• Dr.உட்ரோ குரோல் •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

11. லவோதிக்கேயா சபை!

லவோதிக்கேயா என்ற சொல்லின் பொருள் “தீர்ப்பு” என்பதாகும். இது மக்களால் நடத்தப்படும் ஒரு சபையாகும், ஆனாலும் அது தேவனால் நியாயந்தீர்க்கப்படவேண்டும். இச்சபை ஆசியா மைனரில் உள்ளது (கிழக்கு பென்சில்வேனியாவில் அல்ல). பிரிகியாவின் பண்டைய தலைநகரமான இது, மூன்று பட்டணங்களான எராப்போலி, கொலோசே மற்றும் லவோதிக்கேயா ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது.

ஆனால், தற்பொழுது இங்கு அந்த இடங்களின் இடிபாடுகள் மட்டுமே காணப்படுகின்றன. அந்த நகரமும் தேவாலயமும் மக்களும் இன்று இல்லை. ஆனால் ஓர் அழகிய “லீகஸ்” என்ற பள்ளத்தாக்கு உள்ளது. வெளிப்படுத்தல் புத்தகத்தில் காணப்படும் தேவாலயங்களுக்கு இது தொலை தூர கிழக்கு மற்றும் தெற்கே அமைந்திருக்கிறது.

கி.பி.60இல் இப்பட்டணம் நிலநடுக்கத்தால் அழிந்தது. இதைத் திரும்பக் கட்டுவதற்கு ரோம அரசாங்கம் உதவ முன்வந்தது. லவோதிக்கேயா சபையை நிறுவியவர் “எப்பாப்பிரா” என்பவராவார். இவரைப் பற்றி பவுல் கொலோசெயர் 1 ஆம் அதிகாரத்திலும் கடைசி அதிகாரத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

எப்பாப்பிரா நல்ல உள்ளங்கொண்ட ஓர் ஊழியக்காரர். சபைக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஒரு விசுவாசி. ஆனால் இச்சபை ஒரு முரட்டாட்ட குணமுடையது. இது ஓர் உயர்மட்ட சபை, மேலும் நாகரிகமான பணக்கார சபை. இதன் வளத்துக்கு இச்சபையின் இருப்பிடமும் அதன் தன்மையும் அம்மக்களின் தொழிலும் இரு முக்கிய காரணிகளாகும்.

துருக்கி நாட்டின் மையப்பகுதியில் இருந்ததால், தரைவிரிப்புகளின் தயாரிப்பில் சிறந்து விளங்கியது. குறிப்பாக கருப்பு கம்பளி ஆடுகளுக்கு லவோதிக்கேயா பிரபலமானது. அந்நகர மக்கள் அந்த ஆடுகளின் கம்பளத்தை எடுத்து அதிலிருந்து அழகான தரைவிரிப்புகளை உருவாக்குவார்கள். மேலும் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவும் ஒரு களிம்பினை உருவாக்கினார்கள். கண்களின் சிகிச்சைக்கான ஒரு பிரபலமான மருத்துவ பள்ளியும் இருந்தது. அரிஸ்டாட்டில் இந்த கண் களிம்பு பிரிகியா பகுதியில் தயாரிக்கப்பட்டதால் “பிரிகியாபவுடர்” என்று அழைத்தார்.

இனி லவோதிக்கேயா சபையின் அம்சத்தைப் பார்ப்போம். “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்” (வெளி.3:14-16). இதனை இயேசுவே லவோதிக்கேயா சபைக்குக் கூறுகிறார். அவர் “ஆமென்” என்று தன்னைக் குறிப்பிடுகிறார். ஆமென் என்பதற்கு போதும், இறுதி மற்றும் தேவையானது என்று பொருள். இயேசுவே எல்லாவற்றுக்கும் போதுமானவர். பின்னர் அவர், “நான் உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியாயிருக்கிறேன்; தேவனுடைய வார்த்தையைச் சரியாக அறிவிப்பவர் நானே” என்கிறார்.

நம்முடைய பாவங்களுக்காக தமது குமாரனைப் பலியாக மாத்திரம் அனுப்பாமல், தேவனுடைய திட்டத்துக்கும் தன்மைக்கும் உண்மையானதும் உத்தமுமானதுமான சாட்சியாக அவரை அனுப்பினார். “உலகில் தோன்றின அனைத்து தீர்க்கதரிசிகளையும், கவனியுங்கள். நானே உண்மையான சாட்சி, என் பிதா கூறச் சொல்லிய யாவையும் நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றார். அவரே ஆமென்; உண்மையும் சத்தியமுமான சாட்சி. அவரே தேவனுடைய படைப்புக்கு அதிகாரி. அவரே சிருஷ்டிகர்; படைப்பாளி தன் படைப்புகள் அனைத்தின் மேலும் அதிகாரமுடையவர்.

