• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

கிறிஸ்தவர்களாகிய நாம், வேதபுத்தகத்தை வாசிப்பதை அன்றாடக் கடமையாகக் கைக்கொண்டு வருபவர்கள். எனினும், சில சமயங்களில் நாம் வாசித்த வசனங்களை சரியான விதத்தில் விளங்கிக்கொள்ள முடியாமல் தவிப்போம். இன்னும் சில சமயங்களில், நம்மையுமறியாமலேயே பிழையாகவும் புரிந்துகொள்வோம் என்பதனையும் மறுப்பதற்கில்லை. இதற்கு காரணம் வேதபுத்தகமல்ல. மாறாக, அதை நாம் வாசிக்கும் விதமேயாகும். உண்மையில், கர்த்தருடைய வார்த்தையை வாசித்து, அதன் செய்தியை சரியான விதத்தில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அதை நாம் ஆவியோடும் அறிவோடும் வாசிக்கவேண்டும். அதாவது, நாம் தேவாவியானவரினதும் நம்முடைய அறிவினதும் துணையோடு வாசிக்கவேண்டும். இதில், ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மற்றதை ஒதுக்கினால் தேவனுடைய செய்தியை திரிபடைந்த நிலையிலேயே பெற்றிடுவோம். ஏனெனில், வேதாகமம் மானிட அறிவினூடாக தேவாவியானவரினால் எழுதப்பட்டமையினால், அதை நாம் வாசிக்கும்போதும் ஆவியானவரின் உதவியுடன் நம்முடைய அறிவினூடாகவோ வாசிக்க வேண்டும். இதனை பவுல், “நான் சொல்லுகிறவைகளை சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லா காரியங்களிலும் உனக்கு புத்தியைத் தந்தருளுவார் (2 தீமோ 2:7)” என அறிவுறுத்தியுள்ளார். அதாவது, நீ உன் அறிவை உபயோகித்து சிந்திக்கும்போது, நான் சொல்கிறவைகளை விளங்கிக்கொள்ள தேவன் உனக்கு புத்தியைத் தருவார் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் ஜாண் ஸ்டாட் குறிப்பிட்டதுபோல “தெய்வீக அறிவொளியும் மானிட கல்வியும் இணைந்தால்மட்டுமே விளக்கம் கிடைக்கும்”.

பொதுவாக எந்தவொரு புத்தகத்தையும், சரியான விதத்தில் விளக்க அதன் ஆசிரியரால் மட்டுமே முடியும். தேவாவியினால் அருளப்பட்ட வேதாகமத்தை, (2 தீமோ 3:16) அவரால்மட்டுமே பிழையற நமக்கு விளக்கமுடியும். எனவே, வேதத்தை விளங்கிக்கொள்ள தேவாவியானவரின் உதவி நமக்கு அவசியமானதாயுள்ளது. தேவன் தன்னுடைய ஆவியின் மூலமாக வெளிப்படுத்தியதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின், அவர் அந்த ஆவியானவரினூடாக நமக்கு அறிவொளியூட்ட (Ilumination) வேண்டியுள்ளது. இத்தகைய ஆவியின் அறிவொளி நமக்கு கிடைக்காவிட்டால், வேதபுத்தகத்தில் தேவன் நம்மோடு பேசுவதை நம்மால் கேட்க முடியாது. ஏனெனில், “தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் (1கொரி.2:11).” எனவே, தேவனுடைய வார்த்தையை வாசித்து விளங்கிக் கொள்ள, ஆவியானவரின் உதவி அவசியமாயுள்ளது. இதனாலேயே பல பக்தர்கள், சங்கீதக்காரனைப்போல, “கர்த்தாவே, உம்முடைய வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்” (119:18) என ஆவியானவரின் அறிவொளிக்காக ஜெபித்தபின், வேதம் வாசிப்பதை தங்களுடைய பழக்கமாய்க் கொண்டிருந்தனர். உண்மையில் ஜாண் பிளஞ்சார்ட் குறிப்பிட்டதுபோல, “தேவாவியானவரின் துணையின்றி எவ்வாறு மக்களால் தேவவார்த்தையை எழுத முடியாதிருந்ததோ, அதேபோல அவருடைய துணையின்றி, அதை நம்மால் விளங்கிக்கொள்ளவும் முடியாதுள்ளது.”

ஆவியானவரே அனைத்திற்கும் மேலான ஆசிரியராய் இருந்து, தான் அருளிய வார்த்தைகளை நமக்கு போதிப்பதனால் நாம் நம்முடைய அறிவை உபயோகிக்க வேண்டியதில்லை என்பது அநேகரது வாதம். ஆனால், தேவாவியானவரே மானிட அறிவை உபயோகித்து தேவவார்த்தையை நமக்காக எழுதியுள்ளபோது, தேவன் நமக்குத் தந்துள்ள அறிவை உபயோகித்து அவருடைய வார்த்தையை விளங்கிக்கொள்வதில் தவறென்ன உள்ளது? தீமோத்தேயு தன்னுடைய அறிவை உபயோகிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பவுல் “நான் சொல்லுகிறவைகளை சிந்தித்துக்கொள்” என அவனுக்கு அறிவுறுத்தினார்.

தேவன் தங்களுக்குக் கொடுத்த அறிவை உபயோகிக்காதவர்கள், தங்களுடைய சோம்பேறித்த னத்தையும், தேவவார்த்தையின் மீது தங்களுக்கிருக்கும் அசிரத்தையையும் வெளிப்படுத்துபவர்களாகவே இருப்பார்கள். தேவன் தந்த அறிவை உபயோகிக்காதவர்களுக்கு ஆவியானவர் அறி வொளியூட்டமாட்டார். “நான் சொல்லுகிறவைகளை சிந்தித்துக்கொள், கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்கு புத்தியைத் தந்தருளுவார்” என்றுதான் பவுல் கூறினாரே தவிர, “நீ பேசாமல் இரு, கர்த்தர் உனக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்” என அறிவுறுத்தவில்லை. நாம் நம் அறிவை உபயோகிக்கவேண்டும். அப்போதுதான், தன்னுடைய வார்த்தையை விளங்கிக் கொள்வதற்கு, தேவன் நமக்கு புத்தியைத் தருவார். உண்மையில், கர்த்தர் தந்த அறிவை உப யோகிக்காமல் இருப்பதே அவருடைய கட்டளையை மீறி நடப்பதாகும். “நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்”(சங்.32:8) என்று தெரிவித்த கர்த்தர், மறுநிமிடமே “புத்தியில்லாத குதிரையைப் போலவும், சோம்பேறிக் கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (32:9)” என எச்சரித்துள்ளார். இதிலிருந்து, கர்த்தர் நமக்கு தம்முடைய ஆவியினால் அறிவொளியூட்டினாலும், நாம், நமது அறிவையும் உபயோகிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என்பது தெளிவாகின்றது.

இயேசுவும்கூட சீடர்களை, “இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? (மாற்கு 8: 17)” என்று கடிந்துகொண்டதோடு, “நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? (லூக்.12:57)” என்றும் கேட்டார். பவுலும், “நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள் (1கொரி.10:15), உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்” (1கொரி.11:13) என்று, ஆவிக்குரிய விஷயங்களில் மானிட அறிவின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார். மட்டுமல்ல, “எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1 யோவான் 4:1) என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம். “அவனவன் தன்தன் மனதிலே முழுநிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன் (ரோமர் 14:5)” எனக் கூறும் திருமறை, “பலமான ஆகாரமானது நன்மை தீமை இன்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்க முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்” (எபி.5: 14) என தெரிவித்து, வேதத்தின் ஆழமான சத்தி யங்களை புரிந்துகொள்வதற்கு மானிட அறிவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

தேவனுடைய வார்த்தையை விளங்கிக் கொள்ள நாம் முற்றிலுமாய் ஆவியானவரின் அறிவொளியை சார்ந்திருக்கவேண்டும். அதே சமயம் நம் அறிவையும் உபயோகிக்கவேண்டும். நம் அறிவாற்றலினூடாகவே ஆவியானவர் வேத வாக்கியங்களை நமக்கு விளக்குவார். நாம் சிந்திக்கவேண்டும், கர்த்தர் நாம் சிந்திப்பவற்றை விளங்கிக்கொள்ள நமக்கு புத்தியைத் தருவார்.

சத்தியவசன வாசகர்கள் வேதாகமத்தை வாசிக்கையில் ஆவியோடும் அறிவோடும் வாசித்து, சரி யானவிதத்தில் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள, தேவனே அருள் புரிவாராக.