• வில்லியம் மெக்டோனால்ட் •
(ஜூலை – ஆகஸ்டு 2025)
இயேசுகிறிஸ்துவின் வருகை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இரண்டாவது வருகையானது தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்பட்டது. அது இன்றும் எதிர்காலத்தையது.
இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகை தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது ஒரு குறிப்பிட்ட காலஅளவை உள்ளடக்கியிருப்பதோடு, நான்கு பகுதிகளை அல்லது அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்பாடத்தில் அப்பகுதிகளை நாம் வேறுபடுத்திப் பார்க்கப்போகிறோம்.
வருகை என்பதற்கு புதிய ஏற்பாட்டின் மூல மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தை பிரசன்னம் என அர்த்தந்தரும். இது வருகையையும் அதைத் தொடர்ந்திடும் பிரசன்னத்தையும் குறிக்கின்றது. இது பொதுவாக ஒரு அரசனுடைய வருகையோடும் அதனைத் தொடர்ந்திடும் விஜயத்தோடும் தொடர்புற்றுள்ளது.
நமது மொழியிலும் வருகை எனும் வார்த்தை இவ்விதமாக உபயோகிக்கப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக, இயேசுகிறிஸ்து கலிலேயாவுக்கு வருகை தந்தது அநேகருக்கு சுகத்தைக் கொடுத்தது எனும் வாக்கியத்தில் சுகம் கிடைத்ததை, அவர் கலிலேயாவுக்கு வந்த நாளோடல்ல, அவர் அங்கிருந்த காலப்பகுதியைக் கருத்திற்கொண்டே கூறுகிறோம்.
எனவே, நாம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி சிந்திக்கும்போது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைக் கருதுகிறோமே தவிர, தனிப்பட்ட ஒரு சம்பவத்தைமட்டும் கருதவில்லை. இக்காலப் பகுதி நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
1. இயேசுவினுடைய வருகையின் ஆரம்பம்
இயேசுவினுடைய வருகையின் ஆரம்பமானது சபை எடுத்துக்கொள்ளப்படுதலாகும். (இதுவே தமிழில் இரகசிய வருகை என பொதுவாக அழைக்கப்படுகின்றது). இது கிறிஸ்து தனது பரிசுத்தவான்களுக்காக வருவதாகும். அவர் ஆகாயத்தில் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடெழும்புவார்கள். உயிரோடிருக்கும் கிறிஸ்தவர்கள் மறுரூபமாக்கப்படுவார்கள். எல்லோரும் பிதாவின் வீட்டுக்குச் செல்வார்கள். இது எந்த சந்தர்ப்பத்திலும் நடைபெறலாம். அதேசமயம் இவை ஒரு நொடிப்பொழுதில் சம்பவிக்கும்.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1கொரி. 15:22-23).
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரை யடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூட கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும். தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். (1 தெச. 4:13-18).
அன்றியும், சகோதரரே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும். நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங் குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால், (2 தெச.2:1) இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடியபொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடியபொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே (யாத்.5:7-8).
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள் (1 யோவான் 2:28).
சபை எடுத்துக்கொள்ளப்படுவதைப் பற்றி குறிப்பிடும் ஏனைய வேதவசனங்கள்: யோவான் 14:1-4, 1கொரி.15:51-54, பிலி.3:20-21, 1தெச. 1:10, எபி. 9:28, 1 யோவான் 3:2, வெளி.22:7, 20.
2. இயேசுவின் வருகையின் நடவடிக்கைகள்
இயேசுகிறிஸ்துவின் வருகையின் இரண்டாவது பகுதியானது அவரது நியாயத்தீர்ப்பை உள்ளடக்கியுள்ளது. அப்போது உண்மையுள்ள சேவைக்கான வெகுமதி விசுவாசிகளுக்கு அளிக்கப்படும். எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள் (1 தெச.2:19).
சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக (1 தெச.5:23).
ரோமர் 14:11,12; 1 கொரி.3:11-15, 2 கொரி. 5:10, 2 தீமோ.4:7-8 எனும் வசனங்களையும் பார்க்கவும்.
இயேசுவின் வருகையின் இரண்டாவது பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டிய இன்னுமொரு விஷயம், ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகும். வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தில் இச்சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தைக் கருத்திற் கொள்கையில், இது கிறிஸ்துவின் மகிமையான ஆட்சிக்கு முன்பதாக நடைபெறுவது என்பதை அறிந்துகொள்கின்றோம்.
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி, அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும், பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது. அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்த வான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி; ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் (வெளி.19:67-9).
இக்காரியங்கள் பரலோகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பூமியின் மக்கள் உபத்திர வங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய 7 வருட காலத்தை உள்ளடக்கிய இப்பகுதியில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு செல்லும் நியாயத்தீர்ப்பைத் தேவன் பூமியின்மீது ஊற்றுவார் (தானி.9:27, மத். 24:4-28. வெளி.6-19). இந்த உபத்திரவ காலத்தின் இறுதி அரைப்பகுதி உபத்திரவக் காலம் என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கடுமையான உபத்திரவத்தினாலும் தொல்லைகளினாலும் நிறைந்திருக்கும்.
3. இயேசுவின் வருகையின் பிரத்தியட்சம்
மூன்றாவது பகுதியானது இயேசுவின் வருகையின் பிரத்தியட்சமாகும். ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக அவர் மகிமையோடும் வல்லமையோடும் ஆளுகை செய்வதற்கு பூமிக்கு வருவதே அவரது வருகையின் பிரத்தியட்சமாகும். அவரது இரகசிய வருகையை உலகம் அறிந்துகொள்ளாது. அது ஒரு இமைப்பொழுதில் நடைபெறும் சம்பவமாகும். ஆனால், இயேசுகிறிஸ்து ஆளுகை செய்ய வரும்போது, எல்லோருடைய கண்களும் அவரைக் காணும். இதனாலேயே இது அவரது வருகையின் பிரத்தியட்சம் என அழைக்கப்படுகின்றது.
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து; இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் (மத்.24:3).
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும் (மத்.24:27). எப்படி நோவாவின் காலத்தில் நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில் … ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள். அப்படியே மனுஷகுமாரன் வருங் காலத்திலும் நடக்கும் (மத்தேயு 24:37-39).
இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக (1 தெச.3:13).
நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார் (2 தெச.2:8).
சகரியா 14:4, மல்கியா 4:1-3, 2 தெச. 1:7-9, யூதா 14, வெளி.1:7, 19:11-16 என்பன இம்மூன்றாவது பகுதியைப் பற்றிய ஏனைய வசனங்களாகும்.
4. இயேசுவின் வருகையின் உச்சக்கட்டம்
இயேசுவின் வருகையின் இறுதிப்பகுதி அதன் உச்சக்கட்டமாகும். அது வானம் பூமி என்பவை அக்கினியினால் அழிவதை உள்ளடக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இயேசுவின் ஆயிரவருட அரசாட்சி ஆரம்பமாகும். இது 2 பேதுருவின் நிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத் தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந் தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் போலவும். ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிற தாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்: அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம் (2 பேதுரு 3:4, 7-13).
கடைசி நாளில் எழும்பும் பரியாசக்காரர் பற்றி நாம் இப்பகுதியில் வாசிக்கின்றோம். இவர்கள் இயேசுவின் வருகையை மறுதலிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் வருகையின் எப்பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள்?
அவர்கள் இரகசிய வருகையைப்பற்றி கருதுகிறார்களா? இல்லை, அவர்களுக்கு இரகசிய வருகையைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. இயேசு ஆட்சி செய்ய வருவதைப் பற்றியா அவர்கள் குறிப்பிடுகின்றனர்? இல்லை, இதுவும் அவர் களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தெளிவாகின்றது. இப்பகுதியிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாதெனில், பரியாசக்காரர் துன்மார்க்கர்மீது வரும் கர்த்தரின் இறுதித் தண்டனையைப் பற்றியே பரிகசிக்கின்றனர் என்பதை அறிகின்றோம். அவர்கள் உலகின் முடிவை, அச்சமயம் நடைபெறும் நியாயத்தீர்ப்பின் உச்சக்கட்டத்தைப் பரிகசிக்கின்றனர். எதற்கும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்பதே அவர்களது தர்க்கமாகும். தேவன் இதுவரை மானிட சரித்திரத்தில் தலையிடவில்லை. அவர் இனிமேலும் தலையிடமாட்டார் என கருதிய அவர்கள், தமது தீமையான பாவமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இயேசுவின் ஆயிரவருட ஆட்சியின் பின்பான காலத்தைப் பேதுரு பரியாசக்காரர்களுக்கு சுட்டிக் காட்டுகிறார். அச்சமயம் இப்போதிருக்கும் வானமும் பூமியும் ஒழிந்துபோகும். இயேசுவின் வருகை உச்சநிலையானது ஆயிரவருட ஆட்சியின் பின்பு, நித்திய நிலைமையின் ஆரம்பத்தில் இருக்கும். ஆனால், இயேசுவின் வருகையில் முதலாம் மூன்றாம் பகுதிகள் வெவ்வேறான சம்பவங்கள் என்று உமக்கு எப்படி தெரியும் என ஒருவர் கேட்கலாம். அவை பின்வருமாறு வேதாகமத்தில் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றது என்பதே அதற்கான பதிலாகும்.
1. சபை எடுத்துக்கொள்ளப்படும்போது இயேசு ஆகாயத்தில் வருவார் (1 தெச. 4:16,17) இறுதியில் அவர் பூமிக்கு வருவார்.
2. முதலில் அவர் தனது பரிசுத்தவான்களுக்காக வருவார் (1தெச.4:16-17),பின்னர் அவர் பரிசுத்தவான்களோடு வருவார் (1 தெச.3:13, யூதா 14).
3. சபை எடுத்துக்கொள்ளப்படுவது இரகசியமானது. அது பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் அறியாததொன்று (2கொரி.15:51). ஆனால், அவரது இறுதி பிரத்தியட்சம் இரகசியமானதல்ல. பழைய ஏற்பாட்டில் இது பற்றி பல தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுள்ளன (சங்.72, ஏசா.11, சக.14).
4. கிறிஸ்து தனது பரிசுத்தவான்களுக்காக வருவதற்கு முன்பு வானத்தில் இதற்கான அடையாளங்கள் தோன்றும் என சொல்லப்படவில்லை. ஆனால், அவர் தமது பரிசுத்தவான்களோடு வரும்போது வானத்தில் அதற்கான அடையாளங்கள் இருக்கும் (மத் 24:29,30).
5. இரகசிய வருகையானது கிறிஸ்துவின் நாளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது (1கொரி.1:8, 2 தெச. 1:14, பிலி. 1:5,10), ஆனால், பகிரங்க வருகையோ கர்த்தருடைய நாளுடன் இனங் காணப்பட்டுள்ளது (2 தெச.2:1-12).
6. சபை எடுத்துக்கொள்ளப்படுதல் ஆசீர்வாதமான காலமாக சொல்லப்பட்டுள்ளது (1தெச. 4:18). ஆனால், பகிரங்க வருகையில் நியாயத் தீர்ப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
7. சபை எடுத்துக்கொள்ளப்படுவது ஒரு இமைப்பொழுதில் நடைபெறுவது (1கொரி. 15:52). இதிலிருந்து இதை உலகமக்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள் என்று தெளிவாகின்றது. ஆனால், இயேசுவின் வருகையை உலகிலுள்ள அனைவரும் காண்பார்கள் (மத் 24:27, வெளி1:7).
8. இரகசிய வருகை சபையுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது (யோவா. 14:1-4. 1 கொரி. 15:51-58, 1தெச.4:13-18). ஆனால், அவரது பகிரங்க வருகை இஸ்ரவேலுடனும் புறஜாதி நாடுகளுடனும் சம்பந்தப்பட்டது (மத்.24:1-25,46).