• சகோதரி சாந்தி பொன்னு •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

கடந்த சில வருடங்களுக்குமுன் நடந்த ஒரு சம்பவத்தை கேள்வியுற்ற எல்லோரையுமே கலங்கச் செய்தது. அவர்கள் ஒரு இளம் தம்பதிகள் அன்பான குடும்பம். கணவன் மனைவி இருவருமே தேவனுக்கென்று தம்மை ஒப்புவித்து முழுநேர ஊழியப்பணியில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். “இந்நாளையே, இந்நாளையே எனக்காகக் கர்த்தர் படைத்தார்” என்று பாடும் அவர்களது மழலைச் சொற்கள் பாடாதவர்களையும் பாடவைத்துவிடும். திடீரென ஒருநாள் இரு குழந்தைகளும் வியாதிப்பட்டனர். அந்தோ பரிதாபம் அந்த அழகிய பெண் குழந்தை பாடிப் பாடியே இறந்துவிட்டாள்.
இது அவர்களுக்கு மாத்திரமல்ல. விசுவாசிகள் கூட்டத்திற்கே ஒரு பேரிடியானது. ஆண்டவரிடம் கேள்வி கேட்கமுடியாத பட்சத்தில், ஆண்டவரே! ஒன்றுமே விளங்கவில்லையே என்று ஜெபித்தேன். என் மனதில் ஒரு பதில் தென்பட்டது. இந்தத் தாயோ, ”எனது மகள், அவள் இயேசுவின் பிள்ளை: அவர் தமது பிள்ளையைத் தம்மண்டை அழைத்துவிட்டார். நோவுகள் வியாதிகளற்ற தேசத்திற்கு அவன் போய்விட்டாள்” என்று துக்கம் தொண்டையை அடைக்க சாட்சி பகர்ந்தாள். இந்த ஆறுதல் கிறிஸ்தவர்களாகிய நம் எவ்லோருக்கும் கிடைத்துள்ள மாபெரும் சிலாக்கியம். இப்படியிருக்க இயேசுவை நேசிக்காத தாய் தகப்பன்மார்களின் நிலைமை என்ன? அவர்களை யார் ஆறுதல் படுத்துவார்?
அடுத்தது. இந்தச் சம்பவத்தை கண்ணால் கண்டதினால் நாம் கலங்குகிறோம். அதேசமயம் எத்தனை குடும்பங்களில் ஒரே சமயத்தில் சகல பிள்ளைகளின் சிதைக்கப்பட்ட சரீரங்களை ஏந்தி நிற்கும் தாய்மார்கள் எத்தனை பேர். மாத்திரமல்ல; குழந்தைப் பருவத்திலேயே தன் வாழ்வை இழந்துபோன பிள்ளைகளும், நடைப்பிணங்களைப் போல் வாழும் அவர்களின் பெற்றோர்களும் எத்தனை பேர்! விதவைத் தாய்மார்கள் தவித்து நிற்கும் சம்பவங்கள்தான் எத்தனை! இவர்களுக்காக யார் அழுவார்? இவர்களுக்கு ஆண்டவரின் ஆறுதலை யார் அறிவிப்பார்? இந்தச் சத்தம் என் இதயத்தில் தொனித்தபோது குற்ற உணர்வினால் நான் குறுகிப்போனேன்.
தாய்மார்கள் ஒன்றுகூடுகின்ற ஒரு ஜெபக் கூட்டத்திலே இக்காரியங்களை மிக உருக்கமாக கூறி. “இதுவரை பெரியவர்களினதும், வாலிபர்களினதும் உயிர்களோடு விளையாடிய சத்துரு இன்று நம் குழந்தைகள் வாழ்விலே கை வைத்திருப்பதின் மூலமாக நம் தேசத்தின் எதிர்காலத்தையே அதாவது, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையே நாசம் பண்ண சத்துரு ஆரம்பித்துள்ளான். ஆதலால் தாய்மாரே, உங்களுக்கும் பிள்ளைகள் உண்டு. வாயைத் திறந்து ஜெபியுங்கள். நம் குழந்தைகளுக்காகக் கதறி ஜெபியுங்கள் என்று அழைப்பு விடுத்தேன். ஒரு தாய்கூட அவர்களது வாயைத் திறக்கவில்லை. ஏமாற்றமும் துக்கமும் தாங்கமாட்டாமல் “இன்று உங்கள் பிள்ளை மரித்துப்போனால்..” என்று மனதைக் கடினப்படுத்திக் கொண்டு கடிந்தபோது ஒரு தாய் ஜெபிக்க ஆரம்பித்தாள். அதன்பின்னரே தாய்மார்கள் மத்தியிலே ஒரு அசைவுண்டானது. எத்தனை துக்ககரமான காரியம்! பிற பிள்ளைகளுக்காக ஜெபிப்பதற்கு ஜாக்கிரதையாய் இல்லாமல் இருப்பது நல்லதல்ல.
அன்று தன் ஜனத்தின் அவல நிலைமையை எரேமியா கண்டான். தன் சொந்த ஜனம் புற ஜாதியரான பாபிலோனியரிடம் அகப்பட்டிருந்த சமயம் அது. “குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள். அவர்கள் குத்துண்டவர்களைப்போல் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்” (புல.2:11.12). எரேமியா புலம்பித் தவிக்கிறான். தேவனுடைய ஜனங்கள் மத்தியில் அத்தனை பயங்கரம் உண்டாயிருந்தது. எரேமியாவின் கண்கள் ஓயவில்லை. மாத்திரமல்ல; “எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு” (வச.19) என்றும் எரேமியா பதைபதைக்கிறான். பாபிலோன் யூதாவைக் கைப்பற்றியபோது இப்படியான ஒரு பயங்கர நிலவரம் உண்டாயிருந்தது. அதுமாத்திரமா, பெண்கள் கர்ப்பத்தின் கனிகளையே. கைக்குழந்தைகளையே தின்றார்கள் என்றும் வாசிக்கிறோம். இப்படி ஒருநிலை யாருக்கும் விசேஷமாக எந்தவொரு தாய்க்கும் வரவே கூடாது. இதைவிட ஒரு மோசமான நிலைமை உண்டா?
இன்று அப்படியான நிலைமை இல்லையே. பிள்ளைகள் வீதி வழியே பசியால் மூர்ச்சித்துக் கிடக்கவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். திரும்பவும் சொல்லுகிறேன். நமது வீட்டில் அவலச் சத்தம் கேட்கும்வரைக்கும் வெளியே நடப்பதைக் குறித்து நாம் உணர்வு கொள்வதோ கவனிப்பதோ இல்லை. ஆனால் போர்ச்சூழல்களிலே அகப்பட்டு சின்னாபின்னாப்படும் குழந்தைகள் எத்தனை தெரியுமா? அநியாயமாக அநாதைகளாக்கப்பட்டு அவல நிலைமைகளுக்குள் தள்ளப்படுகின்ற குழந்தைகள் எத்தனை தெரியுமா? துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் வேர்வை சிந்த உழைக்கும் குழந்தைகள் எத்தனை தெரியுமா? வீதிகளிலே ஆடிப்பாடி கண்களைச் சிமிட்டி இந்த சிறுபிராயத்திலேயே அடுத்தவரைச் சந்தோஷப்படுத்த பிரயாசப்படும் குழந்தைகள் எத்தனை தெரியுமா?
நம் குழந்தைகள் அன்று மாத்திரமல்ல; இன்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் பாதிக்கப்படுகின்ற விதங்களும் சூழ்நிலைகளும்தான் வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே, அன்று அந்த யூதப் பெண்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நமக்கும் ஏற்படா தென்று சொல்வதற்கில்லை. அன்று அவர்கள் தம் பிள்ளைகளைக் கொன்று சாப்பிட்டார்கள். இன்று உயிரோடேயே குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.
பெண்குழந்தை பிறந்தவுடன் அதனைக் கொன்றுவிடுகின்ற தாய்மார்கள் எத்தனை? குப்பைத் தொட்டிற்குள் போட்டுவிடுகிறவர்கள் எத்தனை பேர். பெண்பிள்ளையென்றால் அதனை மருத்துவமனையிலே விட்டுவிட்டு மறைந்துவிடுகின்ற தாய்மார்கள்தான் எத்தனை? கிறிஸ்தவர்கள் என்று கூறுகிற குடும்பங்களிலும் இந்த அவலங்கள் இடம்பெறத்தான் செய்கின்றன. ஆனால், சற்று வித்தியாசம். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்திலேயே கரு வளரத்தொடங்கிய உடனே பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. கண்டவுடன் அடுத்தபடியாக கருச்சிதைவு என்ற கொடிய அரக்கன் கைகளில் கர்த்தரால் உண்டான கர்ப்பத்தின் கனியைக் கொடுத்துவிடுகின்றனர்.
அரசாங்கம் இதற்கு கடுமையாக தடைவிதித்திருந்தாலும் அடுத்தவருக்கும் தெரியாமல் இதனைச் செய்துவிட்டு மவுனமாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் தற்காலத்தில் நிறைய உண்டு. கருச்சிதைவு செய்வதற்கு பற்பல காரணங்களையும் சொல்லி தமது தவறுகளை மறைப்பதற்கும் கிறிஸ்தவப் பெண்கள்கூட கற்றுக்கொண்டிருக்கின்றனர். இது எத்தனை துக்ககரமான காரியம்!
“கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என்று வாசிக்கிறோம் (சங்.127:4). இன்னும், “உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும்…” என்றும் எழுதப்பட்டுள்ளது (ஏசா.44:2). இப்படியிருக்கும்போது, தம் குழந்தைகள், முக்கியமாக பெண் குழந்தைகளின் விஷயத்தில் நாம் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். பெண்ணோ ஆணோ அது கர்த்தராலே அருளப்படுகிறது. ஒருபெண் குழந்தை சாகும்போது ஒரு குழந்தையை அல்ல. ஒரு பெண்ணை, ஒரு தாயை, ஒரு ஜெபவீராங்கனையை ஒரு ஊழியக்காரியை, ஒரு தேசத்தாயை நாம் இழக்கிறோம்.
ஆகையால் அன்புத் தாய்மாரே, சகோதரிகளே, ஒரு பெண் இவ்வுலகிலே தேவனுக்கென்று தன்னுடைய பங்கை ஓரளவாவது சரிவர நிறைவேற்றவேண்டுமானால், பாவம் நிறைந்த இவ்வுலகிலே முகங்கொடுக்கக்கூடிய சகல போராட்டங்களிலும் தேவநாமத்திற்கு மகிமையாக வெற்றிச் சிறக்கவேண்டுமாயின் அவளுடைய நலன் கர்ப்பத்திலேயே கவனிக்கப்படவேண்டும். குழந்தைப் பருவத்திலேயே அவள் பாதுகாக்கப்பட வேண்டும். தேவனுக்கென்று பரிசுத்த சந்ததியை உருவாக்குகின்ற ஒரு அழகிய பொற்பாத்திரமாகிய அவள். அன்பின் பிணைப்பிலே வளரவேண்டும்.
இந்த நாளிலே எரேமியா தீர்க்கதரிசி நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். “சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் வீடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்கவொட்டாதே. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்ட வரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீ ரைப்போல ஊற்றிவிடு” (புலம்.2:18,19).
தாய்மாரே. சகோதரிகளே ஒரு குடும்பமாக நாம் இணைத்து கொள்வோமா? தேவனுக்கென்று நாம் ஏதாவது செய்ய வேணடாமா? நமது கால்கள் முடங்கிப்போகும் முன்னதாக தேவனுக்கு முன்பாக நமது முழங்கால்களை முடக்குவோமாக. அர்த்த ஜாமங்களிலும் உட்கார்ந்திருந்து அரட்டை அடிப்பதை விடுத்து தேவசமுகத்தை நாடி ஓட நம்மை ஒப்புவிப்போமாக!
அன்று எஸ்தர் ராணி தன் இனத்தைக் காப்பாற்றுவதற்காக “நான் செத்தாலும் சாகிறேன்” என்று எழுந்துபோனாளே! அதுவும் சும்மாவல்ல, தன் இனத்தாரை உபவாசித்து, ஜெபிக்கும்படி கூறி விட்டுத்தான் சென்றாள். நாமோ நமது சொந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவதிலேயே எத்தனை ஜாக்கிரதை அற்றவர்களாக இருக்கிறோம். என் அருமையான ஒரு சிநேகிதி கூறுவாள். “இரா ஜாமங்களிலே யாரோ எழுப்புவதுபோல இருக்கும். உடனே நான் எழுந்து என் பிள்ளைகள் ஒவ்வொருவருடைய படுக்கையருகிலும் முழங்காற்படியிட்டு ஜெபிப்பேன். அதன்பின் நம் தேசத்துக் குழந்தைகளுக்காக ஜெபிப்பேன். அதன்பின்னர் நான் சமாதானத்தோடே நித்திரை செய்வேன்” என்றாள். ஜாமத்திலும் எழுந்து ஜெபிக்கின்ற ஜாமக்காரர் கர்த்தருக்குத் தேவை என்பதை அப்போதுதான் நானும் அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டேன். அந்த ஜாமக்காரக் கூட்டம் ஒன்று அவசரமாகத் தேவை. சகோதரிகளே, இக்கூட்டத்தியே இணைவீர்களா? பிரியமானவர்களே! தொலைக்காட்சியில், சினிமா பார்த்துவிட்டு நடுஜாமத்தில் படுக்கப்போகிறவர்கள் தேவனுக்கு உதவமுடியாது.
பிரியமானவர்களே! கர்ப்பவதிகளே! உங்கள் கர்ப்பத்தின் கனிமீது கரம்வைத்து ஜெபித்து கர்த்தரிடம் அரப்பணியுங்கள். தாய்மாரே! உங்கள் அன்பு செல்வங்களை, யாரை விழுங்கலாமோ என்று கெர்ச்சித்து அலைந்து திரியும் சிங்கத்தின் வாயிலிருந்து தப்புவிக்கும்படிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள். பெண்களே, உங்கள் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாயிருங்கள். இல்லாவிட்டால் பிஞ்சுமனங்கள், வெகுசீக்கிரத்தில் உடைந்து, மாறாத வடுக்களைப் பெற்றுவிடும். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம் இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம் (புலம்.3:40,41).