• Bro. எஸ்.ஜி.நிரஞ்சன் •
(ஜூலை – ஆகஸ்டு 2025)

இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரங்களையும் ஒன்றாகச் சேர்த்து மூன்று இராஜாக்களே ஆண்டதாக பழைய ஏற்பாட்டுச் சரித்திரம் கூறுகின்றது. அதில் முதலாவது சவுல், இரண்டாவது தாவீது, மூன்றாவது சாலொமோன். இம்மூவரிலும் தாவீது அரசன் கர்த்தருக்குப் பிரியமானவன் என்று கர்த்தராலே அழைக்கப்பட்டார் (1இரா.11:4; 14:8; 15:3). தாவீது என்ற பெயரின் அர்த்தமே. “கர்த்தருக்குப் பிரியமானவன்” (God’s Darling) என்பதாகும். ஆனால், இவ்வரசனுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் அவனது வீழ்ச்சி ஒரு கவலைக்குரிய காரியமாகக் காணப்படுகின்றது. கர்த்தருக்கு பிரியமானவன் என்று அழைக்கப்பட்டவன் வீட்டி லும் ஒரு சாபம் வந்தது, “பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு விலகாதிருக்கும்” (2சாமு.12: 10). இது ஏன் நடந்தது? தாவீது எவ்வாறு விழுந்தான்? என்பதைக் குறித்து ஆராய்வது மிகுந்த பலனையளிக்குமென கருதுகிறேன். முதலில் தாவீது விழுவதற்கு காரணமாயிருந்த காரணிகள் எவையென்பதைக் குறித்து ஆராய்ந்த பின்பு அவன் செய்த பாவங்களைக் குறித்துப் பார்ப்போம். 2 சாமுவேலின் புத்தகம் 11ஆம் அதிகாரத்திலிருந்து இதை ஆராய்வோம்.

1. தாவீது செய்யவேண்டியதைச் செய்யவில்லை (2சாமு. 11:2).

சவுலும், தாவீதும் யுத்தகளத்திற்கு தாங்களே சென்று யுத்தம் நடத்திய அரசர்கள். ஆனால் சாலொமோன் அப்படிச் செய்யவில்லை. இராஜாக்கள் யுத்தம் பண்ணும் வருடத்தில் யுத்தத்தை நடத்த யுத்தகளத்துக்குப் போகாமல் தாவீது இராஜா தன் வீட்டிலே இருந்துவிட்டான். யுத்தத்தை நடத்தும் அரசனாகிய இவன், கட்டாயம் யுத்த களத்திற்குப் போயிருக்க வேண்டும். அதிலே அவன் தவறிவிட்டான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு அடிகோலிய முதல் காரணியாகும். அவன் செய்யவேண்டிய காரியத்தைச் செய்யத் தவறிவிட்டான். இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் தவறுவதற்கும் இதுவே காரணம், யுத்த களத்தில் இருக்கவேண்டியவர்கள், யுத்தத்தை விடுத்து வீணலுவற்காரர்களாயிருக்கிறார்கள். இதனால் வீழ்ந்து போகிறார்கள்.

நமக்கு ஒரு போராட்டம் உண்டு. இது அயல் வீட்டாருடனோ, மனைவியுடனோ நடத்தும் ஒரு போராட்டம் அல்ல. கர்த்தருக்கு பிரியமாயிருக்க நடக்கும் போராட்டம் (எபேசி.6:12). நாம் போர் வீரர்களாய்த் திகழவேண்டியது அவசியம் (2தீமோத்.2:3). சாத்தானுக்கு எதிர்த்து நின்றால்தான் அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான் (யாக். 4:7). அவனைக்குறித்து அசதியாயிருந்தால் அவன் நம்மை வீழ்த்திவிடுவான். யுத்தம் பண்ணவேண்டிய இராஜா அதைச் செய்யாதபடியால் வீழ்ந்தான். உன் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது? பிசாசானவன் உன் வாழ்க்கையில் வெற்றிகொள்கின்றானா? அல்லது நீ பிசாசானவனை வெற்றிக் கொள்கிறாயா? அவன் வெற்றிகொண்டால் நீ வீழ்வது திண்ணம். ஜாக்கிரதை.

