• Dr.வாரன் வியர்ஸ்பி •
(ஜனவரி – பிப்ரவரி 2026)

இயேசுகிறிஸ்துவைத் தவிர வேதத்தில் வேறு எவருமே யோபுவைப் போல அதிக அளவு துன்பப்பட்டதில்லை. யோபுவின் புத்தகம் அவனுடைய நிலைமையை நமக்கு வர்ணித்து காட்டுகிறது. யோபு தன்னுடைய செல்வத்தை ஒருநாள் இழந்தான். அதன்பின் தன்னுடைய சரீர சுகத்தை இழந்தான். தன் மனைவியினுடைய அன்பை இழந்தான். தனது நண்பர்களுடைய அனுதாபத்தை இழந்தான். ஆனாலும் தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்தை மாத்திரம் ஒருபோதும் இழந்துவிடவில்லை. எவ்வாறு துயரப்பட வேண்டும் என்பதை அறிந்த மனிதனை யோபுவின் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.
யோபு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே (யோபு 7:16). எனது வாழ்க்கையில் எவ்வித அர்த்தமும் இல்லை எனக் கூறுகிறான். அதன்பிறகு என் நாட்கள் கொஞ்சமல்லவோ? நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான் (யோபு 10:20,22).
துன்பத்தின் தனிமையை யோபு அறிந்திருந்தான். துன்பம் எப்போதும் தனிமையையே ஏற்படுத்தும். துன்பங்கள் வரும்போது வாழ்க்கையின் பிடிப்பானது அற்றுப் போகிறது. சிறிய காரியங்கள் பெரியவையாகவும், பெரியவைகள் சிறியவையாகவும் தோன்றும். நாம் நமது முழுகவனத்தையும் நம்மீது மட்டுமே செலுத்துவோம். ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் போது நம் மனதினதும் சரீரத்தினதும் உணர்வினையே பெரிதாக மதிப்போம். அத்தோடு விசுவாசத்தைப் பற்றிய சந்தேகமும் கவலையும் பயமும் ஏற்படும். அடிக்கடி துன்பம் தனிமையைக் கொண்டு வரும்.
யோபுவின் துயரத்தைப் பற்றி விவரணம்
யோபுவின் அனுபவத்தில் பல பகுதிகளைப் பார்க்கலாம். தனிமையால் வாடும்போதும் துன்புறும்போதும் தேவையான தைரியத்தை தேவனுடைய வார்த்தையில் நாம் கண்டு கொள்ளலாம்.
1. வலையிலகப்பட்ட மிருகம்
19ஆம் அதிகாரம் யோபுவினுடைய துயரத்தின் விளக்கத்தைத் தருகிறது. இந்த அதிகாரம் அவன் எத்தகு நிலைமைகளுக்கூடாக சென்றான் என்பதைப் பற்றி பல விவரணங்களைத் தருகிறது. 6ஆம் வசனத்தில் தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள் எனக் காண்கிறோம். தன்னுடைய நிலையை விளக்க யோபு தரும் முதல் விவரணம் இதுவாகும். வலையிலகப்பட்ட மிருகத்தைப்போல தன் நிலை இருப்பதை அவன் கண்டான். தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார்.
அதற்கு முந்திய அதிகாரத்தில் யோபுவினுடைய சிநேகிதன் பில்தாத் யோபுவின் நிலையைப் பற்றி கூறி அவனை எச்சரித்தான். அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான். கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும் (18:8,9). பில்தாத், யோபு நீயாகவே சென்று வலையில் சிக்கிக் கொள்ளப் போகிறாய் என்றான். ஆனால் யோபுவோ, தேவன்தான் என்னை வலையில் சிக்க வைத்தார் என்றான்.
