• சகோ. குமார் நவமணி •
(ஜனவரி – பிப்ரவரி 2026)

காலத்துக்குட்பட்டவன் மனிதன். நாம் ஆராதிக்கும் கடவுளோ காலத்தைக் கடந்தவரும், காலத்துக்குட்படாதவருமாயிருக்கிறார். மனிதன் இன்று இருக்கிறான். நாளை சாகிறான். பின்னர் மறக்கப்பட்டுப் போகிறான். அதேவேளை, அன்று சரித்திரத்தில் செயல்பட்ட ஆதியந்தமில்லாத அநாதி கடவுள் இன்றும் செயல்படுகிறவராயிருக்கிறார் என்பதை நாம் மறக்கலாகாது.

இறந்த காலமோ திரும்புவது இல்லை – நிகழ்காலமோ விரும்புவது இல்லை. எதிர்காலமோ அரும்புவது இல்லை என்று ஒரு கவிஞன் காலத்தைக் குறித்துப் பாடினான். கடந்த காலம் மீண்டும் கடந்து வருவதில்லை என்பதை நாம் அறிவோம். அதேவேளை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிகழ்காலத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மால் முடியாது. மேலும். எதிர்காலத்தை நம்மால் எட்டிப்பார்க்கவும் முடியாது என்பதும் யதார்த்த பூர்வமான உண்மையாகும்.

ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் காலத்தைக் குறித்து இவ்வாறு சொல்கிறார். சில மனிதர்கள் இறந்தகால நினைவுகளில் மூழ்கி நிகழ்காலத்தைப் பாழாக்கிவிடுகிறார்கள். சிலரோ நிகழ்காலத்துக்காக மாத்திரமே வாழ்ந்து எதிர்காலத்தை இழந்து விடுகின்றனர். இன்னொரு சாரார். எதிர்காலத்தைக் குறித்து அநாவசியமாய் கவலைப்படுவதினால் நிகழ்காலத்தைக் கசப்புள்ளதாக மாற்றிக்கொள்கின்றனர். அப்படியானால் காலத்தைக் குறித்த நமது கண்ணோட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அ) நேற்றைய நினைவு

கடந்த காலத்தின் நினைவுகளை முற்றாக நமது மனதிலிருந்து அகற்றினவர்களாக வாழ்வது என்பது இயலாத காரியம். அதேவேளை கடந்த காலத்திலேயே வாழ்வது என்பதும் தவறான காரியமாகும்.

மனிதர்களாகிய நாம் அநேக காரியங்களில் தவறுகிறோம். இறந்த காலத்தில் நாம் விட்ட தவறுகள், செய்த பாவங்கள், எடுத்த பிழையான தீர்மானங்களை நினைத்து சிலவேளை இப்போது கண்ணீர் வடிக்கலாம். எபேசு சபைக்கு கடவுள் கொடுத்த செய்தி என்ன? நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி,… (வெளி.2:5). ஆகவே, கடந்த காலத்தின் நமது விழுந்துபோன நிலையை நினைவில் நிறுத்தி, அந்தத் தவறுகளை மீண்டும் நாம் விடாதபடி கவனமாயிருப்பது அவசியம். மெய்யான தெய்வத்தை மறந்தவர்களாய், பொய்யான விக்கிரகங்களை வணங்கிய இஸ்ரவேலர் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டபோது அவர்கள் என்ன செய்தார்கள்? பாபிலோன் அறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் (சங்,137:1). ஆம்! இஸ்ரவேலர் தங்களின் பொற்கால அனுபவங்களையும், அதே நேரத்தில் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நினைத்து கண்ணீர் வடித்தார்கள். கடந்த காலத்தின் அனுபவங்கள் கற்று தந்த பாடங்களை மறக்காமல் அவைகளை நினைவில் நிறுத்திய இஸ்ரவேலரின் செயல் பாராட்டுக்குரியதே. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுள் அவர்களை விடுவித்து கானான் தேசத்தை நோக்கி வழிநடத்தியபோதும் அநேகமான சந்தர்ப்பங்களில் இஸ்ரவேலர்கள் முறையிடுகிறவர்களாகவும், முறுமுறுக்கிறவர்களாகவும், கலகம் பண்ணுகிற முரட்டாட்டமுள்ள மக்களாகவே காணப்பட்டார்கள். அப்படிப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மோசே கடவுளின் அற்புதமான வழிநடத்துதலையும், கட்டளைகளையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறதை நாம் வாசிக்கலாம்.

