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தார் அனைவருக்கும் இந்த ஆல்பத்தைப் பார்த்தல் ஒரு சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.

ஒரு குடும்பப் போட்டோ ஆல்பத்தில் இருக்கும் படங்களைப் பார்ப்போமானால், ஒரே ஆளின் பல நிலைகளில், வயதில், பருவ நிலைகளில் உள்ள படங்களே காணப்படும். அவை நமக்குக் குடும்பத்தில் உள்ள பலருடன் உள்ள அன்பான உறவுகளை நினைவுபடுத்துகிறது.

புகைப்பட ஆல்பத்தில் நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் சிறப்புத் தன்மை பெற்றவர்களாகக் காணப்படுவோம். ஒரு படத்தில் அப்பா கடற்கரையில் ஹெர்குலிஸ் போன்ற வலிமையுள்ள பராக்கிரமசாலியைப் போலக் காணப்படுவார். நமது தங்கையின் முதல் பிறந்த நாளின் போட்டோ இருப்பதையும் அதில் அவளுடைய குழந்தை உருவத்தையும் காணலாம். நமது அண்ணன் புதிதாய் வாங்கிய காரின் அருகில் நின்று போஸ் கொடுப்பதைக் காணலாம். புகைப்படத்தில் இருக்கும் புதிய கார் இப்போது ஒரு பழைய டப்பாவாக இருப்பது வேறு கதை!

அம்மாவின் புகைப்படங்களைப் பல கோணங்களில் காண்போம்.

சமையலறையில் இனிப்பான பண்டங்கள் செய்து கொண்டிருப்பார்.

பிள்ளைகள் வெளியே பனியில் சென்று விளையாட, அவர்களது காலில் அதற்குரிய பூட்ஸ்களை அணியச் செய்து கட்டிக் கொண்டிருப்பார்கள்.

கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும்போது அழகிய அலங்காரப் பொருட்களை அதில் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி ஆல்பத்தில் உள்ள படங்கள் நம் முடைய கடந்தகால வாழ்வைப் பற்றியும், எதிர்கால வாழ்வைப் பற்றியும் பல காரியங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. அவை நமக்கு வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கையில் எது முக்கியம் என்றும் கற்றுத் தருகின்றன.

நம்முடைய வேதாகமத்தில், புதிய ஏற்பாட்டில் ஒரு தாய் இருக்கிறார். அவருடைய குடும்ப ஆல்பத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்க்க விரும்புகிறேன். அவருடைய பெயர் ஐனிக்கேயாள். அவர் தீமோத்தேயுவின் தாய். இந்தத் தீமோத்தேயுவுக்குப் பவுல் எப்படி உத்தம ஊழியக்காரனாய் இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் புகைப்படம் பிடிக்கும் கருவி இருந்திருந்தால் தீமோத்தேயுவின் வீட்டில் ஒரு குடும்ப ஆல்பம் இருந்திருக்கும். அதில் ஐனிக்கேயாளின் படங்களைப் பல கோணங்களில் நாம் கண்டிருக்க முடியும். இப்பொழுது நாம் கற்பனையான அவர்களது குடும்பத்தின் ஆல்பத்தில் ஐனிக்கேயாள் எந்தெந்த நிலையில் காணப்பட்டிருப்பார் என்று கற்பனையில் காண்போம்.

