தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் திட்டம்

சகோ.டேவ் ஓர்ட்லி
(ஜனவரி-பிப்ரவரி 2014)

ஜேக்கின் நெற்றியில் உள்ள கவலைகளின் கோடுகளை அவனால் அகற்ற முடியவில்லை. அநேக முடிவுகளை அவன் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டியதாயிருந்தது. அவனது பள்ளியிலிருந்த ஆலோசகர் (Counselor) அடுத்த வருடத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்குமாறு அவனுக்கு ஆலோசனை அளித்தார். வேதாகம கல்லூரியா? பல்கலைக்கழகமா? அல்லது வேலை வாய்ப்புக்கான கல்வியா? அல்லது வேலையா? இந்த கோடை கால விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டுமா அல்லது ஆலயத்திலிருந்து பயணம் செல்லும் குழுவோடு செல்ல வேண்டுமா? அவனால் சரியான முடிவு எடுக்க முடியாதபடி திகைத்துப் போய் இருந்தான்.

ஜேக் வேதத்தை எடுத்து சில வசனங்களை வாசித்தான். பின் கண்களை மூடி நூறாவது முறையாக “ஆண்டவரே, நான் உம்முடைய சித்தத்தை அறியவேண்டும். நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும்” என்று ஜெபித்தான். அநேக கிறிஸ்தவர்கள் ஜேக்கின் நிலையை நன்றாக அறியார்கள். அவர்களுக்கு தேவனுடைய திட்டத்தை விவரிப்பதற்குக் கடினமாயிருக்கும். தங்களது வாழ்க்கைக்கு தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதைக் குறித்து சிலநேரங்களில் அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

உங்களுக்கென்று தனிப்பட்ட தேவனுடைய திட்டம்
ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தனிப்பட்ட திட்டத்தை தேவன் வைத்திருக்கின்றார் என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. எபேசியர் 5:17இல் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்று வாசிக்கின்றோம். ஒரு திட்டம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் வாழ தேவை இல்லை. தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு திட்டம் வைத்திருப்பதால், விசுவாசிகள் தங்கள் வாழ்விற்கு ஒரு குறிக்கோள் இல்லையே என்று யோசிக்க வேண்டாம்.

ஆண்டவர் உருவாக்கின ஒவ்வொன்றிற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றார். அது ஒரு நியாயமான செயல்பாடு. பறவைகளின் இறக்கைகள், சிலந்தி வலை, கடல் சிப்பிகள் ஆகிய இவைகளுக்கு எல்லாம் ஒரு தனிப்பட்ட தன்மை உண்டு. மிகச் சிறிய பிராணியிலிருந்து வானத்திலிருக்கும் கிரகம் வரை எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் சிறப்பு அம்சமும் உண்டு (Design). தேவன் தான் உருவாக்கின எல்லாவற்றிற்கும், உங்களையும் சேர்த்து, ஒரு திட்டம் தன் மனதில் வைத்திருக்கிறார். தாவீது “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங்.139:14) என்று கூறினார்.

நீங்கள் தேவனுடைய பிள்ளையானால், அவரது திட்டத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பது இரண்டு மடங்கான உறுதி ஆகும். உங்கள் சரீரம் மட்டும் தேவனால் உருவாக்கப்பட்டது அல்ல. நீங்களே கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். இப்படியிருக்க, “இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாய் இருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்” (2கொரி.5:7). தேவன் உங்களைச் சிருஷ்டித்தும் மீட்டும் இருக்கிறார். ஆகவே, அவருக்கு உங்களைக் குறித்த தனிப் பட்ட திட்டம் உண்டு.

தேவனுக்கு உண்மையாயிருத்தலும் அவருடைய திட்டமும்
தங்கள் வாழ்க்கைக்கு தேவன் குறித்த திட்டத்தை அறிந்துகொண்ட அநேகரை வேதத்தில் காண்கிறோம். இஸ்ரவேல் தேசத்திற்கு தகப்பனாக தேவனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆபிரகாமைப் பாருங்கள். ஊர் தேசத்தில் வாழ்ந்த அவர் சுமார் 70 வயதானவர், அவருக்கு தேவன் தமது திட்டத்தைக் காண்பித்தார். அவரிடம் தேவன் “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி.12:1) என்று கூறினார்.

செழிப்பும், கலாச்சாரமும் நிறைந்த ஊரை விட்டு முற்றிலும் தெரியாத அறிவிக்கப்படாத ஒரு இடத்திற்கு ஆபிரகாம் சென்றார்.