கடந்த காலத்தின் தவறுகளையே எப்போதும் நினைத்து கண்ணீர்விடும் மக்களும் உண்டு. நாம் நம் பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு அதை விட்டு விலகும்போது. கடவுளின் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதோடு, அவர் நமது பாவங்களை இனி நினைக்காமல் அதை ஆழ்கடலின் ஆழத்துக்குள் அமிழ்த்திப்போடுகிறார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியிருக்க அதையே நினைத்துப் புலம்புவது தவறாகும்.

வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்போல் தனக்கு முன் தெரியும் பாதையை எப்போதும் பார்க்கிறவனாகவும் அதேவேளை கண்ணாடி மூலம் தனக்குப் பின்னால் தெரியும் பாதையை பார்க்கிறவனாகவும் நாம் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். படகை முன்னே செலுத்த உதவும் துடுப்பு போலன்றி, நம்மை ஒரே இடத்தில் நிறுத்திவிடும் நங்கூரம்போல கடந்த நினைவுகள் இருக்கக்கூடாது.

ஆ) நிகழ்காலத்தின் நிச்சயம்

முன்னர் கண்டபடி, நாம் நிகழ்காலத்திலிருந்து தப்பிக் கொள்ளமுடியாது. ஆகவே இன்று என்பதை ஒருபோதும் அசட்டை செய்யமுடியாது என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது. நாம் இன்று கடந்துபோகும்பாதை எவ்வாறாக இருந்தாலும், சரித்திரத்தில் செயல்பட்ட செயல்படுகின்ற கடவுள் நம்மோடு பயணம் செய்கிறவராக இருக்கிறார் என்ற நிச்சயம் உடையவர்களாயிருக்கவேண்டும். இஸ்ரவேலரின் வனாந்திரப் பயணம் அதையே நமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் கடவுளின் பிரசன்னம். பாதுகாப்பு, வழிநடத்துதல் இவை அனைத்தையும் அடையாளப்படுத்துகிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற சத்தியம் நிகழ்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமையை நமக்குக் கொடுக்கிறது.

ஏசாவின் வாழ்க்கை நிகழ்காலத்துக்காக மாத்திரம் வாழ்வோரின் அறிவீனத்தை நமக்கு அறிவிக்கிறது. பசியினால் இளைத்துப்போயிருந்த ஏசா சிரேஷ்ட புத்திரபாகத்தின் அருமையை உதாசீனம் செய்து அதை வெறும் கூழுக்காக விற்றுப்போட்டான். அவனுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் இன்று இப்போது என்பதுதான். இன்றைக்காக மாத்திரம் வாழ்ந்து எதிர்காலத்தை இழந்துபோகிறவர்கள்தான் எத்தனை பேர்? அழிந்துபோகும் பொருளுக்காக அழியாததை இழந்துபோவது எத்தனை அறிவீனம்!

நிகழ்காலத்தை அலட்சியம் செய்யும் மற்றுமொரு மனப்பாங்கு, நாளை பார்ப்போம் என்ற ரீதியில் வாழ்வதாகும். இன்று செய்யவேண்டியதை செய்யாமல் காலம் தாழ்த்துவதையும், தள்ளிப்போடுவதையும் நாம் தவிர்க்கவேண்டும். இன்றே இரட்சணிய நாள்! இன்றே அநுக்கிரக காலம்! என்று வேதம் விளம்புகிறது. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் .. உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள் (சங். 95:8). காலத்தின் அருமையை அறிந்து நீ வாழாவிடில் கண்ணீர் விடுவாயே! என்ற கிறிஸ்தவ கீர்த்தனை அதைத்தான் நமக்கு அறிவிக்கிறது.

இ) நாளைய நம்பிக்கை

கிறிஸ்தவர்கள் இம்மைக்காக மாத்திரம் வாழ்கிறவர்களல்ல. மரணத்துக்குப் பின் ஒரு வாழ்வு நமக்கு உண்டு என்பது இயேசுவின் உயிர்த்தெழுதலால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியமாகும். அத்தோடு, இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் காலத்திற்குமுன் வரும் அட்வெந்து நாட்கள் இயேசு ராஜாதி ராஜாவாக வரப்போகும அவரது இரண்டாவது வருகைக்காக ஆயத்தப்படவும் அதை ஆவலோடு எதிர்பார்க்கவும் நம்மை அழைக்கிறது.

சிலர் எதிர்காலத்தைக் குறித்து எவ்விதமான சிந்தனையுமன்றி நிகழ்காலத்துக்காக மாத்திரம் வாழ்கிறார்கள். மரிக்கும்வரை மனம் போன வாழ்வு, மரிக்கும்போது மகிமை காட்சி காணலாம் என்ற தப்பெண்ணம். இன்னும் சிலரோ, எப்போதும் பரவச காட்சியில் மனம் திளைத்தவர்களாக, நிகழ்காலத்தில் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற நடத்தை இல்லாதவர்களாக வாழ்கின்றனர். இதுவும் ஒரு பிழையான மனப்பான்மையாகும். சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்பவர்கள் அநேக தடவைகள் அந்த பயணத்துக்காக ஆயத்தப்படுவார்கள். பயிற்சியும் எடுப்பார்கள். இதேபோல், இவ்வுலக வாழ்க்கை மறுலோக வாழ்வுக்காக நம்மை ஆயத்தப்படுத்தும் பயிற்சிக்கூடம் என்பதை மறந்துபோகக்கூடாது. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது (தீத்து 2:13). அநேகர் தங்களுடைய எதிர்காலத்தை குறித்து இப்போதே அதிகமாக கவலைப்பட்டு வீண் பாரங்களைச் சுமந்து தவிக்கின்றனர். எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது பிழையான காரியமல்ல. ஆனால், கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கையை நமது எதிர்கால திட்டங்கள்மேல் வைக்கக்கூடாது. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி.21:31) என்று வேதம் சொல்லவில்லையா?

நாளையைக் குறித்து அதிகமாய் கவலைப்படுவதும் அதற்காகப் பல திட்டங்கள் தீட்டுவதினாலும் நாம் கடவுளைவிட நம் திட்டங்களிலும் ஐசுவரியத்தின் மீதும் மிதமிஞ்சிய நம்பிக்கை வைக்கிறோம். இன்னும் சிலரோ எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களாக மனம் பதறுகிறவர்களாக இருக்கிறார்கள். இதனால், கை ரேகை, சாஸ்திரம் பார்த்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். என்னுடைய காலங்கள் உம்முடைய கரத்திலிருக்கிறது என்று சங்கீதக்காரன் சொல்கிறான். முக்காலத்தையும் அறிந்த கடவுளின் கரத்தில் நம் வாழ்க்கையை கொடுத்தவர்களாய், எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபி.13:8).

காலத்தைக் குறித்த நம் எண்ணத்தில் சமநிலை தேவை. கடந்த காலத்தின் அனுபவத்தினால் நிரப்பப்பட்டவர்களாகவும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையினால் வெளிச்சம் பெற்றவர்களாகவும் கடவுளின் கிருபையை துணையாகக் கொண்டு நிகழ்காலத்தை சந்திப்போம்.

 மொழியாக்கம்: Bro.Johndurai