• Dr.வாரன் வியர்ஸ்பி •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

முக்கியமான தலைவர்களின் கடைசி வார்த்தைகள் எனக்கு ஆர்வத்தைத் துண்டுவதாக இருக்கும். நெப்போலியனின் இறுதி வார்த்தைகள், “பிரான்ஸ் – இராணுவத் தலைவர் – இராணுவத் தலைவர்!”

ஜனாதிபதி லிங்கனை சுட்டுக்கொன்ற ஜாண் வில்க்ஸ் பூத் இறப்பதற்கு முன் இரண்டு இறுதி வார்த்தைகளைச் சொன்னார்: “பயனற்றது-பயனற்றது.”

பிரிட்டிஷ் கடற்படை வீரன் லார்ட் நெல்சன், “கடவுளுக்கு நன்றி! நான் என் கடமையைச் செய்தேன்” என்றார்.

ஆனால் எல்லாவற்றிலும் சிறந்த வார்த்தைகளில் ஒன்றை ரோமானிய சிறையிலிருந்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2 தீமோத்.4:6-8).

பவுல் மரணதண்டனைக்காகக் காத்திருந்த போது, அவர் தனது அன்பான உடன் ஊழியரான தீமோத்தேயுவுக்கு பிரியாவிடை கடிதமொன்றை எழுதினார். அவர் பயத்துடன் இதனை எழுதாமல் தைரியமாக எழுதினார்.

அவரது வார்த்தைகளில் அமைதியான நம்பிக்கை இருக்கிறது. அவர் மரணத்தை எதிர்கொள்கிறார் என்பது அவருக்குத் தெரியும், ஆனால், அது அவரைப் பயமுறுத்தவில்லை; மேலும் சோர்வடையச் செய்யவுமில்லை. அவரது ஊழியம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும், ஆனால், அவரது வார்த்தைகள் தைரியத்துடனும் அமைதியுடனும் இருக்கிறது, மேலும் அவர் மூன்று திசைகளில் பார்த்து, கர்த்தர் மீதான தனது நம்பிக்கைக்கு சாட்சியமளிக்கிறார்.

1. சுற்றிலும் பார்த்தல்

முதலில், பவுல் சுற்றிலும் பார்த்தார், மேலும் தான் தயாராக இருப்பதாக சாட்சி கூறுகிறார். இது மரணத்தைக் குறித்த ஒரு அற்புதமான பார்வை ஆகும். அவர் தன்னை ஒரு கைதியாகக் கருதவில்லை, மாறாக, கர்த்தருடைய மகிமைக்காக பலியிடப்படும் ஒரு பலியாகக் கருதுகிறார். அவரது உயிர் அவரிடமிருந்து எடுக்கப்படவில்லை; அவர் தனது உயிரை கர்த்தருக்குக் கொடுக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு பவுலுக்காகத் தனது உயிரைக் கொடுத்தார், இப்போது அப்போஸ்தலர்களில் விசேஷமானவராக கருதப்படும் பவுல் தனது இரட்சகருக்காகத் தனது உயிரைக் கொடுக்கிறார்.

இந்தக் கூற்றில், பவுல் மரணம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். அவர் அந்த வார்த்தைக்குப் பயப்படுகிறார், அல்லது அனுபவத்திற்கு பயப்படுகிறார் என்பதல்ல. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மரணம் என்ற ஒன்று இல்லை என்பதுதான் அது. பவுல் பயன்படுத்தும் வார்த்தை தேகத்தை விட்டுப் புறப்படுகிறேன் என்பதாகும். இது கிரேக்க மொழியில் எவ்வளவு அழகான வார்த்தை பாருங்கள்.

அதாவது, ஒரு இராணுவ முகாம் தாக்கப்படும்போது அங்கு உள்ள இராணுவ வீரர்கள் தங்களின் கூடாரத்தைக் களைந்து வேறு இடத்திற்கு மாறுதலாகி செல்வதுபோல், பவுல் தன்னை கர்த்தரின் போர்சேவகனாக கருதினார். மேலும் அழிந்து போகும் சரீரத்தில் கூடாரவாசிபோல வாழ்வதாக நினைத்தார். மரணம் என்பது இந்த கூடாரத்திலிருந்து தன்னை மாற்றி வேறு ஒரு மகிமையின் ஸ்தலத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு நிகழ்வாக நினைத்தார். நமது சரீரங்கள் வெறும் தற்காலிக வசிப்பிடங்களாகும். கர்த்தர் நம்மை தமது வீட்டிற்கு அழைக்கும்போது, நாம் அற்புதமான புதிய சரீரங்களைப் பெறுவோம். மேலும் நித்தியமான வீட்டை நாம் அடைவோம்.

