• Dr.உட்ரோ குரோல் •
(ஜனவரி – பிப்ரவரி 2026)
14. திறக்கப்பட்டிருந்த ஒரு விண்ணக வாசல்…

தேவனுடைய கோபம் இப்புவியில் ஊற்றப்படுவதை வெளிப்படுத்தலின் நான்காம் அதிகாரம் முதல் 19ம் அதிகாரம் முடிய அறிவிக்கிறது. நான்காம் அதிகாரம் சபையில் ஏற்படும் மாற்றத்தை விளக்குகிறது. அது சபை மேலே எடுத்துக்கொள்ளப்படுவதாகும் (rapture of the church). நான்காம் அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களை இப்பொழுது நாம் ஆராய்வோம். சிறிய விஷயங்களுக்கும் நீங்கள் மிக அதிகமான கவனம் செலுத்தவேண்டும் என்று இவ்வாராய்ச்சியின் ஆரம்பத்தில் ஓர் ஆலோசனை கொடுத்திருந்தேன். ஏனெனில் அற்பமான குறிப்புகளை நாம் கவனிக்கவில்லையெனில் பெரிய விஷயங்களைத் தவற விட்டுவிடுவோம் என்றும் நான் அங்கு குறிப்பிட்டிருந்தேன். “இவைகளுக்குப் பின்பு” என்பது 2 மற்றும் 3ம் அதிகாரங்களுக்குப் பிறகு நடக்கும் அப். யோவானின் காலத்து சம்பவங்களாகும். ஆனால் 4ம் அதிகாரமோ எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மாற்றங்களை விவரிக்கிறது. “இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது” (4:1) என்றார். இவ்வசனத்தில் இவைகளுக்குப்பின்பு என்ற சொல் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். இங்கு விண்ணகத்திலும், காலத்திலும் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன என அறிகிறோம். முதலில் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வோம்.
இவைகளுக்குப் (2ம்,3ம் அதிகாரத்தின் நிகழ்வுகள்) பின்னர் அதாவது, 4ம் அதிகாரத்திலிருந்து எதிர்கால காரியங்கள் விளக்கப்படுகின்றன. “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது” (1:19) என்று நாம் வாசிக்கிறோம். இதில் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் ஆகிய முக்காலங்களும் காணப்படுகின்றன. நீ கண்டவைகளையும் (கடந்த காலம்) இருக்கிறவைகளையும் (நிகழ்காலம்) மற்றும் பின்பு சம்பவிப்பவைகளையும் (எதிர்காலம்) எழுது என்று யோவானுக்கு இயேசு கூறினார்.
அதிகாரம் 4 முதல் 10 வரை எதிர்காலத்தில் பரலோகத்தில் நடப்பதைப்பற்றி விவரிக்கிறது. 10 முதல் 21 முடிய பரலோகத்திலும் பூமியிலும் நடப்பதை மாறி மாறி கூறுகிறது. இது வானத்தில் நடக்கும் மாற்றமாகும். அதிகாரம் 4:1இல் யோவானுக்கு ஒரு கதவு திறக்கப்பட்டது. “இங்கே ஏறி வா” என்று அழைக்கும் குரலை அவர் கேட்டார். வெளிப்படுத்தல் புத்தகத்தில் இது மூன்றாவது திறக்கப்பட்டிருந்த வாசல் ஆகும்.
அதிகாரம் 3:8 இல் பிலதெல்பியா சபைக்கு கொடுத்த செய்தியில் அவர் “உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன். இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இது முதலாம் நூற்றாண்டில் நற் செய்தி அறிவிக்க திறந்திருந்த ஒரு கதவு.
வெளி. 3:20இல் லவோதிக்கேயா சபைக்கு எழுதும்பொழுது அவர் “இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்”; என்றார். இங்கு அவர் தன் சொந்த ஆலயத்துக்குள் நுழைய விரும்புகிறார்.
இனி மூன்றாவது வாசலுக்கு வருவோம். இது பரலோகத்தில் நடக்கிறது. “இதோ பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த வாசலைக் கண்டேன்.” பரலோகம் திறக்கப்பட்டு தேவன் மக்களுக்கு தரிசனத்தைக் கொடுத்தால் அது அற்பமான நிகழ்வு அல்ல. இங்கு யோவான் ஆவிக்குள்ளாகி தரிசனம் கண்டார். இது பரலோகத்தில் உண்டான திறப்பு. பூமியிலுள்ள மக்கள் பரலோகத்தைக் காண்பதற்கு அக்கதவு திறக்கப்படவில்லை. யோவான், மத்தியக்கடலில் இருந்த பத்மு தீவில் இருந்து பரலோகத்திற்கு சரீரப்பிரகாரமாக அல்ல; ஆவியிலே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இதைப்போலவே அப்.பவுலும் மூன்றாம் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். யோவான் கூறியது ஒரு புதிய காரியம். அது காலத்தில் உண்டான ஒரு மாற்றம்; விண்ணகத்தில் உண்டான மாற்றம். நடந்தவைகள் கழிந்து போயின. இனி பூமியில் அல்ல, விண்ணகத்தில் நடக்க இருப்பனவற்றை பற்றி நான் கவனம் செலுத்தப்போகிறேன்; நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது; “இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்க வேண்டியதை உனக்குக் காட்டுவேன்”; (வெளி.4:1) என்று யோவான் எழுதியுள்ளார். இந்த சத்தம் ஆண்டவராகிய இயேசுவின் சத்தம் என்பது தெளிவு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றி இயேசு யோவானுக்கு வெளிப்படுத்தினார்.
வசனம் 2இல், “உடனே ஆவிக்குள்ளானேன்” என்றார். அதாவது “கடவுளின் வார்த்தை என்னை முற்றிலும் ஆட்கொண்டதால் எனக்கு வெளிப்படுத்திய யாவையும் நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.” ஆம்; தேவனுடைய ஆவியில்லாமல் அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியாது. “உடனே நான் ஆவிக்குள்ளானேன்; இதோ, வானத்தில் ஒரு சிங்காசனமும், அதின்மேல் ஒருவரும் வீற்றிருந்தார்கள். தேவன் சிங்காசனத்தில் வீற்றிருப்பதால் அது அவருடையது என்பது பொருளல்ல; அதற்கு தகுதியான நபரே அதில் அமர்ந்திருக்கிறார். அது யார் என்பதைப் பின்னர் நாம் காண்போம். வெளிப்படுத்துதல் நான்காம் அதிகாரம், யோவானின் தரிசனத்தை பூமியின் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. “இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்” என்றார். இது கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்கான மாற்றம்; பூமியிலிருந்து விண்ணகத்துக்கான மாற்றம்; நித்திய காலத்துக்கான மாற்றம்; இது குறியீட்டு மொழியில் கூறப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் புத்தகத்தின் அநேக காரியங்கள் நாம் புரிந்துகொள்ளும் விதமாக அடையாள பாஷையில் (உருவகமாகக்) கூறப்பட்டிருக்கிறது.
அதிகாரம் 4: 1, 2 ஆகிய வசனங்களில் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை அடையாளப்படுத்துகிறது. யோவான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைப் போலவே நீங்களும் நானும் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இதற்கு “பிடித்துக்கொள்ளுதல்”; என்று வேதாகமம் பொருள் தருகிறது. இதற்கு “கைப்பற்றுதல் அல்லது பறித்தல்”; என்று பொருள்படும் “ஹர்பாசோ” (harpazo) என்ற கிரேக்க சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “மேன்மை பாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்”(2கொரி. 12:1-2) என்று நாம் வாசிக்கிறோம். பவுல் பரலோகத்திற்கு ஆவியில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
இதைப்போன்று யோவான் 10:28 இலும் “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” இங்கும் harpazo என்ற பதம் உபயோகப்படுத்தப்பட் டுள்ளது. அதாவது சடுதியாக எதிர்பாராதவிதமாய், வன்முறையாக என்று அர்த்தமாம். பிலிப்பு, எத்தியோப்பிய மந்திரிக்கு திருமுழுக்கு கொடுத்த பகுதியிலும் “அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” அப். 8:39 என்று நாம் வாசிக்கிறோம்.
