• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்தவர்களிடையே காணப்படும் ஒரு குறைபாடுதான், தேவனுடைய வார்த்தைக்கு கொடுக்க வேண்டிய உயர்ந்த இடத்தை கொடுக்காமல் மற்றவைகளுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் கொடுத்துவருவதாகும். அநேகமான சமயங்களில் ஆவிக்குரிய வாழ்வின் ஆழமற்ற தன்மையும், அசதியும், அலட்சியபோக்கும், அறியாமையுமே இதற்கான காரணமாய் அமைகின்றன. எனினும், தேவனுடைய வார்த்தையைவிட மற்றவைகளை உயர்வானதாக கருதுவது, தேவனுக்கு கீழ்ப்படியாமலிருக்கும் தன்மையினையே சுட்டிக்காட்டுவதாயுள்ளது.
இதற்குக் காரணம், கர்த்தர் எல்லாவற்றிற்கும் மேலாக தம்முடைய வார்த்தையையே உயர்த்தியுள்ளார். சங்கீதக்காரன் இதை அறிந்திருந்தமையால், “உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும். உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங்.138:2) என்று அறிக்கையிட்டான். கர்த்தர் எல்லாவற்றையும்விட தம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தியிருப்பது அது எல்லாவற்றிற்கும் மேலானதாக உயர்த்தப்பட்டுள்ளதையே அறியத்தருகின்றன. (ஆங்கில வேதாகமத்தில் இதன் அர்த்தம் சரியான விதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). சங்கீதக்காரன் இன்னுமொரு சந்தர்ப்பத்தில், கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது (119:89) என்று. அது எந்த அளவுக்கு உயர்வானது என்பதை நமக்கு அறியத்தருகிறார். எனவே தேவனுடைய வார்த்தையானது, நம்முடைய வாழ்வில் எவைகளுக்கெல்லாம் உயர்வானதாகக் கருதப்பட வேண்டுமென அறிந்திருக்கவேண்டியது அவசியமானதாகும்.
முதலாவதாக, சபையின் அதிகாரத்தைவிட உயர்வானதாக தேவனுடைய வார்த்தை கருதப்படவேண்டும். சபைக்கு ஓரளவுக்கு அதிகாரம் உண்டென்பது உண்மையாயினும், அதன் அதிகாரம் தேவனுடைய வார்த்தைக்குள்ள அதிகாரத்தைவிட மேலானதல்ல. காரணம், தேவனுடைய வார்த்தையிலிருந்து பெறப்பட்ட அதிகாரமே அதற்குண்டு. ஆனால், தேவனுடைய வார்த்தைமீது ஆதிக்கம் செலுத்த அதற்கு அதிகாரம் இல்லை. அது தேவவார்த்தையின் அதிகாரத்திற்கு அடிபணிந்து அதன் கட்டளைகளின்படி செயற்பட வேண்டும். மட்டுமல்ல, சபை வேதாகமத்தை உருவாக்கவில்லை. வேதாகமமே சபையை உருவாக்கிற்று. அதாவது, வேதாகமத்தின் வார்த்தைகள் பிரசங்கிக்கப்படும்போது இரட்சிக்கப்பட்டவர்களைக் கொண்டே சபை ஸ்தாபிக்கப்பட்டது.
மேலும், சபை தேவனுடைய வார்த்தையை எழுதவில்லை. மாறாக, அவை சபைக்கு தேவனால் அவருடைய தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்கள் ஊடாக உபதேசிக்கப்பட்டவையாகும். சபை தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை விட தாழ்வானது. எனவே தேவனுடைய வார்த்தைக்கு முரணானவைகளாயிருக்கும் சபையின் உபதேசங்களுக்கு அடிபணியத் தேவையில்லை.
