தேவனைத் துதித்தல்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2011)
Dr.உட்ரோ குரோல்

என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்:
அதிகாலையில் விழித்துக்கொள்வேன் (சங்கீதம் 57:8).

பாலஸ்தீன நாட்டு செய்யுட்கள் சங்கீதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தாவீது அரசன் மற்றும் சில பக்தர்களது மகிழ்ச்சியான வேளைகள், மனச்சோர்வான வேளைகள், நம்பிக்கை எண்ணங்கள் இவற்றை அவைகள் பதிவு செய்துள்ளன. அச்சங்கீதத்தை இயற்றியவர், எழுதப்பட்ட சூழல், வாசிக்கப்பட்ட இசைக்கருவி மற்றும் இராகங்கள் முதலியவற்றையும் நாம் அறிந்து கொள்ளலாம். அச்சங்கீதங்களுக்கு தலைப்புகளும் தரப்பட்டுள்ளன. இவையாவும் அச்சங்கீதத்தைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் மிகத்துல்லியமாகத் தரும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளன.

சங்கீதம் 57ன் தலைப்பில், தாவீது சவுலுக்குத் தப்பியோடி கெபியில் ஒதுங்குகையில் தனக்கு நஷ்டம் நேரிடாதபடி தாவீது பாடி இராகத் தலைவனுக்கு ஒப்புவித்த சங்கீதம் என்று தரப்பட்டுள்ளது. இச்சங்கீதத்தை நாம் ஆராயும்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தாவீதைக் கொல்லமுயன்றது வெளிப்படையாகத் தெரிந்தது. தன்னுடைய பாதுகாப்பைத் தேடி தாவீது ஓடினார். தேவன் ஒருவரே தனக்கு அடைக்கலம் என்பதைத் தெளிவாக அவர் அறிந்திருந்தார். எனவே இச்சங்கீதத்தை எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் என்ற ஜெபத்தோடு அவர் ஆரம்பிக்கிறார்.

தனது உயிரை சவுல் அரசன் எடுத்துக்கொள்ள தேவன் அனுமதிக்கமாட்டார். ஒரே நாளில் இந்த ஆபத்துகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதையும் தாவீது நன்கு அறிந்திருந்தார். தெற்கு பாலஸ்தீன மலைகளின் கெபிகளில் தான் அலைந்து திரிந்தாலும் தேவனுடைய செட்டைகளின் நிழலையே தனக்கு அடைக்கலம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.

தனது விடுதலைக்காகவும், இரட்சிப்புக்காகவும் தேவனை நோக்கி தாவீது கூப்பிடுவதாய் இச்சங்கீதத்தின் முற்பகுதி விளக்குகிறது. தன்னை விழுங்கப்பார்க்கிறவன் (வச.3) என்று ஒருவனை அவர் அடையாளம் கண்டுகொள்ளுகிறார். என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவுகருக்கான பட்டயமுமாயிருக்கிறது (வச.4). தன்னுடைய எதிரிகள் சிங்கங்களைப் போன்று பயங்கரமானவர்கள் எனவும், சவுல் தனது கால்களுக்குக் கண்ணி வைத்திருப்பதாகவும், இரக்கமற்று இறுதிவரைத் தன்னைத் தொடர இருப்பதையும் அவர் அறிக்கையிட்டார்.

பிரியமானவர்களே, உங்களது வாழ்வும் இவ்வாறு பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை உணருகிறீர்களா? இரக்கமற்ற மனிதர்கள் உங்களைத் துரத்துகிறார்களா? பொருளாதார நெருக்கடியும் சரீரப்பாடுகளும், வியாதிகளும், பலவீனங்களும் உங்களைச் சோர்வுறச் செய்கிறதா? தாவீது தனது துன்பங்களுக்கு நடுவே மனிதர்களை நாடி ஓடவில்லை, தேவனை நோக்கிக் கூப்பிட்டார். தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக (வச.5). புயலின் மத்தியிலும் அவரால் எப்படி அமைதியாக இருக்க முடிந்தது? இதற்கான பதிலை வசனம் 7ல் நாம் காணலாம். என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன்.

வியாதிகள், பாடுகள், துன்பங்கள் போன்றவை நம்மை வருத்தினாலும் நாம் தேவனைத் துதிக்க வேண்டும். நம்மை அவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். நமது இருதயத்தை அவரிடம் கொடுத்து அவரைத் துதிக்க ஆயத்தமான நாவு வேண்டும். இங்கு தேவனைத் துதிக்க தாவீது மூன்றுவித அழைப்புகளைக் கொடுத்துள்ளார். என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்: அதிகாலையில் விழித்துக்கொள்வேன் (வச.8).

முதலாவதாக தேவனைத் துதிக்க தன்னுடைய மகிமையையும் இருதயத்தையும் ஆயத்தப்படுத்துகிறார். அடுத்து வீணையையும் சுரமண்டலத்தையும் அழைக்கிறார். தனது பகைவர்கள் தன்னைத் தொடர்ந்தாலும் தன் நம்பிக்கையை தேவன் மீது வைத்திருந்தார். எனவே அவருடைய விரல்கள் அவ்விசைக் கருவிகளை மீட்டும் பொழுது இருதயம் மகிழ்வதாக அறிக்கையிடுகின்றார். இறுதியாக தேவனைத் துதிக்க தான் அதிகாலையில் எழுவதாகவும் குறிப்பிடுகிறார்.

தாவீதைப்போல நாமும் சோம் பலை ஒழித்து அதிகாலையில் தேவனை கெம்பீரமாகத் துதிப்போமாக. அவர் நம்மை இரட்சித்ததால் சகல ஜனங்களுக்குள்ளும், ஜாதிகளுக்குள்ளும் அவருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

அனுதினமும் நம்முடைய நாவும், எண்ணங்களும், விரல்களும், அதாவது ஆவி, ஆத்துமா, சரீரமும் தேவனை ஆராதிக்க நம்மை அர்ப்பணிப்போமாக!

அதிகாலைப் பாடல்:

நம் தேவன் நம்மை இரட்சிக்க வல்லவர்;
இதுவே எக்காலமும் ஒலிக்கும் கீதம்;
இதுவே எல்லா நாவுக்கும் இனிப்பான சொல்;
இதுவே எவ்வுலகும் ஏற்றிடும் நற்செய்தி.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை