• Dr.தியோடர் எச்.எஃப். •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)
இஸ்ரவேல் மேல் வரப்போகிற தாக்குதல்கள்

இஸ்ரவேலின் மூன்றாம் ஆலயம் கட்டப்பட வேண்டிய ஸ்தலமாகிய எருசலேம், சரித்திர காலமெல்லாம் அடிக்கடி முற்றுகை போடப்பட்ட இடமாயிருந்தது. கடந்த 3000 வருடங்களில், அதாவது, தாவீதின் காலத்திலிருந்து, எருசலேம் 46 வித்தியாசமான முற்றுகைகளினாலும், சிறைப் பிடிப்புக்களினாலும், அழிவுகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. சகரியாமூலம் வரப்போகிற ஒரு நாளைக் குறித்துத் தேவன் உரைத்ததாவது “அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்: பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்” (சகரியா 12:3).
எசேக்கியேல் 38,39ஆம் அதிகாரங்களில், எருசலேமுக்கு விரோதமாக வடதிசையிலிருந்து ஒரு ராஜா எழும்பிவந்து போடவிருக்கும் முற்றுகையைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், மேற் கூறிய சகரியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும். ஏனென்றால், அந்த ராஜ்ஜியம், எருசலேமைப் பிடிக்க முயற்சிக்கும்போது, அது அழிந்துபோகும்.
சகரியாவின் தீர்க்கதரிசனம்
உபத்திரவகாலத்தில் எருசலேமுக்கு விரோதமாகப் போடப்படும் கடைசி முற்றுகையைக் குறித்தும் சகரியா எழுதிவைத்திருக்கிறான்.
“இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது. உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்: நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தைவிட்டு அறுப்புண்டு போவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்த நாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்பொழுது மகாபெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடு மையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்” (சகரியா 14:1-5).
எல்லா தேசங்களும் எருசலேமைத் தாக்கும்படி கூடிச்சேர்வார்கள். இதோ, எருசலேமின் ஜனங்களெல்லாரும் முற்றுமாய் நிர்மூலமாக்கப்படுவார்கள் என்பதுபோல் காணப்படும்போது, ஆண்டவர் அவர்களைத் தப்புவிக்கும்படி இடைபடுவார்.
யோவேலின் தீர்க்கதரிசனம்
உபத்திரவகாலத்தில், உலகத்தின் ஜாதிகள் எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்படி கூடும் போது எப்படி இருக்கும், என்பதைப்பற்றி யோவேலின் புஸ்தகத்திலும் விவரிக்கப்பட்டிருக்கிறது:
“இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்: யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள். உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள். கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக. ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். பயிர் முதிர்ந்தது. அரிவாளை நீட்டி அறுங்கள். வந்து இறங்குங்கள்: ஆலை நிரம்பியிருக்கிறது. ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது. நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது” (யோவேல். 3:9-14).
இஸ்ரவேலை உபத்திரவப்படுத்துகிறவர்களை நியாயந்தீர்ப்பதற்கான வழிகளைத் தேவன் வைத்திருக்கிறார். இஸ்ரவேலர் செய்கிற எல்லாக் காரியங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவையல்ல. ஆனால், தேவன், தம் வார்த்தையின் மூலமாய் இஸ்ரவேலுக்கு நன்மை செய்கிறவர்களை ஆசீர்வதிக்கவும், அவர்களை உபத்திரவப் படுத்துகிறவர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொடாமல் இருக்கவும், தம்மைத்தாமே கட்டுப்படுத்தியிருக்கிறார். ஏறக்குறைய 4000 வருஷங்களுக்கு முன் தேவன் ஆபிரகாமுக்கு இவ்விதமாக வாக்குக் கொடுத்தார்: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி.12:2,3), யூதர்கள், ஆபிரகாமின் சந்ததியார், ஆகையால் இந்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு சரியாய்ப் பொருந்துகிறது.
சகரியா தீர்க்கதரிசனப் புத்தகத்திலும் யோவேல் தீர்க்கதரிசனப் புத்தகத்திலும் முன்னறிவிக்கப்பட்டிருப்பதுபோல் தேவன் உலகத்திலுள்ள ஜாதிகளை நியாயந்தீர்ப்பதற்கு அவர்களைக் கூட்டிச்சேர்ப்பார். வெளி.16:12-16 வசனங்களில், தேவன், உலக முழுவதிலுமுள்ள ஜாதிகள் எருசலேமுக்கு விரோதமாக எப்படிக் கூடிச்சேரும்படி செய்வார் என்று வெளிப்படுத்துகிறது.
“ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அப்பொழுது வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்பு தங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்: அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது. இதோ, திருடனைப் போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்”.
எகிப்தையும், அர்மகெதோனையும் ஒப்பிடலாம்:
இஸ்ரவேலின் வரலாற்றில் மற்றொரு சமயத்தில், தேவன் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற முன் ஒருபோதும் கையாளாத வழியை உபயோகித்தார். இஸ்ரவேலரை எகிப்தியர் தங்கள் தேசத்திலிருந்து, கானான் தேசத்திற்கு திரும்பிப்போக அனுமதிக்கவில்லை. இஸ்ரவேலரை அடிமைகளாக்கியிருந்தார்கள். ஆகையால், வாசலின் நிலைக்கால்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்படாத ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தலைப்பிள்ளையையும் தேவன் கொன்றுபோடும்வரை எகிப்தியர் இஸ்ரவேலரைப் போகவிடாமல் இருந்தார்கள் (யாத்.12).
அதன்பின், எகிப்தியர் இஸ்ரவேலரைப் போகும்படி துரிதப்படுத்தினார்கள். ஆனால், சில நாட்களுக்குப் பின் எகிப்தியர் மனம் மாறியது. பார்வோன், இஸ்ரவேல் ஜனங்களைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வரும்படி தன் சேனைகளுக்குக் கட்டளை கொடுத்தான். அவர்கள் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து செங்கடல் அருகில் அவர்களைக் கூட்டிச் சேர்த்தார்கள். இஸ்ரவேலர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து, கடலைக் கடந்து சென்றதைப் பார்த்து பார்வோனும் அவன் சேனைகளும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல முயன்றார்கள். அப்பொழுது தேவன் பார்வேனையும் அவன் சேனைகளையும் கடலில் மூழ்கடித்து, ஆக்கினைக்குட்படுத்தினார். இதுவே எகிப்தியருடைய வல்லமையை முறிப்பதற்கு “தேவன்” கையாண்ட வழியாகும். இஸ்ரவேலரை மறுபடியும் உலகத்தின் ஜாதிகளினின்று தப்புவிக்கவேண்டிய வல்லமை தேவனுக்கு இருக்கிறது. உபத்திரவ காலத்தின் முடிவில் யுத்தம் நடைபெறவிருக்கும் இடந்தான் அர்மகெதோன் (வெளி. 16:16).
அர்மகெதோன் யுத்தத்தில் இஸ்ரவேல் ஜாதியார் அநேகர் மரிக்கவேண்டியிருந்தாலும், அவர்கள் அடியோடு அழிந்துபோக மாட்டார்கள். தேவன் எரேமியாவிற்கு வாக்குப்பண்ணியிருப்பதாவது: “ஐயோ” அந்த நாள் பெரியது; அதைப் போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும், அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான். அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை” (எரே.30:7,8). தேவன் தன் ஜனத்தை, உலக ஜாதிகளின் தாக்குதலிலிருந்து தப்புவிக்கப் போகிறார்.
ஆனால், உபத்திரவகாலத்தின் நாட்கள் மிகவும் பயங்கரமும், கொடிய கலக்கமும் நிறைந்த நாட்களாய் இருக்கப்போகின்றன. யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான்: “சூரியனும் சந்திரனும் இருண்டு போகும். நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும். கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்” (யோவேல். 3:15,16).
இஸ்ரவேலின் செல்வம் இச்சிக்கப்பட்டது:
உலக நாடுகள் இஸ்ரவேலின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. இஸ்ரவேல் நாட்டில் கிடைக்கும் ஏராளமான தாதுப்பொருட்களும் (Minerals) எண்ணெய்ப் பொருட்களும் கூடிய செல்வத்தினால் மட்டுமல்ல, இஸ்ரவேல் நாடு மத்திய தரைக்கடலுக்கு அருகில் யுத்த உபாயங்களுக்கு முக்கியமான, இடமாய் (strategic location) இருப்பதால், மற்ற தேசங்கள் இந்நாட்டைப் பற்றிக்கொள்ள பேராவல் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் எல்லாம் உபத்திரவ காலத்தின் முடிவில் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கூடுவார்களானாலும், ஆண்டவர் இயேசுகிறிஸ்து உலகத்திற்குத் திரும்பவரும்போது, இஸ்ரவேலர் தப்புவிக்கப்படுவார்கள். அந்நாட்களில் “மிருகம்” என்று அழைக்கப்படும் அந்திக்கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒரே அகில உலக ராஜ்ஜியம் இயங்கும். கள்ளத் தீர்க்கதரிசியின் வற்புறுத்தலால் அந்திக்கிறிஸ்து வணங்கப்படுவான்.
ஆனால், பரலோகத்தின் சேனைகளுடன் ஆண்டவர் இயேசுகிறிஸ்து வரும்போது வெளி. 19:19,20ஆம் வசனங்களில் எழுதியிருப்பது நிறைவேறும்: “பின்பு மிருகமும் பூமியின் இராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும். அவருடைய சேனையோடும் யுத்தம் பண்ணும்படிக்குக் கூடி வரக்கண்டேன்: அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம் போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்”.
இஸ்ரவேலருக்கு விரோதமான எல்லா தேசங்களும் ஒன்று கூடிவர, அர்மகெதோன் என்னும் இடத்தில் யுத்தம் நடைபெறும். அந்த யுத்தத்துடன் உபத்திரவ காலம் முடிவடையும். அந்த தேசங்கள் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் யுத்த சம்பந்தமான காரணங்களினாலும் இஸ்ரவேல் தேசத்தினைக் கைப்பற்றப் பேராவல் கொள்வார்கள்.
இஸ்ரவேல் தேசம் அழிக்கப்பட்டுவிடும்போல் தோன்றும்போது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திரும்பி உலகத்திற்கு வந்து அவருக்கு விரோதமாய் எழும்பிக் கலகம் செய்த அனைத்து ஜனங்களையும் வெகுவாய்த் தண்டிப்பார். அதன்பின் அவர் தம்முடைய இராஜ்ஜியத்தை உலகத்திலே ஸ்தாபித்து ஆயிரம் வருஷங்கள் அரசாளுவார்.
(தொடரும்)
மொழியாக்கம்: Bro. A.Manuel
உங்களுக்குத் தெரியுமா?
நாம் கர்த்தருக்காக எத்தனையோ காரியங்களைச் செய்யலாம். ஆனால் நம்மை அவருக்கு முன்பாக சுத்தமாய் காத்துக்கொள்ளுவதே அவர் நமக்காக காட்டிய அன்புக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.