படம்.1

விசுவாசிக்கும் யூதப் பெண்மணி

அப்போஸ்தலர் 16 முதல் 18 அதிகாரங்களில் லூக்கா பவுலின் இரண்டாவது மிஷனெரிப் பயணத்தைக் குறித்து எழுதியுள்ளார். அதில் அவர் இன்று துருக்கி என்று அழைக்கப்படும் சின்ன ஆசியாவிலுள்ள தெர்பை, லீஸ்திரா என்னும் பட்டணங்களுக்குப் பவுல் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கே பவுல் தீமோத்தேயுவைச் சந்தித்தார். பவுல் தனது முதல் மிஷனெரிப் பயணத்தில் அப்பகுதியில் வந்தபோது அந்த வாலிபனைச் சந்தித்து அவனை இரட்சிப்புக்குள் வழிநடத்தி ஆண்டவரின் பிள்ளையாக ஆக்கியிருந்தார். இந்தத் தீமோத்தேயுவை யாரென்று அடையாளம் காட்டும்படி லூக்கா-அப்.16:1இல் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்: “அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூத ஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.” இந்த அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் “அந்த ஸ்திரீ” என்று காணப்படுகிறது. அவருடைய பெயர் இல்லை. ஆனால் அவருடைய பெயர் ‘ஐனிக்கேயாள்’ என்று 2தீமோ.1:5ஆம் வசனத்தில் காண்கிறோம். இந்த முதல் போட்டோவில் அவர் ஒரு “யூதப் பெண்மணி” என்று காட்டப்பட்டுள்ளார். ஆனால் அவர் நாசரேத்தூரிலிருந்து வந்த இயேசுவைத் தனது மேசியாவாகவும், இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக் கொண்டிருந்தார்.

சின்ன ஆசியாவில் ஜெப ஆலயங்கள் மிகவும் சாதாரணம். ஏனென்றால் அங்கு ஏராளமான யூத மக்கள் வாழ்ந்து வந்தனர். ஐனிக்கேயாள் ஒரு யூதத் தாய்க்குப் பிறந்திருந்ததால் யூதப் பெண்மணியாயிருந்தார். அக்காலத்தில் தகப்பன் யூதரல்லாதவராக இருந்தாலும் தாய் யூதப் பெண்மணியாக இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் யூதர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இவ்வாறு ஐனிக்கேயாள் ஒரு யூதப் பெண்மணியாகவும், அதிலும் விசேஷமாக ‘விசுவாசமுள்ள யூத ஸ்திரீ’ யாகவும் இருந்தார். அவருக்கு ஆபிரகாமின் தேவனாகிய கடவுளுடன் சரியான உறவும் தொடர்பும் உண்டு. ஐனிக்கேயாள் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரைத் தன் மேசியாவாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டிருந்தார். இப்பொழுது நாம் அவரை “மேசியாவை ஏற்றுக் கொண்ட யூதர்” அல்லது “இயேசுகிறிஸ்துவுக்குள் பரிபூரண முள்ளவர்” என்று கூறலாம் (கொலோ.2:9,10).

இந்தப் படம் ஐனிக்கேயாளின் குடும்பப் போட்டோ ஆல்பத்தில் இருப்பதற்காகச் சந்தோஷப்படுகிறேன். நம் வாழ்வில் மிகவும் முன்னுரிமை பெறவேண்டிய காரியம் கடவுளோடு நமக்குள்ள உறவு. இந்த உறவு சரியாய் இல்லாவிட்டால், நம்முடைய வாழ்வின் மற்ற எல்லாப் போட்டோக்களும் மங்கலாகவும், திரிந்தவையாகவும் காணப்படும்.

ஐனிக்கேயாள் இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர் மறுபிறப்பின் அனுபவம் பெற்றிருந்தார். அவர் ஒரு யூத, கிறிஸ்தவப் பெண்மணி. அவர் தன்னுடைய விசுவாசத்தை இயேசுவின் இரத்தத்தின்மேல் வைத்திருந்தார். தனது பாவத்தை அவருடைய இரத்தம் கழுவி சுத்திகரிக்கும் என்று விசுவாசித்தார். பாவத்திலிருந்து இரட்சிப்படைவதற்கு விசுவாசம் தேவை. ஏனென்றால் எபி.11:6 இவ்வாறு கூறுகிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்”.

பிள்ளையில்லாமலிருந்த ஆபிரகாமிடம் தேவன் வானத்தின் நட்சத்திரங்களைக் காட்டி, இவைகளைப்போல எண்ணற்றவர்களாக உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்று வாக்களித்தபோது, அதை ஆபிரகாம் அப்படியே நம்பினான். ஆதி.15:6இல், “அவன் (ஆபிரகாம்) கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” என்று பார்க்கிறோம். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அதனால் அவன் விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டான்.

நினிவே பட்டணத்தின் மக்களுக்கு யோனா செய்தி அறிவித்தபோது, “அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்” (யோனா. 3:5). தேவனுடைய மக்கள் சந்தித்த மிகவும் உக்கிரமான பகைவர்கள்கூட, விசுவாசத்தினால் இரட்சிப்பைக் கண்டடைந்தார்கள். நினிவேயின் மக்கள் தேவனை விசுவாசித்து, அதன்மூலம் பெரிய அழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டார்கள்.

தேவனை விசுவாசிக்காததால், தம்முடைய மக்கள்மீது அவருடைய கோபம் மூண்டது என்று சங்கீதம் 78:22இல் காண்கிறோம். அவர் கள் தேவனுடைய இரட்சிப்பின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் இஸ்ரவேல் தேவனை விசுவாசித்தபோதோ, அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பினபோதோ, அவர்கள் விசுவாசத்தினால் காப்பாற்றப்பட்டார்கள்.

தேவன் எதிர்பார்ப்பதெல்லாம், உங்களை இரட்சிப்பதற்கு அவர் தந்திருக்கும் வாக்குத் தத்தத்தை நீங்கள் விசுவாசிப்பதுதான். முதலாவது நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சுத்திகரிக்கவேண்டியதில்லை. நீங்கள் ஒரு, திருமுழுக்குவாதியாகவோ (Baptist) மெதடிஸ்ட் சபையாராகவோ, பெந்தெ கோஸ்தேக்காரராகவோ, வேறு எந்தவொரு சபையின் உறுப்பினராகவோ இருக்கத் தேவையில்லை.

நீங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ் துவை உங்கள் பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்கும் இரட்சகர் என்று விசுவாசித்தால் போதுமானது. மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இதே விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டவர்களே.

இயேசுதாமே இப்படிக் கூறியிருக்கிறார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” (யோவான் 3:16-18).

ஐனிக்கேயாள் இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டார். நீங்கள் அப்படிச் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு நிச்சயம் இல்லையானால், மேலே குறிப்பிட்ட வசனங்களை மறுபடியும் வாசித்துப் பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக நீங்கள் மனஸ்தாபப்படுவதாக, உண்மையுடன் கூறுங்கள். அந்தப் பாவத்தின் தண்டனையிலிருந்து இயேசு கிறிஸ்துமட்டுமே இரட்சிக்க முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களை இரட்சிக்குமாறு நீங்கள் இதுவரை கடவுளிடம் கேட்கவில்லையானால், இப்பொழுதே கேளுங்கள். அவர் இரட்சிப்பார்.

ஐனிக்கேயாள் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவோடு தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த உறவே அவருடைய வாழ்வின் மிக முக்கியமான உறவாகும். நாமும் கொள்ளக்கூடிய முக்கியமான உறவு அதுவே. அவருடைய குடும்பத்தின் போட்டோ ஆல்பத்தில் இந்தப் படம் மட்டும் பெரிதாக்கப்பட்டு முதல் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

படம்-2

மகிழ்ச்சி நிறைந்த மகள்

என்னுடைய குடும்பப் போட்டோ ஆல்பத்தில் “தாயும், மகளும்” இருக்கும் படங்களை விரும்பிப் பார்ப்பேன். எங்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உண்டு. எனவே அம்மாவும் மகனும் அல்லது மகள்களும் சேர்ந்து இருக்கும் படங்கள் ஏராளம் உண்டு. மேலும் இப்போது எங்களுக்கு 5 பேத்திகள் உண்டு. பேரன் ஒருவன் மட்டுமே. எனவே எங்கள் குடும்ப ஆல்பத்தில் தாயும் மகளும் சேர்ந்திருக்கும் போட்டோக்கள்தான் நிறையக் காணப்படுகின்றன.

