அறிமுகம்: தீர்க்கதரிசிகளின் சிறிய புத்தகங்கள்
• அருள்திரு. ராபர்ட் ரீட் •
(மார்ச் – ஏப்ரல் 2026)
யோவேல் இந்தியர்கள் பேசுவது போல் பேசுகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அவர் அப்படித்தான் பேசுகிறார். ஆபகூக், யோனா, ஒபதியா ஆகியோரும் அதேமாதிரிதான் பேசுகிறார்கள். இந்த யூதத் தீர்க்கதரிசிகள், ஐரோப்பியர், சீனர் பேசுவதைப் போலும் பேசுகிறார்கள். எங்கெங்கெல்லாம் பழைய ஏற்பாட்டிலுள்ள அவர்களுடைய தீர்க்கதரிசன புத்தகங்கள் வாசிக்கப் படுகின்றனவோ அங்கங்கே பேசப்படும் பாஷைகளிலெல்லாம் பேசுகிறார்கள்.
இந்த இதழில் எழுப்புதலும் உற்சாகமும் அளிக்கும் வேதபாடத்தொடர் ஒன்றை ஆரம்பிக்கிறோம். அதென்னவெனில் பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கதரிசிகளின் சிறிய புஸ்தகங்களைப் பற்றிய வேதபாடங்களாகும். பழைய ஏற்பாட்டின் கடைசி 12 புஸ்தகங்களும், தீர்க்கதரிசிகளின் சிறிய புஸ்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள், தீர்க்கதரிசிகளின் நான்கு பெரிய புத்தகங்களான ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல் என்பவைகளுடன் வேறுபட்டு இருக்கின்றன. பெரிய சிறிய என்ற அடைமொழிச் சொற்கள் அப்புத்தகங்களில் அடங்கியுள்ள தீர்க்கதரிசனங்களின் தரத்தையோ அல்லது முக்கியத்தையோ குறிப்பிடவில்லை. மாறாக அவைகளின் பருமன், அதாவது புத்தகத்தில் அடங்கியுள்ள பக்கங்கள் அதிகமா, குறைந்ததா என்பதைக் குறிக்கிறது. ஏசாயாவின் புஸ்தகத்தில் அதிகாரங்கள் 66 இருக்கின்றன. ஆனால் ஒபதியாவின் புத்தகத்தில் 21 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஆனபோதிலும், இரண்டு புஸ்தகங்களிலும் இக்காலத்திற்குத் தேவையான மிக வல்லமை பொருந்திய செய்திகள் அடங்கியுள்ளன.
இந்த 12 சிறிய புஸ்தகங்களையும் படிப்பதற்கு நான்கு காரணங்கள் உண்டு:
1) கடவுள் நமக்கு எதைச்சொல்ல விரும்புகிறாரோ, அதை அவைகள் நமக்குச் சொல்லுகின்றன:
2) அவைகள் நமக்கு கெடுதி உண்டாக்கக் கூடிய இடங்களை சுட்டிக்காட்டி, நாம் எவ்விதக் காரியங்களை விட்டு விலக வேண்டும் என்று உரைக்கின்றன. இந்த கொடிய காலத்தில் கடவுளுடைய ஊழியர்களான இவர்கள் நாம் எப்படி ஜீவிக்கவேண்டும் என்று நமக்கு உரைப்பார்கள்.
3) இந்த எழுத்தாளர்கள் நம் நடத்தையை திருத்துவார்கள். அதைத்தான் அவர்கள் ஆதிகாலத்தில் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இப்பொழுதும் அப்புத்தகங்களை வாசிக்கும்போது அவர்கள் நம்முடைய நடத்தையையும் திருத்துகிறார்கள்.
4) இந்த 12 தீர்க்கதரிசிகளும் நாம் எப்படிப்பட்ட ஜனங்களாய் திகழ வேண்டுமென்பதற்கு நமக்கு வேண்டிய அநேக அறிவுரைகளை கொடுப்பார்கள்.
யோவேல்
எருசலேமில், கர்த்தருக்காக ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தக் காட்சி கம்பீரமானதாக இருந்தது. அப்பொழுது, சாலொமோன் ராஜாவே ஏறெடுத்த ஜெபம் முழு வேதாகமத்திலேயே மிகவும் நேர்த்தியான ஜெபங்களில் ஒன்றாகும். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு விலகிவிடாமல், அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்கு பதிலளித்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படி, அவன் தாழ்மையோடு கர்த்தரிடத்தில் விண்ணப்பம் செய்தான். அதே சமயத்தில், சாலொமோன் தானும் தன் ஜனங்களும் கர்த்தரைத் தேடுவோம் என்றும், அவருடைய கட்டளைகளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம் என்றும் பிரகடனம் செய்தான்.
