• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

2. உபத்திரவகாலத்தின் ஆலயத்தைச் சார்ந்த சம்பவங்கள்

இஸ்ரவேலிலே மூன்றாவது ஆலயம் கட்டுவதைக் குறித்து சிந்திக்கும்போது. சில கடினமான பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டியதிருக்கிறது. இது ஆலயம் கட்டவேண்டிய இடத்தைப்பற்றி அதிக உண்மையாய் இருக்கிறது. இப்பொழுது இந்த இடத்தில் “கன்மலையின் மேல் மசூதி” (Dome on the Rock) கட்டப்பட்டிருக்கிறது. இந்த மசூதியைக் கோடிக்கணக்கான முகமதியர்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இம்மசூதி இஸ்லாமியர்களுக்கு, மெக்காவிற்கு அடுத்தபடியாக மிகமிகப் புண்ணியமான ஸ்தலமாயிருக்கிறது.

இந்த இடத்தில், மத சம்பந்தமாக ஒரு பெரிய யுத்தம் விளையாமல் எப்படி இஸ்ரவேலர் மூன்றாவது ஆலயத்தைக் கட்டக்கூடும்? வேதாகமத்தில் இஸ்ரவேலருடைய மூன்றாவது ஆலயம் கட்டுவதைப்பற்றிய விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், உபத்திரவ காலத்தில் ஒரு ஆலயம் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் கட்டாயம் மூன்றாவது ஆலயம் ஒன்று கட்டப்படும் என்பது தெளிவாய்த் தெரிகிறது. முதன்முதலாக ஆலயம் இருந்த இடத்திலே இப்பொழுது ஒரு மசூதி இருக்கிறது. இதே இடத்தில் மூன்றாவது ஆலயம் கட்ட அனுமதிக்கப்படுவதற்கு என்ன நேரிடுமென்று மனதை உருட்டிக்கொள்ளுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை.

வேதாகமத்தில் இஸ்ரவேலரின் மூன்றாம் ஆலயம் பழைய எருசலேம் கட்டப்பட்டிருந்த ஒரு நீண்ட மலையான மோரியா மலையில் கட்டப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இடம் ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலியிட ஆயத்தமாயிருந்த இடமாகும். இதே இடத்தில்தான் தாவீது கர்த்தருக்குப் பலி செலுத்துவதற்கு அர்வனாவின் தானியம் போரடிக்கிற களத்தை விலைக்கு வாங்கினான்.

சாதாரணமாக ஆலயம் என்று குறிப்பிடும்போது வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் ஆகியவற்றைமட்டும் கொண்டது என்று நினைப்போம். ஆனால், கிறிஸ்துவின் காலத்தின் ஆலயத்தின் முழு நிலப்பகுதி 26 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டு அதில் ஜனங்கள் கூடுவதற்கு அனுகூலமாய், புறஜாதியாரின் பிரகாரம், பெண்களின் பிரகாரம், இஸ்ரவேலரின் பிரகாரம் போன்று அநேக பிரகாரங்கள் இருந்தன.

கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, அவர் ஆலயம் இருந்த பகுதியில் போதித்தார். அவர் ஜீவியத்தின் ஒரு காலத்தைப்பற்றி லூக்கா சுவிசேஷத்தில் கூறியிருப்பதாவது: “அவர் தினமும் ஆலயத்தில் போதித்தார்” (லூக்கா 19:47). ஆதிகாலத்துக் கிறிஸ்தவர்களும் அடிக்கடி ஆலயப்பகுதியில் கூடினார்கள். அப்போஸ்தலர் 2:46-இல் “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி” என்று வாசிக்கிறோம்.

வரப்போகிற உபத்திரவகாலத்தில் எருசலேமும் தேவாலயமும் திரும்பவும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதாயிருக்கும். ஆனால், அது வித்தியாசமான ஆலயமாயிருக்கும். ஏனென்றால், முதலாவது நூற்றாண்டிலிருந்த ஆலயம், கி.பி.70 ஆம் ஆண்டு ரோமர்கள் எருசலேமைக் கொள்ளையடித்தபோது, அழிக்கப்பட்டது.

உபத்திரவ காலத்தில் ஆலயத்தைப்பற்றியும், எருசலேமில் நடக்கப்போகிற சில முக்கியமான சம்பவங்களைப் பற்றியும் வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் அப்போஸ்தலன் வருங்காலத்தைப் பற்றி எழுதப் பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டான். “பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப் போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள் (வெளி. 11: 1-2) “நாற்பத்திரண்டு மாதங்கள்” என்றால் 3½ வருடங்களாகும். அதாவது, உபத்திரவ காலத்தின் பாதியளவாகும். இது தானியேலின் 70-வது வாரம் என்றும் சொல்லப்படும், மூன்றாவது வசனத்தில் இந்த 3½ வருடங்களை “ஆயிரத்திருநூற்றறுபது நாட்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டு சாட்சிகள்

வெளி. 11:3-12இல் உபத்திரவ காலத்தின் முதல் பாதியில் தேவனுக்கு சாட்சிகளாக இருக்கப்போகிற 2 நபர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. வசனங்கள் 3-6இல், தேவன் இந்த சாட்சிகளுக்குக் கொடுத்த வல்லமையைப்பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. “என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரம் உடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய் ஆயிரத்திருநூற்றருபது நாளளவும் தீர்க்க தரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு”.

இந்த சாட்சிகள் எவ்வளவு காலம் தேவனுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர் சித்தங் கொண்டிருக்கிறாரோ அவ்வளவு காலம் ஒருவரும் அவர்களை மேற்கொள்ள முடியாது. அவர்கள் தேவனுக்கு சேவை செய்து முடித்தபிறகு, அவர்களுக்கு என்ன நேரிடும் என்பதைப் பற்றி 7-ம் வசனம் வெளிப்படுத்துகிறது. “அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது. பாதாளத்திலிருந் தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்று போடும்”.