நமது வேதாகமத்தில் மிகக் குறைவாகவே ‘தாய் – மகள்’ உறவு பற்றிக் கூறப்பட்டுள்ளன.

சிரோபெனிக்கேயா ஸ்திரீயும், மகளும் அவற்றில் ஒன்று. அந்த மகளிடமிருந்து இயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்தினார் (மாற். 7:24-30).

நகோமியும், அவளுடைய மருமகள் ரூத்தும் இன்னொன்று. இந்த ரூத் நகோமிக்கு ஒரு மகளைப்போல இருந்தாள் (ரூத் 1:16, 17).

வேதாகமத்தில் காணப்படும் தாய் – மகள் உறவுகளில் மிகவும் சிறந்தது லோவிசாளும், அவர் மகள் ஐனிக்கேயாளுமே.

ஐனிக்கேயாளின் மகன் தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதிய இரண்டாம் கடிதத்தில், பவுல் லோவிசாளுக்கும் அவருடைய மகள் ஐனிக்கேயாளுக்கும் உள்ள அன்புறவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும், நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2தீமோ. 1:5).

இங்கே தாய்க்கும் மகளுக்கும் உள்ள நெருங்கிய அன்புறவு தெரியவருகிறது. தீமோத்தேயுவிடம் இருந்த விசுவாசம் ஒரு குடும்ப விசுவாசம். அது முதலில் பாட்டியிடம் இருந்தது பின்னர் தாயிடம் இருந்தது. இப்போது மகனிடமும் இருக்கிறது. இதனால் தீமோத்தேயு தன் பாட்டியினாலோ, தாயினாலோ இரட்சிக்கப் பட்டவன் என்று கூறிவிட முடியாது.

நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவோடு உறவும், அவர்மேல் விசுவாசமும் இருக்கவேண்டும். அதுதான் நம்மை இரட்சிக்கும். உங்கள் பெற்றோரின் விசுவாசம் கொண்டு நீங்கள் பரலோகம் செல்ல முடியாது. ஆனால் இங்கே தெளிவாகத் தெரிவது என்னவெனில், தீமோத்தேயு சிறிய குழந்தையாக இருந்த காலம் முதல் அவனது பாட்டியும் தாயும் விசுவாசக் கொள்கைகளைத் தீமோத்தேயுவின் மனதில் பதியவைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய உள்ளத்தில் தேவன் பேரில் உள்ள விசுவாசம் நிலை கொண்டிருந்தது. அவன் வாலிபனானபோது ஒரு விசுவாசியாக இருந்தான்.

இரட்சிப்பைப் பெற, தேவன்பேரில் விசுவாசம் கொள்ளவேண்டும் என்று லோவிசாள் தன் மகளான ஐனிக்கேயாளுக்குக் கற்றுக் கொடுத்தார். தாயான லோவிசாளும், மகளான ஐனிக்கேயாளும் சேர்ந்து, தீமோத்தேயுவின் மனதில் தேவன்பேரில் விசுவாசம் கொள்ள வேண்டிய அவசியத்தைப் புகுத்தி, உணரச் செய்தார்கள். இவ்விதமாகக் குடும்பங்களில் செய்யப்படுவது நல்லது. இன்றும் பல நல்ல தெய்வபயமுள்ள குடும்பங்களில் இம்முறையில் தங்கள் பிள்ளைகளைப் பக்தியும், தேவ பயமும், விசுவாசமும் உள்ளவர்களாய் வளர்ப்பதைக் காணலாம். குடும்பங்களில் இப்படிப் பக்தி வழியில் சீராய் வளர்ப்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும்.

