• கிறிஸ்டியன் வியாஸ் •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

வேதாகமத்தில் கண்ணீர் பற்றி அடிக்கடி கூறப்பட்டுள்ளது. கண்ணீர் துருத்தி ஒரே ஒரு இடத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுபற்றிய கருத்து, வேதாகமத்தின் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கீதம் 56:8இல் தாவீது, என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும் என்று கூறியுள்ளான். இந்த சங்கீதத்தின் தலைப்பில், பெலிஸ் தர் தாவீதை காத்தூரில் பிடித்தபோது … என உள்ளது. தாவீது இந்த சங்கீதத்தை சவுல் இராஜாவிற்கு பயந்து ஓடினபொழுது, பொல்லாத எதிரிகளான பெலிஸ்தர்களினால் பிடிக்கப்பட்டபொழுது எழுதினதாகும். தாவீது, இஸ்ரவேலுக்கு ராஜாவாக ஏற்கனவே அபிஷேகம் பண்ணப்பட்டுவிட்டார். ஆனால், சிம்மாசனத்தில் அமரவில்லை. இந்த சங்கீதம் எழுதப்பட்ட பிண்ணனியம், தாவீதுக்கு மிகவும் இக்கட்டான காலத்தில் எழுதப்பட்டது என்று தெளிவாகின்றது. ஆகவே அவனது விண்ணப்பங்களும் கண்ணீர்களும் இதில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சங்கீதத்தில் தாவீதின், நம்பிக்கையற்ற தன்மையின் ஆழம் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. “மனுஷன் என்னை விழுங்கப் பார்க்கிறான் … என்னை ஒடுக்குகிறான். என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப் பார்க்கிறார்கள் … நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள் … அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள்” (வச.1,2,5,6). இன்றுகூட தேவனுடைய பிள்ளைகளுக்கு, அப்படிப்பட்ட அனுபவங்கள் நடந்தேறி வருகின்றன, ஒரு கிறிஸ்தவனின் ஜெபம் கண்ணீரை வருவிக்கும். மாம்சக் கண்களிலிருந்து வழியும் கண்ணீரோடு, உள்ளான இருதயத்தின் வேதனைகளினால் இருதயத்திலும் கண்ணீர் வடியும்.

வருத்தமும் சஞ்சலமும், கண்ணீரும் பாவத்தின் விளைவாகும். ஆதியிலே ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் முதன்முதலில் பாவம் செய்தபொழுது, வருத்தமும், சஞ்சலமும், கண்ணீரும் மனிதருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தேவன் கூறினார். “அவர் ஸ்திரீயை நோக்கி: நீ … வேதனையோடே பிள்ளை பெறுவாய்” (ஆதி.3:16) என்றார். “பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ … உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்” (ஆதி.3:17) என்றார்.

“என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” என்ற வாக்கியத்தின் அர்த்தம் நமக்கு பழக்கத்திற்கு மாறுபட்டதாக இருக்கலாம். பாரசீகத்திலும், எகிப்திலும், துக்கத்தினால் அழுவோரின் கண்ணீர் துடைக்கப்படும், சிலசமயங்களில் அவை சிறிய சீசாக்களில் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். ஒருவேளை இப்படிப்பட்ட பழக்கம், அந்தக் கண்ணீரைவிட்ட மனிதன் கடவுளுக்கு முன் நேர்மையாக அவனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருந்ததால் கடவுள் அவனுக்கு இரங்கி பதில் கொடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நம்பிக்கை பொதுவாக இருந்ததால், அந்த கண்ணீர் துருத்தி அந்த மனிதன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டபொழுது அவனோடுகூட குழியில் புதைக்கப்படும்.

கண்ணீர் புட்டிகள், ஆதிகாலத்து எகிப்தின் கல்லறைகளில் காணப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் இது பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வாக உள்ளது. இந்தப் புட்டிகள் அலபாஸ்ட்டர் என்ற பொருளினால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அக்காலங்களில் கண்ணாடி பயன்பாட்டிற்கு வரவில்லை.

பெலிஸ்தர்கள் மத்தியில் சிறைப்பட்டு இருந்த தாவீதுக்கென்று சொந்தமாக கண்ணீர் புட்டிகள் இல்லை. ஆகவே அவன் தேவனிடம், அவனுடைய கண்ணீரை அவருடைய துருத்தியில் வைத்து அவருடைய புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்ளும்படி கூறுகிறார். கர்த்தர் அவனுடைய கஷ்டங்களையும், உபத்திரவங்களையும், கண்ணீரையும் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறார். இதை வாசிக்கும்பொழுது, எகிப்திலே இஸ்ரவேலர்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் பட்ட உபத்திரவங்களை மோசே கூறுவதிலிருந்து புரிந்துகொள்கிறோம். “அப்பொழுது காத்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரைலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (யாத். 3:7) என்றார். இதற்கு முந்தின அதிகாரத்தில், “இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டியது” (யாத்.2:23). தேவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டார்.

லூக்கா 7:36-50 இல் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சி நம்மை சிந்திக்க வைக்கிறதாக உள்ளது. இயேசு சிமியோன் வீட்டில் விருந்தில் அமர்ந்த உணவு உட்கொண்டிருக்கும்போது, ஒரு ஸ்திரீ அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள் (வச.38). ஒரு மனிதரின் பாதங்களைக் கழுவும் அளவிற்கு எப்படி ஒரு பெண் அவ்வளவு கண்ணீர் வடிக்கமுடியும்?

ஒருவேளை அந்தப் பெண் அவளது கண்ணீர் புட்டியைக் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் ஊற்றியிருக்கலாம். அவளது அந்தக் கண்ணீர் அவளது வாழ்நாட்காலத்தில் பட்ட வேதனைகள், உபத்திரவங்கள் மூலம் சேகரிக்கப்பட்டதாக இருக்கலாம். அவள் தனது கண்ணீரினால் இயேசுவின் பாதங்களைக் கழுவினாள். அது அவளுக்கு அர்த்தம் உள்ளதாக இருந்தது. அந்த ஸ்திரீ அவளிடமிருந்த மிகவும் விலையேறப்பெற்ற பொருட்களை ஆண்டவருடைய பாதத்தில் வைத்தாள். அவளது கண்ணீரையும், விலையேறப்பெற்ற பரிமளதைலத்தையும் கிறிஸ்துவுக்குக் கொடுத்தாள். இந்த விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை அவள் மரிக்கும்வரை வைத்திராமல், அவர் உயிரோடிருக்கும்போதே, இயேசுவின் பாதத்தில் அவரது இரக்கத்திற்கு அன்பின் அடையாளமாக இருக்க ஊற்றிவிட்டாள்.

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” (வெளி.21:4). அதாவது, அவரால் மீட்கப்பட்ட எல்லோருடைய கண்ணீரையும் துடைப்பார். அவர்கள் இனி நித்திய நித்திய காலமாய் தேவனுடைய சமுகத்தில் வாழ்வார்கள். அங்கே மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின (வெளி.21:4). கண்ணீரும், கண்ணீர் புட்டிகளும் என்றென்றும் அழிந்துபோகும்.

(மொழியாக்கம்: Sis.Sweetlyn Christopher)