வரையறுக்கப்பட்ட வாழ்நாட்கள்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் (யோபு 14:5).

தேவன் தமது ஞானத்தால் மனிதனாகிய நம் மீதும் அவர் நம்மை வைத்துள்ள இவ்வுலகின் மீதும் விதித்த வரம்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் கடலுக்கு எல்லையை வைத்துள்ளார் (யோபு 38:10-11); சாத்தானையும் மட்டுப்படுத்தியுள்ளார் (1:12;2:6), தேசங்களுக்கு எல்லைகளை வரையறுக்கிறார் (அப்.17:26). ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதி பெற்றோர்களும் அவர்களுக்குரிய காரியங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களது வரம்புகளை மீறியதால் வெளியேற்றப்பட்டனர் (ஆதி.3). நமது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றில் நீங்களும் நானும் தனித்தனியாக மட்டுப்பட்டவர்கள். தேவனே அவைகளுக்கு வரம்புகளை விதித்துள்ளார். நமது ஆயுசு நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. அந்த இறுதி நாளைத் தாண்டி நாம் செல்லக்கூடாது. அதை அவசரப்படுத்தினால் அது முட்டாள்தனம்.

சட்டத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம். ஆனால் வாழ்க்கையில் நாம் அனைவரும் சமமல்ல; மனித வாழ்க்கை தனிப்பட்ட வரம்புகளை உள்ளடக்கியது. ஆனால், வரம்புகள் நமக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அது பொதுசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வாகனம் ஓட்டுவதற்கு எனக்கு சுதந்திரத்தைத் தருகிறது. நானும் எனது மனைவியும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததால், நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும். ஊழியம் செய்வதற்கும் உதவி செய்கிறது.

அதுபோல நமது ஜெபத்திற்கு பதில் பெற விரும்பினால் நாம் சில நிபந்தனைகளுக்குட்பட வேண்டும். அவைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் தேவன் நமது தேவைகளை அருளுவார். இதுவே சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும். நாம் செய்ய விரும்பும் காரியங்களை செய்வது சுதந்திரம் ஆகாது; தேவன் குறித்திருப்பதை நான் செய்வதே மெய்யான சுதந்திரம்; என்னுடைய கீழ்ப்படிதல் எனக்கு ஆசீர்வாதத்தின் வழியைத் திறக்கும்.

உண்மையான சுதந்திரம் ஐக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஏனெனில் நமது திறமைகளும் உடைமைகளும் வரம்புகளுக்குரியவை. அநேக காரியங்கள் எனக்குத் தெரியாதவை; என்னால் செய்ய இயலாதவை. எனவே மற்றவர்களது உதவி எனக்குத் தேவை. தேவன் ஆதாமின் தனிமை நல்லதல்ல என்று கண்டார். எனவே அவனுக்கு உதவ ஏற்ற துணையை உண்டாக்கினார் (ஆதி.2:18-25). திருமணம், குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்றவை தேவன் நமக்குத் தந்த பரிசுகள். இவ்வுலகில் நம்மால் இயலாதவற்றுக்கு உதவ தேவனுடைய இருதயத்திலிருந்து இவை நமக்குத் தரப்பட்டவையாகும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். குடும்பம், சமுதாயம் மற்றும் சபை ஆகியனவும் ஒத்தவை. நாம் ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவவேண்டும்.

வாழ்க்கை சில வரம்புகளுக்குட்பட்டது, அவை நமக்கு சுதந்திரத்தைத் தந்து ஐக்கியத்தில் முடிகிறது. இந்த ஐக்கியமானது வாழ்வை தீவிரமாகக் கண்ணோக்க வைக்கிறது. நமது வாழ்வு மற்றவர்களுடன் அன்புடன் இணைந்தால் அவர்கள் சிறப்பானவர்களாக மாறுகிறார்கள், அவர்களை இழக்க நாம் விரும்புவதில்லை. “ஆகவே நாங்கள் ஞானமுள்ள இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்.90:12) தேவன் நமது நாட்களைக் குறித்துள்ளார். ஆனால், அது நமக்குத் தெரியாது. நம்முடைய நாட்களையும் காரியங்களையும் அவர் தமது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆனால், நம்மால் அந்த பக்கங்களைப் பார்க்க இயலாது (சங்.139:15-16).

காரியங்களின் தொகையாவது: நம்முடைய வாழ்க்கை குறுகினது! எனவே நாம் நமது வாழ்வையும் மற்றவர்களின் வாழ்வையும் மதிக்கவேண்டும். ஏனெனில் அவை வரம்புகளுக்குட்பட்டவை. தேவன் நமது வரம்புகளைக் குறித்துள்ளார். குறிப்பாக நமது ஆயுட்காலம்; எனவே தேவன் நமக்குக் கொடுக்கும் மணி நேரங்களையும், நாட்களையும் நாம் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்யவேண்டும். “பகற்கால மிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4).

நமக்கு தரப்பட்டுள்ள வரம்புகள் தடைகள் அல்ல; அவை வாய்ப்புகள். நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவோம். “என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது, ஆனால், என்னாலும் ஏதாவது செய்யமுடியும். என்னால் இயலும்வரை தேவன் எனக்கு கொடுத்துள்ள காரியங்களில் உண்மையாக இருக்கவேண்டும்”.

“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை