ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

அத்தியாயம்: 14
Dr.
தியோடர்.எச்.எஃப்
(ஜனவரி-பிப்ரவரி 2014)

தொங்கு திரை

மகா பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளிருந்த உடன்படிக்கைப் பெட்டி, அதன் உள் இருந்த பொருட்கள், கிருபாசனம், அது சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து முடித்தபின் மகா பரிசுத்த ஸ்தலத்தின் நுழைவாயிலில் தொங்கிய “தொங்கு திரையைப்” பார்க்கப் போகிறோம்.

தொங்கு திரையின் தோற்றம்.
ஆசரிப்புக்கூடாரம் செய்வது குறித்து தேவன் மோசேக்கு அறிவுரைகள் கூறும்போது, “இளநீல நூலும், இரத்தாம்பர நூலும், சிவப்பு நூலும், திரித்த மெல்லிய பஞ்சு நூலுமான இவற்றால் ஒரு திரைச் சீலையை உண்டுபண்ணக் கடவாய்; அதிலே விசித்திர வேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்பட வேண்டும். சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்க விடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள் மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். கொக்கிகளின் கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்க விட்டு, சாட்சிப் பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்” (யாத். 26 : 31-33).

அந்தத் திரை நேர்த்தியான பட்டுத் துணியினால் செய்யப்பட்டதால், அது கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நீதியையும் குறிக்கும். அந்தத் திரையின் மேல் கேருபீன்கள் மூன்று நிறங்களில் உருவாக்கப்பட்டிருந்தன. நீல நிறம், இரத்தாம்பர நிறம், சிவப்பு நிறம். இந்த நிறங்கள் யாவும் இயேசுகிறிஸ்துவைக் குறித்தன. இயேசு மானிட அவதாரம் எடுத்த தேவன். அவர் ஒருவரே பிதாவினிடத்தில் சேரும் வழி. இயேசு கூறினார்: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே யன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

கேருபீன் வெளிவாசல் திரையிலும், பரிசுத்த ஸ்தலத்தின் திரையிலும் இல்லை. மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையில் மட்டுமே கேருபீன்கள் உள்ளன. ஆசரிப்புக் கூடாரத்தின் கூரையின் உட்புறத்திலும் கேருபீன்கள் உண்டு. இவற்றைப் பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியர்களால் மட்டும் பார்க்க முடியும்.

முன்னால் குறிப்பிட்டதுபோல் கேருபீன்கள் தேவனுடைய பரிசுத்தத்தைப் பாதுகாப்பவை. ஏதேன் தோட்டத்தில் கிழக்கு வாசலில் ஜீவ விருட்சத்துக்குப் போகும் வாசலை அடைத்துக்கொண்டு காவலாளராக நிறுத்தப்பட்டது (ஆதி.3:24). கிருபாசனத்தின் மேல், தேவன் மனிதனோடு தொடர்பு கொண்டு பேசிய இடத்திலும் கேருபீன்கள் இருந்தன (யாத்.25:22).

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையில் கண்ட கேருபீன் உள்ளே இருந்த தேவனுடைய சிங்காசனத்துக்குக் (கிருபாசனம்) காவலாளனாயிருந்தது. இந்தத் தொங்கு திரை வருஷத்துக்கொரு முறை ஈடேற்றத்தின் நாளன்று மகா பிரதான ஆசாரியனை உள்ளே அனுமதிப்பது தவிர வேறு எவரையும், எந்தக் காலத்திலும், எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிப்பதில்லை. “ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும், ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால்..”(எபி.10:19).

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் இருக்கும் தொங்கு திரை உள்ளே செல்லும் வழியாகவும், உடன்படிக்கைப் பெட்டியும், கிருபாசனமும் உள்ள உட்பகுதிக்கு வெளி எல்லையாகவும் உள்ளது. இது மகா பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வருடம் ஒருமுறை மட்டும் பிரவேசிக்கும் வழியாக அமைந்துள்ளது. மற்ற எல்லாச் சமயங்களிலும் அது ஒரு எல்லையாகவும், தடுப்புச் சுவராகவும் அமைந்துள்ளது.

திரை தடுப்புச் சுவராக அமைந்துள்ளதன் காரணம் உள்ளே இருக்கும் உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம் இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. உடன்படிக்கைப் பெட்டி தெய்வ மனிதனைக் காட்டியது. அவர்தான் இயேசுகிறிஸ்து. அது மரத்தினால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியினுள் கற்பனைப் பலகைகள் இரண்டும் இருந்தன. அவை தேவனுடைய பரிசுத்தத்தின் உடைபடாத தன்மையைக் காட்டின. தேவனைச் சந்திக்க வேண்டுமானால் ஒரு மனிதன் இந்தக் கற்பனைகளை பரிபூரணமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். அவன் பிறப்பு முதல் இறப்பு வரை கற்பனைகளின்படி வாழ வேண்டும். இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமே சாத்தியம். அந்தச் சாட்சியின் பெட்டி கிருபாசனம் என்னும் சுத்தப் பொன்னினால் செய்யப்பட்ட மூடியால் மூடப்பட்டது. அது, மனிதன் குறிப்பிட்ட பாதையில் வந்தால் தேவன் அவன்மேல் கிருபையும், இரக்கமும் காட்டுவார் என்று காட்டியது.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த கிருபாசனம் தேவனுடைய சிங்காசனமாய் இருந்தது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவமுள்ள மனிதர்கள் மத்தியில் இந்தப் பூமியில் இந்தக் கிருபாசனத்தில் வாசம் செய்தார் தேவன். அவ்வேளையில் கிருபாசனத்தின் மீதிருந்த கேருபீன்களும், மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் இருந்த தொங்கு திரையில் காணப்பட்ட கேருபீனும் தேவனுடைய பரிசுத்தமும், நீதியும் தம் நிலையிலிருந்து எந்த அளவும் குறையவில்லை என்று காட்டின.

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் இருந்த தொங்கு திரை, மகா பிரதான ஆசாரியன் வருடத்துக்கொரு முறை பிரவேசிக்க வழி விட்டதே தவிர மற்ற நேரங்களில் வேறு எவரையும் தேவனுடைய சமுகத்தைக் கிட்டிச் சேர அனுமதிக்கவில்லை.

எனினும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது இந்தத் திரை, அப்போது தேவாலயத்தில் இருந்தது, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்துவிட்டது. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனைவிட்டபோது இது நடந்தது. “தேவாலயத்தின் திரைச் சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. பூமியும் அதிர்ந்தது. கன்மலைகளும் பிளந்தன” (மத்.27:50,51). எபிரேயர் நிருபத்தில் இந்த திரை இயேசுவின் மாம்ச சரீரத்துக்கு அடையாளமாயிருப்பதாகக் கூறுகிறது. “இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால்..” (எபி.10:19).

தொங்கு திரையின் முக்கியத்துவம்.
நாம் ஏற்கனவே பார்த்தபடி மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் இருந்த தொங்கு திரை மகா பிரதான ஆசாரியனை வருடம் ஒருமுறை உள்ளே அனுப்ப வழிவிடுமே அல்லாமல், வேறு எவரையும், எந்தச் சமயத்திலும் உள்ளே அனுமதிப்பதில்லை. வேறு எவரும் உள்ளே பிரவேசிக்க முடியாது. மகா பிரதான ஆசாரியனும் வருடம் ஒருமுறை மட்டுமே உள்ளே போக அனுமதிக்கப்பட்டான். வேறு எவராவது அல்லது மகா பிரதான ஆசாரியன் வேறு எந்த நேரத்திலாவது உள்ளே பிரவேசிக்க முயற்சித்தால், அவர்கள் சாவது நிச்சயம். “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின் மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்” (லேவி.16:2). இந்தத் திரைக்குப் பின்னால் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அந்தப் பெட்டியின் உள்ளே கற்பனைப் பலகைகள் இருந்தன. அது தேவனுக்கு முன்பாகப் பாவியைக் கண்டனம் செய்தன. எனவேதான் எவரும் குறிப்பிட்ட வழியில் அல்லாமல் நேரடியாக தேவனிடத்தில் வர முயற்சிக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது.

ஆசரிப்புக் கூடாரத்தின் வெளி வாயிலிலும், பரிசுத்த ஸ்தலத்தின் வாயிலிலும் உள்ள திரைகள் “உள்ளே வாருங்கள்” என்று மக்களையும், ஆசாரியர்களையும் அழைத்துக் கொண்டிருந்தன. ஆனால் மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் உள்ள தொங்கு திரை மட்டும் “உள்ளே பிரவேசியாதேயுங்கள்” என்று தடுப்பதாக அமைந்திருந்தது.

வெளிப்பிராகார வாயில் பலியிடுவதற்காக மக்களை உள்ளே வரவிட்டது. பரிசுத்த ஸ்தலத்தின் வாசல்திரை தேவனோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறவர்களை உள்ளே விட்டது. எனினும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசல்திரை, தேவனுக்கு ஆராதனை செய்யும் இடத்திற்கு பிரதான ஆசாரியன் தவிர மற்ற எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து வந்தது. இந்த வாசல் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நிரந்தரமாகத் திறக்கப்பட்டு எவரும் அப்பா, பிதாவே! என்று அழைத்துக்கொண்டு தேவசமுகத்துக்குச் செல்லலாம் என்ற வழி திறக்கப்படும்வரை இந்த நிலை நீடித்தது.

