ஜெபக்குறிப்பு: 2026 மே 6 புதன்
தமிழ்நாட்டின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். ஆட்சிபுரிபவர்களுக்கு வேண்டிய நல்ல ஞானம், சுகம், பாதுகாப்பிற்காகவும் மாநிலத்தை சிறந்த முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி செய்வதற்கு வேண்டிய ஞானத்தால் கர்த்தர் நிரப்பி நடத்த வேண்டுதல் செய்வோம்.
அவர் உங்களை விசாரிக்கிறவர்!
தியானம்: 2026 மே 6 புதன் | வேத வாசிப்பு: 1 பேதுரு 5:6-11

பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீருற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளையமிறங்கினார்கள் (யாத்.15:27).
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போதகர் பிராங்க் கரேப் அவர்கள், தனக்கெதிராக இருந்த சில வழக்குகளால் மிகவும் சோர்ந்துபோயிருந்தார். தன்னால் அவைகளை தாங்கமுடியாது என்ற நிலைக்கு வந்தபோது அவருக்கு, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேது.5:7) என்ற வசனம் நினைவுக்கு வந்தது. ஒரு புது மகிழ்ச்சியும் சமாதானமும் அவரது ஆத்துமாவை நிரப்பியது. ஆவியில் களிகூர்ந்தவராக பின்வரும் பொருள் தரும் பாடலை அவர் எழுதினார். “இயேசு விசாரிக்கிறாரா? ஆம், அவர் விசாரிக்கிறார். நான் அறிவேன், அவர் விசாரிப்பை! என் கவலைகள் அவர் இருதயத்தைத் தாக்கிற்றே.” ஆம், பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை விசாரிக்கிறவர்.
இஸ்ரவேலரும் தங்கள் பயணத்தில் தேவன் தங்கள்மேல் கரிசனை உள்ளவராய் இருக்கிறாரா என்று கேட்கும் நிலைக்கு வந்தனர். எகிப்திலே பல்லாண்டுகள் நெருக்கப்பட்டனர்; பின்னர் வனாந்தரத்தில் அலைய வேண்டியதாக இருந்தது. கடைசியாக வந்த இடத்திலோ அருந்தமுடியாத கசப்பான நீர் கிடைத்தது. வாழ்வு இலகுவானதல்ல, ஆனால் இறுதியாக தேவன் அவர்களை ஏலிம் என்று இடத்துக்கு அழைத்து வந்தார். அங்கே நல்ல நீர் தாராளமாகக் கிடைத்தது. அதிகமான மரங்களும் நிழல்களும் அவர்களுக்குக் கிடைத்தன. துன்பங்களின் மத்தியிலும் தேவன் அவர்களை இளைப்பாறுதலுள்ள ஓரிடத்துக்கு அழைத்து வந்தார்.
ஒருவேளை நீங்கள் கடினமான பாதை வழியே சென்றுகொண்டிருக்கலாம். உங்களை தேவன் விசாரிக்கிறாரா என்று வினவக்கூடிய நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், நிச்சயமாய் அவர் உங்கள்மேல் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது. ஆகவே கலக்கம் வேண்டாம். எதிர்காலத்தில் தேவன் உங்களை ஏலிமுக்கு அழைத்து வருவார். “உங்களுடைய திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல்…” (1கொரி.10:13) என்ற வேதவசனம் நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. பாடுகளினால் சோர்ந்து களைத்து வருத்தப்பட்டிருந்தாலும் கர்த்தரைச் சார்ந்திருப்போம்; கர்த்தர் நிச்சயம் இளைப்பாறுதலைத் தருவார். நீங்கள் இப்பொழுது கசந்த மாராவில் தங்கியிருப்பீர்கள் என்றால், அப்படியே எப்போதும் இராது என்பதை நினைவில் வைத்திருப்போம். எல்லாம் மாறும். இதோ உங்களுக்கெதிரே உள்ள சமாதானத்தின் ஏலிமை நோக்கிப் பாருங்கள். நம்முடைய ஒவ்வொரு சோதனையையும் எல்லாவித வேதனைகளையும் தேவன் தமது வேளையில் சாதனைகளாக மாற்றித் தருவார். இதுவே நாம் அவரில் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஜெபம்: அன்பின் தகப்பனே, இஸ்ரவேலரின் அனுபவங்களை எத்தனைமுறை படித்திருந்தாலும் மாராவின் தண்ணீர் போன்ற சோதனைகளில் நாங்கள் மனமடிந்துபோகிறோம். எங்களை மன்னியும். தொடர்ந்து முன்நோக்கிச் செல்ல எங்களுக்கு கிருபை தாரும். ஆமென்.