அதிகாலை வேளையில்…

1 2 3 16

தேவன் மாத்திரமே!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 7: 1-21
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது (யோபு.7:4).

யோபின் புத்தகமானது “மனித குலத்தில் தோன்றிய மாபெரும் ஓர் இலக்கியச் செய்யுள்” என்று கருதப்படுகிறது. “பழங்கால மற்றும் நவீன காலத்தின் மாபெரும் செய்யுள்” என்று திரு.ஆல்ஃபிரட் டென்னிசன் என்பவர் கூறியுள்ளார்.

தேவனுக்கு முன்பாக உத்தமனாக வாழ்ந்த யோபு என்னும் ஒரு மனிதன் சாத்தானால் கடுமையாக தாக்கப்பட்டும் தனது உத்தமத்தில் உறுதியாக வாழ்ந்து, இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டான். இவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் ஆறுதலைத் தருவதாக உள்ளது. இப்புத்தகத்தின் ஏதோவொரு பகுதியில் நம்மை அடையாளம் காண முடியும்.

யோபு சாத்தானால் தாக்கப்பட்டது மாத்திரமல்ல, அவனுக்கு ஆறுதல் கூறவந்த அவனுடைய மூன்று நண்பர்களும் யோபின் பாவங்களைப்பற்றி அனுமானித்து தீய காரியங்களையே கூறினார்கள். இப்புத்தகத்தின் அநேக அதிகாரங்கள் யோபின் நண்பர்களின் உரைகளையும் உத்தமனான யோபின் பதிலுரைகளையும் கொண்டுள்ளன.

முதல் சுற்று எலிப்பாசின் உரையுடன் ஆரம்பிக்கிறது. தான் கண்ட தரிசனத்தில் உன்னத தேவனின் பரிசுத்தத்தையும் மனிதர்களின் பாவத் தன்மைகளையும் அவர் தெளிவான சொற்களால் விவரிக்கிறார். தீயவர்கள் மாத்திரமே அழிவார்கள் என்பதால் தனது தீமையினாலேயே யோபும் தீங்கினை அனுபவிக்கிறார் என்று எலிப்பாஸ் எண்ணினார். உத்தமனான யோபு கசப்புணர்வு கொள்ளாது தேவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறினார்.

எலிப்பாசுக்கு மறுமொழி கொடுத்த யோபு மனித வாழ்வை இராணுவ ஊழியத்துக்கும் ஒரு கூலிக்காரனுடைய ஊழியத்துக்கும் ஒப்பிட்டார். தன்னுடைய வாழ்வையும் இவைகளுக்கு ஒப்பிட்ட அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு மீறின சூழ்நிலையில் தான் மாட்டிக்கொண்டதாகவும் அறிக்கையிட்டார். கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாள் இந்த உலகில் சில நாட்களே வாழ்வான் என்றும் அந்த வாழ்வும் அர்த்தமில்லாமல் போகும் என்று அறிந்தவராய் தன்னுடைய வாழ்வும் அவ்வாறே உள்ளது என்றும், தன்னுடைய குடும்பம் மற்றும் ஆஸ்திகள் யாவும் அழிந்தன; நண்பர்களும் தனக்கு எதிராக எழும்பியுள்ளனர் என்பதையும் உணர்ந்தார்.

யோபு 7:4 நமது நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. யோபு இரவில் தனது படுக்கையில் படுத்திருக்கும்பொழுது ‘எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும்?’ என்ற எண்ணமே அவருக்குள் மேலோங்கியிருந்தது. பொருளாதார நஷ்டங்கள், தனிப்பட்ட இழப்புகள், நண்பர்களின் வஞ்சகம் போன்ற காரியங்கள் நமக்கும் ஒரு இரவை நீண்ட இரவாகக் காட்டும். யோபைப் போல நாமும் நித்திரை வராமல் நமது படுக்கையில் காலை வரை புரண்டு படுத்திருப்போம்.

யோபு என்ன செய்தார்? யாரை நாடினார்? அவருடைய காரியங்களைக் கேட்டு புரிந்துகொள்ள யார் உள்ளார்? மாறும் உலகில் மாறாமல் நிலைத்திருப்பவர் யார்? இக்கேள்விகளுக்கு விடையை யோபு அறிந்திருந்தார். தேவனிடம் தனது விண்ணப்பங்களை ஏறெடுத்து நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டார்.

வான் ஹாவ்னர் என்பவர் பலவித துன்பங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியைப் பற்றிக் கூறினார். அவரது சில துன்பங்கள் உண்மையானவை; வேறு சில கற்பனையானவை. அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களுடன் ஜெபித்து அவரை ஆறுதல்படுத்தினர். அவருக்கு உதவும் பொருட்டாக “நாங்கள் எங்களால் இயன்ற அளவு உங்களுக்கு யாவையும் செய்துவிட்டோம். இனி நீங்கள் தேவனை நம்புங்கள்” என்ற கூறியவுடன், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி, “அப்படியா? என் முடிவு வந்துவிட்டதா? ” என்று புலம்பினார். ஹாவ்னர், “அப்படியாயின் நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார்.

யோபு இந்த பாடத்தைதான் கற்றுக் கொண்டார். நமது குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மை ஆறுதல்படுத்துவதாக எண்ணிச் செய்யும் காரியங்கள், நம்மை சோர்வடையச் செய்வனவாக அமைந்துவிடும். நல்ல எண்ணத்துடன் நாம் செய்யும் சில நல்ல காரியங்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுமுண்டு.

ஆனால் தேவன் எப்பொழுதும் நம்மை சரியாகப் புரிந்துகொள்ளுவார். தேவனை நோக்கிக் காத்திருக்கும் வேளை உண்டு. நம்முடைய நலத்துக்கும் பெலத்துக்கும் அவரையே நாம் சார்ந்திருக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்பொழுதும் தனிமையில் துணை தேடிச்செல்லும் வேளையிலும் அவருடைய உதவியும் ஆறுதலும் நமக்குத் தேவை. அவற்றை தேவன் மாத்திரமே தரமுடியும்.

அதிகாலைப் பாடல்:

என் வாழ்வில் சமாதானம் நீரோட்டம் போல் வந்தாலும்,
துன்பங்கள் அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தாலும்,
என்ன வந்தாலும் எது நடந்தாலும் அவை நன்மைக்கே
என்று கூறி உம்மைத் துதிக்க எனக்குப் போதியும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

தந்திர வலை!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: நியாயாதிபதிகள் 9: 22-57
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான் (நியாயா.9:33).

பிறரை ஏமாற்றுவது என்பது ஒரு கலை. நாம் பிறரை ஏமாற்ற எண்ணும் பொழுது முதலில் ஒரு சிக்கலான வலையை உருவாக்குகிறோம். பின்னர் அதனை செயல்படுத்துகிறோம். ஆயினும் கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப அது அவர்களுக்கே கேடு விளைவிக்கும்.

மேலும் நீதிமானுக்கு விரோதமாக எழும்பும் சதிகாரர்கள் தங்களுடைய சதித்திட்டத்தால் இறுதியில் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மையை கிதியோனும் அவனுடைய முந்நூறு வீரர்களும் பெற்ற வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்த நாட்களின் அவல நிலையிலிருந்து நாம் அறிகிறோம்.

