தேவ எச்சரிப்பு!

Dr.புஷ்பராஜ்
(ஜனவரி-பிப்ரவரி 2014)

இரட்சிப்பு என்று கிறிஸ்தவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்களே, அதன் அர்த்தம் என்னவென்று, இன்று அநேகருக்குப் புரியவில்லை. கிறிஸ்தவர்களிலும் அநேகருக்கு அது புரியாதிருக்கின்றது. இரட்சிப்பு யாருக்குக் கிடைக்கும், அதனுடைய அர்த்தம் என்ன? இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுகிறவர்கள் “இரட்சிக்கப்பட்டவர்கள்” எனப்படுவர். ஆனால், அது யாருக்குக் கிடைக்கும், அதற்கு தகுதி என்ன? நான் ஒரு பாவி என்று யார் ஒத்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இரட்சிப்பு கிடைக்கும். நீதிமொழிகள் 28: 13இல் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

பாவங்களை மறைத்து வைப்பதினாலே நிச்சயமாய் நமக்கு வாழ்வு கிடையாது. ஒருவன் தனது பாவங்களை மறைக்க மறைக்க அவனுக்கு சமாதானம்தான் குறையும். இன்றைக்கு அநேகம்பேர், பாவத்துக்குள்ளே மூழ்கிக் கிடக்கின்றார்கள். சிலர் நான் பாவமே செய்யவில்லை என்றும், இது பாவமா? அது பாவமா? என்றும், சிலர் சிறிய பாவம் பெரிய பாவம் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு, தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாவம் என்று எதுவும் இல்லையென்றுகூட சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 1யோவான்1:8இல், “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” என்று எழுதப்பட்டிருக்கிறது. நாம் பாவம் செய்யவில்லையென்று சொல்லிச் சொல்லி, நம்மையே திருப்திப்படுத்திக் கொண்டிருந்தால் நமது உள்ளத்திலே சமாதானம் இழப்பதோடு நம்மைநாமே வஞ்சித்துக்கொண்டிருக்கிறோம்.

அருமையான தேவபிள்ளையே, இன்றைக்கு நீ உன்னுடைய பாவங்களைக் குறித்து யோசித்துப்பார். தேவன் பல தடவை உன்னை எச்சரித்துப் பார்க்கிறார். எதையாவது அவர் சுட்டிக்காட்டும்பொழுது, நீ அதை விட்டுவிடுவது உனக்கு நல்லது. நீ செய்கிறது நல்லதல்ல, அது பாவம் என்று முதலாவது உன் மனச்சாட்சியே உனக்குச் சொல்லும்போது நீ அதை விட்டு விடுகின்றது உனக்கு நல்லது. சிகரெட் குடிக்கிறது பாவமா, சினிமா பார்க்கிறது பாவமா, கதை புத்தகம் படிக்கிறது பாவமா என்று இப்படியெல்லாம் சிலர் கேட்கிறார்கள். இவையெல்லாம் பைபிளில் எழுதியிருக்கிறதா என்றுகூட கேட்கிறார்கள். ‘பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்’ (1தெச.5:22) என்பதுதான் வேதத்தின் போதனை. உனக்குத் தவறாய்த் தோன்றுகிறதை விட்டுவிடுகிறது உனக்கு நல்லது. அதைக் குறித்து நீ தர்க்கம் பண்ணாதே.

பாவத்தை நீ மறைக்காதே. தேவன் எச்சரிக்கும்போது அதை விட்டுவிடு. அநேக குடும்பங்களுக்கு சிட்சைகூட வருகிறது. தேவன் தீமையினாலே சோதிக்கிறவரல்ல என வேதம் சொல்லுகிறது. ஆனால் தீமையை அவர் அனுமதிக்கிறார். நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவர் தீமையை அனுமதிக்கிறார். அதைக் கண்டாவது நீ திருந்தக் கூடாதா? அநேகர் இன்று கூறுவதென்ன? நான் இவ்வளவு பாவம் செய்கிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் வரவில்லை. பிரசங்கி 8:11, சங்.55:19 போன்ற வசனங்கள், துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை, சீக்கிரமாய் கிடைக்காததினாலே, மனுஷன் பாவம் செய்வதற்காகத் துணிகரம் கொள்கிறான் என்று சொல்லுகிறது. தவறான பாவங்கள் செய்துவிட்டு, அதற்கான தண்டனை இன்னும் கிடைக்கவில்லையென்று, மனிதன் மேலும் மேலும் பாவஞ்செய்யத் துணிகரப்படுகிறான். “நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்” (ஏசா. 57:11) என்று தேவன் சொல்லுகிறார். நீ செய்த பாவத்திற்கெல்லாம் அவர் தண்டனை கொடுக்கவில்லை. ஆகவேதான், இன்னும் நான் பாவம் செய்யட்டும் என்று நினைக்கிறாய்.

அருமையான தேவனுடைய மக்களே, பாவியை தேவன் நேசிக்கிறார். ஆனால், பாவத்தை அவர் விரும்புகிறது கிடையாது. இன்றைக்கு தேவன் அதை உணர்த்தும்போது நீ அதை விட்டுவிடுகிறது உனக்கு நல்லது. எச்சரிப்பு கொடுக்காமல் யாருக்குமே தேவன் சிட்சையை அனுமதிப்பதில்லை. ஆதாம் ஏவாளுக்கு கூட தேவன் எச்சரிப்பு கொடுத்தார். குறிப்பிட்ட பழத்தைச் சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதற்கு கீழ்ப்படியவில்லை. ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டார்கள். நோவா காலத்திலே எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. தேவன் வெள்ளத்தினாலே உலகை அழிக்கப்போகிறார் என எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஜனங்களோ கேட்கவில்லை. செத்துப்போனார்கள். லோத்துடைய குடும்பத்துக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. திரும்பிப் பார்க்கக் கூடாதென்று சொல்லப்பட்டது. லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்க்கிறது பாவமா? பழத்தைச் சாப்பிட்டது பாவமா என்று இப்படியாக சிலர் நினைத்ததினால்தான், அப்பொழுதே அவர்கள் தண்டனையை அனுபவித்தார்கள்.

இன்றைக்கும் பலர் அப்படிதான் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். இது சிறிய பாவந்தானே என்று யோசிக்கின்றார்கள். அப்படியல்ல சகோதரனே சகோதரியே, தேவன் எதைப் பாவம் என்று சொல்லி உனக்கு உணர்த்துகிறாரோ, அதை நீ அப்போதே விட்டுவிடுகிறது உனக்கு நல்லது. முன்னறிவிப்பு கொடுக்கிறார், எச்சரிப்பு கொடுக்கிறார். லோத்தின் மனைவி உப்புத் தூண் ஆனாள். யூதாஸ் ஸ்காரியோத்துக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். அவனுக்கு ஐயோ, அவன் இந்த உலகத்தில் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார் இயேசு. இவ்வளவையும் அவன் கேட்டுக் கொண்டே அவர் பக்கத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். முதலாவது அவனது உள்ளத்திலே துணிகரம். இயேசுவை அவன் காட்டிக் கொடுத்தான். கடைசியிலே அவன் நான்று கொண்டு செத்தான் என்று வேதம் சொல்லுகிறது. முன்னறிவிப்பு கொடுத்தும் அவன் கீழ்ப்படியவில்லை.

பேதுருவுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது. சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மறுதலிப்பாய் என்று சொல்லப்பட்டது. அவனோ தன்னுடைய சுயத்திலே நம்பிக்கைக் கொண்டிருந்தான். இவர்களெல்லாரும் உம்மை மறுதலித்தாலும் நான் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று கூறினான். சொந்த சக்தியை அவன் நம்பினான். ஆனால் அவன் சேரக் கூடாதவர்களோடு சேர நேர்ந்தது. பேசக் கூடாதவர்களோடு பேச ஆரம்பித்தான். இருக்கக்கூடாத இடத்திலே இருந்தான். ஆகவே சோதனை அவனைத் தேடி வந்தது. சோதனையிலே அவன் விழுந்துபோனான். தேவனை அவன் மறுதலித்தது மாத்திரமல்ல, சபிக்கவும் தொடங்கினான். யூதாசைவிட மோசமாக நடந்துகொண்டான். யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்தான். பேதுருவோ, அவரை மறுதலித்து சபிக்கவும் தொடங்கினான். ஆனால் அதை இயேசு கண்டார். தன்னைக் காணமாட்டார் என்று நினைத்தான். ஆனால், அவர் கண்டுவிட்டார் என்பதை அறிந்தவுடன், ஓரிடத்தில் தனித்துப் போய் புலம்பி அழுதான். முன்னறிவிப்பு கொடுத்தாரே, எச்சரிக்கப்பட்டேனே என கதறி அழுதான். ஆனால், அவன் மனந்திரும்பினான். தேவன் அவனை மன்னித்தார். எடுத்து உபயோகிக்க ஆரம்பித்தார்.

இன்றைக்கும் அருமையானவர்களே, தேவன் உங்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்திருக்கிறார், எச்சரித்துமிருக்கிறார். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லையென்றால், உங்களுக்குத்தான் வேதனை. நீங்கள்தான் கஷ்டப்பட ஆரம்பிப்பீர்கள். சிட்சை வரும் போது உங்களால் சகிக்க முடியாது. எனக்குத் தெரியும். ஒரு சகோதரனின் கால்கள் இரண்டும் துண்டான பிறகு அவன் இரட்சிக்கப்பட்டான். ஒரு சகோதரியின் புருஷன் இறந்துபோன பிறகு அவள் இரட்சிக்கப்பட்டாள். தேவன் பல முறை பேசிப் பார்த்தார். பேசின சமயத்திலெல்லாம் கீழ்ப்படிந்திருந்தால், வேதனையை அவர்கள் எதிர்நோக்க வேண்டிய அவசியமேயில்லை.

இன்றும்கூட அருமையானவர்களே, உங்களை எதிர்நோக்கும் பாவங்களை நீங்கள் விட்டு விலகுவது உங்களுக்கு நல்லது. இந்த செய்தியின் மூலமாய் தேவன் உங்களை எச்சரிக்கிறார். மதுபானம் அருந்துகிறீர்களா? இன்றைக்கே அதை விட்டு விடுங்கள். வேதனையான பாவத்தில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அதை நீங்கள் விட்டு விலகுங்கள். அப்பொழுது உங்களுக்கு நல்லது. அநியாயமாய் உங்கள் குடும்பத்தினுடைய பிள்ளைகள் வேதனைப்பட வேண்டாம். உங்கள் குடும்பத்துக்குள் வியாதி வர வேண்டாம். சிட்சை வந்து நீங்கள் திருந்த வேண்டாம், சுகமாயிருக்கும்போதே நீங்கள் திருந்திவிடுங்கள். கர்த்தரைக் கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாய் இருக்கும்போதே கூப்பிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. அருமையான தேவபிள்ளையே! இப்பொழுது உன் பக்கத்திலே அவர் நின்றுகொண்டிருக்கிறார். உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்போதாவது உன் பாவத்தை விட்டுவிடுவாயா? தேவ எச்சரிப்பு உன்னைத் தேடி வந்துவிட்டது.

அறிக்கை செய்தால் மட்டும் போதாது சகோதரனே, சகோதரியே. ஒவ்வொரு வாரமும் ஆலயத்திலே போய் அறிக்கை செய்கிறீர்கள். ஆனால் ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவன்தான் இரக்கம் பெறுவான்’ என்று தேவனுடைய வசனம் சொல்லுகிறது. அறிக்கை செய்வது மாத்திரமல்ல, அறிக்கை செய்து விட்டு விடவேண்டும். இன்றைக்கு நீ தீர்மானம் பண்ணு. ஆண்டவரே, இதோடுகூட நான் தீர்மானம் பண்ணுகிறேன் என்று, தேவன் உனக்கு ஜெயம் தருவார், இரக்கம் பாராட்டுவார். இரக்கம் கிடைத்தால் உனக்கு சந்தோஷம் உண்டு. அவர் இரக்கப்பட்டால், உன் வியாதி நீங்கும். உன் பிரச்சனைகள் மாறும். எனவே தேவ இரக்கத்தைப் பெற வேண்டுமென்றால் நீ அறிக்கை செய்த பாவத்தை விட்டுவிட வேண்டும்.

இன்றைக்கு பாவத்தைக் குறித்த எச்சரிப்பு உன்னைத் தேடி வந்திருக்கிறது. நீ கேட்டு மனந்திரும்பினால், நல்லது. ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக.

சத்தியவசனம்