• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

நம்மைக் குறித்து யாராவது ஆச்சரியப்பட்டிருக்கிறார்களா? இந்த ஆச்சரியம் நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். சமீபத்தில் ஒரு தேவஊழியர் வைத்த சவாலை இக்கட்டுரைமூலம் உங்கள் முன்பாக வைக்கிறேன். இயேசு “ஆச்சரியப்பட்டார்” என்று நான்கு சுவிசேஷங்களிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
எதிர்மறையான ஆச்சரியம்:
மாற்கு சுவிசேஷம் 6:1-6ல் இந்த எதிர்மறையான ஆச்சரியம் பதியப்பட்டுள்ளது. இதற்கு முந்திய அதிகாரத்தில்தான் ஜெபஆலயத் தலைவன் யவீருவின் மரித்துப்போன குமாரத்தி உயிரோடு எழுப்பப்பட்ட சங்கதியையும், பன்னிரு வருடங்களாக வியாதியால் அவஸ்தைப்பட்ட பெண் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டுக் குணமடைந்த சம்பவத்தையும் வாசிக்கிறோம். ஆக, இயேசுவைக் குறித்து செய்திகள் நிச்சயமாகவே பல இடங்களிலும் பரவியிருந்திருக்கும். இந்த நிலையில் இயேசு தமது சீஷர்களுடன் தாம் வளர்ந்த ஊருக்கு வருகிறார். ஓய்வுநாளானபோது ஜெபஆலயத்துக்குச் சென்று உபதேசிக்கத் தொடங்கினார்.
அவரைக் கேட்டவர்கள் சந்தோஷப்பட்டார்களா? நமது ஊரானுக்கு இத்தனை ஞானமா என்று பெருமைப்பட்டார்களா? இல்லை! மாறாக, இவனால் இவ்வளவு பலத்த செய்கைகள் நடப்பது எப்படி? எங்கிருந்து இவனுக்கு ஞானம் வந்தது என்று எதிர்மறையாகவே பேசினர். இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? இவன் சகோதரர் சகோதரிகள் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா என்று தடுமாறினர். இவ்வாறு எத்தனையோ கேள்விகள்? அவர்களால் இயேசுவை ஏற்கமுடியவில்லை. ஒரு காரியத்தைக் கவனிக்க வேண்டும். “இவன் மரியாளுடைய குமாரன் அல்லவா” என்று சொன்னதிலிருந்து, தகப்பன் பெயர் தெரியாதவன் என்பது மறைமுகமாக அவரைப் பரிகசித்தார்கள் என்பதுவும் புரிகிறது. அதாவது அவர்களால் இயேசுவை நம்ப முடியவில்லை.
“இயேசு அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு…” என்று வசனம் 6ல் வாசிக்கிறோம். அவர்களின் அவநம்பிக்கையினால் அவரால் நாசரேத்தில் அதிக அற்புதங்கள் செய்ய முடியவில்லை. தாம் வளர்ந்த ஊர்மக்களின் அவிசுவாசத்தைக் குறித்து இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். இது எதிர்மறையான ஆச்சரியம்!
நேர்மறையான ஆச்சரியம்:
அடுத்த சம்பவத்தை மத்தேயு 8:5-13ல் வாசிக்கலாம். இயேசு கப்பர்நகூமுக்குப் போகிறார். அங்கே ஒரு நூற்றுக்கு அதிபதி, அவன் இயேசுவைக் குறித்தும் அவருடைய செய்கைகளைக் குறித்தும் நிச்சயமாகவே கேள்விப்பட்டிருப்பான். இப்போது அந்த இயேசு அவன் இருந்த இடமாகிய கப்பர்நகூமுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவன் அவரிடம் வருகிறான். யாருக்காக வருகிறான், தன் மகனுக்காகவா? இல்லை, கொடிய வேதனைப்படுகின்ற வேலைக்காரனுக்காக வருகிறான். அவன் வரவேண்டிய அவசியம் இல்லை; அவன் கட்ட ளையிட்டால் வீரர்களே இயேசுவைக் கூட்டிப் போகக்கூடும். ஏனெனில் இவன் நூற்றுக்கு அதிபதி, அதாவது ரோமப் பேரரசின் இராணுவ வீரன், நூறு போர்வீரருக்கு அதிபதி. இவன் யூதன் அல்ல; இராணுவத் தளபதி என்ற பெருமை அவனுக்குள் இருந்திருக்கலாம்; அவன் யூதனல்லாதவன் என்பதால் அவனுக்குள் சந்தேகம் இருந்திருக்கும், பணம், மொழி, சுயதிருப்தி, செல்வாக்கு, அதிகாரம் என்று எல்லாமே அவனுக்கு இருந்தது. இவை யாவும் அவன் இயேசுவிடம் வரமுடியாதபடி அவனைத் தடுத்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால் அவனோ, இவைகள் யாவையும் உடைத்தெறிந்துவிட்டு இயேசுவிடம் வருகிறான். ஒரு வேலைக்காரனுக்காக தனது சகல பெருமை அதிகாரம் யாவையும் விட்டான் என்றால் அவனுக்குள் இருந்த தாழ்மை உணர்வை நம்மால் உணரமுடியும். இயேசுவிடம் வந்தவன், தன் வேலைக்காரனின் நிலைமையை அறிக்கை பண்ணுகிறான், அவ்வளவும்தான். இயேசுவோ தாம் வந்து அவனைச் சுகமாக்குவதாகச் சொல்கிறார். அதற்கு இவன்: ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமடைவான்’ என்கிறான். இந்தப் பெரிய அதிகாரமுள்ள அதிகாரியின் அறிக்கையைக் கேட்ட இயேசு, புறவினத்தானாகிய அவனுடைய விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார் என்று காண்கிறோம். தீர்க்கதரிசனங்களும் ஆகமங்களும் கொண்டிருந்த இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று இயேசு மனம்நொந்து பேசினார்.
யாரில் நாம் விசுவாசம் வைக்கிறோம்?
விசுவாசம் என்பது வேதப்படிப்புகளில் ஈடுபடுகிற, பிரசங்கம் பண்ணுகின்ற, மாதந்தோறும் வருடந்தோறும் வாக்குத்தத்த வசனங்களை அள்ளித் தருகின்ற மக்களில் வைக்கும் நம்பிக்கை அல்ல; இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஆளுகை செய்கிற அநாதிதேவனிலும் அவரது வார்த்தைகளிலும் நம்பிக்கை வைப்பதே விசுவாசம். ஆனால், இந்த நூற்றுக்கதிபதிக்கு இவை எதுவும் தெரியாது. ஆனால், அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டான், அவன் இயேசுவால் முடியும் என்று விசுவாசித்தான். அவ்வளவும்தான். தான் யூதன் அல்ல, அவர் என்ன சொல்லுவாரோ என்றெல்லாம் நினைக்கவில்லை. தனது வீட்டுக்கு வருவதற்குத் தான் பாத்திரன் அல்ல என்று சொன்னதிலிருந்து அவனுக்குள் இருந்த தாழ்மையின் சிந்தையை இயேசு கண்டார். இவை எல்லாம் சேர்ந்தே இயேசுவை ஆச்சரியப்படவைத்தது.
விசுவாசம் என்பது தேவனையே சார்ந்து நின்று அவரில் நம்பிக்கை வைத்தல்; இன்னும் சொன்னால், முழுமையாக அவரிலேயே தங்கியிருத்தல் எனலாம். இன்று நமது நிலை என்ன? நமக்கு இன்று வேதப்புத்தகம், வேதப்படிப்புகள், ஆலய ஆராதனைகள், அநேக சாட்சிகள் என்று ஏராளமான காரியங்கள் நமது விசுவாசத்தை ஊன்றிக் கட்டுபவையாக இருந்தாலும், பிரச்சனைகள் நெருக்கும்போது, விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடுகிற நம்மால் ஏன் ஆண்டவரை நம்பமுடிவதில்லை? ஏன் தடுமாறுகிறோம்?
நமது முன்னான வாழ்வை நாம் மறக்கக்கூடாது. பாழான குழிகளிலும் உளையான சேற்றிலும் கிடந்ததை நாம் மறக்கலாமா? அல்லது அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாய் ஜீவனற்ற ஜடங்களாக வாழ்ந்திருந்த காலத்தைத்தான் மறக்கலாமா? கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டும் அவிசுவாசிகளாக வாழ்ந்த நாட்களைத்தான் மறக்கலாமா? “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்.” இந்த அன்புக்கு ஈடாக நாம் என்னத்தைச் செலுத்தலாம்? மாத்திரமல்ல, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” என்று பவுல் தெளிவுபடுத்தியிருக்கிறார் (எபே.2:1-9).