தேவன் அவரின் திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி. 12:2,3). இன்று ஆபிரகாம் விசுவாசம் நிறைந்த ஒரு மனிதனாக கனப்படுத்தப்படுகிறார். இயேசுவின் மனுஷீக முற்பிதாக்களில் ஆபிரகாமும் ஒருவர்.

யோசேப்பின் அசாதாரண வாழ்க்கையைப் பாருங்கள். அவர் தகப்பனாருக்கு மிகவும் பிரியமான மகன்; ஆனால் அவருடைய சகோதரர்கள் அவரை இஸ்மவேலருக்கு விற்றுவிட்டனர். அவர்களால் யோசேப்பு எகிப்துக்கு கொண்டுச் செல்லப்பட்டார். சில நாட்களில் போத்திபாரின் அரண்மனையில் அதிகாரம் நிறைந்த அடிமையாக பணி செய்தார். ஆனால் காரணமின்றி சிறையில் தள்ளப்பட்டார். ஏற்ற காலத்தில் சூழ்நிலைகளைச் சாதகமாக்கி தேவன் அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து நாட்டின் பஞ்சத்திலிருந்து தீர்வுகாணச் செய்தார். ஆனால் அநேக கஷ்டங்கள் வழியாக அவர் செல்ல நேரிட்டது. கேடு நினைத்த சகோதரர்கள், அடிமை நிலை, சிறையிருப்பு, ஆனால் அவர் கசந்து முணுமுணுத்தாரா? இல்லையே. அவை யாவும் தேவனுடைய திட்டம் என்று புரிந்து கொண்டார்.

அவரது சகோதரர்கள் அவரை விற்று பல வருடங்களுக்குப் பின், அவர்கள் உணவு வாங்க வந்தனர். அவர்கள் உலகத்திலேயே அதிகாரம் நிறைந்த ஒருவனான அவர்கள் சகோதரனின் இரக்கத்தை நம்பி நின்றனர். யோசேப்பினால் பழிவாங்க முடிந்திருக்கும். ஆனால், “யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி.50:19,20) என்று கூறினார்.

திருப்தி நிறைந்த வாழ்வு
தமஸ்குவுக்கு போகும் வழியில் இயேசுவைச் சந்தித்ததால் பவுலின் வாழ்வு முற்றிலுமாக மாறியது. “அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்” (அப்.9:6).

அனனியா என்னும் பக்தி நிறைந்த கிறிஸ்தவனைச் சந்திக்குமாறு தேவன் பவுலை தமஸ்குவிற்கு அனுப்பினார். சபையைத் துன்புறுத்திய பவுலுக்கு (சவுல் என்று அழைக்கப்பட்ட) உதவி செய்வதற்கு அனனியா தயங்கினார். ஆனால் தேவன் அவரிடம், “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்” (அப்.9:15,16).

பவுல், தேவன் அவருக்காக நியமித்தத் திட்டத்தை நிறைவேற்றினார். புறஜாதியாரின் இடங்களுக்கு பயணம் செய்த முதல் அப்போஸ்தலராகிய அவர், யூதர்களுக்கும் பிரசங்கித்தார். ராஜாக்களுக்கும் பிற அதிகாரிகளுக்கும் சத்தியத்தை அறிவித்தார். சீஷருக்கே சத்தியத்தை அறிவிக்கும் சிலாக்கியம் பெற்றவர். அநேக இன்னல்களைச் சகித்தார். கல்லடி, சவுக்கடி, கப்பல் சேதம், சிறை இவைகளைக் கடந்து இறுதியில் கொல்லப்பட்டார். கடினமான வாழ்வு முடியும்போது “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2தீமோ.4:7,8) என்று எழுதினார். அவரது இன்னல் நிறைந்த நீண்ட வாழ்வின் இறுதியில், தேவனுடைய திட்டமே மிகச் சிறந்தது என்று அறிந்திருந்தார். தேவனுடைய திட்டத்தை தன் வாழ்வில் நிறைவேற்றுவதில் கருத்தாக இருந்ததைப் பற்றி மகிழ்ச்சியடைந்தார்.

