ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 30 செவ்வாய்

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்.103:13) இம்மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் தகப்பனைப்போல நம்மோடு பேசி நடத்தினார். ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்பொழுதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் (எபி.13:15).

அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை (எரேமி.30:19).

உன் தெரிந்தெடுப்பு என்ன?

தியானம்: 2026 ஜுன் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: எபிரெயர் 11:23-30

YouTube video

அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு …. (எபி. 11:25).

நமக்கு மேன்மையும் புகழ்ச்சியும் தரக்கூடிய என்னவெல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போமாக. அவை மெய்யாகவே மேன்மையானவைதானா? எபிரெயக் குழந்தைகள் யாவும் கொல்லப்பட்டபோது, மோசே மாத்திரம் அரமனையில் வளர்ந்தாரென்றால் அவரைப் பாக்கியவான் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அரமனைவாசம் மோசேக்கு நல்ல சொகுசையும் பெருமையையும் கொடுத்திருக்கும். ஒரு அடிமையின் மகனாகப் பிறந்தாலும், கடவுள் தன்னைத் தப்புவித்து இந்த வாழ்வைத்தந்தார் என்று எண்ணி நிம்மதியாக வாழவும் இடம் இருந்தது. அப்படியே கடைசிவரையும் மோசே வாழ்ந்திருக்கலாம். ஆனால், மோசேயோ செல்வமும் சுகமும் மாறிப்போகும் என்பதை உணர்ந்தார். ஆடம்பரமும் உயரிய வாழ்வும் இலகுவில் மனிதனை ஏமாற்றும் என்பதை அறிந்தார். தேவனுடைய ராஜ்யத்தின் நித்திய சந்தோஷத்திலிருந்து இவை தம்மைப் பிரித்துப்போடும் என்று விழித்துக்கொண்டார். எகிப்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், தேவன் தெரிந்துகொண்ட பிள்ளைகளுடன் துன்பத்தை அநுபவிப்பது மேல் என்று தெரிந்தெடுத்தார். அதனால் உண்டாகும் எந்த நிந்தையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரானார்.

ஆண்டவராகிய கிறிஸ்துவோ, தமது சொந்த மேன்மைகளையே துச்சமாக எண்ணி, பாவிகளாகிய நமக்காகப் பாடு அனுவிப்பதையே தெரிந்துகொண்டார். நிந்தைகளை அனுபவித்து நமது நிந்தைகளைப் போக்க வந்தார்.

தேவபிள்ளையே, இன்று நமது தெரிந்தெடுப்பு என்ன? என்னுடையது, நான் சம்பாதித்தது என்று பெருமை பாராட்டுகிறோமே, இவை எவ்வளவு காலம் நிலைத்திருக்கப்போகிறது? ஒரு கணம் நம்மையும் நமது சூழலையும், நாம் சுகம் அனுபவிக்கும் வாழ்வையும் விட்டு, கண்களை ஏறிட்டு வெளியே நோக்கிப் பார்ப்போம். எத்தனையோ பிள்ளைகள் பாடனுபவிக்கிறார்கள். எத்தனையோபேர் ஒரு வேளை உணவுக்குப் பாடுபடுகிறார்கள். எத்தனை ஆயிரம்பேர் துன்பம் என்னும் வலையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர் களுக்கு ஆறுதல் இல்லை. விடுதலை இல்லை. மோசே தன் ஜனத்தோடு பாடு அனுபவிப்பதைத் தெரிந்துகொண்டார். ஆண்டவரோ ஒரு மனிதனும் கெட்டுப் போகக் கூடாதென்று தம்மையே கொடுத்தார். தேவைகள் உள்ளவர்களைத் தேடிச் சென்றார். அதன்மூலம் விடுதலையும் ஆறுதலும் பெற்றவர்கள்தான் எத்தனைபேர்! அப்படியிருக்க இயேசுவின் பிள்ளைகள் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதோ, ஜீவனையும் நன்மையையும் மரணத்தையும் தீமையையும் இன்று உனக்குமுன்னே வைத்தேன் (உபா.30:15).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, இன்னமும் சுயபெருமைகளை பேசிக்கொண்டிராமல், துக்க சாகரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மக்களை உம்மண்டை வழிநடத்தும் பணிக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 29 திங்கள்

தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும் (சங்.69:13) சொல்லொண்ணாத துயரம், நிந்தை, அவமானம், சொத்து மற்றும் குடும்பபிரச்சனைகளின் நிமித்தம் போடப்பட்டுள்ள வழக்குகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளினாலே ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர்களுக்கு கர்த்தர் தமது மிகுந்த கிருபையின்படியே இரங்க வேண்டுதல் செய்வோம்.

பிறரைக் குறித்த பாரம்

தியானம்: 2026 ஜுன் 29 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 18:7-9

YouTube video

என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்; (யோவான் 18:8).

பிரச்சனைகள் நம்மை நிலைகுலையச் செய்யும்போது, பிறரைக் குறித்த நமது பொறுப்பு என்ன? நமது சாட்சி, இயேசுவைப் போலாகவேண்டும் என்ற விருப்பம் யாவும் இந்த இடத்தில் தடுமாற இடமுண்டு. ஒரு வைத்தியர் தனது ஊழியர் ஒருவருக்கு மனிதாபிமானத்தில் சில மருந்துகளைக் கொடுத்து உதவினார். இதனால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். உண்மையை அறிந்துகொண்ட அதிகாரிகள், வைத்தியரில் பரிவுகாட்டுவதுபோல நடித்துக் கொண்டு, மருந்தை உன் கையினால் கொடுக்கவில்லையே, மருந்துக்குப் பொறுப்பாயிருந்தவர்தானே கொடுத்தார். ஆகையால் நீயல்ல, அந்த மனிதனே மருந்தைக் கொடுத்தார் என்று அறிக்கை சமர்ப்பி. இல்லாவிட்டால் உன் வேலை பறிபோய்விடும். நீயும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று வற்புறுத்தினார்கள். தண்டனையைக் குறித்து அவர்கள் சொன்னது உண்மைதான். அதற்காக, அந்த அப்பாவி மனிதனுக்குத் தண்டனையா?

அதிகாரிகள் நெருக்குதலுக்கு மேல் நெருக்குதல் கொடுத்தார்கள். ஆனாலும், இறுதியில் வைத்தியர் உறுதியாக பதில் தந்தார். என்னதான் நேர்ந்தாலும் நானேதான் மருந்து கொடுத்தேன் என்ற உண்மையை எழுதுங்கள் என்றார். ஏறத்தாழ ஒன்பது மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர், அந்த அதிகாரிகள் ஆச்சரியத்துடன் வைத்தியரை வாழ்த்தி, அவர்கள் கேட்ட கேள்வி, டாக்டர் நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? என்பதுதான். அன்று வெறுமனே கிறிஸ்தவர் என்ற பெயரைக் கொண்டிருந்த அந்த வைத்தியர், இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட பின்னர், கிறிஸ்து தம்மை எவ்வளவாய் நேசித்து நடத்தினார் என்பதை நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்திரித்தார்.

இயேசுவோடுகூட சீஷர்களையும் கைதுசெய்ய அன்று நல்லதொரு தருணம். ஆண்டவர் வாய்திறவாமல் இருந்திருந்தால், சீஷர்களுக்கு எதுவும் நடந்திருக்கும். ஆனால், ஆண்டவரோ இவர்களைப் போகவிடுங்கள் என்று தமது சீஷருக்காகப் பரிந்துபேசினார். அன்று ஏதேன் தோட்டத்திலே ஆதாம் ஏவாளைச் சுட்டிக்காட்டினான். ஏவாளோ பிசாசைக் காட்டினாள். இன்றும் தாம் பிழைத்துக்கொள்ள அடுத்தவரைக் காட்டிக்கொடுக்கிறவர்களும், அடுத்தவரும் துன்பப்படட்டும் என்று எண்ணுகிறவர்களும் அநேகர். இதனால் எத்தனை குடும்பங்கள் சிதைந்துபோயிருக்கின்றன. இது கிறிஸ்துவின் வழி அல்ல. நம்மையும் அறியாமல் நாம் யாருக்காவது இப்படியொரு தீமை செய்திருந்தால், செய்ய நினைத்திருந்தால் இப்போதே அதைச் சரிசெய்திடுவோமாக. கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார் (1பேது.2:21)

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, ஆபத்துநேரத்திலும் சீஷர்களுடைய பாதுகாப்பிற்காக வாதிட்டீரே, நாங்களும் அந்த மனப்பான்மையோடே நடந்து துன்பத்தில் இருக்கிற மற்றவர்களை நேசிக்க எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.”;.