• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜனவரி – பிப்ரவரி 2026)

பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய செல்வம் கல்வியேயாகும். எந்த ஒரு மனிதனும், சாகும் வரை தன்னிடம் வைத்திருக்கக்கூடிய செல்வம் இதுவேயாகும். மற்றைய அனைத்தையும் அவன் இழந்துவிடலாம். ஆனால், அவன் தலையினுள் இருப்பதை மட்டும் எவராலும் அவனிடமிருந்து எடுத்துவிடமுடியாது. இதனால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தைப் பெற்றுக்கொடுப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டும்.

இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஐந்தில் வளைவதுதான் ஜம்பதிலும் வளையும். எனினும், கிறிஸ்தவர்களாகிய நாம், நமது பிள்ளைகளுக்கு எவைகளைக் கற்பிக்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டியது மிக மிக அவசியம். கண்டதும் கற்க பண்டிதனாவான் எனும் பழமொழியைப் பற்றி நாம் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். ஏனெனில், பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியவைகளைப் பற்றி கரிசனை கொள்ளாது, அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிட்டால், எதிர்காலத்தில் அவர்கள் தெய்வ பயமற்றவர்களாகவும், ஒழுக்க நெறியற்றவர்களாகவும் வாழத் தொடங்கி விடுவார்கள்.

இதனால்தான் வேதமும், “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி. 22:6) என அறிவுறுத்துகிறது. அதாவது அவன் தான் எப்படியும் வாழலாம் எனும் கொள்கையுடையவனாக இராமல், தன் வாழ்வுக்கென ஒரு குறிப்பிட்ட நெறிமுறையை உடையவனாக இருக்க சிறுவயதில் இருந்தே அவனுக்கு நல்லாலோசனைகள் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

“பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங் 127:4) என்பதனால், இவர்களுக்கு நாம் எவைகளைக் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் அறியத்தந்துள்ளார். “அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளை களுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்கு கட்டளையிட்டார்” (சங் 78:5). உபாகமம் 11:19 -20 இல், “நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து….. .. அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்து பேசுவீர்களாக” என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியது கர்த்தருடைய வார்த்தையையே என்பதனை மறுப்பதற்கில்லை. சிறுவயதிலேயே அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும்போது வாலிப வயதில் அவர்கள் வழி தவறி போகாதபடிக்கு, அவைகள் அவர்களைக் காத்துக்கொள்ளும்.

கர்த்தர் பெற்றோர்களுக்கு கொடுத்துள்ள இக்கட்டளையைச் சற்று கருத்தூன்றிப் பார்க்கும் போது நாம் கண்டுகொள்ளும் முக்கியமான விஷயம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வார்த்தையை கற்பிப்பதற்கு முன்பாக, அவர்கள் அவைகளைத் தங்கள் தங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் பதித்திருக்க வேண்டும் (உபாக.11:19), இதனாலேயே, “இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது” (உபா 6:6) என கர்த்தர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, கர்த்தருடைய வார்த்தை, ”சகல ஞானத்தோடும் நமக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருக்க வேண்டும்” (கொலோ.3:16) “அவைகளை நம் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்ள வேண்டும்’ (நீதி.3:3;7:3) அதாவது, கர்த்த ருடைய வார்த்தையை நாம் நன்கறிந்திருக்க வேண்டும். அப்போதுதான், அவைகளை பிள்ளைகளுக்கு கற்பிக்கும்போது அவர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். மட்டுமல்ல, பெற்றோர்கள் தாங்கள் அறியாதவைகளை, தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதும் நடை முறையில் சாத்தியமாகக்கூடிய விஷயமல்ல. எனவே, முதலாவதாக பெற்றோர்கள் கர்த்தருடைய வார்த்தையை நன்கறிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வார்த்தையை கற்பிக்கும்போது, நாம் அதை கடமைக்காக செய்யக்கூடாது. ஏதோ ஒருசில வசனங்களை அவர்கள் வாசித்தால் போதும் அல்லது மனனம் செய்தால் போதும் என கருதக்கூடாது. மாறாக, நாம் அவர்களுக்கு அவைகளை உபதேசிக்க வேண்டும் (உபா.11:20), கருத்தாய் போதிக்க வேண்டும்” (உபா.6:7). மற்ற பாடங்களை எவ்வாறு அதி சிரத்தையுடன் அவர்களுக்கு நாம் கற்பிக்கின்றோமோ. அதேபோல, கர்த்தருடைய வார்த்தையையும் அதி முக்கியமானதொரு பாடமாக கருதி அதை போதிக்க வேண்டும். அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் பள்ளிக்கூட பாடங்களை தம் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதில் பெற்றோர் செலுத்தும் அக்கறையை கர்த்தருடைய வார்த்தையை கற்பிப்பதில் காட்டுவதில்லை. இதனால், பிள்ளைகள் கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்காமலிருக்கின்றனர். அநேகர் இது ஓய்வுநாட் பாடசாலை ஆசிரியரின் பணி என கருதி, தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் கர்த்தருடைய வார்த்தையை கற்பிக்கத் தேவையில்லை என்றும் எண்ணுவ தனாலும், பிள்ளைகள் வேதாகமத்தை புறக்கணித்துவிட்டு, மற்றைய பாடங்களை கற்பதிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றனர். எனவே, பெற்றோர் கர்த்தருடைய வார்த்தையை அதிமுக்கியமானதொரு பாடமாக கருதி. அதை கருத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

கர்த்தருடைய வார்த்தையை பிள்ளைகளுக்கு கற்பிப்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்து பணி என கருதி அதற்கு ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி வைத்து, அந்நேரத்தில் எதையாவது அவர்களுக்கு வேதத்திலிருந்து சொல்லிகொடுக்க வேண்டும் எனும் எண்ணமுடையவர்களாகவும் பெற்றோர் இருக்கக்கூடாது. ஏனெனில், கர்த்தருடைய வார்த்தையைக் கற்பது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கல்வியல்ல. நாம் எல்லா வேளைகளிலும் அதை நம் பிள்ளைகளுக்கு கற்பிப்பவர்களாய் இருக்க வேண்டும். இதனாலேயே கர்த்தர் “நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும். படுத்துக்கொள்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசுவீர்களாக” (உபா 11:20) என அறிவுறுத்தியுள்ளார். நாம் எப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கவேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்த்தருடைய வார்த்தை எவ்வாறு யதார்த்தபூர்வமாக வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது என்பதை பிள்ளைகள் அறிந்துகொள்ளும் வண்ணம் நாம் அவைகளைப் பற்றி கலந்துரையாட வேண்டும்.

இன்று அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிய உரையாடல்களைக் கேட்பது மிகமிக அரிது. ஏதோ போதகர் வீட்டுக்கு வந்தால் மட்டும் (அதுவும் அத்தி பூத்தாற் போல) ஒருசில நிமிடங்கள் கர்த்தருடைய வார்த்தையை பற்றி ஓரிரு கருத்துப்பரிமாறல்கள் இடம் பெறும். மற்றபடி ஊர்க்கதைகளையும் எவ்வித பிரயோஜனமுமற்ற விஷயங்களைப் பற்றியுமே குடும்ப அங்கத்தினர்களின் உரையாடல்களில் காணக்கூடியதாயுள்ளது. இதனால், பிள்ளைகளும், இத்தகு பெறுமதியற்ற வீண் பேச்சுகளில் நேரத்தை கற்றுக்கொள்கின்றனர். எனவே, சத்தியவசன வாசகர்கள் தங்கள் பிள்ளைகளை கர்த்தருடைய பாதையில் வழி நடத்துவதற்காக கர்த்தருடைய வார்த்தையை தங்கள் அன்றாட வாழ்க்கையோடு ஒரு அம்சமாக்கி கற்பிக்க வேண்டும் என்பதே என் வாஞ்சையாகும். தேவன் தாமே உங்களை வழிநடத்துவாராக.