ஜெபக்குறிப்பு: 2026 மே 4 திங்கள்
ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு …. (1நாளா.21:15) போரினால் மகா தீங்கையும் வேதனையையும் அனுபவித்துவரும் ரஷ்யா, உக்ரைன், ஈரான், இஸ்ரேல் மற்றும் போர் தாக்கத்தால் சேதப்பட்டுள்ள வளைகுடா நாடுகளிலுள்ள மக்கள்மேல் கர்த்தர் மனதுருகி அவர்களை இரட்சிக்கவும் யுத்தம் நீங்கி இளைப்பாறுதலை தந்தருளவும் ஜெபிப்போம்.
கர்த்தரை நோக்கிக் கூப்பிடு!
தியானம்: 2026 மே 4 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:25-26

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான் (யாத். 15:25).
நியூயார்க் நகரத்திலே லான்தியர் என்பவர் காலை செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். 1857ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டிருந்த புதிய நெருக்கடிகள் மக்களிடையே பயத்தையும் திகிலையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன. தொழிற்சாலைகள் மூடப்பட்டு அநேகர் வேலையிழந்தனர். அவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே அவர், தனது அலுவலகத்திலே மறுநாளிலிருந்து மதிய ஜெபக்கூடுகை நடக்கவிருப்பதாக தன் வியாபார நண்பர்களுக்கெல்லாம் செய்தியனுப்பினார். முதல்நாள் யாரும் அங்கே வரவில்லை. ஆயினும் தனியாளாக முழங்காலில் நின்று தன்னிலும் அமெரிக்காவிலும் ஒரு எழுப்புதலைக் கொண்டுவரவேண்டும் எனக் கதறி ஜெபித்தார். இரண்டாவது நாள் ஒரு சில நண்பர்கள் அந்த ஜெபத்தில் கலந்து கொண்டனர். ஒரு சில நாட்களில் அந்த நகரைச் சுற்றிலும் இதுபோன்ற ஜெபக் கூடுகைகள் எழும்பின. சீக்கிரமாகவே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த இயக்கம் காட்டுத் தீயைப்போலப் பரவியது. இந்த ஐக்கிய ஜெபமும் விசுவாசமுமே பின்னர் வந்த பொருளாதார முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணமாயிற்று.
செய்வதறியாது திகைத்து நின்ற நேரங்கள் மோசேக்கும் நேரிட்டது. அந்த சமயங்களில் அவர் கர்த்தரை நோக்கி உண்மையாய் கூப்பிட்டார். மோசே செய்யவேண்டிய காரியத்தை தேவன் வெளிப்படுத்தினார். அக்காரியங்கள் மோசேயின் கற்பனையில் தோன்றியவையல்ல. அது தேவனிடமிருந்து வந்தவை. மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்தது. இஸ்ரவேல் ஜனங்களும் அத்தண்ணீரின் தன்மையைப் பற்றி கசப்பான எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அநேக காரியங்களைப்பற்றி முறுமுறுத்தனர்.ஆனால் இக்காரியமோ உயிருக்கே தீங்கு விளைவிப்பதாக இருந்தது. அப்போது மோசேயால் செய்ய முடிந்ததெல்லாம் கர்த்தரை நோக்கி ஜெபித்து அவருடைய பதிலுக்காகக் காத்திருந்ததேயாகும்.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்ற நேரங்களில் அநேகமாக நாம் திசைமாறிவிடுகிறோம். அடுத்தவர் உதவியை நாடி நிற்கிறோம்? அல்லது குறைகூறி முறுமுறுக்கிறோம். இவை எதுவும் நமக்கு எந்த நன்மையையும் வரவழைக்கப் போவதில்லை. மோசேயைப்போல, நமது சுயபுத்தியைச் சாராமல் ஆண்டவரை நோக்கி கூப்பிட்டுப் பாருங்கள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் பதிலளிக்கிற தேவன்; அவர் உங்களுக்கும் பதில் கொடுப்பார். அவரது அறிவுரைகளின்படி நடக்க நாம் தயாராயிருந்தால் நமக்குக் கிடைக்கின்ற பதில் நமக்குச் சரியான பதிலாகவே இருக்கும். நாம் அறிந்திருக்கும் காரியங்கள் முக்கியமல்ல; நாம் யாரை அறிந்திருக்கிறோம் என்பதே முக்கியமானது.
ஜெபம்: “கர்த்தாவே, எங்களுக்கு வந்த எல்லா நெருக்கத்திலும் உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பிப் பிழைக்க உதவி செய்தீர். ஸ்தோத்திரம். ஆமென்.”