யோவான் 1, கொலொசேயர் 1, எபிரெயர் 1 மற்றும் ஆதியாகமம் 1 அனைத்திலும் கூறப்படும் “குமாரன்” இயேசுகிறிஸ்துவே என்று அறிவிக்கிறது. அவரே இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரும் தேவனுமாயிருக்கிறார்!

இச்செய்தியை இயேசுகிறிஸ்துவே லவோதிக்கேயா சபைக்குக் கூறுகிறார். மேலும், “நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெது வெதுப்பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்” என்று கூறுகிறார்.

முதலாவது, “உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்” என்கிறார். நாம் செய்யும் எதையும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து மறைக்க முடியாது. அது நன்மையானதோ அல்லது தீமையானதோ எதுவாயினும் தேவனுடைய கண்களைவிட்டு நீங்கள் ஒளித்துக்கொள்ள முடியாது. அவர் இருதயத்தின் அனைத்து ஆழங்களையும் ஆராய்கிறவர். லவோதிக்கேயா சபை தேவனை உண்மையாகப் பின்பற்றவில்லை. ஆனால் அவ்வாறாக நடித்தனர். எனவேதான் இயேசு “உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்” என்றார்.

இது அச்சபைக்கு மனவருத்தத்தை அளித்திருக்கும். அது நகர மையத்திலிருந்த மிகப்பெரிய பணக்காரசபை. பட்டணத்தின் அழகிய பகுதியில் அமைந்திருந்தது, ஆனாலும் அது ஆண்டவராகிய தேவனுக்கு உண்மையாயிருக்கவில்லை.

“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்;” என்ற பாராட்டை ஆண்டவர் எபேசு சபைக்கும் (வெளி.2:2) கொடுத்தார். தியத்தீரா சபை (வெளி. 2:19) மற்றும் பிலதெல்பியா சபைகளுக்கும் (வெளி. 3:8) இவ்வாறே கூறினார். அவர் வேறு எந்த பாராட்டையும் தரவில்லை.

வசனம் 17 இல், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருட னும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்” என்று கூறுகிறார். ஆம், இதுதான் நம்மைப் பற்றிய கண்ணோட்டத்துக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் உள்ள வித்தியாசமாகும்.

நம்முடைய குணத்தை நாம் பார்க்கும் விதத்துக்கும் மற்றவர்கள் நம்மை பார்க்கும் விதத்துக்கும் வேறுபாடு உண்டு. இச்சபை தன்னைப்பற்றி “நான் செல்வந்தன். எனக்கு ஒரு குறைவுமில்லை”. வேறுவிதத்தில் கூறப்போனால் “எங்களுக்கு எதுவும் தேவையில்லை; எங்களுக்கு பல நிகழ்வுகள் உண்டு, அதிகமாக பணம் வருகிறது. புது கட்டடம் கட்டியுள்ளோம். நிகழ்ச்சிகள் நிறைவேறிவருகின்றன. மூன்றாண்டுகளுக்கான எதிர்கால திட்டங்கள் உண்டு” என்று திருப்தியடைந்தனர்.

ஆனால் இயேசு இச்சபையைப் பார்த்து, “நீங்கள் பரிதபிக்கப்படத்தக்கவர்கள், தரித்திரர்கள், குருடர்கள், நிர்வாணிகள் ஆனாலும் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. நீங்கள் ஐசுவரியவான் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தரித்திரர்கள். தேவனுடைய கிரியைகளுக்கு மாறுபாடானவர்கள். நீங்கள் குளிருமல்ல, அனலு மல்ல. நீங்கள் கர்த்தருடைய வேலையில் அலட்சியமாயிருக்கிறீர்கள்” என்றே கூறினார்.

லவோதிக்கேயாவின் அருகில் கொலொசே மற்றும் ஹைராபோஸ் உள்ளன. இவைகளுக்கு மிக அருகாமையில் பாமுக்கலே (Pamukkale) என்று இன்னொரு இடமுண்டு. துருக்கி மிகவும் உஷ்ணமான நாடு. ஆனால், பாமுக்கலே வழியாக நீங்கள் பயணிக்கும்பொழுது அப்பள்ளத்தாக்கில் திடீரென்று பனிக்கட்டியைப் பார்க்கமுடியும். அங்கே குளிர்ச்சியாக இருக்கும்; சீக்கிரம் போகலாம் என விரும்புவீர்கள்; ஆனால், அது பனிக்கட்டியல்ல, அவை சுண்ணாம்பு, கந்தகத்தின் படிவுகள் மற்றும் சில கனிமங்களால் ஆனது. அவை வெள்ளையாகவும் பெரிதாகவும் இருக்கும். அதற்கு அப்பகுதியிலுள்ள வெந்நீரூற்றுகளே அதற்குக் காரணம்.

இங்கு வெந்நீர் நீரூற்றுகளும் குளிர்ந்த நீரூற்றுகளும் காணப்படும். “நீங்கள் இவைகளைப் போலல்ல. நீங்கள் அனலாகவும் இல்லை, குளிராகவும் இல்லை” என்பதன் கருத்தினை இச்சபை மக்கள் நன்கு புரிந்திருப்பர். “நீங்கள் வெதுவெதுப்பானவர்கள்” என்று கூறுகிறார். முழு வேதாகமத்திலும் இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே “வெதுவெதுப்பு” என்ற சொல் காணப்படுகிறது. இது ஆர்வமற்ற அல்லது அரைகுறை மனதையுடைய ஆலயம் என்பதைக் குறிக்கிறது.

வெதுவெதுப்பு தன்மையானது மற்ற தேவ தூஷணங்களைவிட மோசமான நிலை என்று காம்ப்பெல் மார்கென் (1863-1945) என்னும் வேதாகம விரிவுரையாளர் கூறியுள்ளார். “இம் மக்களைப் பார்த்து அவர், உங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை நீங்கள் உணராதிருக்கிறீர்கள். ஐசுவரியவர்களாயிருப்பதனாலும் காரியங்கள் நன்றாக நடப்பதாலும் பிரச்சனைகள் இல்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஆம், என்னைப் பற்றிய தேவனுடைய மதிப்பீடு எனக்கு அச்சத்தைத் தருகிறது” என்கிறார் அவர்.

ஆண்டவருடைய மதிப்பீட்டை வசனம் 17 இல் நாம் வாசிக்கலாம். “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும் சொல்லுகிறாய். ஆனால் நான் உங்களைப் பாராட்ட எதுவுமே இல்லை.” அதாவது நீங்கள் “வாயு குமிழிகள் இல்லாத பெப்சி அல்லது கோக் போன்று இருக்கிறீர்கள்.” ஒரு குளிர்பான பாட்டிலை அநேக நாட்கள் திறந்து வைத்துவிட்டு அதை ஒரு நாள் குடிக்க எடுத்தால் அதில் குளிர்ச்சியும் உஷ் ணமும் வாயு குமிழிகளும் இருக்காது. உன் நிலையும் இப்படிதான் பரிதபிக்கத்தக்கதாய் உள்ளது.

உன்னுடைய செல்வத்தால் நீ ஏமாந்தாய். உண்மையில் நீ தரித்திரன், ஆவிக்குரிய வாழ்வில் உனக்கு இரத்தமில்லை. வலிமையான நிகழ்வுகளை வைத்திருக்கிறாய்; ஆனால், உன்னுடைய இருதயம் பலவீனமானது. நீ குருடன்; அதனால் உன்னுடைய சுயதேவைகளைக்கூட உன்னால் காண இயலவில்லை. நீ நிர்வாணி. ஆனால் இயேசு உன் முகமூடியைக் கிழித்துவிட்டார். உன்னுடைய பெருமை அகற்றப்பட்டது. அதனால் உனது சபை பொலிவும் உற்சாகமும் இழந்துவிட்டதைக் காட்டுகிறது.

சூடாகிக்கொண்டிருந்த தேநீர்கோப்பைக்குள் தவறிவிழுந்த ஒரு தவளைபோல் உஷ்ணம் அதிகமாவதை அறியாமல் கவலையீனமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதனால் தப்ப முடியவில்லை. இதே நிலைதான் நமக்கும். இதைச் சீராக்கவேண்டுமெனில் ஆண்டுக்கொரு முறை விசுவாச வளர்ச்சிக்கூட்டமும் மறுமலர்ச்சிக்கூட்டமும் நடத்தவேண்டும். மக்களுக்கு புத்தகங்கள் அல்லது நிகழ்ச்சிகளை அளிப்பதைவிட அவர்களை வேதாகமத்துக்குத் திரும்பச் செய்வதே உள்ளுர் சபையின் கடமையாகும். நான் ஒருமுறை சுகவீனமாயிருந்தபொழுது மருத்துவரை அணுகும்படி என் மனைவி எனக்கு ஆலோசனை தந்தாள். ஆனால், அவர்களது சிகிச்சைகள் எனக்கு வலியைத் தரும் என்பதால் நான் அவர்களைச் சந்திப்பதைத் தள்ளிப்போட்டேன். மருத்துவர் தருவது நமது சரீரத்துக்கு உதவுவதைப்போலவே தேவனுடைய வார்த்தையில் ஆவிக்குரிய சுகம் கிடைக்கிறது. ஆனால், கிறிஸ்தவர்கள் சத்திய வேதத்தை வாசிப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள். ஆபத்தில் அவர்களுக்கு ஆறுதல் எங்கும் கிடைப்பதில்லை.