இது எந்த நகரத்தில் நடைபெறும் என்பதற்கு அடையாளம் 8-ம் வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்”. இந்த கடைசி வார்த்தைகள் சந்தேகமில்லாமல் எருசலேம் நகரத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

அந்த சாட்சிகளின் சரீரங்கள் உலகத்தாரெல்லாராலும் பார்க்கப்படும். “ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறையில் வைக்கவொட்டார்கள்” (வசனம் 9). ஒலி மற்றும் ஒளிபரப்பும் செயற்கையான சாதனங்கள் இல்லாத காலத்தில், இந்த வசனம் எப்படி நிறைவேறக்கூடும் என்று விளங்கிக் கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், இப்பொழுதோ, உலகம் முழுவதிலும் அந்த சாட்சிகளின் சரீரங்களை எப்படிக் காணக்கூடும் என்பதை நாம் எளிதில் கற்பனை செய்யமுடியும்.

10-ம் வசனம், உலக மக்கள் அந்த சரீரங்களைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் தூண்டுதல்கள் என்னவாயிருக்கும் என்பதை விவரிக்கிறது. “அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்”. இந்த சாட்சிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தீங்கு செய்கிறவர்களை அழிக்கக்கூடிய வல்லமையும் உள்ளவர்களாய் இருப்பார்கள். இது மனுஷரை அவர்களுக்குப் பயப்படச் செய்யும். அவர்கள் உலகில் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், வாதைகளைக் கொண்டு வரப்பண்ணவும் செய்த அற்புதங்கள் அவர்களை அநேகர் வெறுக்கச் செய்யும்.

இந்த இரண்டு சாட்சிகள் மரித்ததைக் குறித்து, ஜனங்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த மகிழ்ச்சி சடுதியாய் நிறுத்தப்படும். “மூன்றரை நாளைக்குப் பின்பு தேவனிடத்திலிருந்து, ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது; அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்: அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று” (வசனம் 11). இந்த இரண்டு சாட்சிகளுக்கும் உயிர் கொடுக்கப்பட்டபின் அவர்கள் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். “இங்கே ஏறி வாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்” (12-ம் வசனம்).

வடக்கத்திய இராஜ்யம்

உபத்திரவ காலத்தில், இந்த இரண்டு சாட்சிகளைச் சுற்றி நடந்த சம்பவங்கள், உலகத்தின் கவனத்தையே எருசலேமுக்கு நேராக ஈர்க்கும். எசேக்கியேல் 38, 39-ம் அதிகாரங்களில் வடதிசையிலிருந்த ஒரு ராஜ்யமும் எருசலேமின்மீது கவனத்தைச் செலுத்தும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வடதிசை இராஜ்யம் இஸ்ரவேலை அழிக்க முயற்சி செய்யும்போது. தேவன் அந்த ராஜ்யத்தைத் தோற்கடித்துவிடுவார். “இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும் காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி ….. என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும். கொள்ளை நோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின் மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின் மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும் கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்: அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” (எசேக்.38:18,19,21-23).

இந்த வடதிசை ராஜ்யத்தின் தோல்வி, உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருடங்களில் நடக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அந்திக் கிறிஸ்து இஸ்ரவேல் தேசத்தை காப்பாற்றுகிறவனாக இன்னமும் நடித்துக்கொண்டிருப்பான்.

அந்திக்கிறிஸ்துவின் பரிசுத்தக் குலைச்சல்

உபத்திரவ காலத்தின் நடுவில் அந்திகிறிஸ்து இஸ்ரவேலரோடு பண்ணின உடன்படிக்கையை முறித்துவிட்டு தன்னைப்போல் ஒரு விக்கிரகத்தைச் செய்து, அதை ஆலயத்தில் வைத்து, அதை வணங்கும்படி செய்து, ஆலயத்தை அசுத்தப்படுத்துவான்…, 2 தெசலோனிக்கேயர் 2:4-ல் அந்திக் கிறிஸ்துவைப்பற்றி இப்படிக் கூறப்பட்டிருக்கிறது. “அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.”

“இரண்டாவது மிருகம்” என்று கூறப்படும் ஒரு தனி ஆள், அந்த அந்திக்கிறிஸ்துவை வணங்கும்படி வற்புறுத்துவான். வெளி.13:15 இவ்வாறு கூறுகிறது: “மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது”. வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டாவது மிருகம் வெளி.19:20இல் கூறப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசியே ஆகும் என்று கருதப்படுகிறது.

உபத்திரவ காலத்தில், எல்லா சம்பவங்களும் எருசலேமில் கட்டப்போகிற ஆலயத்தை மையமாகக் கொண்டு நடைபெறும். இரண்டு சாட்சிகள் அங்கே தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். வடதிசையிலிருந்து ஒரு ராஜ்யம் எருசலேமைத் தாக்கும். ஆனால், அது தேவனால் தோற்கடிக்கப்படும். அந்திக்கிறிஸ்து ஆலயத்தை அசுத்தப்படுத்தி, தன்னை வணங்கும்படி வற்புறுத்துவான். அர்மகெதோன் யுத்தம் என்று கூறப்படும் மகா பெரிய யுத்தத்திற்கு முன்னரே, எருசலேம் அநேக எதிரிகளின் சேனைகள் தாக்குவதற்கு ஒரு இலக்காகவும் இருக்கும்.

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel

சிந்தியுங்கள்! 

மற்றவர்களோடு இருக்கும்போது உன் வாயைக் காத்துக்கொள்! தனிமையில் இருக்கும்போது உன் சிந்தையைக் காத்துக்கொள்!