வேதாகமத்தில் மட்டுமல்ல; தங்களது வாழ்வில் தேவனுடைய சித்தத்தைக் கண்டு கொண்ட சாதாரண மக்கள் அநேகர் உண்டு. China Inland Mission-ஐ ஆரம்பித்த ஹட்சன் டெய்லர் தேவனுடைய அழைப்பை அவரின் 17ஆவது வயதில் கேட்டார். 40 வருடங்களுக்கு மேல் தேவனை சேவித்து மரிக்கும் தருவாயில் இருந்த அவர் “நான் ஆயிரம் முறை வாழ்ந்தாலும், ஒவ்வொரு வாழ்வையும் சீனாவுக்கே கொடுப்பேன்” என்றார். ஜான் வெஸ்லி தேவன் அவரை அவர் தகப்பன், தாத்தா, பெரிய தாத்தா போல் ஊழியராக வேண்டும் என்று விரும்புகிறார் என்று உணர்ந்தார். தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து British Isles-யிலும், வட அமெரிக்காவிலும் ஊழியம் செய்தார்.

தேவன் குருடரான ஃபேனி க்ராஸ்பி (Fanny Crosby)-க்கும் ஒரு திட்டம் வைத்திருந்தார். சிறு வயதில், அவருடைய பாட்டியம்மா வேதத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தார். வசனங்களை மனப்பாடம் செய்வதற்கும் உதவினார்கள். வயதானபின் கவிதைகளையும், பாட்டுக்களையும் எழுதினார்கள். 8000 பாடல்களையும் மற்ற பாட்டுக்களையும் எழுதினார்கள். இயேசுவின் மார்பில் சாய்வேன் (Safe in the arms of Jesus), “Blessed Assurance”, “Rescue the Perishing” போன்ற பாடல்களை எழுதினார்கள். உடல் ஊனம் உள்ளவர்களை தேவன் பல நேரங்களில் உபயோகித்திருக்கிறார்.

சிறந்த முன்மாதிரி
தேவசித்தத்தைப் பின்பற்றுவதில் நமக்கு சிறந்த முன்மாதிரி இயேசுகிறிஸ்துவே. அவரைப் பற்றிய தேவசித்தம் மிகவும் விலை மதிப்பற்றது. “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி.2: 6,8).

அதன் அர்த்தத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர் (யோவான் 1:1-3, கொலோ.1:16,17) மனிதனானார். பசியும், தாகமும் அடைந்தார். வெறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார். சோதனைக்கு இடங்கொடுக்காதவர். பாவத்திற்கு குற்றமற்ற பலியானார். அவர் செயல், வார்த்தை யாவும் தேவசித்தத்தின் படியே இருந்தது.

இயேசு, “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்” (யோவா. 6:38), “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (யோவா. 4:34) என்றும் கூறினார். கெத்செமனே தோட்டத்தில் வேதனையடைந்த போதும் அவர் “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்” (லூக்கா 22:42) என்று கூறினார். இயேசுவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் யாவுமே தேவனுடைய சித்தத்தின்படியே இருந்தது. முழு ஒப்படைப்புடன் அவர் “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்…” என்றார் (எபி.10:9). அவ்வாறே இயேசு தேவ சித்தத்தைச் சரியாக செய்துமுடித்தார்.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஏற்ற திட்டம்
தேவன் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வைத்திருக்கிறார். இது கிறிஸ்தவப் பணிகளில் உள்ள ஊழியக்காரர், மிஷெனரிகள், ஆசிரியர்கள், தலைவர்களுக்கு மட்டும் இல்லை. உங்களுக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்துள்ளார் என்று நம்பிக்கையாய் இருங்கள். அவர் உங்கள் தந்தை; உங்களை உருவாக்கியபின் உங்களை மறக்கமாட்டார். உங்களை இரட்சித்தபின் புறக்கணிக்க மாட்டார். எந்தவொரு தகப்பனாவது தன் மகளுக்கோ அல்லது மகனுக்கோ தன் மனதில் ஒரு திட்டம் இல்லாமல் இருப்பாரா? இல்லையே. உங்கள் மேலோக தந்தையும் அப்படித்தானே.

ஒரு கணவன் தன் மனைவியைக் குறித்து திட்டம் வைத்திருக்கிறாரா? ஒரு தளபதிக்குத் தன் படையைக் குறித்த ஒரு நோக்கம் இருக்குமோ? ஒரு மேய்ப்பனுக்குத் தன் மந்தையைக் குறித்து கவலை இருக்குமா? கட்டாயமாக எல்லாருக்கும் ஒரு திட்டம் இருக்கும் அல்லவா? தேவன் விசுவாசிகள் மேல் வைத்திருக்கும் அன்பை விளக்க வேதாகமம் மேலே குறிப்பிட்ட நபர்களை உபயோகப்படுத்தியிருக்கின்றது.

தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை அறியவும், கடைப்பிடிக்கவும் நாம் முயலும்போது நமது வாழ்வு புது அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ளும்.

மொழியாக்கம்: Mrs.Edrina Jeyasingh
சத்தியவசனம்