ஒரு கிறிஸ்தவப் பெண்மணியின் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தீத்து 2:3-5 வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் தாய், மகள் பயிற்சி முறைகள் ஆகும். ஒருவேளை இந்த வசனங்களைப் பவுல் எழுதும்போது அவருடைய மனதில் தாயாகிய லோவிசாள் மகளாகிய ஐனிக்கேயாள் இவர்களின் வாழ்க்கை இருந்திருக்கலாம். இந்த வசனங்கள் கூறுவதைப் பார்ப்போம்.

“முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவ வசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு” (தீத்து. 2 : 3-5).

தேவனுக்குப் பயந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்ததன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைத் திருச்சபையிலுள்ள முதிர் வயதுள்ள பெண்கள் மற்ற பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது மாபெரும் பொறுப்பும், சிலாக்கியமுமாகும். இப்படிக் கற்றுக்கொடுக்கக் கூடிய ஏராளமான பாடங்களில் மிக முக்கியமான ஒன்று, தெய்வ பயமுள்ள பொறுப்பான ‘தாய்’ ஆக இருப்பதாகும். அந்தத் தாய் தன் பிள்ளைகளைத் தெய்வ பயத்துடனும், நல்லொழுக்கத்துடனும் இருக்கும்படி பயிற்சியளித்து வளர்த்து வருவார். இதுபோன்ற பிற பாடங்கள்.

தன் புருஷனிடம் அன்பாயிருத்தல், தன் புருஷனுக்கு அடங்கி நடத்தல், தன் புருஷனுக்குக் கீழ்ப்படிதல், தன் புருஷனுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தல், தன் வீட்டில் குடும்பத் தலைவராக அவரை மதித்து, ஏற்றுக்கொள்ளுதல், தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருத்தல், கற்பு நெறியில் பரிசுத்தமாயிருத்தல், தன் வீட்டுக்காரியங்களைத் திறமையுடன் பொறுப்பாக நிர்வாகம் செய்தல்.

இன்றைய நவீன நாகரீக சமுதாயத்தில், அநேக மனைவிகளும், தாய்களும் சாத்தானால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். சாத்தான் அவர்களிடம், “நீங்கள் வீட்டில் அடைந்துக்கிடந்து, எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பது, அடிமைகள் வீட்டு எஜமானுக்குப் பயந்துகொண்டு வேலை செய்வதற்குச் சமம். பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். எனவே அடிமைகள் போல வீட்டில் அடைந்துக் கிடக்காதீர்கள்”. எனவே மனைவிகளுக்கும், தாய்மார்களுக்கும் புத்திமதி கூறுவதற்கு லோவிசாள் போன்ற தெய்வபயம் உள்ள விசுவாசத் தாய்களைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் ஐனிக்கேயாள் போன்ற தெய்வ பயமுள்ள பெண்களுக்குப் புத்தி சொல்ல வேண்டும். தேவன் பொறுப்பான தாய்களாக இருந்து வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்யவும், கீழ்ப்படியவும், அடங்கி நடக்கவும், அன்புகூரவும் பிள்ளைகளைப் பொ றுப்புடன் நல்வழியில் வளர்க்கவும், பாதுகாக்கவும், வீட்டுக் காரியங்களைப் பொறுப்புடன் நிர்வாகம் செய்யவும் தங்களைப் படைத்திருக்கிறார் என்பதை முதிர்ந்த தாய்கள் தங்கள் அனுபவத்திலிருந்து இவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

ஒரு தாய்க்கும், தன் மகளுக்கும் இடையில் ஒரு சிறப்பான உறவு உள்ளது. என்னுடைய முதல் மகளின் திருமணம் ஒழுங்கானபோது, என்னுடைய மனைவி லின்டாவும், மகள் டிரேஸியும் பல மாதங்களாகத் திருமணத்துக்கான ஆயத்த வேலைகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் ஒரு ஆசிரியரும், மாணவரும் பழகுவதுபோல தாயும், மகளும் பழகிக் கொண்டிருந்தார்கள். தாய் ஆசிரியை. மகள் மாணவர். தாய் கற்றுக் கொடுப்பதையெல்லாம் மகள் கற்றுக்கொண்டாள். ஏன் செய்யவேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்று ஒவ்வொரு காரியத்துக்கும் அம்மாவின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள் என் மகள். இந்த உறவு இந்தக் காலத்தில் உச்சநிலை அடைந்தது. அந்நாட்களில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட உறவின் நெருக்கம், அவர்களுடைய வாழ்நாள் பரியந்தம் நீடிக்கும்.

ஐனிக்கேயாள் தன் தாயான லோவிசாளுக்குப் பிரியமான மகள். அவர்கள் தங்களுக்குள் அனைத்தையும் பகிர்ந்துகொள்பவர்களாக இருந்திருப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தையும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் தீமோத்தேயுவுக்கும் கிடைத்திருக்கும். பண்டைய இஸ்ரவேலை தேவன் அற்புதமாகக் காத்ததையும், விடுவித்ததையும், வழிநடத்தியதையும் கதை, கதையாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். மேலும் அப்போதைய அப்போஸ்தலர்களின் ஊழியம், செய்த அற்புதங்கள், சாதனைகள் இவற்றையும் கூறியிருப்பார்கள். ரோமப் பேரரசு முழுவதும் காற்று வீசப்பட்ட தீச்சுவாலை பரந்து விரிந்து பரவுவதுபோல நற்செய்தி பரவி வந்ததையும் கூறியிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவே தங்கள் இரட்சகர் ஆண்டவர், வழிகாட்டி, மேய்ப்பன் என்பதை உள்ளத்தில் பதியும்படி உணரச் செய்தார்கள்.

தாய்மார்களே, இந்த உலகில் வேறு எவருக்கும் இல்லாத சிலாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம். அவரை நேசிக்கவும், அவரிடம் ஜெபத்தின் மூலம் பேசவும், வேதம் வாசித்து அதில் உள்ள அவருடைய சத்தத்தைக் கேட்கவும் பயிற்சியளிக்கலாம். உங்கள் பொறுப்பை நீங்கள் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியர், V.B.S. ஆசிரியர், AWANA தலைவர் ஆகியவர்களிடம் ஒப்படைத்து விடாதீர்கள். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து, அவரை நேசிக்கப் பழக்குங்கள்.

பேரன்புக்குரிய பாட்டிமார்களே, நீங்கள் உங்கள் ஆடும் நாற்காலியில் ஆடிக்கொண்டே உங்கள் பேரப்பிள்ளைகளைத் தூங்கச் செய்ய முயற்சிக்கும்போது, வாத்து, நரி, குரங்கு இவைப்பற்றிய கட்டுக்கதைகளைக் கூறுவதற்குப் பதில், இயேசுவைப் பற்றிய கதைகளைக் கூறுங்கள். இயேசுவைப் பற்றிய பாடல்களைப் பாடுங்கள். தம்முடைய வாழ்க்கையில் சிறுபிள்ளைகளை நேசித்த இயேசுவை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.

இப்பொழுது லோவிசாள் பாட்டி, ஐனிக்கேயாள் அம்மா, பாட்டியின் மடியில் பேரன் தீமோத்தேயு அமர்ந்திருக்கும் போட்டோவை உங்கள் மனக்கண்களால் பார்க்கமுடிகிறது அல்லவா?

ஐனிக்கேயாள் எந்த தோல் சுருள்களை வாசித்தார் என்று நினைக்கிறீர்கள்? லோவிசாள் பாட்டியும், அவருடைய மகள் ஐனிக்கேயாளும் சேர்ந்து தங்கள் மகனை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்க்க” (எபே.6:4) முயற்சித்தார்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் சிறப்பான வரங்களைப் பயன்படுத்தி, நீங்களும் அப்படியே செய்யலாம்.

(தொடரும்)

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்