ஜெபக்குறிப்பு: 2026 மே 31 ஞாயிறு
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2சாமு.7:18) கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் பிரவேசித்து கர்த்தர் நம்மை நடத்திவந்த வழிகளுக்காக முழு இருதயத்தோடும் முழுஉள்ளத்தோடும் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி ஆராதிப்போம்.
எழும்புங்கள் போவோம்!
தியானம்: 2026 மே 31 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 14:28-31

எழுந்திருங்கள், இவ்விடம் விட்டுப் போவோம் வாருங்கள் என்றார் (யோவான் 14:31).
கிறிஸ்துவையேப் பின்பற்றி, அவரைப்போலவே மாறவேண்டும் என்று வாஞ்சையோடு தொடர்ந்து தியானங்களை படித்துவருகிறோம். போதனைகளைக் கேட்பதும், தியானிப்பதும் இலகு. ஆனால் அதை நாம் செயற் படுத்தும்வரை அதனால் பயன் ஏதுமில்லை. அன்றும் சீஷர்கள் உட்கார்ந்து ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்பதில் ஆவலாக இருந்தனர். ஆனால் இயேசு தமது பாடுகளையும் மரணத்தையும் குறித்துப் பேசினால், அதை மறுத்து, தவிர்த்து, வேறுவிதமாக கற்பனை பண்ணியே சீஷர்கள் பதில் கொடுத்தார்கள். ஆண்டவரோ வெறுமனே ஒரு போதகராக வரவில்லை. கிரியையில் தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுக்க வந்தவர். ஆகவே, அன்று சீஷர்களை எழுந்துபோக அழைத்தவர் இன்று நம்மையும் அழைக்கிறார்.
நாம் எழுந்து போகும்வரைக்கும் நாம் கற்றதை செயற்படுத்தமுடியாது. செயற்படுத்தும் வரைக்கும் நமது அழைப்பில் நிலைத்து நிற்கமுடியாது. அழைப்பை உதாசீனப்படுத்துகிறவன் சிலுவை சுமக்கமுடியாது. சிலுவை சுமக்காதவன் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. கிறிஸ்துவைப் பின்பற்றாதவன் அவருடைய சீஷனாய் இருக்கமாட்டான். சீஷனாய் இராதவன் தன் குருவைப்போல ஆகமாட்டான்.
வாருங்கள், நாம் இருக்கும் இவ்விடத்தை விட்டுப்போவோம் என்று ஆண்டவர் அழைக்கிறார். சீஷர்கள், செயற்படாமல் அமர்ந்திருந்தவரை, அவர்கள் வேறு சிந்தனையின்றி, அவருடைய வலதுபக்கத்தில் யார் உட்காருவான், இடதுபக்கத்தில் யார் உட்காருவான் என்ற எண்ணங்களுடனும் இருந்தார்கள். ஆனால் ஆண்டவரோ எழுந்துபோக, செயற்பட அழைத்தார். நமக்குப் பாதுகாப்பு, வசதி, நல்ல எதிர்காலம், மனநிம்மதி என்று நினைக்கும் இடத்தைவிட்டு எழுந்துபோவோம் வாருங்கள் என்று அழைக்கிறார். இது நமக்குக் கடினமாக இருக்கலாம். நம்மை நாம் வெறுக்கவும், நமக்கு அருமையானவற்றை இழக்கவும் யார்தான் விரும்புவார்? ஆனால், நமக்கு அருளப்பட்ட சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றும்வரை, அவருடைய பாடுகளிலும் உயிர்த்தெழுதலிலும் நமக்குப் பங்கு கிடையாது.
அருமையான தேவபிள்ளையே, எழும்பு; இது சுகமனுபவிக்கும் காலமல்ல, சிலுவை சுமக்கவேண்டிய நேரம். இது களித்திருக்கும் வேளையல்ல; கண்ணீர்விட்டுப் புலம்பவேண்டிய நேரம். இது உலகத்தின் வெற்றிகளை நாடி ஓடும் பாதை அல்ல; கெத்செமனேத் தோட்டத்தை நோக்கி நிதானத்தோடு நடக்கவேண்டிய நேரம். இது இளைப்பாறும் வேளையல்ல; போராட்டத்தின் நேரம். நமது தெரிந்தெடுப்பு என்ன?
ஜெபம்: அன்பின் இயேசுவே, எனக்கு அருளப்பட்ட சிலுவையை உண்மையோடு சுமக்கும்படி எழுந்து புறப்பட, செயற்பட பரிசுத்தாவியின் பெலன் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2026 மே 30 சனி
அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 9,10 | மாலை: யோவான்.9:1-20
ஜெபக்குறிப்பு: 2026 மே 30 சனி
சத்தியவசன ஊழியத்தை அனுதினமும் தங்கள் ஜெபங்களில் நினைத்து தியாகமான காணிக்கையால் தாங்கிவரும் விசுவாசப் பங்காளர்கள். ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் நேயர்களை தேவாதிதேவன் நினைத்தருளி அவர்களது கைகளின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்தி உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.
இடறும் கல்லா? படிக்கல்லா?
தியானம்: 2026 மே 30 சனி | வேத வாசிப்பு: எபிரெயர் 4:12-16

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப் போலிருப்பான்; (லூக்கா 6:40).
கிறிஸ்துவைப்போல மாறவேண்டும் என்ற நோக்கத்தோடே நாம் தியானங்களை தியானித்து வருகிறோம். ஒரே மாதத்தில் நாம் மாறமுடியாது. இவ்வளவுதானா என்று நாம் நினைவுக்கவும் கூடாது. அவரைப்போல மாற வேண்டும் என்று நாம் செய்யும் தியானம் ஒரு துளி மாத்திரமே. ஏனெனில் இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியாகும். அன்றாட வாழ்விலே பயிலுகின்ற ஒரு பயிற்சியாகும். ஆகையால்தான் ஆண்டவர் தேறினவன் என்று சொன்னார். நமது அன்றாட வாழ்வில் நாம் வளரவேண்டும். பரீட்சைக்குட்படவேண்டும். அதில் தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி, வெற்றி என்று வரும்போது நாம் நம் குருவை முகமுகமாய் சந்திக்கிறவர்களாவோம்.
ஆனாலும் இந்த வளர்ச்சியில் மந்தநிலையும் பின்வாங்கிப்போகும் பரிதாப நிலையும்கூட நேரிடலாம். முக்கியமாக சோதனைகள் வரும் நேரத்தில் நாம் அதிகமாக தடுமாறிப்போகிறோம். அதற்காக இடறிவிடக்கூடாது. மோட்சப்பிரயாணம் என்ற புத்தகத்திலே கிறிஸ்தியான் வழிதவறிய இடங்களையும், பின்னர் நேரிய பாதையில் வந்து சேர்ந்ததையும் ஆக்கியோன் அழகாக விபரித்துள்ளார். சோதனைகள் வரும். வரவேண்டும். சோதனை வந்துவிட்டது. கடவுள் ஏன் இதைத் தடுக்கவிலலை என்று நினைத்துக் குழம்புவது ஆபத்து. மாறாக, அவற்றை எப்படிச் சந்திக்கிறோம் என்பதிலேயே, நமது ஆவிக்குரிய வளர்ச்சியும் வெற்றியும் தங்கியிருக்கிறது.
அன்பான தேவபிள்ளையே, சோதனைகளை இடறிவீழ்த்தும் கற்களாகப் பார்க்கிறோமா? அல்லது அவற்றை நமது வெற்றிப் படிக்கற்களாகப் பார்க்கிறோமா? ஆண்டவருக்கு எப்போது சோதனை வந்தது என்று ஒரு ஓய்வுநாள் பள்ளிஆசிரியை கேட்டார். வனாந்தரத்தில் என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன், உலகத்தில் பிறக்க சிந்தித்த நேரத்திலிருந்து சிலுவையில் தம்மைக்கொடுத்த நேரம்வரைக்கும் அவருக்குச் சோதனைதான் என்றான். ஆம். ஆண்டவர் பாடுகளினாலே சோதிக்கப்பட்டார். சகலத்திலும் வெற்றி கண்டார். தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரடசிப்பை அடைவதற்குக் காரணரானார் (எபி.5:9). அதுபோல நமக்கு வரும் சோதனைகள் நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு வளருகின்ற அற்புத தருணங்கள். அந்த வளர்ச்சி, முடிவில் அது ஜெயத்தைத் தரும். அதுவே கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் பயிற்சிக்கூடமாகும். அதிலே நாமும் கலந்து நமது குருவைப்போலாகுவோமாக! ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று (1பேது.2:7).
ஜெபம்: அன்பின் தேவனே, சோதனையில் வீழ்ந்து தேய்ந்து போகாமல் உமக்குக் கீழ்ப்படிந்து ஜெயமாய் வாழ உமது கிருபைவரம் தாரும். ஆமென்.