சபையின் சட்டங்கள் மனுஷருடைய பாரம்பரியங்களாகவே உள்ளன. இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திலும், மதப்போதகர்கள் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து முன்னோர்களின் பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்தனர் (மாற்கு 7:8). இவர்கள், பாரம்பரியத்தை கைக்கொள்ளும்படி தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்குகிறார்கள் (7:9) என்றும், பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறார்கள் (7:13) என்றும் இயேசு தெரிவித்தார். இன்றும்கூட அநேக சபைகளில் இந் நிலைமையை நாம் காணலாம். தேவனுடைய வார்த்தைக்கு இடமேயில்லை. மனிதனுடைய உபதேசமே உயர்வானதாக கருதப்படுகிறது. ஆனால், தேவனுடைய பிள்ளைகளான நாம், அவருடைய வார்த்தையை உயர்வானதாக கருதி அதற்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுத்து, அதற்கு கீழ்ப்படியும் மக்களாக இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, சமய அனுபவங்களைவிட உயர்வானதாக தேவனுடைய வார்த்தை கருதப் படவேண்டும். இன்று அநேகர் தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட ரீதியான அசாதாரணமான அனுபவங்களை எல்லாவற்றிற்கும் மேலானதாக எண்ணி வருகின்றனர். இத்தகு அனுபவங்களைப் பெற்றவர்கள் இதைப்போன்ற அனுபவத்தை எல்லோரும் பெறவேண்டும். அப்போது மட்டுமே உண்மையாகவே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறமுடியும் என வாதிடுவதோடு, தேவனுடைய வார்த்தையையும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் விளக்குகின்றனர். இதனால் மனிதனுடைய அனுபவங்கள் தேவனுடைய வார்த்தையைவிட உயர்வானதாகக் கருதப்படுகிறது. தேவனுடைய வார்த்தையோ அலட்சியப்படுத்தப்பட்டு விடுகிறது.
தேவனுடனான உறவில், தனிப்பட்ட ரீதியாக அனுபவங்களைப் பெற்றிடலாம் என்பது உண்மையாயினும், நம் அனுபவம், முழு உலகுக்குமான அடிப்படையாய் அமையாது. உதாரணமாக, இரட்சிப்பின் அனுபவம் எல்லோருக்குமே பவுலின் தமஸ்கு வீதி அனுபவத்தைப்போல் ஏற்படுவதொன்றல்ல. அதேபோல எரேமியாவுக்கு தரிசனத்தில் வடக்குப் பக்கமாக சரிந்திருந்த பானையினூடாக வடபுறத்தில் இருந்து எதிரிகள் வருவதாக தேவன் கூறியதை வைத்துக்கொண்டு, நாமும், கனவில் பானையொன்றைக் கண்டால், எதிரிகள் வருகிறார்கள் என அர்த்தம்கொள்வதும், எதிரிகள் வருவதாக இருந்தால் கர்த்தர் பானையின் தரிசனத்தைக் காட்டவேண்டும் என்றும் வாதிடுவது தவறானதாகும். தேவன் ஒவ்வொரு மனிதனுடனும் செயற்படும் விதம் வித்தியாசமானது.
பேதுருவை தம்முடைய தூதர்களை அனுப்பி சிறைச்சாலையில் இருந்து விடுவித்த தேவன், யாக்கோபை அவ்வாறு விடுவிக்காமல் இரத்த சாட்சியாக மரிக்க அனுமதித்தார். எனவே தனிப்பட்ட ரீதியான அனுபவங்களை வைத்துக்கொண்டு, அதன்படி அனைவருக்கும் அத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டுமென போதித்தல் தவறானது. மாறாக, தேவனுடைய வார்த்தை போதிக்கும்வண்ணமாக நாம் வாழவேண்டும். நம் அனுபவத்திற்கல்ல, தேவனுடைய வார்த்தைக்கே முதலிடம் கொடுப்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும்.
நமது அனுபவங்கள் அனைத்தையும் நாம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். மார்ட்டின் லூத்தர் அறிவுறுத்தியதுபோல, “வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டதைத்தவிர வேறெதையும் நாம் விசுவாசிக்க வேண்டியதில்லை”. இன்று அநேகர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆதாரமாய்க் கொண்டு, புதியபுதிய சபைகளை உருவாக்குகின்றனர். இவர்களுக்கு, எல்லாருக்கும் பொதுவானதாயுள்ள வேதாகமத்தைவிட தனிமனிதனுடைய அனுபவமே முக்கியமானதாக உள்ளது.
இத்தகைய குழுக்கள் நாளடைவில் கள்ளப் போதகங்களாக மாறியதை சபைச்சரித்திரம் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. எனவே நாம் எல்லாவற்றிற்கும் மேலாக வேதாகமத்தையே உயர்வாகக் கருதி அதன் கட்டளைகளின்படியே வாழவேண்டும். தேவனுடைய வார்த்தையைவிட உயர்வானதாக வேறெதையும் நம்மால் கருதமுடியாது. காரணம் தேவன் தமது வார்த்தையையே எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தியுள்ளார்.
சத்தியவசன வாசகர்கள் எல்லாவற்றையும்விட தேவனுடைய வார்த்தையைமட்டுமே உயர்வானதாக கருத தேவன்தாமே தன்னுடைய ஆவியானவர் மூலமாக சகல சத்தியத்துக்குள்ளும் அவர்களை வழிநடத்துவாராக.