புறப்படுதல் என்ற வார்த்தைக்கு படகை அவிழ்த்துவிட்டுப் புறப்படுதல் என்று பொருள்படும். அவர் இந்த வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் தனது நங்கூரங்களை விட்டுவிட்டு, நித்திய வீடாகிய அந்த நித்தியக்கரையை நோக்கிப் பயணிக்கிறார். இந்தக் கருத்தை டென்னிசன் தனது புகழ் பெற்ற கவிதையான “Crossing the Bar”இல் பயன் படுத்தினார். அதுபோல பவுலும் தனது மரணம் வெறுமனே ஒரு விடுதலை என்பதை அறிந்திருந்தார். மேலும் சிறைச்சாலை அவரது நிரந்தரவீடாக இருக்கவில்லை. அவரது சிறிய கப்பல் கட்டவிழ்த்து விடப்பட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைச் சந்திக்க பரலோகக் கரையை அடையும் என்பதை அறிவார்.

பவுலைப்போல நம்பிக்கையுடன் சுற்றிப் பார்த்து, நீங்கள் பலியிடத் தயாராக இருப்பதை அறிய முடியுமா? நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக அறிந்திருந்தால், நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், பயப்பட வேண்டியதில்லை.

2. திரும்பிப் பார்த்தல்

பவுல் தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் சுற்றிப்பார்த்தது மட்டுமல்லாமல், திரும்பிப் பார்த்தார். “நான் ஒரு நல்ல போராட்டத்தைப் போராடினேன், என் ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்றார். இயேசு கிறிஸ்துவை அவர் நம்பியதால், பவுல் பயமின்றி சுற்றிப்பார்க்க முடிந்தது, மேலும் வருத்தமின்றி திரும்பிப்பார்க்க முடிந்தது.

பலர் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சி செய்கின்றனர். திரும்பிப்பார்ப்பதற்கு ஒரு தவறான வழி இருக்கிறது. அதாவது, கடந்தகால பாவங்களையும், தோல்விகளையும் திரும்பிப்பார்ப்பது தவறு. அது உங்களை இன்னும் தோல்வியடையச் செய்யும். ஆனால், நாம் எங்கிருந்தோம், கர்த்தர் நம்மிலும், நம் மூலமாகவும் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க திரும்பிப்பார்ப்பது மிகவும் நல்லது.

பவுல் திரும்பிப்பார்த்தபோது, வாழ்க்கை எப்போதும் எளிதாக இருந்ததில்லை என்பதைக் கண்டார். போராடவேண்டிய போராட்டங்கள், ஓடவேண்டிய பந்தயங்கள், நிறைவேற்றவேண்டிய நிர்வாகப் பொறுப்பு ஆகியவை இருந்தன. அவர் உலகத்துடனும், மாம்சத்துடனும், பிசாசுடனும் நகரந்தோறும் போராடினார், இப்போது அவர் ரோமில் தனது இறுதிப்போராட்டத்தில் இருக்கிறார். அவர் தோல்வியடைவார் என்று நினைத்த நேரங்கள் இருந்தன, ஆனால் கர்த்தர்; அவரைக் காப்பாற்றினார். அதனால் தான் அவரால் எழுத முடிந்தது, “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று.

மேலும் “நான் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்” என்றும் அவர் எழுத முடிந்தது. இதுவே பவுலின் விருப்பமாகவும் எப்போதும் இருந்தது: “என் ஓட்டத்தை மகிழ்ச்சியோடும், கர்த்தராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தையும் முடிக்க வேண்டும்…” (அப்.20:24). நம் ஒவ்வொருவருக்கும் முடிக்க ஒரு பாதை இருக்கிறது. கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் நிரப்ப ஒரு இடத்தையும், நாம் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலையையும் வைத்திருக்கிறார். நமது நேரங்கள் அவரது கைகளில் உள்ளன. சிலருக்கு அவர்களின் வேலைக்கு ஒரு குறுகிய காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது.

ஸ்தேவான் இளம்வயதிலேயே மரித்தார். ஆனால், பவுல் நீண்டகாலம் வாழ அனுமதிக்கப்பட்டார். இதில் வாழ்க்கையின் நீண்டநாட்கள் முக்கியமல்ல; மாறாக வாழ்க்கையின் ஆழமும் வலி மையும்தான் முக்கியம். பவுல் தனது பயணத்தை முடித்துவிட்டார். அவர் கர்த்தரை எதிர்கொண்டு செல்லும் தனது பணி முடிந்துவிட்டது என்பதை அறியமுடிந்தது.