இரு காரியங்களை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்:

1. நமக்கு பிரச்சனைகள் உண்டு; அதைத் தீர்க்காவிடில் நம் நிலை மோசமாகிவிடும்.

2. தேவனுடைய வார்த்தையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு உண்டு.

தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்டாகும் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் நாம் மந்தநிலையில் இருப்பவர்களையும் அலட்சியமாய் இருப்பவர்களையும் சந்திக்க முடியும். நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் (வெளி.3:18).

லவோதிக்கேயா பழங்காலத்தில் கண்களுக்கு சுகத்தைத் தரும் பிரிகியன் பொடியைத் தயாரிக்கும் மையமாக இருந்தது. பார்வை இல்லாத உங்களுக்கு கண் மருந்து தேவை. தரித்திரராகிய உங்களுக்கு புடமிடப்பட்ட பொன் தேவை. உங்களுடைய உலக ஐசுவரியங்களை ஒழித்துவிட்டு, பணத்தால் வாங்கமுடியாதவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். அழிந்துபோகும் பொன்னாபரணங்களையும் உயர்ந்த ஆடைகளையும் அழியாத அலங்கரிப்பைத் தரித்துக்கொள்ள அப்போஸ்தலனாகிய பேதுரு ஆலோசனை தந்துள்ளார்.

“உங்களுடைய கந்தைத் துணிகள், கருப்பு கம்பளி ஆடைகள், விலையேறப்பெற்ற ஆடைகளுக்குப் பதிலாக வெண்வஸ்திரங்களை என்னிடத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று இயேசு அழைக்கிறார். வெண்மை பரிசுத்தத்தைக் குறிக்கும். “செல்வம் உங்கள் கண்களை மறைக்க வேண்டாம். தேவனுடைய நித்திய கண்ணோட்டத்தைக் காணும் கண் மருந்தினை உபயோகியுங்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த வசனத்தில், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வெளி.3:19) என்று கூறுகிறார். ஆம், குளிருமின்றி அனலுமின்றி இருக்கும் சபைக்கு அவர் “மனந்திரும்புங்கள், அனலடையுங்கள்” என்று கூறுகிறார். இறுதியில், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்” (வெளி.3:20) என்று அழைக்கிறார். நாம் அடிக்கடி இந்த வசனத்தை “இரட்சிப்பு” என்ற தலைப்பில் உபயோகித்து வருகிறோம். ஆனால், உண்மையில் இது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி கவலைப்படாத, தேவனுடைய காரியங்களில் அக்கறையில்லாத பணக்கார சபையைப் பற்றிக் கூறுகிறது.

“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது” என்றார்.

ஏழு சபைகளுக்கு எழுதின நிருபங்களின் கடைசி வசனம் இது. இயேசுகிறிஸ்துவின் கடைசி வார்த்தைகள். காலங்களைப்பற்றிய வெளிப்படுத்தலும் இதுவே. “கிறிஸ்தவம் பொய்யாக இருக்கும் எனில் அதைப் பின்பற்றுவது முக்கியமல்ல. ஆனால், அது உண்மையெனில் அளவற்ற முக்கியமானது. அது சாதாரணமானது அல்ல” என்று C.S.லூயிஸ் கூறியுள்ளார்.

இச்சபைக்கு அவர்களுடைய விசுவாசம் சாதாரணமாகக் காணப்பட்டது. “நீ குளிராயிரு அல்லது அனலாயிரு; ஆனால் வெதுவெதுப்பாயிராதே.” கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இந்த எச்சரிக்கையே தரப்படுகிறது. நம்மையே நாம் ஆராய்ந்து பார்ப்போம். தேவனுக்கு உண்மையாய் உழைக்க நம்மை அவர் பாதத்தில் அர்ப்பணிப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை