• Bro.வில்லியம் லா •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)
இன்று நம்மில் அநேகர் சிறந்த கிறிஸ்தவர்களாக இருக்க விரும்புகிறோம். அதேநேரத்தில், நாம் காத்தருக்குப் பிரியமானதைக் குறித்து சிந்திக்காமலும் இருக்கிறோம். இது ஏனோ?
நம்முடைய வாழ்க்கை முழுமையிலும் கர்த்தரை மகிழ்விக்க நாம் முயற்சிக்கவேண்டும். இன்று நாம் அன்றாடம் செய்கிற சகலவிதமான ஒவ்வொரு காரியத்திலும் நாம் கர்த்தரை மகிழ்விக்க வேண்டியது அவசியமா? நாம் நல்லவனாக இருக்கமட்டும் முயற்சித்து கர்த்தரை மகிழ்விக்க விரும்பாமல் இருப்பது சரியானதா? இதைக் குறித்து இனி கவனிக்கப் போகின்றோம்.
நாம் ஏன் கர்த்தரை மகிழ்விக்கவேண்டும்?
இதற்கு பல காரணங்கள் உண்டு. சிலவற்றை நீங்களும் அறிவீர்கள். இவ்வுலகத்தில் நமது வாழ்வு மிக குறுகியதாயும், அது மேலும் அநேக கஷ்டங்களைக் கொண்டிருப்பதினாலும் அவரை நாம் மகிழ்விக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். இன்று உங்கள் வாழ்வு எவ்வளவு குறுகியது என்பதைக் குறித்து ஒருவேளை நீங்கள் அதிகம் சிந்தித்திருக்கமாட்டீர்கள். உங்கள் வாழ்வின் நீளத்தை இந்த உலகின் வயதோடு, அல்லது நூறு அல்லது இருநாறு ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் நீங்கள் இந்த உலகத்தில் அதிக நாள் இருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்வீர்கள். அப்படி ஒருவரும் உணருவதில்லை. நமது வாழ்வுகள் எல்லாம் குறுகியதாயிருக்கின்றன. மிக வயதானவர்களின் வாழ்வுகூட இத்தகையதே. இதனுடைய கருத்து என்ன என்பதை நீங்கள் காண்கிறீர்களா?
தேவனை மகிழ்விக்கும்படிக்கு ஒருவரும் அதிக காலம் வாழ்வதில்லை என்பதே இதனுடைய அர்த்தமாகும். குறுகிய வாழ்நாள் கூறுவது யாதெனில் கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அவற்றை செய்வதின்மூலம் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நிரப்பவேண்டும் என்பதே! ஆகவே, வாழ்வை மற்ற காரியங்களில் வீணாக்க முடியாத அளவு அது வெகு குறுகியது.
வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய எல்லா உபத்திரவங்களைக் குறித்தும் சிந்திப்போம். அதிக மகிழ்ச்சியான நபருக்குங்கூட உபத்திரவம் நேரிடுவதுண்டு. விபத்துக்களும்கூட நம் யாவருக்கும் ஏற்படுபவையே. அவ்வப்போது நாம் வியாதிப்படுகிறோம். நாம் வளர்ந்து முதியவர்களாகும்போது, நம் சரீர உடல் அடிக்கடி பெலவீனப்படுகிறது. நம் கண் பார்வை மங்குகிறது. நாம் செவிடாகிறோம். முன்போல நாம் சுலபமாக நடமாடமுடியவில்லை.
அதோடு நாம் அதிகமாய் நேசித்தவர்களுடைய மரணம், ஏமாற்றம், தோல்விகள், தனிமை என நாம் அனைவரும் ஒருங்கே அனுபவிக்கிற துயரங்களும் இருக்கின்றன. நம் வாழ்க்கையைக் குறித்து இவ்வனுபவங்கள் நமக்கு எதைப் போதிக்கின்றன? நம் வாழ்வு குறுகியது மட்டுமல்ல, பெலவீனமானது சுலபத்தில் நிலைகுலையக்கூடியது என்பதையே நமக்குக் காட்டுகிறது.
நாளை நமக்கு என்ன நேரிடும் என்று நம்மால் சொல்லமுடியாது. உறுதியின்மையும் நிச்சயமில்லாமையும் நம் யாவரையும் சூழ்ந்திருக்கிறது. ஆகையால் நாம் இன்று தேவனை மகிழ்விக்க உறுதியாய் இருக்கவேண்டும். நாளையத்தினத்தைப் பற்றி நமக்கு உறுதியே இல்லை. நாம் இப்பொழுது கர்த்தரை சேவித்து அவரிடம் அன்புகூரவேண்டும்.
சற்று நிறுத்தி உமது சொந்த வாழ்க்கை இன்று உமக்கு என்ன சொல்லுகிறது என்பதைக் கவனிக்கவும். நமது வாழ்வு மிக குறுகியது. வாழ்வு நிலையற்றது. ஆகவே நம்முடைய குறுகிய வாழ்வானது கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதில் நிறைந்ததாகக் காணப்படவேண்டும். அதாவது, நம் நிலையற்ற வாழ்வு எப்பொழுதும் கர்த்தரை மகிழ்விக்கக்கூடியதாய் இருக்கும்படி நாம் உறுதி செய்யவேண்டும்.
நேர்மையான நல்வாழ்க்கை நடத்துவதின் முக்கியத்துவத்தை ஒருவேளை நீங்கள் உணரலாம். நம்மால் முடிந்த அளவு சிறப்பானதையே செய்யவேண்டும். நாம் நல்ல முறையில் நடந்து மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஆனால், கர்த்தரை மகிழ்விப்பதைப் பற்றி ஏன் இவ்வளவு உரையாடல்? நிச்சயமாக நல்வாழ்க்கை நடத்துவதென்பது மட்டும் போதுமா?
இவ்வினாக்களுக்கு ஒரே விடை உண்டு, நம் வாழ்வு குறுகினது. ஆனால், நாம் இறந்த பிறகு என்ன நிகழ்கிறது? நமது சரீர மரணம் நம் வாழ்வின் முடிவல்ல; நம் உடல் மரித்த பிறகும் ஆத்துமா வாழ்ந்துகொண்டே இருக்கிறது. நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய கடைசி நாள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. விசுவாசிகளுடைய ஆத்துமாக்களும்கூட ஒரு நியாயத்தீர்ப்புக்கு காத்திருக்கின்றன. விசுவாசிகள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரி 5:10இல் விசுவாசிகளோடு சொல்லுகிறதாவது: “ஏனெனில், நாம் அனைவரும் கிறிஸ்துவின் நீதிமன்றத்தில் நின்றாகவேண்டும். அங்கே நம்மைப் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்படும். அப்பொழுது ஒவ்வொருவனும் தான் இந்த உடலோடிருக்கையில் செய்த நன்மைத் தீமைக்கு ஏற்றவாறு பலனைப் பெறுவான்.” எல்லா விசுவாசிகளும் நரகத்தினின்று மீட்கப்படுவர் என்றாலும் விசுவாசிகளும்கூட அவர்கள் செய்த காரியத்திற்காக நியாயந்தீர்க்கப்படுவர். அவிசுவாசிகளும்கூட நியாயந்தீர்க்கப்பட்டு நீதியாய் நரகத்திற்கென்று தீர்மானிக்கப்படுவர். ஏனெனில், அவர்கள் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பாமலும் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் இல்லாமலும் போனார்கள்.
இந்த உலகத்திற்காக மட்டுமல்ல; முடிவில்லாத வாழ்வுக்கென்றும் கர்த்தர் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனாலும் அந்த முடிவில்லா வாழ்வில் நம் மகிழ்ச்சியோ அல்லது வேதனையோ இந்தத் தற்கால உலகத்தில் நாம் வாழும் விதத்தையே சார்ந்திருக்கிறது.
கர்த்தர் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். அதேபோல் நாமும் அவரிடத்தில் அன்புகூருவதால் நாம் கர்த்தரோடு என்றென்றுமாக வாழ்வோம். இப்போது கர்த்தருக்கென்று செலவிட நமக்கு நேரமில்லாவிட்டால் என்றென்றும் கர்த்தரிடமிருந்து பிரிந்துவாழ வேண்டியதாயிருக்கும்.
இவை யாவும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள். நம்முடைய மானிட அளவின்படி நல்வாழ்வு வாழ்வது என்பது மட்டும் போதாது. ஒருநாளிலே கர்த்தர் நம்முடைய குறியளவின்படி நியாயந்தீர்க்காமல் அவரது குறியளவின்படியே நியாயந்தீர்ப்பார்.
