சத்திய வசனம் பங்காளர் மடல்
(ஜனவரி – பிப்ரவரி 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இம்மாத சத்தியவசன சஞ்சிகையை அனுப்பிவைக்க கர்த்தர் கிருபை செய்தார். இம்மட்டும் உதவி செய்த எபநேசராகிய கர்த்தர் இனியும் நடத்துவார். பங்காளர்களும் ஆதரவாளர்களும் கடந்த நாட்களில் தங்கள் மேலான ஆதரவைத் தந்து ஜெபத்தோடு தாங்கி வந்திருக்கிறீர்கள். நன்றி கூறுகிறோம். ஏனென்றால் உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி.6:10).
சத்தியவசன வெளியீடுகள் மூலமாகவும், தொலைக்காட்சி ஊழியங்கள், வாட்ஸ் அப், இணையதளம் மற்றும் YouTube வாயிலாகவும் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும் புதிய நேயர்கள் பங்குபெறுவதற்கும் உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.
மார்ச் மாதம் முதல் வருடாந்திர பங்காளர் காணிக்கையை ரூ.600/- லிருந்து ரூ.1000/- ஆக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறோம். பத்திரிக்கையை அச்சிடும் கூலி, பேப்பர் மற்றும் அதிகரித்துள்ள தபால் செலவு ஆகிய காரணங்களினிமித்தம் இந்த உயர்வை செய்யவேண்டியுள்ளது. பங்காளர்கள் இதைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
லெந்து நாட்களில் ஈரோடு, திசையன்விளை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்புக் கூட்டங்களுக்காக ஜெபியுங்கள். அந்த பகுதியில் வாழும் பங்காளர்கள் இயலுமானால் கூட்டங்களில் பங்குபெறவும்அன்புடன் அழைக்கிறோம்.
இவ்விதழில் தேவன் தேசங்களை ஆளுகை செய்கிறார் என்ற தலைப்பில் Dr.ஜான் நியூபெல்டு அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரையும், சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய என் நுகத்தை ஏற்றுக்கொண்டு…. என்ற தலைப்பிலான சிறப்புச்செய்தியும், கர்த்தருடைய வார்த்தையை நாமும் கற்றுக்கொண்டு நமது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கர்த்தருடைய வார்த்தையை கற்பியுங்கள் என்ற தலைப்பில் Dr.M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. மேலும் நேற்று இன்று நாளை… என்ற தலைப்பில் சகோ.குமார் நவமணி அவர்கள் எழுதிய கட்டுரையும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தொடர் வேத பாடமும் துன்பத்தின் தனிமை என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய சிறப்பு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கிறோம்.
A.ஜான் துரை
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, எனனிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத்.11:29).