• ஜி. கிறிஸ்டியன் வெய்ஸ் •
(மே – ஜுன் 2026)
நீதிமான் பனையைப்போல் செழிப்பான் என்று சங்கீதம் 92:12இல் கூறப்பட்டுள்ளது.
தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் பலவற்றை படம்போட்டுக் காண்பிக்கும் பல அம்சங்கள் இந்த குறிப்பிடத்தக்க பனை என்ற மரத்தில் உள்ளது. பனை மரங்கள் அதின் தனித்த அழகிற்காக எங்கும் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. பழங்கால புராதன பகுதியாக இருந்தாலும் சரி அல்லது நவீன நாகரீக பகுதிகளாயினும் பனை மரங்கள் எங்கும் காணப்படுகின்றன.
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஆவிக்குரிய அறநெறி காரியங்களில் பனையைப்போல இயற்கை அழகினை வெளிப்படுத்தவேண்டும். உண்மையில் சங்கீதம் 90 கூறுகிறது. எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக (வச.17). தேவனுடைய பரிசுத்தத்தின் அழகுபற்றி சங்கீத புத்தகத்தில் எண்ணற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அழகு நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கவேண்டும். நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பீர்கள் என்றால் இயேசுகிறிஸ்துவின் அழகின் சிறுபகுதியாயினும் மற்றும் தேவனுடைய பரிசுத்தத்தின் அழகினையும் உலகமக்கள் உங்களிடத்திலிருந்து எதிர்பார்த்திட அவர்களுக்கு உரிமை உண்டு. அதனை நீங்கள் உங்கள் வாழ்க்கை மற்றும் அனுதின நடவடிக்கைகளில் வெளிப்படுத்த வேண்டும். நீதிமான் பனையைப் போல் செழிப்பான் என்று சங்கீதக்காரன் எழுதியபோது அவனுடைய சிந்தையில் இதுதான் இருந்தது என்பது மிகத் தெளிவாக அறியமுடிகிறது.
உண்மையில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வு, பனைமரம்போல் அழகாக உள்ளது. எல்லா மரங்களிலும் பனைமரம் அழகானவற்றில் ஒன்றாய் இருப்பதுபோல், உண்மையான ஒரு கிறிஸ்தவனின் குணநலன்கள் இப்பூமியில் உள்ள குணங்களில் மிகச் சிறந்ததாக உள்ளது. ஒரு தெளிவான உண்மையென்னவெனில் பனை மரம், கிட்டதட்ட எல்லாமே நேராக நிமிர்ந்து வளருகிறது. வளைந்த பனை மரத்தினை நீங்கள் ஒருபோதும் காணமுடியாது. ஒரு பனைமரம் ஒரு குறிப்பிட்ட திசையில் சாய்ந்திருப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சூழ்நிலைகளில் தொடர்ச்சியான கடும் காற்றினால் அவ்வாறு ஆனது என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம். எல்லாவித மரங்களின் காரியங்களில் இது உண்மையில்லை. சில மரங்கள் மிகவும் வளைந்து, கூனி, முடிச்சுள்ளவைகளாக இருக்கலாம். ஆனால் பனைமரம் இயற்கையாகவே நிமிர்ந்து நேராக மேல்நோக்கி வளரும் தன்மை கொண்டவையாகும்.
தேவனுடைய வார்த்தையில் காண்பித்தவாறு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, முற்றிலும் ஒரு நேர்மையான வாழ்க்கையாகும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ‘கூனி,’ ‘குறுகி’ இருப்பதல்ல. அது எல்லா நேரங்களிலும், நேர்மையும் உண்மையுமாயிருப்பதாகும். இயேசுகிறிஸ்துவுக்கான விசுவாசியின் சாட்சியினை கேட்கும்போது, அவரை விசுவாசிப்பதற்கு பதிலாக கிறிஸ்தவ பண்புகளானது பிற மனிதர்களால் வெறுக்கக் கூடியதும், கடினமானதும் மாறுபாடு உள்ளதாகவும் இருக்கக் கூடாது.
பனை மரத்தினைப் பற்றிய குறிப்பிடத்தக்க மற்றொரு காரியம் என்னவெனில், அதின் ஜீவன் மரத்தின் மத்தியில் அல்லது இதயத்தில் உள்ளது. அநேக மரங்களில் காணப்படுவதுபோல், தோல் அல்லது பட்டையில் அது இருப்பதில்லை. அதே போன்று கிறிஸ்தவ வாழ்வும் உள்ளது. அது வெளிப்புறமாக இல்லாது, ஆழமான, உள்ளான ஆவிக்குரிய வாழ்வாக உள்ளது. உண்மையில் ஒரு கிறிஸ்தவன் என்பவனின் இருதயத்தில் ஆவியானவர் ஒரு புதிய தெய்வீக வாழ்வினைத் தொடங்கி அவனை தேவனுடைய பிள்ளையாக மாற்றுவதாகும்.