கரத்தர் ஒருபோதும் தவறு செய்யமாட்டார். பூரணமான நன்மை அல்லாத ஒன்றையும் கர்த்தர் ஒருபோதும் செய்யமாட்டார். அத்தகைய குறியளவை நம் ஒருவராலும் அடைய முடியாது. கர்த்தருடைய குறியளவின்படி வாழத்தவறுவது பாவமே, நாம் அனைவரும் பாவஞ்செய்கிறோம்! கர்த்தர் பூரணமானவரானதால் பாவத்தைத் தண்டிக்கவேண்டும்.
பாவத்தின் தண்டனையாக இயேசுகிறிஸ்து சிலுவையில் பாவிகளுக்குப் பதிலாக பாடுபட்டார். ஆகவே தங்கள் பாவங்களை நீக்கும்படி அவரிடத்தில் கேட்கிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு பாவங்களை மன்னிப்பார். தேவனுடைய பார்வையில் அவர்களைக் குற்றமற்ற நீதிமான்களாக்குவார். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்பட்டவர்களாக பாவத்திலிருந்து விடுதலையடைந்து எப்பொழுதும் தேவனை மகிழ்விக்க விரும்புவார்கள்.
கர்த்தரிடம் நாம் கொண்டிற்கும் அன்புக்கும் ஜெபத்திற்கும் இடையே உள்ள தொடர்பு
அன்பு, வளரும் தன்மையுடைய ஒன்றாகும். ஒருவரையொருவர் நேசிக்கின்ற மக்கள் ஒருவரிலொருவர் அன்புகூருவதில் அதிகமதிகமாய் வளர்ந்து வருவர். மேலும் விசுவாசிகள் கர்த்தரைப் பிரியப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமெனில் அன்புகூருவதில் அவர்கள் வளரவேண்டும். கர்த்தரிடம் விசுவாசிகள் கொள்ளும் அன்பில் வளருவதற்கான வழி ஜெபமாகிய வழியே!
தேவன் எத்தனை பெரியவர்! அதிசயமானவர்! என்று சொல்லும்படியாகவே கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிறார்கள். அவர்கள் கர்த்தரிடம் அன்புகூருகிறார்கள் என்பதை அவர்கள் ஜெபமே காட்டுகிறது. ஜெபம் பண்ணுகையில் அவர்கள் கர்த்தரிடம் கொண்டுள்ள அன்பு வளருகிறது. கர்த்தரிடம் நாம் அன்புகூருவதால்தான் ஜெபம் ஆரம்பிக்கிறது. ஆக தொடர்ந்து ஜெபம் பண்ணுவதாலேயே தேவனிடமான நமது அன்பும் அதிகமாகிறது.
திருமறையில் அதிகமாக ஜெபம்பண்ணிய சிலரைப் பற்றிச் சிந்தியுங்கள்! லூக்கா சுவிசேஷத்தில் அன்னாளைக் குறித்து வாசிக்கிறோம். குழந்தையாகிய இயேசு தனது பெற்றோர்களால் எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, அன்னாள் அங்கே இருந்தாள். லூக்கா 2:37,38 இல் அன்னாள் இரவும் பகலும் ஜெபம் பண்ணி கர்த்தரைச் சேவித்தாள் என்று வாசிக்கிறோம். அவள் இயேசுவைக் கண்டபோது. கர்த்தருக்கு நன்றி செலுத்தி எருசலேமிலிருந்த மக்களுக்கு இயேசுவைக் குறித்து கூறினாள். அன்னாள் அடிக்கடி ஜெபம் பண்ணினவள். அவள் ஜெபித்துக் கொண்டே வந்ததினால் கர்த்தரிடம் அவள் கொண்ட அன்பு வளர்ந்தது. “கர்த்தர் இவ்வுலகத்திற்கு இயேசுகிறிஸ்துவை அனுப்பினார்” என்று அறிந்து பூரித்தாள். தேவனிடமான அன்னாளின் அன்பு ஜெபம் பண்ணினதினால்தான் வளர்ந்தது.