கர்த்தர், நேர்த்தியான அந்த ஆலயத்தின் மீதும், சாலொமோன் ராஜாவின் பக்தியின் உண்மையிலும் அதிகப் பிரியப்பட்டார் என்பது வெளிப்படையாயிற்று. வானத்திலிருந்து அக்கினி இறங்கிவந்து, செலுத்தின பலிகளையெல்லாம் பட்சித்தது. ஆலயத்திற்குள் ஒரு ஆசாரியனும் உள்ளே போகக்கூடாமலிருக்குமளவு கர்த்தரின் மகிமை வானத்திலிருந்து இறங்கி அந்த ஆலயத்தை நிரப்பியது. ஆசாரியர்கள் உள்ளே போகாமல், கர்த்தரின் மகா பரிசுத்தத்தை உணர்ந்தவர்களாய், தளவரிசையைத் தொடும் மட்டும் முகங்குப்புறக் குனிந்து, அவரை வணங்கினார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திர பலியாக, சாலொமோன் ராஜா 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான். இவ்விதமான ஆராதனை 21 நாட்கள் நடைபெற்றன (2 நாளா 7:1-10).
பின்னர், கர்த்தர் இரவிலே சாலொமோனுக்கு தரிசனமாகி, இஸ்ரவேலர் காட்டின பக்தியின் மீது அதிகப் பிரியமாய் இருப்பதாகக் கூறினார். அதோடுகூட ராஜாவுக்கு ஒரு பயபக்தியான செய்தியைக் கொடுத்தார். “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து. அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளா. 7:13,14) என்பதே அச்செய்தியாகும். தேசத்திற்கு மழையைக் கொடுப்பவரும், தடுப்பவரும் கர்த்தரே. ஆகையால் மழையின்மைக்காகவோ, வெள்ளங்கள் ஏற்படுவதற்காகவோ அரசாங்க செயல்திட்டங்களைக் குறை கூறுவதில் பிரயோஜனமில்லை. சில சமயங்களில் கர்த்தர் தானியங்களைப் பட்சிக்கும் கொள்ளை நோயையும் அனுப்புகிறார். கர்த்தர் பூமியின்மேல் மழையையும், ஏராளமான அறுவடையையும் வருஷிக்கப் பிரியப்பட்டாலும், சில வேளைகளில் அவர் பெரிய விபத்துக்களையும் அனுப்ப வேண்டியது அவசியமாயிருக்கிறது.
இதுதான் பிரமிக்கச் செய்யும் கர்த்தருடைய வல்லமை. அவருக்கு வானத்திலிருந்து நல்ல மழையை வருஷிக்கப் பண்ணமுடியும். பூச்சிகளால் அழிக்கப்பட்ட செடிகளையும், மரங்களையும் கர்த்தர் திரும்பவும் உயிர்ப்பிக்க வல்லவராயிருக்கிறார். ஆனால், எந்த அடிப்படையில் கர்த்தர் அழிக்கவும், உயிர்ப்பிக்கவும் செயல்படுவார் என்பதை சாலொமோன் ராஜாவும் எல்லா தேவனுடைய ஜனங்களும் அறிய வேண்டும். தேவ ஜனங்கள், தேவ ஜனங்களைப் போல் ஜீவிக்காமல் இருக்கும்பொழுது கர்த்தர் அழிவை அனுப்புகிறார். ஆனால் தேவ ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி கர்த்தருடைய முகத்தைத் தேடி. தங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு திரும்பும்பொழுது கர்த்தர் மனமிரங்கி தம்முடைய மக்களை புதுப்பித்து, அவர்கள் மேல் ஆசீர்வாதம் புரண்டோட அனுமதிப்பார்.
ஒருவேளை, பாவத்தினிமித்தம் அழித்தலையும், மனந்திரும்புதலினிமித்தம் புதுப்பித்தலையும் குறித்த கடவுளுடைய எண்ணங்களை, இந்த யோவேலின் சிறிய புத்தகத்தைத் தவிர வேதாகமத்தில் வேறே எந்த பகுதியிலும் எடுத்துக்காட்டப்படவில்லை என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் 73 வசனங்கள் கொண்ட 3 அதிகாரங்கள் மட்டுமே உண்டு. இருந்த போதிலும் இதில் அடங்கிய தீர்க்கதரிசனங்கள், கர்த்தர் மகா பரிசுத்தர், தம் வாக்கை நிறைவேற்றுபவர், தம் ஜனங்கள் மேல் அன்பு நிறைந்தவர், என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இக்கட்டுரையில். இந்தப் புத்தகத்தை ஆழமாகப் படிக்க முடியாவிட்டாலும், இதிலடங்கிய தீர்க்கதரிசன வார்த்தைகளில் முக்கியமான கருத்தைப்பற்றி கவனிப்போம். அக்கருத்து என்னவென்றால். நியாயத்தீர்ப்பை வழங்கவிருக்கும் தேவனுடைய கடுமையான கரம் உயர்த்தப்படவும், நியாயத்தீர்ப்பிற்குப் பதிலாக தேவ ஆசீர்வாதங்கள் பொழியவும் கூடும் என்பதே. சாலொமோன் ராஜா மரணம் அடைந்து நூறு வருஷங்கள் கழிந்தபின் யோவேல் தீர்க்கதரிசி எழும்பினார். அவருடைய நாட்களில் கர்த்தருடைய கடுமையான கரம் இஸ்ரவேல் ஜனங்களின் தேசத்தின் மேல் பலமாய் விழுவதைக் கண்டார். “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து. அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிடும் காலம் வரும்” என்று தேவன் சாலொமோனிடம் கூறினபடியே நடந்ததை, யோவேலும் அவனுடைய தேசத்தாரும் தங்களுடைய காலத்தில் கண்டு அனுபவித்தார்கள்.
யோவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
1) யோவேலின் காலத்தில் நாட்டில் விழைந்த பெரும் நாசம் (1:2-2:17).
2) வரப்போகும் நாளுக்கான வாக்குத்தத்தங்கள் (2:18-3:21).
யோவேலின் காலத்தில் நாட்டில் விழைந்த பெரும் நாசம் (1:2-2: 17 )
கலாநிதி தாம்சன் என்பவர் எழுதியுள்ள “அந்தத் தேசமும் வேதாகமமும்” (The Land and the Book) என்ற புத்தகத்தில், 1845ம் ஆண்டில் வெட்டுக்கிளிகள் பாலஸ்தீன தேசத்தின்மீது எடுத்த படையெடுப்பை சித்திரம்போல் நமக்கு நன்கு புலப்படும்படி வர்ணித்துள்ளார்.
ஜுன் முதலாம் தேதிக்கு முன், அநேக நாட்களாய் கோடிக்கணக்கான இளம் வெட்டுக்கிளிகளின் படை பள்ளத்தாக்கை தாண்டி எங்கள் கிராமத்தை நோக்கி வருவதாக கேள்விப்பட்டோம். கடைசியில் அவைகள் கிராமத்தின் கீழ்பாகத்திற்கு வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் கூட்டிச்சேர்க்க முடிந்த எல்லா மனிதரையும் கூட்டிக்கொண்டு, வந்துகொண்டிருந்த வெட்டுக் கிளிகளை சந்தித்து, அவைகளைத் தாக்கி அவைகள் முன்செல்வதை முழுவதுமாய்த் தடுத்துவிடலாம், அல்லது அவைகள் அணியணியாய் ஊர்ந்து சென்று கொண்டிருந்த திசையிலிருந்து வேறு திசைக்குத் திருப்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவைகளை நோக்கி சென்றோம். ஐயோ! அவைகளை முதல் முதலாவது நான் பார்த்தபொழுது கண்ட காட்சியை நான் ஒருக்காலமும் மறக்க முடியாது… எங்களுக்கு எதிராக வந்து கொண்டிருந்தவைகளுக்கு இறக்கைகள் இல்லை. ஆனால் முழு வளர்ச்சியடைந்த வெட்டுக்கிளிகளின் பருமன் இருந்தன…. ஆனால் அவைகளின் எண்ணிக்கையோ திகைக்கச் செய்வதாய் இருந்தது. அந்த மலை முழுவதும் அவைகளால் மூடப்பட்டு கருப்பு மயமாய் இருந்தது. ஆம், உயிருள்ள வெள்ளப் பெருக்கைப்போல் அவைகள் வந்துகொண்டே இருந்தன. அவைகளைத் தடுப்பதற்கு நாங்கள் குழிகள் வெட்டினோம்; நெருப்பு பற்றவைத்தோம், அடித்து, சுட்டெரித்துக்கொன்று குவியல் குவியலாக குவித்தோம். ஆனாலும் எங்களுடைய முயற்சிகள் முற்றிலும் வீணாயின. அவைகளின் கூட்டம் மலையின் சரிவில் அலையலையாக உருண்டோடி வந்தன. கற்பாறைகளின் மேல், சுவர்கள். குழிகள், புதர்வேலிகள் எல்லாவற்றின் மேலும் பொங்கி வழிந்தன. நீடித்ததும் களைப்புண்டாக்கியதுமான ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின் நான் அந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் எவ்வளவு தூரம்தான் வியாபித்திருக்கின்றது என்று கண்டுபிடிக்க விரும்பி மலையின் கீழ் இறங்கினேன். ஆனால் அவைகளின் கூட்டத்தின் ஆரம்பத்தை காணவே முடியவில்லை. ஜீவராசியின் பிரளயத்தின்மேல் கால்நடையினால் களைப்புற்று திரும்பினேன். அவைகள் முன்செல்வதைத் தடுப்பதற்கு எடுத்த வீண் பிரயாசங்களையும் நிறுத்தினேன்.
அடுத்த நாள் காலையில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளின் முதல் வரிசை என் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது. என் காய்கறிச் செடிகளையும். பூச்செடிகளையும் மட்டுமாவது பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அன்று நாங்கள் நெருப்பைக் கொளுத்தியும். சுவரின் மேல் ஏறவிடாமல் மரக்கிளைகள், பிரஷ்களினாலும் அவைகளை அடித்து விரட்டியும். தோட்டத்தைக் கொஞ்சமாவது சுத்தமாக வைக்க முடிந்தது. கடைசியில் இடைவிடாமல் இங்கும் அங்கும் போராடியதால் மிகவும் களைப்புற்றதால், போராட்டத்தையே நிறுத்தினேன்.
(தொடரும்)
மொழியாக்கம்: Bro.Johndurai