நீங்கள் துன்பத்தை அனுபவிக்கையில் வலையில் அகப்பட்டதைப் போல உணர்வீர்கள். கட்டுப்பாட்டுக்குள் வந்த உணர்வேற்படும். திடீரென்று உங்களது சுதந்திரம் பறிபோய்விடும். திடீரென்று நீங்கள் நோயாளியாகிவிடுவீர்கள். உங்களால் தொழில் செய்ய முடியாதென வைத்தியர் கூறுவார். நீங்கள் துயரப்படுவதால் வலையில் அகப்பட்ட மிருகத்தைப் போல இருப்பீர்கள்.
2. நீதிமன்றத்தில் குற்றவாளி
யோபுவின் துயரத்தைப் பற்றிய இரண்டாவது விவரணம் 19:7இல் உள்ளது. இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை. யோபு தன்னை நீதிமன்றத்திலிருக்கும் குற்றவாளியாக உருவகிக்கிறான். அவன் நீதிபதியாகிய தேவனுக்கு முன் நின்று, இது, தவறு. இது ஏன் எனக்கு ஏற்படவேண்டும்? நான் கூக்குரலிட்டும் எனக்கு நீதியில்லை எனக் கூறுகிறான். அவன் தன் குற்றத்தை உணர்ந்தான். தேவன் பட்சபாதமாய் நடக்கிறார் என எண்ணினான். அவன் கூக்குரலிட்டான். ஆனாலும் தேவன் பதிலளிக்கவில்லை. துயரத்தின் தனிமையின் ஒரு பகுதி இதுவாகும். நாம் சிலசமயம் தேவனை நோக்கி கூப்பிடுவோம். ஆனால் தேவன் சரியான விதத்தில் பதிலளிப்பதில்லை. தேவனுடைய மெளனம் நமது தனிமையை அதிகமாகவும் பாதிப்புடையதாகவும் மாற்றும். நமது விசுவாசமானது இவ்வகையான சந்தர்ப்பங்களில் சோதிக்கப்படுகிறது. நாம் நீதிமன்றத்தில் நிற்கிறோம். விசாரிக்க ஒருவருமேயில்லை.
சிலசமயம் துன்பங்கள் இவைகளை உருவாக்குகிறது. துன்பப்படுகையில் பழைய குற்றங்கள், பழைய பாவத்தின் நினைவுகள், பழைய தவறுகளினதும் பிழைகளினதும் மனவருத்தம் என்பவற்றை அறிகிறோம். அதிகமான நேரம் நாம் நோயாளிகளைப் போல படுக்கையிலும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளைப் போலவும் இருப்போம்.
3. மூடப்பட்ட பாதையில் பிரயாணி
யோபு 19:8 இல் மூன்றாவது விவரணத்தை நாம் காணலாம். நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார். மூடப்பட்ட பாதையில் இருக்கும் ஒரு பிரயாணியைப்போல யோபு இருந்தான். நான் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை அனுபவித்து பிள்ளைகளையும் வளர்த்து வருகிறேன், நான் தேவனை சேவிக்கிறேன். ஆனாலும் இப்போது மேலே செல்லமுடியாது தவிக்கும் பிரயாணியைப் போலிருக்கிறேன். எனக்கு முன்னே பாதையானது மூடப்பட்டுள்ளது. எந்தப் புறமும் செல்லமுடியாதபடி சுற்றிலும் பாதை அடைக்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறான்.
நீங்கள் துன்பப்படுகையில் இதைப்போல உணர்ந்திருக்கிறீர்களா? உங்களுடைய திட்டங்கள் எல்லாம் மாறிவிட்டது. நீங்கள் அவ்விடத்திலேயே நிற்கவேண்டும். நீங்கள் அநேக காரியங்களைச் செய்ய இருக்கிறீர்கள். உங்களுக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. உங்களுடைய குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவுமென நிறைவேற்றப்படவேண்டிய பலதிட்டங்கள் உள்ளன. ஆனால் அதற்குள்ளாக எதிர்பாராத எதிரிடையான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. முன்னேறிச் செல்ல முடியாதவண்ணம் மூடப்பட்ட பாதையில் நிற்கும் பிரயாணியைப் போலிருக்கிறீர்கள். யோபு விரக்தியடைந்ததில் எவ்வித ஆச்சரியமுமில்லை.