நியாயாதிபதிகள் 8: 33-35 என்ற வேதபகுதியில் மீதியானியரை வெற்றி கண்ட பின்னர் இஸ்ரவேலர்களால் தொடர்ந்து சிறப்புடன் வாழமுடியவில்லை எனக் காண்கிறோம். தங்களை விடுதலையாக்கிய தேவனை இஸ்ரவேலர் மறந்தபடியால் வெளியிலிருந்த எதிரிகளைவிட அவர்களுக்குள்ளே இருந்த உட்பூசல்கள் அதிக அழிவைத் தந்தன. கிதியோன் மறுத்த ஆட்சியை சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியின் மகன் அபிமெலேக்கு இச்சித்தான். தனது தந்தையின் புகழை உபயோகித்துக்கொள்ள விரும்பிய அபிமெலேக்கு சீகேமின் மக்களிடம் ஒரு நீண்ட வீர வசனம் பேசினான். கிதியோனின் குமாரர்கள் 70 பேர் அவர்களை ஆள்வதைவிட ஒரு தனிமனிதன் ஆளுவதே சிறந்தது என்று கூறினான். பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து பெற்றுக்கொண்ட எழுபது வெள்ளிக்காசைக் கொண்டு வீணரும் போக்கிரிகளுமான மனுஷர்களை தனது சேவகத்தில் வைத்துக்கொண்டான். இவர்கள் கிதியோனின் குமாரர்களைக் கொலை செய்தனர். ஆனால் யோதாம் என்னும் கிதியோனின் இளைய குமாரன் அதிசயமாய் இத்தந்திர வலைக்குத் தப்பிவிட்டான்.

அபிமெலேக்கு இஸ்ரவேலின் ஒரு சிறிய பகுதியை மூன்று வருடங்கள் ஆண்டான். யோதாம் கெரிசீம் மலைக்குச் சென்று அபிமெலேக்குக்கும் சீகேம் மனிதர்களுக்கும் சாபமிட்டான். இந்த சாபம் ஒரு உருவகமாகக் கூறப்பட்டுள்ளது. மரங்கள் தங்களுக்கு அரசனாக இருக்க வேண்டுமென ஒலிவமரம், அத்திமரம் மற்றும் திராட்சைச்செடி இவற்றை வரிசையாகக் கேட்டன. ஆனால் அவைகள் மறுத்துவிட்டன. பின்னர் அவை முட்செடியிடம் சென்று தங்கள் கோரிக்கையை வைத்தன. அதனை முட்செடி ஏற்றுக் கொண்டது.

இந்த உருவகத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய கனிகளைத் தருவதில் ஆர்வம் காட்டும் மரங்கள் ஆட்சியை விரும்பவில்லை. எதையுமே கொடுக்க இயலாத முட்செடி தனது சுயநலத்துக்காக தலைமை பொறுப்பை ஏற்றது. அபிமெலேக்கே அந்த முட்செடி. அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொன்னான் (நியாயாதிபதிகள் 9:20).

யோதாமின் சாபம் வெகு விரைவிலேயே பலித்தது. அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட பின்பு, அவனுக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார். சீகேமின் பெரிய மனுஷர் அவனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் அபிமெலேக்கின் விசுவாசியாகிய பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் அச்சதித்திட்டத்தை சில ஆட்களின் மூலம் அதை அவனுக்குத் தெரியப்படுத்தினான். இரவில் சீகேமின் பட்டணத்து வாசலில் காத்திருந்து அதைத் தாக்க ஆலோசனை கூறினான். காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லி அனுப்பினான் (நியா.9:33). அவ்வாறே சீகேம் பட்டணத்து மக்களில் அநேகரை அபிமெலேக்கு வெட்டினான்.

துரோகிகளைக் கொன்ற பின்னர் அபிமெலேக்குத் தனது கவனத்தைப் பக்கத்திலிருந்த தேபேசு பட்டணத்துக்குத் திருப்பினான். சில சீகேம் பட்டணத்து மக்களும் தாபேசின் மக்களும் பாதுகாப்பைத் தேடி அப்பட்டணத்தின் நடுவிலிருந்த உயர்ந்த கோபுரத்துக்குள்ளே அடைக்கலமாயினர். அவர்களைக் கொளுத்துவதற்கு அபிமெலேக்கு ஆயத்தப்படுகையில் ஒரு ஸ்திரீ ஓர் ஏந்திரக் கல்லின் துண்டை மேலிருந்து எறிந்தாள். அது சரியாக அபிமெலேக்கின் தலையிலே விழுந்து அவன் மண்டையை உடைத்தது. அவன் மரணமடைந்தான். யோதாமின் தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

அரசனாக விரும்பியவனும் அவனது குடிகளாக அமைய இருந்தவர்களும் அவர்களது சதிவலையில் விழுந்தார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நீதிமான்களை அழித்தவர்கள் தாங்களே ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் சுயமுயற்சியுடன் முன்னேற விரும்பாது அவருடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று அறிந்து அதற்கு நம்மை ஒப்புவிப்பதே சாலச் சிறந்தது.

அதிகாலைப் பாடல்:

ஆதியும் அந்தமுமானவரே, ஆபிரகாமின் தேவனே,
உன்னதமான சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே,
அநாதியாய் இருக்கிறவராய் இருப்பவரே
வானத்தையும் புமியையும் படைத்த ஆண்டவரே
என்றும் நிலைக்கும் உம்முடைய நாமத்தை
நான் பணிந்து வணங்குகிறேன்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

விடியற்காலத்தில் உண்டாகும் களிப்பு!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : சங்கீதம் 30:1-12
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய  பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய  கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங்.30:4,5).

அநேக சங்கீதங்களில் காணப்படுவது போன்றே தாவீது 30ஆம் சங்கீதத்திலும் தான் தேவனைத் துதிப்பதாகக் கூறியுள்ளார். மிகப்பெரிய விடுதலையை அவர் அனுபவித்திருந்ததால் தேவனுக்கு நன்றியுள்ளவராய் இருக்கிறார். தனது ஆபத்தில் அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஆண்டவர் அவரைக்கேட்டருளி அவரது ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்டெடுத்தார்.

எனவேதான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங் காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5) என்று ஆச்சரியப்படுகிறார்.

நாமும் அநேக வேளைகளில் இவ் வசனத்தின் உண்மையை அனுபவித்திருக்கிறோம் அல்லவா! பாரமான அழுத்தங்களுடன் தாங்க முடியாத கவலைகளுடன் இரவில் நித்திரைக்குச் செல்லும்பொழுது சமாதானமில்லாமையால் உறக்கம் வராது புரண்டு புரண்டு படுக்கிறோம். நமது சரீரமும் ஓய்வு எடுப்பதில்லை. உதவியற்றவர்களாய் ஒரு பரிதாபமான நிலையை உணருகிறோம். பலமணி நேரமாய் கஷ்டப் பட்டபின் சிறிதே கண்ணயர்வோம்.

கிறிஸ்தவ வாழ்வும் வியாதி – சுகம், பலவீனம் – பலம், அவமானம் – புகழ், தேவை –  நிறைவு என்று பலவிதமான மேடுபள்ளங்களைக் கொண்டது. சில நேரங்களில் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற உரிமையின் நன்மைகளை அனுபவிக்கிறோம். சில வேளைகளில் அந்த சலுகைகளால் சிலுவையை சுமக்கிறோம். சில வேளைகளில் தேவனுடைய கிருபை என்னும் தென்றல் காற்று நாம் வாழ்வில் வீசுகிறது.

சில வேளைகளில் பாதகமான வட காற்று வீசுகிறது. நடுக்கும் குளிர்ச்சியான வடகாற்று நமது இரவை நித்திரையில்லாமல் செய்யும்பொழுது நாம் சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் என்ற வாக்குறுதியைப் பற்றிக்கொள்ளலாம். தமது பிள்ளைகளின் துன்பங்களுக்கும் ஓய்வின்மைக்கும் தேவன் எப்பொழுதும் ஒரு கால எல்லையை வைத்திருக்கிறார்.