அறிவுக்கெட்டாத தேவனுடைய அன்பு, பரிசுத்த ஆவியானவரால் விசுவாசிகளின் உள்ளங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது (எபேசி.3:19). மேலும் ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமாவிலே சொல்லிமுடியாததும், மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம் உள்ளது (1பேது.1:8) மற்றும் எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானம் உண்டு (பிலி.4:7). கிறிஸ்தவன் என்பவன் உலகத்திலிருந்து வெளிப்புறமாக போதிக்கப்பட்டாலும் தேவனுடைய வார்த்தை மூலமாக பரிசுத்த ஆவியானவரால் உள்ளாக போஷிக்கப்படுகிறான். கிறிஸ்தவ வாழ்வு, ஆழமான, இனிமையான செழிப்பானதாகும்.
பனைமரம் உண்மையிலேயே அனைத்து சூழ்நிலைகளுக்கும் உகந்தது. எந்தவொரு தாவரமும் உயிர்வாழ இயலாத பாலைவனங்களிலும் பனைமரம் செழித்து வளரும். எந்தவிதமான புல்லோ, செடியோ இல்லாத பாலைவன மணல்களில் அழகோடும் கனத்தோடும் வெற்றியாக நிமிர்ந்து நிற்கும் பனை மரத்தினை உங்களால் காணமுடியும். வறட்சி, வெப்பம், வாடல் நோய், காற்று போன்ற எதற்கும் ஈடுகொடுத்து பனைமரம் வெற்றியாய் நிமிர்ந்து நிற்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை அவைகள் சார்ந்திருப்பதில்லை. மாறாக அவை எல்லாவற்றையும் மேற்கொள்ளும்.
இந்தவகையிலும் கூட இந்த குறிப்பிடத்தக்க மரம், கிறிஸ்தவ வாழ்விற்கு ஒரு மாதிரியை முன்வைக்கிறது. இந்த பனைமரத்தினைப்போல் தேவனுடைய மனுஷன் காற்று, புயல், பஞ்சம், பெருவெள்ளம் ஆகிய அனைத்து சூழ்நிலையிலும் செழித்து வெற்றி பெறுவான். ஒரு கிறிஸ்தவன் எப்போதும் உறுதியாய் நிலைநிற்கிறான். ஏனெனில், அவன் வெளிப்புற சூழ்நிலைகளினால் அல்ல, உள்ளான வாழ்வினால் போஷிக்கப்படுகிறான். பனைமரமும் அதின் கிளைகளும் உலகமெங்கும் வெற்றியின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. ரோம சாம்ராஜ்யம் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில், வெற்றிபெற்ற இராணுவம், யுத்தத்தில் வெற்றிபெற்று திரும்பும்போது, பனை ஓலைகளை (கிளைகளை) சுமந்து வந்தனர். பனைமரம் வறட்சி மற்றும் கடின சூழ்நிலைகளை மேற்கொண்டு வெற்றியான ஒரு மரமாக இருப்பதால், மனித வாழ்க்கையில் அதனை வெற்றிக்கு அடையாளமாக வைப்பது மிக பொருத்தமானதாகும்.
வேதத்தின் பல பகுதிகளில் பனைமரம் அடையாளமாக கையாளப்பட்டிருப்பது மிகத் தெளிவாக உள்ளது. இயேசு எருசலேம் நகரில் வெற்றிபவனியாக சென்றபோது, மக்கள் பனை ஓலைகளைக் கையில் ஏந்தி அவரை சந்தித்து, ஓசன்னா என்று சத்தமிட்டனர். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவான் 12:13). வெளிப்படுத்தின் விசேஷ புத்தகத்தின் ஏழாம் அதிகாரத்தில் பரிசுத்தவான்களின் இறுதி வெற்றி பற்றிய வர்ணனை இவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, … மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள் (வச.9,10).
கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு வெற்றியான வாழ்க்கை என்பதை வேதாகமம் பல இடங்களில் உறுதியாக கூறியுள்ளது. உலகத்தில் நம்மை எதிர்த்து வருகிற அத்தனை சூழ்நிலைகளையும் மேற்கொண்டு வெற்றிபெற வேண்டும். நமக்கு யுத்தங்கள் உண்டு, வறட்சி காலங்கள் உண்டு, புயல்கள் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றின் மத்தியில், உள்ளான வாழ்வில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமை நமக்கு உண்டு. ஆதலால் அவருக்குள் நாம் எப்போதும் வெற்றிசிறப்போம் (ரோம.8:37; 1கொரி.15:57; 2கொரி.2:14).
பனை மரங்கள் பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் நீருற்றுகள் மூலம் போஷிக்கப்படுகின்றன. இதுதான் அவைகள் உலர்ந்த தரைகளிலும் பாலைவனங்களிலும் வளருவதற்கு காரணமாகும். அவைகளுக்கு பெரிய, ஆழமான வேர்கள் உண்டு. போதுமான தண்ணீர் உணவிற்காக கிடைக்கும் வரைக்கும், அந்த வேர்கள் பூமிக்கடியில் பல அடிகள் தூரம் செல்கின்றன. மறைந்திருக்கும் இந்த ஆதாரமே அவற்றின் வெற்றிக்கு இரகசியமாயுள்ளது.
கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் அப்படியே இதுவே இரகசியமாய் உள்ளது. நாம் உலகத்தின் வெளித்தோற்ற காரியங்களால் போஷிக்கப்படாமல், நமக்குள்ளே வாசம் செய்து நம்முடைய உள்ளான மனிதனை பலப்படுத்துகிற இரகசிய நீருற்றாகிய ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவரால் போஷிக்கப்படுகிறோம். ஆண்டவராகிய இயேசு இவ்வாறு வாக்குப் பண்ணியுள்ளார்: நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும் (யோவான் 4:14). கிறிஸ்தவர்கள் மறைந்திருக்கும் இரகசிய நீருற்றால் போஷிக்கப்படுவதால், பாலைவன பனைமரங்களைப் போல அவர்கள் செழித்திருந்து வெற்றியினை சுதந்தரிப்பார்கள்.
பனைமரம் மனுக்குலத்திற்கு மிக்க பயனுள்ளது. பாலைவன பிரயாணிகள் தங்களின் சுட்டெரிக்கும் வெயில் பயணத்தின்போது பனைமர நிழலில் அமர்ந்து, ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுகின்றனர். பாலைவனத்தில் பிரயாணிகள் தண்ணீர் காணத்தக்கதாக அவைகள் பாலைவன சோலையின் குறியீடாயிருக்கிறது.
சிலபகுதிகளில் உலகமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பனைமரங்களைச் சார்ந்துள்ளனர். பேரீச்ச மரங்கள், உண்மையிலேயே மிக இனிமையான சத்துநிறைந்த ‘பேரீச்ச பழங்களைத்’ தருகின்றன. பனை மர எண்ணெய் பண்டைய காலம் தொடங்கி இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. பனை மரத்தின் மேல்பகுதியில் உள்ள பூங்கொத்தில் இருந்து வடிந்துவரும் பனைநீர் இனிப்பான, ருசியுள்ள ஊட்டச்சத்து மிக்க பானமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த அனைத்து விதங்களிலும் கிறிஸ்தவர்கள் பனை மரங்கள் போன்று இருக்கவேண்டும். நாம் தியானித்த நீதிமான் பனையைப் போல் செழிப்பான் (சங்.92:12) என்பது தெய்வீக புத்திமதியையும், தெய்வீக எதிர்பார்த்தலையும் தெரிவிக்கிறது. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையில் அழகு, நீதி, உள்ளான வாழ்வு மற்றும் பெலன், சூழ்நிலைகளை மேற்கொள்ளுதல், தெய்வீக ஆதாரத்திலிருந்து போஷிக்கப்படுதல், மனுக்குலத்திற்கு ஆசீர்வாதமாக பயனுள்ளவர்களாக வாழுதல் முதலியன வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மொழியாக்கம்: Bro.Johndurai
விலையேறப்பெற்ற மெளனம்
மற்றொருவரைப்பற்றி தீயதாய்ப் பேசி ஒருவருடைய மனதைக் கெடுப்பது மிகவும் இலேசானது. இவ்வுலகத்திலே, அவதூறு பேசுகிறவன் விளைவிக்கிற நாசம் அளவிட முடியாதது. ஏனென்றால் அவன் ஒருவருடைய நல்ல பேரைக் கெடுத்து விடுகிறான். நட்பை பாழாக்கிவிடுகிறான். பொறாமைகளை எழுப்பி விடுகிறான். குடும்பங்கள் முறிக்கப்படுகின்றன. இருதயங்கள் உடைந்துவிடுகின்றன. ஆகையால் நாம் ஒருபோதும் தீமையினை விளைவிக்கக்கூடிய எந்தச் செய்தியையும் நம் மூலம் பறந்து வெளியே பரவச் செய்யாதிருப்போமாக! மற்றவரைப் பற்றியும் கேடான காரியத்தைப் பேசாதிருப்போமாக! ஏனென்றால் அப்படிக் கேடாகப் பேசின காரியம் எங்கே முடியுமோ, எவ்வளவு பெரிதாக வளருமோ, எவ்வித நாசத்தை விளைவிக்கக் கூடுமோ என்று அறியோமே! பேசப்பட்ட வார்த்தைகளை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாதல்லவா! ஆகையால் நம்முடைய உதடுகளுக்கு ஒரு பூட்டுப் போட்டு வைக்க கற்றுக்கொண்டு மற்ற எவரைப் பற்றியும் தீங்கு பேசாமலிருப்பதுதான் மேலானது. அப்போது தீங்கு பேசாமலிருந்த மெளனத்தைப் பற்றி நாம் ஒருபோதும் வருத்தப்பட வேண்டியதிருக்காது. ஏனென்றால் அது விலையேறப் பெற்றது. கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும் (சங்.141:3).