4. முடி துறந்த அரசன்
யோபு 19:9 இல் என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார் என வாசிக்கிறோம். முடிதுறந்த அரசனைப் போல யோபு தன்னைக் கண்டான். அவன் தன்னுடைய மகிமையை இழந்துவிட்டான். உண்மையில் அவன் சரீர மகிமையை இழந்துவிட்டான். யோபு இரட்டுடுத்தி சாம்பலின் மேல் உட்கார்ந்திருந்தான்.
அவன் பணத்தின் மகிமையையும் இழந்தான். தனது செல்வம் முழுவதையுமே அவன் இழந்துவிட்டான். அவனது முதுகுக்குப் பின்னாலிருந்த மக்கள் அவனைக் கேலி செய்தனர். அவன் வறியவனாய் மாறியதால் அவனை ஏளனம் செய்தனர்.
யோபு சிம்மானத்தின்மீது அமர்ந்திருந்த காலமொன்றிருந்தது. மக்கள் என்ன செய்யவேண்டுமென கட்டளைகள் கொடுத்தான். அவன் ஒருகாலத்தில் மக்களால் மதிக்கப்பட்டவன். ஆனால் இப்போது அவன் சாம்பலின் மீது உட்கார்ந்திருக்கிறான். எதிர்காலமற்ற முறிந்த மனிதனொருவன் உடைந்த சரீரத்துடன் இருக்கிறான். அவன் முடி துறக்கப்பட்ட அரசனைப் போலிருக்கிறான்.
5. நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடம்
அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்; நான் அற்றுப்போகிறேன் என 19:10 ஆம் வசனம் கூறுகிறது. இது நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடமொன்றின் விவரணம். துயரப்படும்போது கட்டிடம் உடைந்து நொறுக்கப்பட்டதைப் போல உணர்வீர்கள். தேவனும் அவரது நிக்கிரக சேனையும் உங்களைத் தாக்கியது போலிருக்கும். சிலசமயம் கட்டிடம் செயற்பட வேண்டிய விதமாக செயற்படாது. துயரங்கள் வரும்போது சாதாரண நிலையில் செயற்பட வேண்டிய விதமாகச் செயற்படுவது மிகவும் கஷ்டம். நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடமாக யோபு தன்னைக் கண்டான்.
6. பிடுங்கப்பட்ட செடி
அதன்பின் பிடுங்கப்பட்ட செடியாகத் தன்னை யோபு கண்டான். என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார் (19:10). இதோ நான் மிகவும் ஆழமாக வேர்விட்டு நன்கு வளர்ந்து கனி கொடுத்துக் கொண்டிருந்தேன். எனது கிளைகளின் கீழே மக்கள் நிழலைக் கண்டடைந்தார்கள். இப்பொழுதோ நான் வெட்டப்பட்டுவிட்டேன். யோபு ஒரு அழகான செடி. ஆனால் புயல் வீசி அதனை வேரோடு பிடுங்கிப் போட்டது. யோபுவுக்கு எதிர்காலமே இல்லை என்பதாக இது காட்டியது.
ஒரு செடியை வேரோடு பிடுங்கி எடுத்தால் அது இறந்துவிடும். உங்களது வாழ்க்கையின் வேர்களை இலகுவாக்கினால் நீண்டதொரு எதிர்காலம் முன்னால் இருக்காது. உங்களுடைய நம்பிக்கை அற்றுப்போய்விடும்.
7. தேவனுடைய சத்துரு
இறுதியாக யோபு தன்னை தேவனுடைய சேனையின் சத்துருவாகக் கண்டான். அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்கிறார். அவருடைய தண்டுப் படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்கினார்கள் (19:11-12). தேவனுடைய சத்துரு தான் என்பதாக யோபு உணர்ந்தான். அவன் பயத்தையும் அபாயத்தையும் அனுபவித்தான். தேவன் எல்லாவற்றிலும் தனக்கு எதிராக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. யாக்கோபுடன் சேர்ந்து இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது (ஆதி.42:36) என யோபுவும் கூறக்கூடியவனாயிருந்தான்.
யோபினுடைய துயரத்தின் விளைவுகள்
யோபு ஏன் தனிமையுணர்வினால் வாடினான் என்பதை நம்மால் நன்றாக விளங்கிக்கொள்ளலாம். தன்னுடைய துயரத்தை வர்ணித்தபின் யோபு அதனது விளைவுகளை 19ஆம் அதி.13-21இல் விவரித்தான். என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள் (வச.13). இது தனிமை உணர்வு. என் பந்து ஜனங்கள் விலகிப்பேனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்து விட்டார்கள் (வச.14). இப்படி உங்களுக்கு எப்போ தாவது நேரிட்டிருக்கிறதா? என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று (வச.15,16). எஜமானிடம் சம்பளம் வாங்கிய வேலைக்காரன் சொன்னதைச் செய்வான் என நீங்கள் எண்ணலாம். ஆனாலும் யோபுவுக்கு எதையும் செய்ய வேலைக்காரர் தயாராயிருக்கவில்லை.
என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது. என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன் (யோபுவின் பிள்ளைகள் புயற்காற்றில் இறந்துவிட்டார்கள். யோபு தன் உறவினர்களைப் பற்றி கூறுகிறான்). சிறு பிள்ளைகள் என்னை அசட்டை பண்ணுகிறார்கள் (17,18). தம்மிலும் வயது சென்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீது சிறுவர்கள் அநேகமாக அனுதாபப்படுவார்கள். ஆனால் யோபுவோ சிறு பிள்ளைகளும் என்னை அசட்டை பண்ணுகிறார்கள்; நான் எழுந்தால். அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள். என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள் (வச.18,19) எனக் கூறுகிறான்.
21ஆம் வசனத்தில் என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், … தேவனுடைய கை என்னைத் தொட்டது என யோபு அழுததில் வியப்பில்லை. அவன் அனைவராலும் ஒரு அந்நியனைப் போல நடத்தப்பட்டான். இதுவே தனிமையுணர்வின் அழுகை. யோபு ஒருகாலத்தில் அந்தஸ்திலும், செல்வத்திலும், வல்லமையிலும், அதிகாரத்திலும், நன்நெறியிலும் உயர்ந்தவனாக இருந்தான். ஆனால், இப்போது அவனுடைய நெருங்கிய சிநேகிதரினாலும் கூட மறக்கப்பட்டவனாகவும் நிராகரிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.
நாம் துயரப்படுகையில் ஏற்படும் தனிமை இதுவே. இது சரீர வருத்தமாயிருக்க வேண்டியதில்லை. மனோநிலையில் வியாகுலமாகவுமிருக்கலாம். அது உடைந்த மனமாயிருக்கலாம். அல்லது உடலாயிருக்கலாம். யோபு துயரத்தின் தனிமையைப் பற்றியே கூறுகிறான்.
யோபினுடைய துயரத்தின் விளைவுகள்
இதற்கான பதில் என்ன? இவ்விஷயத்தில் துன்பத்தைப் பற்றி மாத்திரம் அறிவதோடு விட்டுவிட நான் விரும்பவில்லை. நீங்கள் துன்பப் படுகையில், தனிமையுணர்வினால் வாடுகையில், மக்கள் உங்களை மறந்துவிடுகையில் அதற்கான பதில் என்ன? விடையானது 19:25-26 வசனங்களில் காணப்படுகிறது. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். யோபு இங்கு எதைப் பற்றி சாட்சி கூறுகிறான். எனக்கு உயிருள்ள ஒரு மீட்பர் ஒருவர் இருக்கிறார் என யோபு தெரிவிக்கிறான்.
நம்மைப்போல யோபு இயேசுகிறிஸ்துவைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. எனவே நம்முடைய விசுவாசம் யோபுவினுடையதைவிட அதிகமாக இருக்கவேண்டும். உயிருள்ள இரட்சகர் ஒருவர் உங்களுக்கு இருக்கும்போது ஜீவனுள்ள நம்பிக்கையும் உங்களுக்கு இருக்க வேண்டும். என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன். யோபு உயிர்த்தெழுதலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தனது துயரங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் காலத்தை யோபு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தனது சோதனை அனைத்தினும் முடிவை, துயரத்துக்குப் பதிலாக மகிமையை அனுபவிக்கும் காலத்தை எதிர்பார்த்திருந்தான்.
இயேசுகிறிஸ்து உங்களுடைய இரட்சகர் என்றும், அவர் மீட்பர் என்றும் அவர் ஒரு நாள் சகலவற்றையும் அவைகள் இருக்கவேண்டிய பிரகாரம் அவைகளை மாற்றியமைப்பார் என்றும் நீங்கள் உண்மையிலேயே உணர்ந்ததுண்டானால் அது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். உங்கள் நண்பர்கள் உங்களைக் கை விடலாம். உங்கள் குடும்பம் உங்களை அசட்டை செய்யலாம். உங்களது பிள்ளைகளும் வேலைக்காரரும் உங்களை உதாசீனப்படுத்தலாம். ஆனாலும் இயேசுகிறிஸ்து எப்போதும் அருகி லேயே இருக்கிறார்.
1. கர்த்தர் நம்மை விடுதலையாக்குகிறார்.
தன்னுடைய துன்பங்களைப் பற்றி யோபு குறிப்பிட்ட விவரணங்களைக் கருத்திற் கொண்டவர்களாக, இயேசுவால் எவ்வாறு நமது நிலையை மாற்றமுடியும் எனப் பார்ப்போம். யோபு தான் வலையிலகப்பட்ட மிருகத்தைப் போலிருப்பதாக உணர்ந்தான். ஆனால் நாம் இயேசுவை இரட்சகராகக் கொண்டு விடுதலையாக முடியும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36). பிலிப்பியர் 4:11இல் பவுல், நான் எந்த நிலையில் இருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன் எனக் கூறினார். யோபுவைப்போல் வலையில் அகப்பட்ட மிருகத்தைப் போலவே பவுலும் சிறையில் இருந்தார். ஆனால் பவுல், அவர்கள் என் சரீரத்தை சிறையிலிட்டாலும் ஆத்துமாவைச் சிறையிலிட முடியாது. நான் இயேசுகிறிஸ்துவுக்குள் சுதந்திரமாக இருக்கிறேன் எனக் கூறுகிறார்.
2. கிறிஸ்து நமக்காகப் பிரதிநிதித்துவம் வகிக்கிறார்.
நீதிமன்றத்தில் விசாரணையின்றி நிற்கும் குற்றவாளிபோல தான் இருப்பதாக யோபு உணர்ந்தான். ஆனாலும் ரோமர் 8:38-39 கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை எதுவுமே பிரிக்காது எனக் கூறுகிறது. கிறிஸ்து நமக்காக மரித்து, இன்று பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நமக்காகப் பிரதித்துவம் வகிப்பதனால் யாரால் நம்மை ஆக்கினைக்குட்படுத்த முடியும்? கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோம.8:1).
3. கிறிஸ்து வழிநடத்துகிறார்
மூடப்பட்ட பாதையில் திகைத்து நிற்கும் பிரயாணிபோல் யோபு காணப்பட்டான். எந்த வழியில் செல்வதென அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் நமக்குத் தெரியும் இயேசு கிறிஸ்து வழிகாட்டுகிறார் என்று. அவரே நல்ல மேய்ப்பன். நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் (சங்.37:23). சில சமயம் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போய்விடுவார் (சங்.23:2).
4. நாம் கிறிஸ்துவுடன்கூட ஆளுகை செய்வோம்.
யோபு முடியிழந்த மன்னனைப் போலானான். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒருநாளும் அப்படிப்பட்ட நிலை ஏற்படாது. ரோமர் 5:17 இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமாமே எனக் கூறுகிறது.
