• Dr.உட்ரோ குரோல் •
(மே – ஜுன் 2026)
16. சுருள், தேடல் மற்றும் ஆட்டுக்குட்டி

வெளிப்படுத்தல் ஐந்தாம் அதிகாரத்தில் யோவான் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். யோவானின் காலத்தில் நிகழ இருப்பதையும் அவருடைய வாழ்நாளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் சில காரியங்களையும் தேவன் விண்ணகத்தின் கதவினைத் திறந்து அவருக்கு காண்பித்தார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும், அது எப்பொழுது நடக்கும் என்பது முக்கியமல்ல; “நான் உனக்குக் வெளிப்படுத்தும் காரியங்களை நீ எழுதிக்கொள்” என்றார். விவரிக்க முடியாதவற்றை விளக்குவதற்கு யோவான் சரியான சொற்களைப் பெற போராடினார். அவர் பரலோகத்தைக் கண்ணுற்றபொழுது “உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டார்” (வெளி.5:1) சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் தேவனே என்பதை நான்காம் அதிகாரத்தில் நாம் கண்டோம். தேவன் ஆவியாயிருக்கிறார்; ஆனால் அவருடைய வலது கையில் ஒரு சுருள் உள்ளது. இன்று காலை சூரியன் உதித்தது என்று சொல்வதைவிட கடவுளுக்கு இயற்கையின் மேல் உரிமை உள்ளது என்பதே சரியானது.
இச்சுருளில், இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ளது என்பது விந்தையே! வழக்கமாக சுருளில் முன் பக்கம் மட்டுமே எழுதுவார்கள். அதில் ஏழு முத்திரைகள் இடப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் ஒரே வரிசையில் இல்லை என்று நான் எண்ணுகிறேன்; ஒரு முத்திரையை உடைத்த பின்னர் அதனை விரிக்க வேண்டும். உள்ளே மற்றொரு முத்திரை இருக்கும். அதனை உடைத்தபின்னர் சிறிது விரித்தால் மூன்றாவது முத்திரை இருக்கும். இவ்வாறே ஏழு முத்திரைகளும் இருக்கும். இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும். அதாவது சுருளின் மேற்புறத்தில் அனைத்து முத்திரைகளும் இல்லை.
தேவன் சுருளின் உள்ளடக்கத்தை அறிந்துள்ளார். வேறு எவரும் அதனை அறிந்திலர். ஆனால் யோவானுக்கு தான் அதனை விளக்குவதாக அவர் உறுதி அளித்தார். அது எதிர்காலத்துக்கான தேவனுடைய திட்டம். வெளிப்படுத்தல் 5ம் அதிகாரம் முதல் இறுதிவரை பதிவு செய்திருப்பதே சுருளில் எழுதியிருந்தது என நாம் அனுமானிக்கலாம்.
யோவான் அதனைக் காண்பதில் ஆர்வமாக இருந்தார். நாம் அனைவருமே எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்போம். அது கடவுளின் கரத்திலிருந்து ஆதாரபூர்வமாக வருகிறது. வசனம் 2 இல் “புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்” என்று வாசிக்கிறோம். தேவனிடம் ஒரு சுருள் இருக்கிறது, அதில் எதிர்காலத்தில் நடப்பவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சுருளை திறக்கவேண்டும். அதற்கு தகுதியானவர் யார் என்பதே பிரச்சனை.
நாஸ்ட்ராடாமஸ் அல்லது ஜீன் டிக்சன் அல்லது பல்பொருள் அங்காடியிலிருந்து வெளிவரும் உள்ளூர் செய்தித்தாள்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். அடுத்தவருடம் என்ன நடக்கும் என்று அவ்வப்பொழுது கூறும் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூறஇயலாது. அவர்களுக்கு அந்த தகுதியும் இல்லை.
“வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது. இது ‘அனைத்து இடங்களையும்’ என்று குறிக்கும் வேதாகம மொழிநடை. நீங்களும் நானும் பூமியில் வாழ்கிறோம். தேவனே அண்ட சராசரங்கள், பிரபஞ்சம் மூன்றாவது வானம் இவற்றில் வாழ்கிறார்.