2. தாவீது பார்க்கவேண்டியதைப் பார்க்கவில்லை. (2 சாமு. 11:2).

யுத்தத்திற்குப் போகாமல் இருந்த இராஜா தன் வீட்டில் இருந்தாவது தன் போர்வீரர்களுக்காய் தேவனிடத்தில் வேண்டுதல் செய்து, தேவனையே நோக்கிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவன் அதைச் செய்யத் தவறினான். தேவனை நோக்கி வேண்டாமல் மேல்வீட்டில் இருந்து அடுத்தவன் வீட்டை, உலகத்தை நோக்கினான் (எபி.12:1). இன்று அநேகர் தேவனை நோக்குவதை விடுத்து உலகத்தின் காரியங்களையே தஞ்சமென மதித்து அவற்றிற்கே முதலிடம் கொடுத்து வாழ்கிறார்கள். மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தாவீது அவ்வேளையில் ஜெபத்தில் தரித்திருந்து தேவசமுகத்தை நோக்கிக் கொண்டிருந்தால் வீழ்ந்திருக்கமாட்டான். சகோதரனே. சகோதரியே உன் வாழ்க்கையில் நீ என்ன செய்கிறாய்? உலகப்பொருள் நமது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால், அதுதான் வாழ்வு என்று நோக்கக்கூடியதை விடுத்து, நோக்கக்கூடாதவற்றை நோக்குகிறாயா? உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும் என்பதை மறந்துவிடாதே.

3. தாவீது சிந்திக்கவேண்டியதைச் சிந்திக்கவில்லை (2 சாமு. 11:3.4).

தாவீது அந்த ஸ்திரீயைப் பார்த்த மாத்திரத்திலேயே வீணான சிந்தனைக்குத் தன் மனதில் இடம் கொடுத்தான். இதனால் அவளைக் குறித்து விசாரித்து அவளோடு தகாதவிதமாய் நடந்து வீழ்ச்சியடைத்தான். அது யுத்தம் உக்கிரமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையாகும். யுத்தத்தைக் குறித்து சிந்திக்கவேண்டியவன் ஒரு பெண்ணைக் குறித்து சிந்தித்தான். உலகத்தில் வாழும் அநேக மக்கள் இன்று அவ்வாறுதான் வாழ்கின்றார்கள். சிந்திக்கத் தகாத காரியங்களைச் சிந்திக்கிறார்கள். சிந்திக்க தேவையானவற்றை விட்டுவிடுகின்றனர்.

இதனால் பலவிதமான பாவங்களுக்கு ஆளாகின்றார்கள், தேவன் நம் சிந்தனைகளை அறிகின்றார் என்பதை மானிடர் மறந்துவிடுகின்றார்கள். நீயும் அவர்களில் ஒருவனாய் ஒருத்தியாய் இருக்கிறாயா? அப்படியானால் இன்றே உன் சிந்தனைகளைத் தூய்மைப்படுத்திக்கொள். தேவன் எல்லாவற்றையும் அறிவார். உன் ஓய்வு நேரங்களில் தேவனைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிரு. “வெறுமையான மனம் சாத்தானின் வேலைத் தளமாக செயல்படும்.” தாவீது இம்மூன்று காரியங்களிலும் தவறினபடியால் அவன் நான்கு விதமான பாவங்களுக்கு ஆளாகிறான். அவைகள் என்னவெனில்:-

(அ) தாவீது விபசாரம் செய்தான் (2சாமு 11:4).

மாற்றானின் மனைவி என்று அறிந்தும் அவளுடன் தவறாக நடந்துகொண்டான். இது முறைகேடான, கர்த்தருக்கு விரோதமான காரியமாகும். இன்றைக்கும் இதைப்போல் அநேகர் நடந்துகொள்கின்றனர். இச்சையோடு ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்தாலே அது விபசாரமாகும் (மத். 5:28). எனவே அருமையான தேவபிள்ளையே உன் மனதை உன் பார்வையை உன் கிரியையைக் காத்துக்கொள்.

(ஆ) தாவீது ஏமாற்றினான் (2 சாமு.11:8,10.12,13).

தான் பாவம் செய்துவிட்டு உரியாவை வீட்டுக்கு அழைத்து அவனை வீட்டில் இருக்கச் செய்வதன் மூலம் அவனையும் உலகத்தையும் ஏமாற்றிவிடலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றான். ஆனால், உத்தமமான போர்வீரனாகிய உரியாவோ, அதற்கு இடங்கொடுக்கவில்லை. அதனால் அவனை வெறிக்கவும் பண்ணினான் என்று பார்க்கிறோம். மற்றவர்களை ஏமாற்ற முனைந்த தாவீது தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டான். நீயும் பாவத்தைச் செய்துவிட்டு மற்றவர்களையும், கடவுளையும் ஏமாற்ற முயற்சித்தால் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வாய். தாவீதுக்கும் அதுதான் நடைபெற்றது. “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்” (நீதி.28:13).

(இ) தாவீது கொலை செய்தான் (2சாமு.11:15,17).

தான் பாவம் செய்துவிட்டு மறைக்க பிரயாசம் எடுத்து அதில் உரியா ஒத்துழைக்காத கோபத்தில் அநீதியான முறையிலே அவனைக் கொல்ல தாவீது கட்டளையிடுகிறான். அவன் போரிலேயே செத்தாலும் அந்த இரத்தப்பழி இவன் கையிலேதான் கேட்கப்படும். ஏனெனில் யுத்த முறையை யோவாப் மாற்றியமைக்க காரணமாய் இருந்தவன் தாவீதே. அது சரீரப்பிரகாரமானக் கொலை. ஆனால் வேதம் கூறுகிறது: தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாயிருக்கிறான் என்று (1 யோவான் 3:15). உன் சகோதரனில் நீ அன்பாயிருக்கிறாயா? அல்லது நீயும் கொலைபாதகனாயிருக்கிறாயா?

(ஈ). தாவீது யோவாபைத் தன் பாவத்துக்கு உடந்தையாக்கினான் (2 சாமு. 11:14,15).

தாவீது தான் பாவஞ்செய்தது மட்டுமல்ல; தன் பாவத்தில் யோவாபையும் உடந்தையாக்குகின்றான். ஏவாளும் தான் பாவஞ்செய்ததுடன் ஆதாமை அதற்கு உடந்தையாக்கினதுபோலவே இதுவும் இருக்கின்றது. இவ்விஷயத்தில் உன் நிலை என்ன? நீ மட்டும் பாவம் செய்தால் போதாது என்று மற்றவனையும் உடந்தையாக்கும் சுபாவம் உனக்கு இருக்கிறதா? அப்படியானால் தேவகோபாக்கினை உன்மேல் வரும். இடறலுண்டாக்குகிறவனின் கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி ஆழ்சமுத்திரத்தில் போடவேண்டும் என்ற வேத வசனத்தையும் சிந்தித்துப்பார்.

அருமையான தேவ பிள்ளையே, மேலே நாம் சுருக்கமாகப் பார்த்த தாவீதின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த காரணிகள் உன் வாழ்க்கையிலும் காணப்பட்டால் உடனே அவற்றை விட்டுவிலகு. இல்லையேல் நீயும் வீழ்ந்துவிடுவாய். தாவீது தேவனுக்குப் பிரியமானவன். ஆனாலும் அவன் விதைத்ததை அவன் அறுத்தான். நீ ஆலயத்திற்கு ஒழுங்காய் செல்லலாம். காணிக்கை கொடுக்கலாம். மற்றும் பல காரியங்களைச் செய்யலாம். இதனால் தேவன் உன்னை தண்டிக்கமாட்டார் என எண்ணாதே. அவர் நீதியுள்ளவர். வாழ்க்கை அவருக்கு பிரியமாய் இராவிட்டால் நீ தேவகோபாக்கினைக்கு நிச்சயம் ஆளாவாய். எனவே, தேவனுக்குப் பிரியமாயிருந்த தாவீதை வீழ்த்திய காரியங்களுக்கு உன் வாழ்வில் இடங்கொடாமல் எதிர்த்து நின்று தேவனுக்கு பிரியமாக வாழ தேவன் உதவி செய்வாராக.