இப்போ ஒரு கேள்வி, இந்த விசுவாசம் நமக்குள் எப்படி உண்டானது? சுயமாக நாம் இயே சுவை விசுவாசித்தோமா? இல்லையே! பரிசுத்த ஆவியானவர்தாமே நம்மில் கிரியை செய்திராவிட்டால் இந்த விசுவாசத்தை நாம் பெற்றிருக்க முடியாது. இந்த சங்கதிகளை எல்லாம் தலை அறிவில் நாம் நன்கு அறிந்திருக்கிறோம்; ஆனால் கர்த்தரிடத்திலுள்ள விசுவாசத்தைச் செயற்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் நெருக்கும்போது ஏன் நமது விசுவாசம் இடறவேண்டும்? ஏனெனில் நாம் யார்? நாம் விசுவாசித்திருக்கிறவர் யார்? நமது பெறுமதி என்ன? தேவனுடைய வார்த்தை இதைக் குறித்து நமக்கு அளித்துள்ள உறுதிப்பாடு என்ன? இவைகளைப் பற்றி நாம் அலட்சியமாய் இருப்பதால்தான் ஒரு சிறிய தடங்கல் வந்தாலும் நாம் கலங்கி விடுகிறோம்.
நாம் யார்? நமது பெறுமதிப்பு என்ன?
நாம் யார், நமது பெறுமதி என்ன என்பவற்றைக் குறித்ததான அநேக வேதவாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பாக நான்கு காரியங்களை இங்கே கவனிப்போம்.
1.நாம் கிறிஸ்துவுக்குள் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டவர்கள்.
“நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டபடியால்” (1 கொரி.1:5). ஒரு இலகு தமிழ் மொழி பெயர்ப்பானது, எல்லாவற்றிலும் “நிறைவானவர்களாக விளங்குகிறீர்கள்” என்கிறது. இயேசுகிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலும் எல்லாவிதத்திலும் நிறைவுள்ளவர்கள்; … இங்கே “எல்லா” அல்லது “சகல” என்ற சொல்லைக் கவனிக்கவும். ஆக, கிறிஸ்துவுக்குள் இருப்பது என்பது என்ன? அவருடைய வார்த்தைக்கு அடங்கலாக, அவர் அருளிய விலைமதிப்பற்ற இரட்சிப்பு அடங்கலாக, நித்தியத்திற்குரிய சகலவற்றிலும் நாம் நிறைவுள்ளவர்கள். இப்படியிருக்க அநித்தியமான, நாளை அழிந்து போகிற இந்த உலகத்திற்கு அடுத்த காரியங்கள் நமக்குக் குறைவுபடும்போது நாம் ஏன் தடுமாறவேண்டும்?
2. நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணம் உள்ளவர்கள்
“தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ.2:9,10). இயேசுவுக்கு மிகவும் அன்பான சீஷன் யோவான் தனது சுவிசேஷத்தில், ஆதியில் இருந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றும், “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார். இந்த பரிபூரணமான குமாரனே பிதாவை உலகிற்கு வெளிப்படுத்தினார் என்று காண்கிறோம் (யோவான் 1:1-18).
இங்கே பவுல், “இறைதன்மையின் முழு நிறைவும், உடல் உருவில் கிறிஸ்துவில் குடி கொண்டிருக்கிறது. ஆகவே நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கின்றீர்கள்” (இலகு தமிழ் மொழிபெயர்ப்பு) என்கிறார். “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றார் இயேசு (யோவான் 14:9). பிதாவின் வெளிப்பாடான இயேசுவுக்குள் தேவத்துவம் யாவும் பரிபூரணமாயிருக்க, அவருக்குள், அவரை விசுவாசிக்கிறவர்களாகிய எவரும் அவருக்குள் பரிபூரணமுள்ளவர்கள்; எவ்வளவு பெரிய வாக்குறுதி இது! இப்படியிருக்க எந்நேரமும் குறைகளையே எண்ணிக் கணக்கு வைத்திருக்கிற நாம் நம்மை மாற்றிக்கொள்ளக் கூடாதோ? ஆம், நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணர், இதை விசுவாசிக்கிறோமா?
3. உன்னதங்களிலே சகல ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3). மறுபடியும் “சகல” என்ற சொல்லைக் கவனிக்கவும். ஒன்றிலும் குறைவுபடாமல் ஆண்டவர் நம்மை சகல ஆசீர்வாதங்களாலும் நிறைத்திருக்கிறார். அதற்காக இந்த ஆசீர்வாதங்கள் உலகத்துக்கு அடுத்ததான பணம், பொருள் ஆஸ்தி பட்டம் பதவி அல்ல; இவற்றாலும் கர்த்தரே நம்மை ஆசீர்வதிக்கிறார்; ஆனால் அவை நாளை மாறிப்போகும் அல்லது அழிந்துபோகும், நாமும் மறைந்துபோவோம். ஆனால், இங்கே “உன்னதங்களிலே கிறிஸ்துவுக்குள்ளான சகல ஆசீர்வாதங்கள்” என்று பவுல் எழுதியிருக்கிற வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. இவை அழியாதவை; நித்தியத்திற்குரியவை.
அதாவது, கிறிஸ்துவுக்குள்ளான சகல நன்மைகளும் நமக்கு அருளப்பட்டுள்ளது: தேவனை அறிகிற அறிவு, இரட்சிப்பிற்கான கிருபை, தேவனுடைய பிள்ளைகள் என்ற புத்திரசுவீகாரம், பாவ மன்னிப்பு, ஆவியானவரின் கொடைகள், தேவ சித்தம் செய்யும் பெலன், நித்தியமாய் தேவனோடு வாழும் பாக்கியம்! இன்னும் நமக்கு என்னதான் வேண்டும். ஆண்டவருடன் நமக்கு நல்லுறவு இருப்பதால் நாம் இப்போதே இந்த உலக வாழ்விலேயே இந்தப் பாக்கியங்களை அனுபவிக்கிறவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னரேயே கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டிருக்கிறார் (எபே.1:4) என்ற சத்தியம் ஒன்றே போதுமே. நாம் பாவத்திற்கு இல்லை என்று சொல்லவும், தேவனுக்கு ஆம் என்று சொல்வதற்கும்!
4. நாம் உன்னதங்களிலே உட்காரவைக்கப்பட்டவர்கள்!
“அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:5-7).
இந்த வசனத்தில் ‘உட்காரவும் செய்தார்’ என்று கடந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இதுதான் நமது விசுவாசம்! இயேசு உயிர்த்தெழுந்ததால் நம்முடைய உயிர்த்தெழுதலும் நிச்சயம்; கிறிஸ்துவுடன் வாழும் வாழ்க்கைக்கென்றே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்; அதாவது, அவரு டன் உன்னதத்தில் உட்கார்ந்திருக்கும் வாழ்வை நாம் உலகில் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும். இது சாவின் பின்னான வாழ்வு அல்ல; அந்த மகிமையின் வாழ்வை நாம் இந்த உலகிலேயே மகிமைக்குரியவருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
நமது பெறுமதிப்பு சாதாரணமானதல்ல:
இப்படியிருக்க, நாம் சம்பூரணர், பரிபூரணர், சகல ஆசிகளும் நிறைந்தவர்கள், உன்னதத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள், இவை யாவும் ‘கிறிஸ்துவுக்குள்ளானது; இத்தனை மேன்மையான ஆசிகளைப் பெற்றிருக்கிற நாம் சாதாரணமானவர்களா? அன்று கர்த்தர் ஏசாயா மூலமாக, “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னை சிநேகித்தேன்” (ஏசா.43: 4) என்று இஸ்ரவேலை அழைத்த அதே கர்த்தரே இன்று நம்மைப் பார்த்துக் கூறுகிறார்: “நீ என் பார்வைக்கு விசேஷித்தவன்” என்று. இந்தக் கிருபையை நாம் பெற்றுக்கொள்ள ஆண்டவர் கொடுத்த விலைக்கிரயம் மகா உன்னதமானது! குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் சாதாரணமானவர்களா? பின்னர் ஏன் நாம் தேவையற்ற காரியங்களைக் குறித்துச் சங்கடப்படவேண்டும்? நமது விசுவாசம் உறுதியானதா? சங்கடங்களில் சரிந்து விழுந்துவிடுகிறதா?˜
இப்போது நம்மையே கேட்டுப்பார்ப்போம்; நமது அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்படுவாரா? அல்லது நமது உறுதியான அசாத்தியமான விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்படுவாரா?