அப்போஸ்தலனாகிய பவுலைக் குறித்து சிந்திப்போம். ஜெபத்தில் அவர், அதிகநேரம் செலவிட்ட மற்றொரு கிறிஸ்தவனாக இருந்தார். பவுல் தன் வாழ்க்கைப் பாதையை அடிக்கடி கஷ்டமானதும் கடினமானதுமாக கண்டார். பிலிப்பி என்னும் இடத்தில் ஒருசமயம் பவுலும் அவரது நண்பனாகிய சீலாவும் ஒருவனைக் குணப்படுத்தினதினால் தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அப்படியிருந்தும் (அப்.15:25ல்) நடுராத்திரியில் பவுலும் சீலாவும் தேவனைத் துதித்துப் பாடி ஜெபித்தார்கள்.
தண்டிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இருந்தாலும்கூட அவர்கள் தேவனைத் துதித்தார்கள். இங்கு அவர்கள் கர்த்தரிடம் கொண்ட அன்புக்கும் ஜெபத்திற்குமிடையே உள்ள தொடர்பைக் காண்கிறோம். அவர்கள் தேவனுக்காக சேவை செய்ய விரும்பினார்கள். ஆனால், அவர்கள் ஜெபித்தார்கள். அதிகமதிகமாக அவர்கள் ஜெபித்து அதிகமதிகமாக கர்த்தரிடம் அன்புகொண்டு அவருக்குச் சேவை செய்ய விரும்பினார்கள். ஆனால், அவர்கள் ஜெபித்தார்கள். எந்தளவுக்கு அதிகமாக சேவை செய்தார்களோ அந்தளவுக்கு அவர்கள் ஜெபித்தார்கள்.
நாம் எப்படி ஜெபிக்கவேண்டும்?
ஜெபத்தைக் குறித்து ஒரு சில ஆலோசனைகளைக் கூறுகிறேன். இது வெறும் ஆலோசனைத்தான். ஆனால் இதனை அநேகர் மிக பிரயோஜனமானது என சொல்லக்கக்கூடும்.
முதலாவது, உங்கள் எல்லா ஒழுங்கான ஜெப நேரங்களுக்கும் ஒரே இடத்தை உபயோகிக்க முயற்சிக்கவேண்டும். ஒரு இடம் மாற்றத்தைக் காட்டிலும் பரிசுத்தமானது என்பதற்காக அல்ல. நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கலாம். ஆனால், ஒழுங்கான ஜெபவேளைகளுக்கு ஒரே இடத்தை உபயோகிப்பது நமக்கு உதவியாயிருக்கலாம்.
ஒருகுறிப்பிட்ட இடம் காலப்போக்கில் ஒரு சிறப்பான இடமாக கருதப்படலாம். அவ்விடத்திலிருக்கும்போது நாமே நம்மைக் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்கு தயாராக்குவதற்கு அது உதவியாய் அமையலாம். இதேவிதமாகவே, ஜெபத்திற்கான ஒரு சிறப்பான இடம் ஜெபிக்க நம்மைத் தயாராக்குவதற்கு உதவியாயிருக்கும்.
இரண்டாவதாக, முடியுமானால் ஒருநாளிலே ஜெபிப்பதற்குக் குறிப்பிட்ட நேரங்களை வைத்துக் கொள்ளவேண்டும். நாம் செய்கின்ற காரியங்களின் மூலமே நம் பழக்கங்கள் அமைகின்றன. எல்லா பழக்கங்களும் தீமையானதல்ல. ஒரு வேளை ஒவ்வொரு நாளும் உண்ணுவதற்கென உங்களுக்குக் குறிபிட்ட நேரங்கள் இருக்கலாம். இதேவிதமாக, ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்ணுவதற்கென குறிப்பிட்ட நேரங்கள் இருந்தால் உங்களுக்கு உதவியாயிருக்கும். அதிகாலையில் அல்லது உறங்குவதற்கு முன் ஜெபிக்கலாம். கிறிஸ்தவர்கள் எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம். அதுபோலவே எந்த இடத்திலிருந்தும் ஜெபிக்கலாம். ஆனால், ஜெபிப்பதற்கு நமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்குமேயானால் அது அதிக உதவியாயிருக்கும்.
மூன்றாவதாக, ஜெபிக்கும்போது அவசரம் இல்லாமல் ஜெபிக்க முயற்சிக்கவேண்டும். தேவனோடு ஒரு சிறப்பான முறையில் தனிமையாய் இருக்கப்போவதை ஞாபகத்தில் வைக்கவேண்டும். கர்த்தரிடம் பேசவருகிற நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். சாதாரண சிந்தனைகளிலிருந்து மனதைச் சுத்தம் செய்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெபத்தில் கர்த்தரின் முன்னிலையில் நாம் இருக்கிறோம்.
நான்காவதாக, ஜெபம் செய்யத் தொடங்கும்போது தேவன் யார் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். அவர் எல்லாவற்றையுங்காட்டிலும் மிகப் பெரியவர். எல்லா இடங்களிலும் இருக்கிறவர். அவரது பரிசுத்தம், இரக்கம், சர்வவல்லமை, மகிமை ஆகிய இவைகளை நாம் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தை நம்மை மகிழ்ச்சியாக்குவதோடு அவரில் கொண்டிருக்கிற நம் அன்பை இன்னும் ஆழப்படுத்தும். அப்பொழுது நாம் இன்னும் அதிகமதிகமாய் கர்த்தரை மகிழ்விக்க விரும்புவோம்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார் என்பதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அவர் தாமே பாவிகளை இரட்சிக்க இவ்வுலகத்திற்கு வந்தவர். பாவங்களுக்காக அவர் மரித்து மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தபடியால் இவர் மூலமாய்த் தம்மிடம் வருகிற அனைவரையும் தேவன் ஏற்றுக்கொள்ளுகிறார்.
அந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். அப்படி நாம் சிந்திப்போமானால் அவரை அதிகமாய் நேசிக்கவும் தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவருக்குச் சேவை செய்யவும் நம்மை விரும்பச் செய்யும். நாமும் அன்பினால் அவருக்கு சேவையாற்றுவோம்.
கடைசியாக, ஜெபத்தில் நீங்கள் வேதாகமத்தைப் பயன்படுத்தவேண்டும். ஜெபமும் வேத வாசிப்பும் இணைந்தே செயல்படுகின்றன. வேதத்திலிருந்து தேவனைப்பற்றி நீங்கள் ஒரு புதிய காரியத்தைக் கற்றுக்கொள்ளும்போது நீங்கள் கற்றுக்கொண்டதை உணர்ந்து ஜெபியுங்கள். நீங்கள் அவரைக்குறித்து எதைப் புரிந்துகொண்டீர்களோ அதற்காக கர்த்தரைத் துதியுங்கள்! உங்கள் வேத வாசிப்புதான், உங்களை ஜெபிப்பதிலும் தேவ அன்பிலும் வழிநடத்தும்.
சங்கீதம் 57:7இல் தாவீது: “என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது” என்கிறார். தேவனை மகிழ்விப்பதில் தனது இருதயம் உறுதியாயிருக்கிறது என்றே சொல்லுகிறான். அதனால்தான் 7ஆம் வசனத்தில் நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” எனக் கூறுகிறார். அவன் தேவனை மகிழ்விக்கவே விரும்பினான். ஆகையால் அவன் கர்த்தரைத் துதிக்கவும் விரும்பினான். எந்த அளவுக்கு அவரிடம் அதிகமாய் ஜெபித்து அவரைத் துதித்தானோ அந்த அளவுக்கு கர்த்தரை மகிழ்விக்கவும் விரும்பினான். தாவீது ஒரு மகாபெரிய அரசன். அவன் அதிக அலுவல்களை உடையவராகவும் அதிகம் சிந்திக்க வேண்டியவராகவும் இருந்தார். ஒருவேளை நீங்களும்கூட அதிக அலுவல்களை உடையவர்களாய் இருக்கலாம்.
அதற்காகவேதான் தாவீதைப்போல் நீங்களும் அதிகமாய் தேவனை நோக்கி ஜெபிக்கவேண்டும். எந்தவித அவசர அலுவல்களானாலும், நீங்கள் ஜெபிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்வீர்களானால், நீங்கள் கர்த்தரிடம் அன்புகூருவதில் வளர்ந்து வருவதையும் அவருக்கு உங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சேவை செய்வதையும் விரும்புவீர்கள். தேவஅன்பிலும் ஜெபத்திலும் நாம் வளருவோமாக! அப்பொழுது நாம் சிறந்த கிறிஸ்தவராக இருப்போம்.