ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 14 புதன்

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோவான் 14:13) என்ற வாக்குப்படி இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் ஏறெடுக்கப்படும் ஜெபவிண்ணப்பங்களுக்கு ஏற்ற மறுஉத்தரவுகளை கர்த்தர் அருளிச்செய்து, கூட்டம் ஆசீர்வாதமாய் நடை பெறுவதற்கு எல்லா இயற்கை அனுகூலங்களையும் தந்தருள ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 13 செவ்வாய்

நமது தேசத்தில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கும், அதை கள்ளசந்தையில் விற்பவர்கள், அதை கடத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ள ஒவ்வொருவரது ஆத்ம விடுதலைக்காக, அந்த குடும்பங்களின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 12 திங்கள்

கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் (ஆமோஸ் 8:11) இந்த நாட்களுக்கு முன் வேதவசனங்களை கட்டுரைகளை தியானங்களை வாஞ்சையோடு வாசித்து வசனத்தால் கர்த்தருடைய ஜனத்தின் இருதயம் நிரப்பப்படவும், அவர்களுக்கு தயாரித்து அனுப்பப்படும் சத்திய வசன இலக்கிய வெளியீடுகள் அவர்களுக்கு பிரயோஜனமாயிருப்பதற்கும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 11 ஞாயிறு

அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது (சங்.111:9) அவருடைய நாமம் தரிக்கப்பட்ட கர்த்தருடைய ஜனங்கள் பயபக்தியோடே ஆராதனை செய்யவும், வறியவர்களும் திக்கற்றவர்களும் சபையில் விசாரிக்கப்பட, மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் என்ற ஆண்டவருடைய வாக்கு நிறைவேற்றப்படவும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 10 சனி

பங்காளர்குடும்பங்களில் இரட்சிக்கப்படாதவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து சாட்சிகளாய் வாழவும், பின்மாற்றத்தில் இருப்பவர்கள் தங்களை ஆராய்ந்து மனந்திரும்பி ஆதிஅன்பிற்குள் வரவும், ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து கர்த்தருக்குப் பிரியமாய் ஜீவிக்க வேண்டுதல் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 9 வெள்ளி

மத்திய கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஜோர்டானுக்காக ஜெபிப்போம். அண்டை நாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள இலட்சக்கணக்கான அகதிகளுக்காகவும், புதிய விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, மக்கள் இயல்பான வாழ்வு வாழ, சமாதானம் நிலவ, அதிகாரிகள் மற்றும் நாட்டின் அதிபர்களுக்காக ஜெபிப்போம்.