ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.”
அனுதினமும் கிறிஸ்துவுடன் மே-ஜுன் மாத இதழ் வெளிவர கிருபை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடுகளை நாம் அன்றாட செய்திகளில் கேட்டு ஜெபித்துவருகிறோம். அதற்குப் பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமுவேல் 21:14). நம் அனைவரின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு சீக்கிரமாகவே யுத்தங்களை ஓயப்பண்ணுவார்.
சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.
பேப்பர் மற்றும் அச்சுக்கூலி உயர்வுகளினால் வருடாந்திர விசுவாசபங்காளர் காணிக்கை ரூ.1000/- ஆகவும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் வருடசந்தா ரூ.400/- ஆகவும் உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறோம். பங்காளர்களும் சந்தாதாரர்களும் இதைக் கவனத்தில் கொள்ளவும் அன்பாய் கேட்கிறோம்.
இவ்விதழில் மே மாதம் யாத்திராகமம் புத்தகத்தில் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் எல்லாச் சூழ்நிலையிலும் ஜனங்களுடைய மனப் பாங்கையும், மோசேயின் உயரிய குணங்களையும் தியானிக்கும் தியானங்கள் இடம் பெற்றுள்ளன. ஜுன் மாதம் யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு மாத தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். சகோதரி அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தியானங்கள் அனுதின வாழ்வில் அதிக பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.
ஆ.ஜான் துரை