நித்திரையில்லா இரவுக்குப் பின்னர் நாம் எழும்பொழுது இரவின் குழப்பங்களுக்கு ஒரு சிறிய தெளிவு கிடைத்திருக்கும். நமது எண்ணங்களைத் திரும்பிப் பார்க்கும்பொழுது நாம் உறக்கம் கொள்ளாமல் இருந்ததற்கு காரணமும், நாம் உதவியற்று பரிதாபமான நிலையில் இருந்ததற்கும் ஒரு விடை கிடைக்கும். கையாளக்கூடாதவையாக இருந்த காரியங்களுக்கு தெளிவு கிடைக்கும். இம்மாறுதலுக்குக் காரணம் யாது? நம்முடைய கவலைகளை தேவன் மீது வைத்து அவர் கவனித்துக்கொள்வார் என்ற எண்ணங்களைக் கொண்டு வரும் காலை நேர மகிழ்ச்சியாகும் (1 பேதுரு 5:7; யோபு 33:26; ஏசாயா 26:20; 54:7).

இரவின் கவலைகள் தற்காலிக மானது மாத்திரமல்ல; அவை தேவனிடத்திலிருந்து வரும் பரிசும் ஆகும். ஆத்துமாவை அதிரவைக்கும் அனுபவங்களை சகித்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. கிறிஸ்தவ வாழ்வில் அழுகையின் நாட்கள் நிச்சயம் உண்டு. கண்ணீர் விடும் இரவுகள் அநேகமாயும் அடிக்கடியும் காணப்படும். ஆனால் காரணமில்லாமல் அவை நீண்டு காணப்பட தேவன் அனுமதிப்பதில்லை.

இலண்டன் மாநகரிலுள்ள தூய பேதுரு பேராலயத்தின் மேல் விதானத்தை சர்.ஜேம்ஸ் தார்ன்ஹில் என்பவர் வண்ணந்தீட்டினார். அதனை அவர் ஒரு தொங்கு பலகை மீது நின்று செய்யவேண்டும். ஒருநாள் மிகக் கடினமான ஒரு பகுதியை மிகவும் சிரத்தையுடன் செய்து முடித்தார். தன்னுடைய அழகிய அவ்வேலைப்பாட்டை ஆராய்வதற்கு மெதுவாக பின்னோக்கி நகர்ந்தார். இன்னும் ஓரடி நகர்ந்தால் சர்.ஜேம்ஸ் கீழே விழுந்து மரணத்தை சந்திப்பார் என்பதை அறிந்த அவருடைய உதவியாளர், மிக விரைவாக ஒரு தூரிகையை எடுத்து அப்படத்தின் மீது வண்ணத்தை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த கலைஞர் கலங்கியவராய் கதறிக்கொண்டு முன்னால் நகர்ந்தார். அவருடைய உதவியாளர் பின்னர் நிலைமையை விளக்கிய பொழுது சர் ஜேம்ஸ் நன்றியுடன் கண்ணீர் விட்டார்.

ஒரு மருத்துவர் தமது நோயாளிகளுக்குத் துல்லியமாய்ப் பரிந்துரை செய்யும் அக்கறையைவிட இருமடங்கு தேவன் நம்முடைய நித்திரையில்லா இரவுகளின் நிலையை அறிந்து பதிற் செய்பவர். ஒருவேளை விடியலின் வெளிச்சம் அதிக தொலைவில் இருப்பது போன்று நமக்குத் தெரியும். ஆனால் தேவன் வாக்களித்த மகிழ்ச்சியுடன் காலை நிச்சயம் வரும். தேவனுடைய வார்த்தையை நீங்கள் நம்பலாம்.

அதிகாலைப் பாடல்:

பாரங்கள் அழுத்த, வேதனைகள் பெருகிட
கவலைகளில் நான் மூழ்கி அழும்பொழுது,
பகல்வேளையும் சோர்வுற்று நீண்டு காணப்படும்பொழுது
என் இதயத்தின் வேதனையை இயேசு கவனிப்பாரா?
ஆம்; அவர் அறிவார் என்பதை நான் அறிவேன்.
என் வேதனை அவர் இதயத்தைத் தொட்டது.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

1 2 3 16
சத்தியவசனம்