அவர் விசுவாசத்தைக் காத்துக்கொண்டார். பவுலின் நாட்களில்கூட விசுவாசத்தைவிட்டு விலகிச் சென்ற கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தனர். பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார், “கடைசி நாட்களில் சிலர் விசுவாசத்தை விட்டு விலகிச்செல்வார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்…”என்று. விசுவாசம் என்பது “பரிசுத்தவான் களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்டதே ஆகும்”, அதாவது, இயேசுகிறிஸ்துவின் உயிரையே விலையாகக் கொடுத்த அந்த இரட்சிப்பின் சத்தியத்தின் தொகுப்பு ஆகும், அது கர்த்தருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நல்ல உக்கிராணக்காரனாக, பவுல் பல போராட்டங்களில் விசுவாசத்தைப் பாதுகாத்தார். அவர் அதை பலர் வாழ்வில் முதலீடு செய்திருக்கிறார். இப்போது அவர் காட்சியை விட்டுச் செல்லப்போகிறார்.

திரும்பிப்பார்க்க நேரம் ஒதுக்குங்கள். அதாவது, நீங்கள் நல்ல ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு வெற்றியாளரா? அல்லது பாதிக்கப்பட்டவரா? நீங்கள் போரில் இருக்கிறீர்களா? அல்லது களத்தில் காயமடைந்தவரா? உங்கள் பாதையை முடித்துவிட்டீர்களா? உங்கள் இருதயத்திலிருந்து கர்த்தரின் சித்தத்தைச் செய்தீர்களா? நீங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டீர்களா?

நீங்கள் கர்த்தரின் போதனைகளுக்கு உண் மையாக இருக்கிறீர்களா? பவுல் பயமின்றி சுற்றிப்பார்க்க முடியும், வருத்தப்படாமல் திரும்பிப்பார்க்க முடியும். நீங்களும் நானும் அவ்வாறே செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

3. முன்னோக்கியும் பார்த்தல்

பவுல் சுற்றிப்பார்த்து, திரும்பிப்பார்த்தது மட்டுமல்லாமல், முன்னோக்கியும் பார்த்தார். “இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் அனைவருக்கும் அதைத் தந்தருளுவார் (வச.8).”

சிலர், வாழ்க்கையின் முடிவை நெருங்கும்போது, முன்னோக்கிப் பார்க்க பயப்படுகின்றனர். வேதம் நம்மை எச்சரிக்கிறது, அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபி.9: 27). ஆனால், பவுல் முன்னோக்கிப் பார்த்தபோது எந்த பயமும் அவருக்கு இல்லை. என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே கர்த்தரைச் சந்தித்து, அவர் சம்பாதித்த கிரீடத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை நாம் அறியும்போது, நம் இருதயங்களில் இருக்கும் அமைதியைப் போன்ற அமைதி வேறு எதுவும் இல்லை. பவுலின் விசுவாசம் ரோமானிய நீதி அல்லது சட்டத்தின்மீது இல்லை, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி. அவரது விசுவாசம் அவரது நண்பர்கள் மீதும் இல்லை, அல்லது தன்னிலும்கூட இல்லை. அவரது விசுவாசம் கர்த்தர்மீது இருந்தது. அவர் வருத்தப்படாமல் திரும்பிப்பார்த்தார். அவர் பயமின்றி சுற்றிப் பார்த்தார். இயேசுகிறிஸ்துவை நம்பியதால் அவர் சந்தேகமோ பயமோ இல்லாமல் முன்னோக்கிப் பார்த்தார். ரோம அரசாங்கம் அவரை ஒரு குற்றவாளியாகப் பதிவு செய்தது, ஆனால் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் அவர் கர்த்தரின் பிள்ளையாக பட்டியலிடப்படுகிறார். மேலும் அவர் தனது இரட்சகரிடமிருந்து, “நல்லது உண்மையுள்ள ஊழியக்காரரே…” என்று சொல்லப்படுவதை கேட்பார்.

ஒருநாள் உங்களுக்கும் எனக்கும் இந்த வாழ்க்கை முடிவடையப் போகிறது. நம்மில் யாருக்கும் அந்த நாளையோ அல்லது நேரத்தையோ தெரியாது, சிலருக்கு அது எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக இருக்கலாம். நாம் பரலோக வீடு திரும்புவது திடீரென்று இருக்கலாம் அல்லது பவுல் அந்த ரோமானிய சிறையில் செய்தது போல் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க நமக்கு நேரம் இருக்கலாம். பவுல் எழுதிய இந்த கடைசி கடிதத்தில் கொடுக்கும் அதே ஒலிக்கும் சாட்சியத்துடன் நாம் அனைவரும் இந்த மூன்று திசைகளிலும் பார்க்கமுடியும் என்று நான் நம்புகிறேன்.

இயேசுகிறிஸ்துவுக்கு உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் கொடுங்கள். மனிதர்கள் என்ன செய்தாலும் அவருக்கு உண்மையாக இருங்கள். முக்கியமான விஷயம் மனிதர்களின் புகழ்ச்சி அல்ல கர்த்தரின் அங்கீகாரமே முக்கியம்.

 மொழியாக்கம்: Bro.Johndurai