1தெசலோனிக்கேயர் 4:13-18 இல் “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” இங்கேயும் ஹர்பாசோ (harpazo) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது சபை எடுத்துக்கொள்ளப்படுவதுக்கான அடையாளமாகும். அதிகாரம் 4 முதல் 19 முடிய இஸ்ரவேலை மையமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக அதி. 12 இல் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்த ஸ்திரீ இஸ்ரவேலைக் குறிக்கும். முதல் இரு வசனங்களிலும் கூறப்பட்ட ஆண்பிள்ளை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. இயேசு யூதர் என்பதாலே அப்பிள்ளையின் தாய் இஸ்ரவேலைக் குறிக்கும்.
7ம் அதிகாரத்தில் உபத்திரவகாலத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். தேவனுடைய ஆலயம் என்பது எருசலேம் என்று 11ம் அதிகாரத்தில் காண்கிறோம். அதில் நாம் வாசிக்கும் இரு சாட்சிகள் யூத விசுவாசிகளாவர். அதிகாரம் 11 இல் காணப்படும் மாபெரும் பூமியதிர்ச்சி எருசலேமில் நடக்கிறது. அந்திக் கிறிஸ்துவால் உபத்திரவப்படுபவர்கள் யூத மக்களே. வெளிப்படுத்தல் 4 முதல் 19 வரை நடந்த சம்பவங்கள் தேவன் இஸ்ரவேலைக் கைவிடவில்லை என்றும், அதிகமாக அத்தேசத்துக்கு பெரிய காரியங்களைச் செய்வார் என்றும் நம்மை நினைக்க வைக்கிறது. இதையே அப். பவுல் ரோமருக்கு எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.
எனவேதான் நான் “நிறைவேறிவிட்டது” (Preterist) என்ற கொள்கையாளன் அல்ல; “futurist” (நிறைவேற்றக் கொள்கையாளன்) என்று முன்னரே கூறியிருந்தேன். 4ம் அதிகாரத்தின் காரியங்கள் எதிர்காலத்துக்குரியவை, அவை கடந்தகாலத்து வரலாறு அல்ல. “இவைகளுக்குப் பின்பு” என்று 4:1,2 இல் கூறியிருப்பதை நாம் கவனிக்கவேண்டும். “உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்” (வசனம் 2). இது எதைக் குறிக்கிறது? தேவனுடைய கோபத்தை சபை பெற்றுக்கொள்ளாது என்று சபைக்கு தேவன் கொடுத்த வாக்குறுதியை நாம் நம்பவேண்டும். இது தேவையானதும் அவசியமானதுமாகும்.
தேவனுடைய திட்டத்தை அறிந்தால் மாத்திரமே நம்மால் வெளிப்படுத்தின விசேஷம் நூலை விளங்கிக்கொள்ளமுடியும். அவருடைய திட்டமானது, “நீ கண்டவைகளையும், இருக்கிற வைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது” என்று யோவானுக்கு தூதன் கூறுகிறார். இனி வருபவை யாவும் எதிர் காலத்துக்குரியவை. எனவே அது நமது எதிர்காலத்துக்கும் உரியவை. ஆனால் யாக்கோபின் உபத்திரவ காலத்திலும், மகா உபத்திரவ காலத்திலும் நாம் இப்பூமியில் இருப்பதில்லை என்று பொருளாகாது. யோவான் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போலவே நாமும் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்பதற்கு அடையாளம் என நான் நினைக்கிறேன்.
உபத்திரவத்தின் வலியை அனுபவிக்கும் இவ்வுலகிலிருந்து அல்ல; நாம் பரலோகத்தில், நமக்கு சாதகமான இடத்திலிருந்து இவற்றை நீங்களும் நானும் காண்போம். இது மகிழ்ச்சியான செய்தியல்லவா! வெளிப்படுத்தின விசேஷ நூலில் இதுவரை நமக்குக் கிடைத்த சிறந்த செய்தி இதுவாகத்தான் இருக்கும்.
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை