கிறிஸ்தவ வாழ்வின் நெறிமுறைகள்!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 33

கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும் (சங்.33:11)

இவ்வசனத்தின் முதல்பகுதியில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்காது. ஏனெனில் நமது ஆண்டவர் இறையாண்மை கொண்டவர்; அவரது ஆலோசனையே இறுதியில் நிறைவேறும் என்பதில் நமக்கு எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் இவ்வசனத்தின் பிற்பகுதியில் சில விசுவாசிகள் தடுமாறுகின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கக்கூடும்.

தேவனுடைய சித்தம் என்பது அவருடைய இருதயத்திலிருந்து வருகிறது என்றும், அது அவருடைய அன்பின் வெளிப்பாடு என்று நீங்கள் நம்புவதற்கு கடினமான வேதனையான சில அனுபவங்களை நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் அனுபவித்திருக்கலாம். பிதா நம்மை நேசிக்கிறார் எனில் நமது வாழ்வில் ஏன் இவ்வளவு ஏமாற்றங்களும் துக்கங்களும் துன்பங்களும் உண்டாகின்றன? தேவனுடைய மக்களுக்கு தீமையான காரியங்கள் நிகழும்பொழுது, எதிராளியானவன் “தேவன் உன்னை நேசிக்கிறார் என்றால் இது ஏன் நிகழ்கிறது?” என்று நம்மை வினவுகிறான். இக்கடினமான அனுபவங்களை நாம் எவ்வாறு சமாளிப்பது?

ஆண்டவரின் முழுமையான நோக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தேவனுடைய ஞானம் என்னவென்றால் “நாம் அனைவரும் அவருடைய குமாரனுக்கு ஒப்பாக மாறவேண்டும்” (ரோமர் 8:29). வாழ்க்கையின் சோதனைகள் நம்மை இயேசுவைப்போல மாற்றமுடியாத அளவுக்கு கடினமாய் விடுகின்றன. தேவன் நம்முடைய இரட்சிப்பை செயல்படுத்தும்பொழுது பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்பட பரி.பவுல் அறிவுறுத்துகிறார் (பிலி.2:12-13). எகிப்தில் தான் அநேக பாடுகளை அனுபவித்ததன் காரணத்தை யோசேப்பால் அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவை யாவும் அவரை அரியணையில் அமர்த்தி, இயேசுவைப்போல் மாற்ற உதவின. தம்முடைய தலைவர் ஏன் பாடுகளை அனுபவித்து மரணமடையவேண்டும் என்பதை சீஷர்களால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இறுதியில் அச்செய்தியை அறிந்துகொண்டனர்.

ஆண்டவரின் முழுமையான அன்றாட திட்டங்களுக்கு அர்ப்பணியுங்கள்.

“மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” (நீதி.19:21). என் வாழ்விலும் ஊழியப்பாதையிலும் “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” என்ற எரே.29:11 பகுதியை அநேகமுறை நினைவுபடுத்தி, நான் என்னை ஊக்கப்படுத்திக்கொள்வேன். கர்த்தர் இம் முழுபிரபஞ்சத்தையும் நிர்வாகிக்க வேண்டும். ஆனால் அவர் நம்மை நினைத்திருக்கிறார் என்ற எண்ணம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் அவரை நம்பினால் அவர் நமக்காக யாவையும் திட்டமிட்டு, நமது நம்பிக்கையை விரிவாக்கி ஓர் ஒளிமயமான எதிர்காலத்துக்குள் வழிநடத்துவார். இந்த வாக்குறுதி பெத்தானியாவில் இருந்த ஒரு குடும்பத்துக்கு வந்த சோதனையை எனக்கு நினைவூட்டுகிறது. யோவான் 11:5 இல் “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” என்று எழுதியிருக்கிறது. அவ்வாறாயின் ஏன் லாசரு நோய்வாய்ப்பட இயேசு அனுமதித்தார்? மேலும் அவர் நேசித்த சகோதரிகளுக்கு உதவ பெத்தானியாவுக்குச் செல்ல ஏன் தாமதித்தார்? ஆனால் இவை யாவும் ஒன்றிணைந்து தேவனுக்கு மகிமையைக் கொண்டுவர ஏதுவாக செயல்பட்டது. “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்.31:15).

ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள்.

மார்த்தாள், மரியாள் லாசரு ஆகியோருக்கு மாத்திரமல்ல, உங்களுக்காகவும் எனக்காகவும் தேவனுடைய சித்தம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது. அது அவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறது. எங்களுடைய மூத்த மகன் முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, ஒரு வேலியில் ஏறமுயன்று தன்னை அதிகமாகக் காயப்படுத்திக்கொண்டான். நாங்கள் மருத்துவமனைக்கு காரில் சென்றபொழுது அவன் பயந்து கவலையுடன், “டாக்டர் என்ன செய்வார்?” என்று என்னிடம் கேட்டான். “மருத்துவர் காயத்தை கிருமி நீக்கம் செய்து தடுப்பூசி செலுத்துவார், தேவைப்பட்டால் சில தையல்களும் போடுவார் என்றேன்”. இவை யாவும் வலிமிகுந்ததே. ஆனால் இவை அனைத்தும் ஒன்றிணைந்து அவனை குணமாக்கும். நான் ஏன் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்? ஏனெனில் அவனுடைய தாயாரும் நானும் அவனை நேசித்ததால் அவனுக்கு சிறந்த சிகிச்சை கொடுக்க விரும்பினோம். நம்முடைய பரம பிதா அவர் நேசித்த அவருடைய சொந்த குமாரனை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்தவர் நம்மை கைவிடமாட்டார் (ரோமர் 8:32). நம்மைக் கைவிடாதிருக்க தம்முடைய சொந்த குமாரனைக் கைவிட்டவர் அவர். ஆண்டவர் தமது கிருபையினால், நமது துன்பங்களை மகிமையாக மாற்றி அவருடைய குமாரனுக்கு ஒப்பாக மாற்றுவார். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோம.8:29). உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (சங். 76:24).

மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர் (நீதி.16:9).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)