பரிசுத்த ஸ்தலத்தில் வழிபாடு நடத்திய ஆசாரியர்கள் மேற்கூரையிலும், தொங்கு திரையிலும் உள்ள கேருபீன்களின் சித்திரங்களைக் கண்டு மகாபரிசுத்த ஸ்தலத்தின் பரிசுத்தத் தன்மையை உணர்ந்திருப்பார்கள்.

இந்தத் தொங்கு திரையின் முக்கியத்துவத்தை நாம் உணர, இந்தத் திரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மாம்சத்தைக் குறிக்கிறது என்பதை அறியவேண்டும். அப்படியிருக்க இந்தத் திரை பாவமற்ற, பரிபூரணமான கிறிஸ்துவின் மனுஷீகத்தைக் குறிக்கிறது. கிறிஸ்து மாம்ச சரீரத்தை ஏற்றுக்கொண்டார் (யோவா. 1:14). எனவே அவர் உலக மாந்தர்களுக்கு ஒரு பரிசுத்தமான, பரிபூரண தெய்வ அவதாரமாகக் காணப்பட்டார். இயேசு ஒரு பரிசுத்த அவதாரமாக இருந்தபடியால் அவர் கற்பனைகளை முழுஅளவில் பின்பற்றி வந்தார்.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழும் போது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்தினார். அவற்றில் முதலாவது, இயேசுகிறிஸ்து தேவனுடைய பரிபூரண பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். அவரிடத்தில் பாவம் இல்லை (1யோவா. 3:5). ஒருவரும் அவரிடம் விரலைச் சுட்டிக் காட்டி “நீர் ஒரு குற்றவாளி” என்று கூறமுடியாது. அவர் பாவமில்லாதவர். பரிசுத்தமானவர். அதனால்தான் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று கூற முடிந்தது (யோவா. 14:9). இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் பரிசுத்தத்தை முழுஅளவில் வெளிப்படுத்தினார்.

இரண்டாவதாக, இந்த உலகில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நடந்தபோது மனிதன் தேவனைச் சந்திக்க வேண்டுமானால் எப்படி வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும் என்று காட்டினார். பாவமில்லாத, பரிசுத்தமான மனிதன் தான் தேவனைத் தரிசிக்க முடியும். ஆனால் இயேசுகிறிஸ்து ஒருவர் தவிர வேறு எவரும் பாவமற்றவர்களாக இல்லை. முதலில் எவரும் ஆண்டவருக்கு முன்நிற்கத் தயங்குவர். ஆனால் நம்முடைய பாவங்களுக்குப் பிராயச் சித்தம் செலுத்தி, இயேசுகிறிஸ்து நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளார் என்னும் செய்தி நற்செய்தியாக அமைந்துள்ளது. “நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிர மாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலா.4:4,5).

தேவமனிதனுடைய பரிபூரணமும், பரிசுத்த மும், மனிதர்களிடமுள்ள குறையையும், பாவத் தன்மையையும் வெளிப்படுத்திக்காட்ட உதவின. முழுப்பரிபூரணப் பரிசுத்தமுடைய தேவனுக்கும், நிர்ப்பாக்கியமுள்ள பாவியாகிய மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திக் காட்டினார். முழுப் பரிசுத்தத்துடனும் தேவன் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்திக் காட்டியபோது, மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தன என்பது வேடிக்கையானது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இத்தகைய சந்தர்ப்பங்கள் மக்களுக்கு ஏற்பட்டன. ஆசரிப்புக்கூடாரத்தையும், சாலொமோன் கட்டின தேவாலயத்தையும் கர்த்தருடைய மகிமை வந்து மேகம்போல் நிரப்பியதை மக்கள் கண்டார்கள். இஸ்ரவேலர் தங்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பம், மேக ஸ்தம்பம் இவற்றைக் கண்டார்கள். ஏசாயா தேவசமுகக் காட்சியைக் கண்டவுடன், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என்றார் (ஏசா.6:5). “ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” (42:6) என்றார் யோபு.

இயேசுவின் ஆரம்பகால வாழ்க்கையில் அவர் கொடுத்த போதனைகளையும், செய்த அற்புதங்களையும் கண்ட மக்கள் ஆச்சரியப் பட்டார்கள். அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கம் தேவனுடைய பரிசுத்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதாகும். ஒருவன் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பையும், மீட்பையும் பெற்றுக்கொள்ளாவிட்டால் அவன் தேவனைக் கிட்டிச் சேரமுடியாது என்பதை உணர்த்துவது அவருடைய நோக்கமாய் இருந்தது. மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையின் நோக்கமும் இதுவாகவே இருந்தது.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்