5. கிறிஸ்துவுக்குள்ளாக நித்தியமாகக் கட்டப்பட்டுள்ளோம்.
நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடத்தைப் போல யோபு இருந்தான். 2கொரிந்தியர் 4:16இல் ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது எனக் காண்கிறோம். நமது கண்முன் தெரியும் காட்சிகளையல்ல; மறைவானவைகளையே நாம் காண்கின்றோம். ஏனெனில் காணப்படும் பொருட்கள் யாவும் நிலையானவைகள் அல்ல. அவைகள் இறுதிவரை இருக்கப் போவதும் இல்லை. காணப்படாத பொருட்களே நித்தியமானவை. கைவேலையல்லாத நித்தியவீடு பரலோகத்திலே நமக்கு உண்டு (2கொரி.5:1).
6. கிறிஸ்துவுக்குள் வேரூன்றியுள்ளோம்.
பிடுங்கப்பட்ட செடியைப்போல யோபு இருந்தான். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் வேரூன்றியுள்ளோம். ஜீவிக்கும் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கிருப்பதால் நமக்கு ஜீவனுள்ள நம்பிக்கையுள்ளது. ஜீவனுள்ள நம்பிக்கைக்காக (1பேது.1:3) மறுபடியும் பிறந்துள்ளோம்.
7. கிறிஸ்துவினூடாக நாம் ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
தேவன் தன்னுடைய எதிரி என்பதாக யோபு உணர்ந்தான். ஆனால் தேவன் நம்முடைய எதிரி அல்ல. தேவன் நம்முடைய நண்பனாகவும் பிதாவாகவும் இருக்கிறார். நாம் தேவனுடைய குமாரனுடைய மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம் (ரோம.5:10). நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
நான் சொல்வது என்னவென்றால், உங்களுடைய உணர்ச்சிகளின்படி அல்ல, தேவனுடைய வார்த்தையின்படி செல்லுங்கள். நீங்கள் உங்கள் உணர்ச்சிகளின்படி வாழப்போனால் யோபுவைப் போல துன்பப்படுவீர்கள். வலையில் அகப்பட்ட மிருகத்தைப் போலவும், நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியைப் போலவும், மூடப்பட்ட பாதையில் தவித்து நிற்கும் பிரயாணியைப் போலவும், மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பீர்கள். முடியிழந்த மன்னனைப் போலவும், நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடத்தைப் போலவும், வேரோடு பிடுங்கப்பட்ட செடியைப் போலவும் தேவனுடைய சத்துருக்களாகவுமே இருப்போம்.
இயேசுகிறிஸ்து உங்களுடைய இரட்சகராயிருந்தால், அவர் உங்களை நகர்த்தி கட்டுப்படுத்தினால் அவர் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்துவார். இயேசு கிறிஸ்து உங்களுடன் நின்று கொண்டிருக்கையில், அவர் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தால், அவர் உங்களைப் பெலப்படுத்தி, நீங்கள் என்ன செய்யவேண்டுமென அவர் விரும்புகிறாரோ அதை நீங்கள் செய்ய அவர் உதவி செய்கையில் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளினால் வாழ்க்கையைத் தொடரவேண்டியதில்லை. நீங்கள் தேவனுடைய வார்த்தையிலேயே முழுவதுமாய்ச் சார்ந்திருக்கவேண்டும்.
இன்று துன்பத்தினால் தனிமையுணர்வினால் வாடுகிறீர்களா? உங்களுக்கு நான் கொடுக்கும் இலகுவான வார்த்தை இதுவே. உங்களுடைய இரட்சகராக இயேசுவை விசுவாசித்தீர்களானால் தனிமையில் வாடும்போது அவர் உங்களுடன் இருப்பார். அவர் உங்களுடைய கர்த்தரென்று அறிந்தால் உங்களை தைரியப்படுத்த அவரால் முடியும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோம.8:18). யோபு, என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவரை என்னால் நம்ப முடியும். அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனக் கூறினான்.
மொழியாக்கம்: Bro.Johndurai