மெளன மொழிகள்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன் (யோபு 42:3).

யோபுவின் புத்தகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவைகள் தேவன், யோபு மற்றும் யோபுவின் நண்பகளால் பேசப்பட்டவை. யோபு ஒரு முன்மாதிரியான விசுவாசி. ஆனால், “யோபுவை நீர் ஆசீர்வதித்ததால் மாத்திரமே அவர் உம்மை வணங்குகிறான் என்று சாத்தான் தேவனோடு வாதாடினான். அவனது செல்வத்தையும், உடல்நலம், பத்து குழந்தைகளையும் எடுத்துவிட சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார். யோபு நகரத்துக்கு வெளியே சாம்பலில் அமர்ந்து துக்கித்துக்கொண்டிருந்தான். அவனது துயர நிலையைக் கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனைக் காணவந்தனர். பல நாட்களாக அவர்கள் வாதிட்டு கடவுளின் செயல்களை விளக்கமுயன்றனர். ஆனாலும் அவர்களால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இப்புத்தகத்தில் “மூன்று மெளனங்கள்” காணப்படுகின்றன. அவைகளை தியானிப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அனுதாபத்தில் மெளனம் (யோபு 2:11-13)

யோபுவின் நண்பர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து யோபுவை சந்திக்க வந்தனர். யோபுவின் நிலையைக் கண்டு துயரப்பட்டு சத்தமாய் அழவும், தங்கள் ஆடைகளைக் கிழிக்கவும் தங்கள் தலைகள் மேல் புழுதியை தூற்றிக் கொண்டும், ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் ஒரு வாரம் அவனுடன் அமைதியாக இருந்தனர். “அவனது துக்கம் மிகப்பெரியது என்று அவர்கள் கண்டார்கள்”; (2:13). அவரது துயரத்தைப் போக்கும் வழியறியாமல் அமைதியாய் இருந்தனர். அவர்களிடம் தேற்றும் வார்த்தைகள் இல்லை. ஆறுதலளிக்கும் வார்த்தைகளைவிட, சில நேரங்களில் மெளனமொழி தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.

அதிகாரத்தில் மெளனம்

நான்கு நண்பர்களின் அறிவுரைகளை நீங்கள் படிக்கும்பொழுது கர்த்தர் ஏன் தனது தெய்வீக அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களைக் கண்டிக்கவில்லை என ஆச்சரியப்படலாம். ஆனால் தேவன் அமைதியாக இருந்தார். யோபு புத்தகத்தில் 329 வினாக்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொருவரும் தமது கருத்துகளே சரி என எண்ணினர். அவை அனைத்துக்கும் விடைகள் இல்லை. ஆனால் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். சோப்பார் எழுப்பிய கேள்விகள் (11:7,8) அவர்களை உலுக்கியது. தேவனுடைய ஆழமான காரியங்களை உங்களால் ஆராயமுடியுமா? சர்வவல்லவரின் பிரகாரங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவை வானத்தைவிட உயர்ந்தவை, உங்களால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்திலும் ஆழமானவை. உங்களால் எதுவும் அறியமுடியாது. நமது அறிவு குறைவுள்ளது” (1 கொரி. 13:9) என்று அப். பவுலும் தெளிவாகக் கூறியுள்ளார். பொருத்துக படப்புதிரில் (Zig Zag Puzzle) நமக்கு அனைத்துப் பகுதிகளும் புரியவில்லை என்றால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் புதிரை விடுவிக்கமுடியாது. இவ்விவாதத்தின்பொழுது தேவனின் மெளனம், உண்மையை மறைத்து சொற்களைப் பயன்படுத்தி செயலைப் புறக்கணிக்க மனிதர்களை அனுமதித்தது. வாழ்க்கையின் பல புத்திசாலித்தனமான விவாதங்கள் செயல்களுக்கு மாற்றாக அமையாது. அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்கள் வார்த்தையினால் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது. அவை பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன. ‘சொற்கள் யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று நாவலாசிரியர் ஜோசப் கான்ராட் என்பவர் எழுதியுள்ளார்.

அறிதலில் மெளனம் (யோபு 42:1-6)

தேவனுடைய சொற்பொழிவிலிருந்து யோபு தன்னைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டார். “அறிவற்ற சொற்களால் தேவனுடைய ஆலோசனையை இருட்டடிப்பு செய்தார்; (38:2). மேலும் தேவன் தன்னைப் பாதுகாக்க அனுமதி கேட்டார். ஆனால் தேவன் தோன்றியபோது, யோபு அமைதியானார், கையால் வாயைப் பொத்தினார் (40:3-5). இறுதியில் யோபு தனது அறியாமையால் பேசியதை ஒப்புக்கொண்டார். தேவனைப் பார்த்தவுடன் அவர் செய்யக்கூடிய ஒரே விஷயம் மனந்திரும்புவதுதான் . தேவனும் யோபுவை நியாயப்படுத்தினர். தாவீது அரசரும் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வை அனுபவித்தார் (சங்.131).

இன்றைய உலகில் ஆரவாரங்களும் சத்தங்களும் நிறைந்துள்ளன. இறைவனின் அமைதியான குரலைக் கேட்க விரும்பினால், நாம் மெளன ஊழியத்திற்கு நேரம் ஒதுக்கவேண்டும். நமது வார்த்தைகளை நாம் கவனிப்பது போல நமது மெளனங்களையும் கவனிக்கவேண்டும். இல்லையெனில் நம்மையும் தேவனையும் நாம் அறியமுடியாது.

இதோ கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று: பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இராஜா.19:11-12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை