• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜனவரி – பிப்ரவரி 2026)

‘அப்பா, நுகம் என்றால் என்னப்பா? என் நண்பன் கேட்டான், எனக்குப் பதில் தெரியல்ல’ என்று சின்ன மகன் அப்பாவிடம் கேட்டான். அப்பாவும் மகனை அணைத்துக்கொண்டு, ‘வண்டிலில் பூட்டப்படுகிற மாடுகள், அல்லது வயல் உழுவதற்காக கலப்பையில் பூட்டப்படுகிற மாடுகளின் தோள்களுக்குக் குறுக்கே அதற்கென்று செய்யப்பட்ட ஒரு மரத்துண்டை வைத்துப் பூட்டி விடுவார்கள்; அந்த மரத்துண்டின் பெயர்தான் நுகத்தடி’ என்று விளக்கம் சொன்னார். ‘ஐயோ பாவம் அப்பா, அப்படிப் பூட்டிவிட்டால் அந்த மாடுகள் தங்கள் இஷ்டப்படி சுதந்திரமாகப் போக முடியாதே’ அங்கலாய்த்தான் மகன். ‘ஆம், அதற்காகத்தான் இந்த நுகத்தடி. இதைப் பூட்டிவிட்டால், அதன் கயிறுகளைத் தன் கைகளில் பிடித்திருக்கிற எஜமான் எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் அந்த மாடுகள் நடக்கவேண்டும், எஜமானின் சேவையைச் செய்யவேண்டும். “‘இல்லையானால்” கேள்வி எழுப்பினான் மகன். “அடிதான்.” இது அப்பாவின் பதில். “அப்பா, இப்போதான் எனக்கு விளங்குகிறது. நான் அந்த நுகத்தடியையோ அது பூட்டப்பட்ட மாடுகளையோ பார்த்ததில்லை. ஆனால், நீங்க அம்மாவை நடத்துகிற விதத்தைப் பார்த்தா, இதுதான் அந்த நுகத்தடியோ என்று நினைக்கிறேன்” என்று மகன் சொன்னதுதான், அப்பா திகைத்துப்போய் அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார்.

இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் வந்து விட்டோம். இந்த ஆண்டிலும் நமக்காக என்னதான் காத்திருக்கிறதோ என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை. சுதந்திரம் என்பது கேள்விக் குறியாகி, கலகங்களும் யுத்தங்களும் ஒருபுறமாகவும், இயற்கையின் சீற்றம் இன்னொருபுறமாகவும் நமது தேசத்தை மாத்திரமல்ல, உலகம் முழுவதையும் பலவிதங்களில் உலுப்பிக் கொண்டிருக்கின்ற ஒரு காலத்துள் நாம் முழுமையாக வந்துநிற்கிறோம். மாடுகளில் பூட்டப்படுகிற நுகத்தையும், நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்றுக்கொண்டு தன்னை நடத்துகிறவன் நடத்துகிற வழியில் மாடுகள் செல்லுவதையும் நம் கண்களால் பார்க்கமுடியும்; ஆனால் நமது தோள்களில் பூட்டப்பட்டுள்ள நுகத்தடியை நம்மால் காண முடிகிறதா? இதனை இன்னொரு விதத்தில் சிந்தித்தால், மனிதன் தனது கண்களுக்கே தெரியாத ஒரு நுகத்தில் பிணைக்கப்பட்டு, அது அழுத்தும் பாரத்திலிருந்து தன்னை விடுவிக்கவும் முடியாமல் இதுதான் வாழ்வு என்று நுகத்தடிக்கு இணங்கி வாழுகிறானா என்று எண்ணத் தோன்றுகிறது.

இஸ்ரவேல் சுமந்த நுகத்தடி

இஸ்ரவேல், நானூறு ஆண்டுகளாக எகிப்திலே அடிமைகளாக்கப்பட்டு, எகிப்து சுமத்திய நுகத்தின் அழுத்தத்தினால் அல்லல்பட்டு கதறியபோது, கர்த்தர் மோசேயை அனுப்பி, ‘அடிமைத்தனம்’ என்ற இஸ்ரவேலின் அந்த நுகத்தடியை முறியடித்து அவர்களை விடுதலை பண்ணினார். ‘நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்’ என்று அவர்களுக்கு நினைவூட்டுகிறார் கர்த்தர் (லேவி.26:13). ‘நிமிர்ந்து நடக்கப்பண்ணின’ என்பதைக் கவனித்தீர்களா? நுகத்தடி தோளில் வைக்கப்பட்டதும் அந்த மாடுகள் பழக்கப்பட்டபடியே தலைகவிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டு, எஜமானின் கட்டளைக்கமைய வேலை செய்யும். வேலை முடிந்ததும் மாடுகளை நுகத்தடியிலிருந்து அவிழ்த்துவிடும்போது, அவ்வளவு நேரமும் தலை கவிழ்ந்தபடி எஜமான் நடத்திய வழியெல்லாம் நடந்த மாடுகள், நுகத்தடி கழற்றப்பட்டதை உணரும்போது, தலையை ஒருகணம் சிலிர்த்து விட்டுக் கொடுக்கும் காட்சி அற்புதமானது.

இப்படியே காலத்துக்குக் காலம் இஸ்ரவேல், சாலொமோன் சுமத்திய நுகத்தினாலும் (1இராஜா. 12:4), அசீரியனின் நுகத்தினாலும் (ஏசா.14:25), பின்னர் பாபிலோன் ஏற்றிய நுகத்தினாலும் கடின பாதையில் நடந்தார்கள். ஆனால், கர்த்தரோ அவர்களை விடுவித்தார். நிழலாட்டமாக நடத்தப்பட்ட இந்தக் காரியங்கள் யாவும், இன்று நமக்கு முன்னே நிஜங்களாக நின்று நம்மை எச்சரிக்கின்றன.

இன்று நாம் சுமக்கும் நுகத்தடிகள்

கண்களுக்குப் புலப்படாத பல நுகத்தடிகள் தன் தோளில் கட்டப்பட்டிருப்பதையும், அவற்றுக்கு இணங்கி தான் வாழுவதையும் உணராமலேயே இன்றைய மனிதன் அதற்குப் பழக்கப்பட்டவனைப்போல தலைகவிழ்ந்து, நுகத்தடிக்குச் சொந்தக்காரன் நடத்துகின்ற வழியெல்லாம் நடக்கிறான் என்பதை மறுக்கமுடியாது. இந்த நுகத்தின் சொந்தக்காரன் யார்? சாத்தானா? உலகமா? அல்லது மாம்சத்திற்கு உட்பட்ட நமது சிந்தையா? அதாவது உலகத்தை மையமாகக் கொண்டுள்ள நமது வாழ்வா? அல்லது மூன்று மேயா? இதன் ஆபத்து என்னவெனில், தான் யாரால் நடத்தப்படுவதைக்கூட பகுத்தறியக்கூட முடியாதவனாக, தன்னை நடத்துகிறவன் வழி நின்று மனிதன் வேதனையுடன் நுகத்தின் அழுத்தத்தால் பாரம் சுமக்கிறான் என்பதேயாகும். ‘எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்’ (ரோம.3:12) என்கிறார் பவுல்.

1. பாவம்:

இதுவே அன்றும் இன்றும் மனிதனை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற பொல்லாத நுகத்தடி. இதன் சொந்தக்காரன் சாத்தான். அதிலும் இன்று எது பாவம் என்றுகூட உணர முடியாத அளவுக்கு பாவம் மனிதனுடைய கண்களைக் குருடாக்கிவிட்டது. நவீனங்களும், புதிய கவர்ச்சிகளும் நமது தோள்களை அழுத்தும் நுகத்தடிகளாகக் கட்டப்படும்போது, நாமும் அதில் மயங்கி, இலகுவான விசாலமான கவர்ச்சியான பாதைகளில் அவை நம்மை நடத்துவது எதற்காக என்பதையும் உணரமுடியாமல், அதற்குத் தலை கவிழ்ந்துவிடுகிறோம். மூன்றாம் ஆண்டு படிக்கின்ற ஒரு மாணவன், தனது ஞாயிறு பாட சாலை ஆசிரியரிடம், ‘வானத்தில் அல்ல, தரையிலே வானவில்லைக் கண்டேன்’ என்றானாம். ஆசிரியரும் ஆச்சரியப்பட்டு அது என்ன? என்று கேட்டபோது, அவன், “ஓரினச் சேர்க்கையாளரின் பெயரே வானவில்தானே, அவர்களின் ஊர்வலத்திலே வானவில்லின் அத்தனை வண்ணங்களும் தென்பட்டன’ என்றானாம். இதற்கும் மிஞ்சி விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

என்றாலும், பாவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு, தன்மேல் சுமத்தப்பட்டிருப்பது சத்துருவின் ‘பாவம்’ என்ற நுகத்தடி என்று உணரும்போது, அதிலிருந்து விடுதலையாக முயற்சித்தும் முடி யாமல் கதறும்போது, அவனுடைய அவலநிலை அங்கேதான் வெளிப்படுகிறது. அதிலும் வெளி வாழ்வைப் பார்க்கிலும், உள்ளான மனிதனின் போராட்டங்களும், அடிமைத்தனமுமே மிகவும் ஆபத்தானது. எதுவாயினும் தன் பாவத்தை உணராதவன், தான் சத்துருவின் நுகத்தைச் சுமக்கிறேனே என்று உணராதவன் தான் சுமக்கின்ற நுகத்தடியை தானே முறித்துப் போடுவதும் கடினமே. உணர்ந்தாலும், அதிலிருந்து விடுதலைபெற அவன் எடுக்கும் எந்த சுய முயற்சியும் பலன்தராது. அதற்கு ஒரே வழிதான் உண்டு. பாவத்தின் பாரத்தால் வருந்தி நின்று கலங்கும் தேவபிள்ளையே, உனக்கு ஒருவர் இருக்கிறார்; அவர் உன்னை இன்று அழைக்கிறார்.

2. பாடுகளும் துன்பங்களும்

‘துன்பங்களும் துயரங்களும் தொடர்ச்சியாக என்னை வேதனைப்படுத்துவது ஏன்?’ இந்தக் கேள்வி அநேகருடைய உள்ளத்தில் எழுவதை மறுக்கமுடியாது. கிறிஸ்தவ வாழ்வு என்பது மகிழ்ச்சி நிறைந்ததும், தேவனோடு உறவாடுகின்ற உன்னத வாழ்வுமாகும். ஆனால் நாமோ உலகரீதியாக சிந்தித்து, உலகத்தின் சந்தோஷங்களை நாடித் தேடி தோற்றுப்போகிறோம். அங்கேதான் ‘துன்பம்’ என்ற நுகம் நம்மை அழுத்துகிறது. ‘உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்’ (யோவா.16:33) என்ற ஆண்டவரின் வார்த்தை பொய்க்குமா? உலகம் நமது தோள்களில் அழுத்துகின்ற பலவித உபத்திரவங்கள், தோல்விகள், இழப்புகளுக்கு நாம் ஏன் தலைகவிழ்ந்து இணங்கி நின்று, ஆறுதலின்றி, அந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும்? மாறாக, அவற்றுக்கு மேலாக எழுந்து நின்று வெற்றி நடை போடலாமே. அதற்கு நமக்கு தேவ பெலன் தேவை. அதற்கு, ‘என்னிடத்தில் வாருங்கள், என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆண்டவர் அழைக்கும் சத்தம் நம் செவிகளில் கேட்கட்டும்.

3. வியாதிகளும் வேதனைகளும்

ஒரு சிறிய சரீர வேதனையைக்கூட பலவீன பாண்டங்களாகிய நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நமது தோள்களை அழுத்தும் பாரங்களாக அவை மாறிவிடுகின்றன. இன்று விநோதமான வியாதிகளும், மரண உபாதைகளும் நம்மைப் பயமுறுத்துகின்றன. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இவற்றுக்கு முக்கிய காரணமே, மாறிவிட்ட நமது வாழ்வு முறைகளும், உணவுப் பழக்கங்களுமே என்றால் மிகையாகாது. அதாவது வேறு பல காரணங்கள் இருந்தாலும், வியாதி என்ற நுகத்தை நாமே நமது தோள்களில் இறக்கிவிடுகிறோம் என்றுதான் கூறவேண்டும்.

4. குடும்ப சூழ்நிலைகள்

அன்பும் ஆதரவும் ஆறுதலுமாயிருக்க வேண்டிய குடும்பமே அநேகருடைய வாழ்வில் அழுத்தும் நுகங்களாக மாறிவிடுகின்றன. உறவுகள் விரிசலடைவதும், கீழ்ப்படிவற்ற பிள்ளைகளின் நவீன பழக்கங்களும், ஆடம்பர வாழ்வும், அதன் பலனான கடன் தொல்லையும் …. என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று பிள்ளைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதும் ஏன்? பெற்றோர் தங்கள் பெற்றோர்த்துவத்தில் தடுமாறி நிற்பதும் ஏன்? தேவனுடைய அநாதி திட்டமாகிய குடும்பம் என்ற கட்டமைப்பைக் குலைத்துப்போட வகைபார்க்கின்ற சத்துரு, அதற்கான தனது நுகத்தை தந்திரமாக குடும்பங்களில் ஏற்றிவிடுகிறான். அந்தப் பாரத்தைச் சுமக்க முடியாது குடும்பங்கள் சிதைந்துகொண்டிருப்பதை மறுக்க முடியாது.

5. நவீன வளர்ச்சிகள்

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வருகின்ற அதீத வளர்ச்சி, மனிதனுக்கு நன்மை பயக்கின்றதாக மாம்ச கண்களுக்குத் தோன்றினாலும், அவனுடைய ஆத்துமாவை அது எவ்வளவாகப் பாதிக்கிறது என்பதை அவனால் உணரக்கூட முடியாத அளவுக்கு, ‘குருட்டுத்தன்மை’ என்று உணரக்கூடமுடியாத நுகத்தை உலகம் இன்று மனிதனின் தோள்களில் இறுகக் கட்டிவிட்டிருக்கிறது. பல நவீன கண்டுபிடிப்புகளின் பிதாக்கள் என்று அறியப்படுகிறவர்களே, தாங்கள் ஏன் அவற்றைக் கண்டுபிடித்தோம் என்று கலங்கி நிற்பதாக செய்திகளைக் கேட்கிறோம். இதைக் குறித்து இந்தக் கட்டுரையில் எழுதித்தான் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. சிறு பிள்ளை தொடங்கி முதியவர்கள் வரை மனுக்குலமே இந்த நுகத்தின் அழுத்தத்தில் இருப்பதை உணருவதேயில்லை. இது மனுக்குலத்தையே அழிவுக்கு நேராக நடத்துவதையும் யாரும் உணருவதில்லை. என்றாலும், இதற்கு அடிமையாகிவிட்டேனோ என்பதை உணர்ந்து, அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஒருவன் நினைத்தாலே போதும், ஆண்டவருடைய அழைப்பின் சத்தம் அவனை நிச்சயம் ஆண்டவரிடம் இழுத்துக்கொள்ளும்.

தமது நுகத்தை ஏற்றுக்கொள்ள ஆண்டவர் நம்மை அழைக்கிறார்:

இன்னும் அநேக நுகங்களைக் குறித்து சொல்லமுடியும். எவ்வித நுகத்தடி என்றாலும், எந்தப் பாரச்சுமை நம்மைத் தாக்கினாலும், தம்மிடத்தில் வருகிறவர்களுக்கு இளைப்பாறுதல் தர நமக்கு ஒருவர் இருக்கிறார். ‘நான் உன் நுகத்தை உடைப்பேன், உன் பாரத்தை நான் நீக்குவேன்’ என்று அவர் சொல்லவில்லை. அவருடைய அழைப்பு வித்தியாசமானது:

1. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்.” முதலாவது, நான் சுமக்கும் பாரம் எதுவாயினும் நான் ஒரு அழுத்தத்துள் இருக்கிறேன் என்பதை நான் உணரவேண்டும். அதிலிருந்து வெளிவர நான் வாஞ்சிக்கவேண்டும். அவர்களையே தம்மிடம் வரும்படி இயேசு அழைக்கிறார். அவர்களுக்குத் தாம் இளைப்பாறுதல் தருவதாக அவர் வாக்களிக்கிறார். அவரிடம் வருவது மாத்திரமல்ல, இந்த இளைப்பாறுதலை நான் பெற்றுக்கொள்வதற்கு நான் செய்யவேண்டியதும் உண்டு.

2. “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்.” கர்த்தர் தாம் எப்படியிருக்கிறாரோ அந்த மனத்தாழ்மை தம்மிடத்தில் வருகிறவனுக்கும் அவசியம் என்பதை உணர்த்துகிறார். வாக்குவாதத்திற்கோ பெருமைக்கோ இங்கே இடமில்லை. ‘இனி என்னால் எதுவும் முடியாது’ என்று தம்மிடத்தில் வருகிறவனை அவர் புறம்பே தள்ளுவதில்லை.

3. “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு” இயேசு ஒரு நுகத்தைச் சுமந்தாரா? இயேசுவுக்கும் ஒரு நுகமா? அதை யார் அவர்மீது சுமத்தினார்?

இயேசு சுமந்த நுகம்: ‘என் நுகம்’ என்று இயேசு சொல்லியிருப்பதை நாம் கவனித்திருக்கமாட்டோம். ஆம், இயேசு ஒரு நுகத்தைச் சுமந்தேதான் இந்த உலகில் முழு மனிதனாக வாழ்ந்திருந்தார். அந்த நுகம் எது? “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம் சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன். புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்” (எபி.10:5-10).

மேலும், “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார் (யோவா.8:29).”

இன்னும்,”இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (யோவா. 4:34) என்றார்.

இப்படியே, இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்யும் நுகத்தைத் தம்மேல் சுமந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகையால்தான் ஒரு முழு மனிதனாக, கெத்செமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து, ‘அப்பா பிதாவே, உம்மாலே எல்லாம் கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும்’ என்று வியாகுலத்துடன் கதறினார், என்றாலும், மறுகணமே, ‘ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது’ என்று கண்ணீருடன் ஜெபித்து தம்மை பிதாவின் பரிபூரண சித்தத்துக்கு விட்டுவிட்டார். அதன் பலன் சிலுவை மரணம். அதற்காக இயேசு பின்வாங்கிப் போனாரா? பிதாவின் சித்தத்தைச் செய்த ஆண்டவர் இன்றும் உயிருள்ளவராக நமக்காகப் பரிந்து பேசுகிறவராக உயர்த்தப்பட்டுள்ளாரே!

4. என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியம். ஒரு முழு மனிதனாக இயேசு எப்படி பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகின்ற நுகத்தைத் தம்மீது சுமந்து தீர்த்தாரோ, அவர் நடந்தபடியேதானே நாமும் நடக்க வேண்டும். “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” (1யோவா.2:6). நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஆண்டவர் பிரதிபலிக்கவேண்டுமே. ‘நானே உங்களுக்கு மாதிரியாக இருக்கிறேன். பிதாவின் அன்பு உங்களை நிரப்பட்டும். அவருடைய குணப்படுத்தும் கரம் உங்களைப் பெலப்படுத்தட்டும். அவருக்குள்ளான சமாதானம் உங்களை ஆட்கொள்ளட்டும். பிதாவுடனான உறவு உங்களது அர்த்தமற்ற வாழ்வை தமக்குப் பிரியமானதாக உகந்ததாக மாற்றட்டும்’ என்று ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

ஆக, இயேசு சுமந்த நுகம் எது? ‘பிதாவின் சித்தம் செய்வது ஒன்றே.’ இன்று பலவித பாரச் சுமைகளால் அழுத்தப்பட்டு சோர்ந்து போகிறவர்களை இயேசு தம்மிடம் அழைக்கிறார்.

1. என்னிடத்தில் வாருங்கள்.

2. மனத்தாழ்மையுடன் வாருங்கள்.

3. என் நுகத்தை அதாவது பிதாவின் சித்தம் செய்கின்ற என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். பாவமும் உலகமும் இதுவரை அழுத்திய உங்கள் தோள்களை நிமிர்த்தி, பிதாவின் சித்தம் செய்யும் எனது தோள்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள். நாம் இருவரும் சேர்ந்து பிதாவின் சித்தத்தைச் செய்வோம் என்று அழைக்கிறார் இயேசு.

4. என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். நான் நடந்த பாதையில் நடவுங்கள்.

“அப்பொழுது (இப்போதுதான்) உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்றார் இயேசு. உலகம் என்னவிதமான பாரமான நுகத்தினால் நம்மை வருத்தினாலும், நுகம் சுமந்த இயேசுவின் தோள்களுடன் நமது தோள்கள் இணையும்போது, பிதாவுடனான உறவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் தந்து, நமது ஆவிக்குரிய வாழ்வை மேன்மைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று இயேசு சொன்னது என்ன? இயேசுவுடன் நாம் இணைந்து இசைந்து வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது வாழ்வில் ஏற்படுகின்ற சவால்களும், பிரச்சனைகளுமே நாம் சுமக்கின்றதாக இயேசு சொன்ன நுகத்தடியாக இருக்கும். பொறுப்புகளும் பணிகளும் நம்மை அழுத்தக்கூடும். ஆனால், ஆண்டவர் நம்முடன் சேர்ந்து இந்த நுகத்தைச் சுமப்பதால், எது வந்தாலும் ஆண்டவருடைய நுகம் இலகுவானதாகவே இருக்கும்.

இங்கே ஒரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இயேசுவோடு இணைந்து நுகம் சுமக்க நான் ஆயத்தம் என்றால், என் சுயம் சாகவேண்டும். சில சபைகளில் வருடத்தின் முதல் ஞாயிறு உடன்படிக்கை ஆராதனையாக இருக்கும். அந்த ஆராதனையில் வாசிக்கப்படுகின்ற ஒரு பகுதி இதுதான்: அன்பானவர்களே, நாம் இப்பொழுது நம்மை உடன்படிக்கையின் கடவுளுக்குக் கட்டுப்படுத்தி, கிறிஸ்துவின் நுகத்தைச் சுமப்போமாக. நுகம் சுமத்தலின் கருத்தாவது, கிறிஸ்துவே நமது தொழிலையும் நிர்வாகத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்றும், அவரே நமது வெகுமதியாய் இருக்கவேண்டும் என்றும் நாம் மனப்பூர்வமாய் சம்மதிக்கிறோம் என்பதாகும்.

இப்போ என்ன சொல்லுவோம்? நமது பாவமும், உலகமும், பிசாசும், சுயஇச்சைகளும் நுகத்தடிகளாக பாரச்சுமைகளாக நம்மை அழுத்துகின்றனவா? நாம் இருக்கிற பிரகாரமே நம்மை அழைக்கும் ஆண்டவரிடம் சென்று, அவர் நுகத்தை, அதாவது பிதாவின் சித்தம் செய்யும் நுகத்தை நம்மேல் ஏற்றுக்கொண்டு, இயேசுவிடம் கற்றுக்கொண்டு, அவருடைய இளைப்பாறு தலைப்பெற்று, இந்த உலகில் என்னதான் நேரிட்டாலும், மரணம்தான் நேரிட்டாலும் அவருக்குச் சாட்சிகளாக ஜீவிக்க நம்மை ஒப்புக்கொடுக்க நாம் முன்வருவோமா! ஆமென்.