வானம், பூமி மற்றும் பூமிக்கு கீழே உள்ள இடம் இவை அனைத்திலும் தேடல் நடந்தது. இறந்தவர்களின் இடமான பாதாளத்திலும், தேவனுடைய வீட்டிலும் இச்சுருளைத் திறக்க தகுதியானவர்கள் தேடப்பட்டனர். சுருளில் என்ன இருக்கிறது என்பதை தேவன் அறிவார். ஆனால் அதைத் திறப்பதற்கோ பார்ப்பதற்கோ தகுதியானவரை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும். எனவே தேடல் நடந்தது. ஆனால் வசனம் 3ல் ஒருவராலும் கூடாதிருந்தது. இந்த தகுதியானவர் என்ற சொல் மனிதரைக் குறிப்பிடவில்லை. அது வேறு ஓர் உயர்ந்தவரைக் குறிக்கிறது. தூதர்களோ, ஆவிகளோ மனிதனோ மனுஷியோ மிருகமோ காணப்படவில்லை. அச்சுருளை உடைக்கவோ பார்க்கவோ ஒருவரும் அகப்படவில்லை. இதனால் யோவான் மனமுடைந்து போனார். எனவே வசனம் 4 இல் அவர் மிகவும் அழுதார்.
சுருளில் உள்ளது எதிர்காலத்தைப் பற்றியது. அதை அறிவதற்கு யோவான் ஆவிக்குள்ளானார். எதிர் காலத்தை அறிவதற்கான ஓரே இடம் இந்த சுருள்தான். இருபத்து நான்கு மூப்பர்களில் ஒருவர் யோவானிடம், “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றார். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன் களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்” (வெளி.5:5-6).
இது ஒரு குறியீட்டுப் புத்தகம். இந்த சிங்கமும், ஆட்டுக்குட்டியும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்றன. சுருளை திறக்கத் தக்கவரைத் தேடும் பணி தோல்வியில் முடியவில்லை.
உங்களுக்கும் எனக்கும் தெரியவில்லை என்றால் தேவனுக்கும் தெரியாது என்று பொருளாகாது. நீங்கள் கேட்கும் வினாக்களுக்கு பதில் எனக்கு தெரியவில்லை எனில் அதற்கு பதில் இல்லை என்று பொருளாகாது. முத்திரையை உடைப்பதற்கும், சுருளைத் திறப்பதற்கும் சரியான நபர் யூதா கோத்திரத்து சிங்கமும் தாவீதின் வேருமான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே.
இவ்விரண்டு அடைமொழிகளும் அவருக்கே உரித்தானவை. இது இயேசுகிறிஸ்துவின் அங்க அடையாளங்களைக் குறிக்காது. சிங்கமும் ஆட்டுக்குட்டியும் அவரது தன்மையைக் குறிக்கின்றன.
அந்த ஆட்டுக்குட்டிக்கு ஏழு கண்களும் ஏழு கொம்புகளும் இருந்தன என்று வசனம் 6 விவரிக்கிறது. ஏழு என்பது ஒரு பரிபூரண எண் ஆகும். ஏழு கொம்புகளை உடையவராய் சித்திரிக்கப்படுவதால் அவரே பரலோகத்தை ஆட்சிசெய்ய சரியான நபர். அவருக்கு ஏழு கண்கள் உண்டு. இது இயேசு யாவற்றையும் காணும் தன்மையுடையவர் என்பதை சித்தரிக்கிறது. அரியணைக்கு முன்பாக காணப்பட்ட ஏழு குத்துவிளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளைக் குறிக்கும். அவரே நம் அனைவரையும் ஆராய்ந்து பார்க்கிறவர். இவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்.
ஆட்டுக்குட்டியானவர் என்பதற்கான கிரேக்க வார்த்தை அர்னியோன் என்பதாகும். அது யோவானின் நற்செய்தி நூலிலும், வெளிப்படுத்தல் விசேஷ நூலிலும் காணப்படுகிறது. யோவான் 21:15இல் காணப்படும் இச்சொல் விலைமதிப்பற்ற ஆட்டுக்குட்டியானவரான இயேசுவின் அன்பினை வெளிப்படுத்துகிறது.
வசனம் 6 இல் அந்த ஆட்டுக்குட்டி, ஏழு கொம்புகள், ஏழு கண்கள், தேவனுடைய ஏழு ஆவிகள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஏழு கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஆவிகளாகும். இது ‘பூமியெங்கும் அனுப்பப்பட்டவர்’; என்ற பொருளை யுடைய அப்போஸ்தலர் – அப்போஸ்டெல்லோ என்ற சொல்லிலிருந்து வந்தது.
தேவனின் திட்டத்தில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவைப் பற்றிய அருட்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் நாம் இருக்கிறோம். தேவனுடைய ஜனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் தேவன் நியாயத்தீர்ப்பின் கதவைத் திறக்க இருக்கிறார்.
நியாயத்தீர்ப்பிலும் அவருடைய கிருபையையும், இரக்கத்தையும் நாம் காண்பது ஆச்சரியமாக உள்ளது. இயேசுகிறிஸ்துவைப் பற்றிய போதுமான அறிவு இல்லையெனில் வெளிப்படுத்தல் புத்தகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. சிறு குழந்தைகளை தம்மிடம் அழைப்பதையும் அவர்களை அணைத்துக் கொள்வதையும், கண்டு, நாம் அவரை சாந்தமான மேய்ப்பனாக கருதுவது மிகக் குறுகிய கண்ணோட்டமாகும்.
ஆனால் வெளிப்படுத்தல் புத்தகத்தில் நாம் அவரை நீதிபதியாகவும், வெற்றியாளராகவம், போர்வீரனாகவும், தீய சக்திகளுக்கு எதிராக போரிடும் தளபதியாக நாம் காண்கிறோம்.
ஒரு தடகள வீரர் தனது விளையாட்டை ஒதுக்கி விட்டு நடிப்பதற்கு வந்தார். அதில் பெரிய நட்சத்திரமாக மாறினார். அவரை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் நீங்கள் அறிந்திருந்தால் இந்த நடிகரை நீங்கள் அறியமாட்டீர்கள். அதுபோலவே இயேசுவை நீங்கள் மேய்ப்பராக அறிந்திருந்தால் அவரது உண்மையான காரியத்தை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். அவரை ஒவ்வொரு கோணத்திலும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
வசனம் 8 இல் “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற் கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்தார்கள்” என வாசிக்கிறோம்.
நான்காம் அதிகாரத்தில் நாம் கண்ட அதே இருபத்து நான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பிதாவின் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினார்கள்; இப்பொழுது குமாரனுக்கு முன்பாக விழுந்து வணங்கினார்கள். அவர்கள் தேவனை தேவனாக அறிந்து கொண்டனர். கிறிஸ்தவர்களாகிய நாமும் சில சமயங்களில் நமது வாழ்வை கடவுளைப் போல நடத்துகிறோம். இவர்களிடம் சுரமண்டலங்கள் இருந்தன. பரிசுத்தவான்களின் ஜெபங்களாகிய தூபவர்க்கங்கள் நிரம்பிய பொற்கலசங்கள் இருந்தன. பரிசுத்தவான்களின் ஜெபங்களை தேவனுக்கு எடுத்துச் செல்கின்றனர். இவர்கள் மீட்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் பாடின பாடலைக் கவனியுங்கள். “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்”.
இப்பாடலில் உங்களையும் என்னையும் குறிக்கும் எங்களை, எங்கள், நாங்கள் போன்றவை பிரதி பெயர்ச்சொற்களாகும். தொழுகை என்பது தேவனுக்கு நான் என்ன கொடுக்க விரும்புகிறேன் என்பதல்ல; அது கடவுளைப்பற்றியது. சத்திய வேதம் கூறும் மாதிரியின்படி நமது வழிபாட்டை வடிவமைப்பது நல்லது என நான் நினைக்கிறேன். தாங்கள் பரலோகத்தைச் சார்ந்தவர்கள் என இவர்கள் அறிந்து கொண்டனர். அது தேவனுடைய ஆச்சரியமான கிருபையைப் பற்றியது. வரலாற்றின் மையமான இயேசுவைப் பற்றினது. என்னுடைய தொழுகையோ ஆராதனையோ அல்ல; அது என்னைச் சார்ந்தது அல்ல.
இயேசுவுடனான நமது உறவையோ, நமது தேவைகளையோ அவரைப் புகழ்வதற்கான விருப்பமோ அல்ல. வேதாகமம் கூறும் வண்ணம் அவரைத் தொழுவோம். புத்தகத்தைத் திறக்கவும் அதன் உள்ளடக்கத்தை தெரிவிக்கவும் தகுதியானவர் அவர் இருக்கும்பொழுது நான் ஏன் மற்றவர்களைப் புகழவேண்டும்; பாடவேண்டும் அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; எனவே நீங்களும் நானும் அவருக்கு முன்பாக விழுந்து வணங்கவேண்டும்.
“நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக் கடவோம்” (சங்கீதம் 95:6).
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை